செவ்வாய், 17 ஏப்ரல், 2012

குருவின் ஆசீர்வாதம்.......

எல்லாம் வல்ல இறை அருளின் கருணையால் அனைவரும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் பெற்று வாழ வாழ்க வளமுடன்.
முன்பெல்லாம் பிறரை வாழ்த்தக்கூட சமஸ்கிருதத்தை பயன்படுத்தினர். நாளடைவில் அந்த மொழியின் செறிவு மனிதரிடம் குறைந்து போக, இப்போதெல்லாம் வாழ்த்துவதற்க்கு சமஸ்கிருத மொழியை பயன்படுத்தினாலும், அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வோர் கணக்கிலே குறைவே.
பிறரை வாழ்த்துவதென்பது, தன்னை இணைத்து மனதார வாழ்த்துவதில் தான் முழுமை பெறுகிறது. தன்னை இணைக்காமல் மேலோட்டமாக எது கூறினாலும், அதன் பயன் குறைவே.
தன்னை இணைப்பது என்றால்
இறை நிலையோடு எண்ணைத்தை கலக்கி விட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
என்று உரைப்பார் நம் குருனாதர்.
அந்த மாதிரி எண்ணத்தை இறை நிலையோடு கலக்க விட்டு விழிப்பாக தன் இருப்பு எங்கே என்று நோக்கின்... அந்த நிறை நிலையாகிய இறை நிலையே தான் என்று உணர முடிகின்றது...
நிறை நிலையே தான் நான் என்றால், என்ன பேச முடியும்?
பாரதி சொல்வாரே...
தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!...
அது போல, தன் இருப்பே இறை நிலை என்றாகும் போது, பிறரை வாழ்த்துவதிலே கூட நம் தனிப்பட்ட முனைப்பு எழ வேண்டிய தேவையே இல்லாது போகின்றது..
முனைப்பு என்பது... மௌனத்திலே இருந்து அசையும் கணத்திலே இருக்கின்றது. மௌனத்திலே அளவு கடந்து இருக்கின்ற இருப்பு ஆனது, சுருங்கிப்போய் முனைப்பாக ஆகின்றது.
அதனால் தான் விரிந்து நின்று வாழ்த்தினார் நம் குரு...
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்...
முனைப்பின்றி தன்னை இறையோடு இணைப்பதன் மூலம் தான் இப்படி ஒருவரால் வாழ்த்த முடிகின்றது...

இதற்க்கு மேல் வாழ்த்து உயர்ந்து இருக்க முடியாது.
இந்த வார்த்தை மிக சுருக்கமாக, புரிகின்ற மாதிரி எளிமையாக இருக்கிறதால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
எல்லாம் வல்ல இறை நிலையே தான் எங்கு எப்போதும் நிறைந்து எப்போதும் இடைவிடாது இருக்கின்றது என்கிற போது, வாழ்த்துவதற்க்கு தனியாக முனைப்பு தேவை இன்றிப்போகிறது.

எது எப்போதும் இருக்குமோ, அதுவே தான் அறிவு. அதுவே சத்தியம் என்கிறது அத்வைத சித்தாந்தம்.
இது தான் நடக்க வேண்டும் என்றால், இறை என்ற ஒன்றின் வலிமையை நாம் மறந்து விடுகின்றோம்...மறுத்து விடுகின்ற மாதிரி ஆகிறது. முனைப்பு மேலோங்கும் போது, இருப்பு காணாமல் போகின்றது. இறை நிலையே வலிமையானது என்ற சொல் மறுக்கப்படுகிற மாதிரி ஆகின்றது.
இது தான் நடக்க வேண்டும் என்ற முனைப்பை விட, இறை நிலையாகிய மௌனமே சிறப்பு என்று மௌனத்தில் ஆழ்ந்தனர் மகான்கள்!
அந்த மௌனத்திலே நிற்கின்ற போது, அதன் அர்த்தத்தை புரிய வைக்க பேசினது தான்... அருட்காப்பு.
எனக்கு இது வேண்டும்... அது வேண்டும் என்கிற குறுகிய நோக்கத்தை விட, இறை என்ன செய்ய வேண்டுமோ அதன் வலிமையே மிஞ்சட்டும்! சத்தியமே ஜெயிக்கட்டும் என்று ஆழ்ந்து போவது தான் மௌனமும்... இந்த அருட்காப்பும்.
அருட்காப்பு சொல்லும் போது, இறை நிலை தவத்திலே இருந்து அசைகிற போது உணரும் அழுத்தத்தோடு ஆழ்ந்து அமைதியோடு சொல்ல வேண்டும்... அந்த வாழ்த்து நிஜமாக நிகழ்ந்து விடும்... உதாரணத்திற்க்கு, நம் குருவானவர் எப்போதும் பேசினாலும், சாதாரணமாக பேசும் வார்த்தையை விட, இந்த வாழ்த்துக்களை மிக அமைதியாக/ வித்தியாசமாகச் சொல்வார்... அவரின் இயல்பான பேச்சிற்க்கும் அவர் வாழ்த்துவதற்க்கும் அழுத்தம் மாறுபட்டிருப்பதை ,அவர் பேசும் போது கவனித்துப்பார்த்தால