புதன், 20 பிப்ரவரி, 2013

ஞானியும் ஒரு குழந்தைதான்

 
பகவான் கிருஷ்ணர் வைகுண்டத்திற்கு எழுந்தருளப் போவதை அறிந்த உத்தவர், தாங்கொணா துக்கத்தில் ஆழ்ந்தார். அழுதார். புலம்பினார். பகவானின் சரணத்தில் வீழ்ந்தார். பகவான் உத்தவரையே பார்த்தபடி இருந்தார். எப்பேற்பட்ட பக்தி இவனுக்கு என்று பிரமித்துப் போனார்.

பகவானின் அமுதமயமான உபதேசங்களைகூட அவனின் அருள் இருந்தால்தான் கேட்கக்கூட முடியும். சிறிதளவாவது அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் காது இருந்தாலும் கேட்க முடியாது. அப்படி பகவானிடமிருந்து வந்த விஷயங்களை யார் மறுக்க முடியும்? அப்படி பகவானிடமிருந்து நேரடியாக வந்ததுதான் பகவத் கீதை. ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்...’ என்று தன்னையே குருவாக கொண்டு, ஞானத்தை யார் யாசிக்கிறார்களோ அவர்களுக்கு ஆசையாக உபதேசிக்கிறான். அப்படித்தான்
உத்தவரும் ஞானத்தை வேண்டுகிறார்.
அர்ஜுனனுக்கு கர்ம யோகத்தை பிரதானமாகக் கொண்டு உபதேசித்தார். அது போர்க்களத்தில் சொல்லப்பட்டது. ஆனால், உத்தவருக்கு உபதேசிக்கும் களமே வேறு. அதேசமயம் உத்தவருக்கு எல்லாவற்றையும் விடவேண்டிய விஷயமான தியாகத்தை முன்னிறுத்தித்தான் கூறப் போகிறார். இதுவும் கீதைதான். உத்தவருக்காக சொல்லப் போவதால் இது உத்தவ கீதை. இரு கீதைகளுக்கும் லட்சியம் என்னவோ ஞானம்தான். தன் பாதத்தில் கிடந்த உத்தவரை மெல்ல தூக்கினார்.

‘‘உத்தவா, என்னைவிட்டு எப்படி இருப்பாய் என்று நீ கேட்பது சரிதான். உங்களையெல்லாம் விட்டுச் செல்ல எனக்கும் இஷ்டமில்லைதான். இருந்தாலும் இந்த உலகத்திற்கென்று ஒரு நியமம் இருக்கிறதல்லவா. மேலும் நான் இங்கிருந்து புறப்பட்டுவிட்ட ஏழாம் நாள் துவாரகையை கடல் விழுங்கப் போகிறது. ஜனங்கள் எல்லோருக்கும் அதர்மத்தில் ஆசை பிறக்கப் போகிறது. கலி தன் இருகரங்களாலும் ஜனங்களை இறுக்கி அணைத்துக் கொள்ளப் போகிறான். அதனால்தான் சொல்கிறேன் நான் சென்ற பிறகு நீ இங்கு இருக்கக் கூடாது.’’‘‘அப்பொழுது நான் என்ன செய்ய
வேண்டும்?’’‘‘உத்தவா, உன்னைவிட எனக்கு இந்த உலகத்தில் பிரியமானவன் எவருமே கிடையாது. பிரம்மா, ருத்ரன், தேவாதி தேவர்களை விட நீ எனக்கு பிரியமானவன். யாருக்குமே கொடுக்காத பரம அனுக்கிரகத்தை நான் உனக்கு செய்யப் போகிறேன்’’ என்று பகவான் கூறினார்.
அர்ஜுனனுக்குப் பலவித மார்க்கங்களை கூறி தெளிவுபடுத்திய பகவான், உத்தவரிடம் இன்னும் பலபடி மேலேபோய் தன்னுடைய அந்தராத்மாவில் பகவான் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே வெளிப்படையாகப் பேசப் போகிறார். பரம சத்தியத்தை கொஞ்சம் கூட மறைக்காமல், தர்மத்தை அப்படியே பேசப் போகிறார்.

‘‘உத்தவா, நான் இங்கிருந்து புறப்பட்டவுடன் நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வெறுமே அழுது கொண்டிருக்கக் கூடாது. என்னை சரியாகப் புரிந்தவனாக, விவேகியாக இருக்க வேண்டும். நான் எல்லோருடைய இருதயத்திலும் எப்போதும் இருக்கிறேன் என்பதை அனுபூதியில் நின்று உணர்ந்து கொள். இந்த சரீரம்தான் கிருஷ்ணன் என்று மற்றவரைப்போல நினைத்து மயங்காதே. அஞ்ஞானி தான் அப்படிச் செய்வான். எனவே, இந்த மாயையோடு நீ விளையாடியது போதும். எப்படியானாலும் சமுத்திரம் விழுங்கப் போகிறது. மிகப் பெரிய துவாரகாபுரியான இதற்கே இந்த நிலைமைதான். எனவே எல்லாவற்றையும் தியாகம் செய்துவிடு. அதிலும் முக்கியமாக உன்னுடைய சொந்தங்களிடமும் நண்பர்களிடமும் உள்ள பந்தத்தை அறுத்துவிட்டு ஏகாந்தத்தில் இரு. அவர்களோடு ஸ்நேகம் கொண்ட கீழான உலகிற்கு நீ இழுக்கப்படுவாய். ஏன், சிறிது நேர தியானத்தில் கூட உன்னை உட்கார விட மாட்டார்கள்.   ஆத்ம ஞானமெல்லாம் உனக்கு எதற்கு என்று கேட்பார்கள். முதல் தடையே உனக்கு அவர்கள் தான். முதல் மாயையான அவர்களை விட்டு அகன்று விடு.
‘‘உன் இருதயத்திற்குள் என்னை நிறுத்தி, எல்லாமே நானாக இருக்கும் உயர்ந்த நிலையில் நீயும் நிற்க வேண்டும். இவ்வளவு நாட்கள் நீ செய்ததெல்லாம் போதும். ஒன்றை நீ முதலில் புரிந்து கொள். உன் மனதால் எதை பார்க்கிறாயோ அது எல்லாமே பொய். உன்னுடைய உடம்பினாலும்
இந்திரியங்களாலும் அனுபவிக்கப்படும் இன்பம் எல்லாமுமே தற்காலிகம் தான். அதில் துக்கமும் சோகமும் கலந்தே இருக்கும். மனம் தன் மாயா சக்தியினால் சும்மா உன்னை பிரமிக்க வைக்கிறது. உடலாலும் மனதாலும் பெறும் இன்பங்களை உண்மை என்று உன்னை ஏமாற்றுகிறது. ஏன் தெரியுமா? மாயையின் லட்சியமே நீ தப்பித் தவறிகூட ஆத்மாவை பார்க்கக் கூடாது என்பதுதான். அதற்காக எவ்வளவு பெரிய பதவியை தந்தாவது உன்னை அதனிடத்திலே வைத்திருக்கும். மாயை ஒருபோதும் உன் மனதை உள்முகமாக திருப்பாது. பல்வேறு விதமான வேடிக்கைகளையும் கேளிக்கைகளையும் காட்டி வெளி உலகத்திலேயே வைத்திருக்கும். ஜாக்கிரதையாக இரு.
‘‘நீ இந்த உலகத்தில் எப்படி சஞ்சரிக்க வேண்டும் தெரியுமா? மனதை உள்முகமாக இடையறாது திருப்பு. ஒரு கட்டத்திற்கு மேல் அது வெளியேற முடியாமல் தானாகச் சுழன்று ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும். அப்படி நீ இருந்தால் குழந்தைபோலாகி விடுவாய். உலகம் எப்படி இருந்தால் என்ன, குழந்தை ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருப்பதில்லையா. குழந்தை யாரிடத்தில் எந்த உபதேசத்தை பெற்றது? அது தன்னில் இருக்கும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்கவில்லையா? அந்த நிலைதான் ஞானியுடையதுமாகும். அவன் எல்லோருக்குள்ளும் பிரகாசிப்பான். அவனை நெருங்கியோர் பேரானந்தம் அடைகின்றனர். வேண்டுமோ, வேண்டாமோ, தெரிந்தோ, தெரியாமலோ, அவர்களின் அண்மையில் வருவோரின் பிறவிச் சுழற்சியை ஞானி அறுத்தெறிகிறான். அன்பு செலுத்துவதில் ஆயிரம் தாய்க்கு சமானமானவனாக விளங்குகிறான். அவனிடமிருந்து பொங்கும் பேரன்பு வெள்ளம் பாத்திரா பாத்திரம் பாராமல், பாய்ந்த
படி இருக்கின்றன. நீ அந்த நிலையிலேயே நின்று விடு. அது தான் சத்தியத்தின் இருப்பிடம்’’ என்று பகவான் கூற, உத்தவர் நெகிழ்ந்து போனார்.     இது உத்தவருக்காக மட்டுமல்ல, எங்கள் அனைவருக்குமாக பகவான் அருளியிருக்கும் முக்திக்கான வழி ....என்பதை உணர்ந்து கொள்ளுவோமாக...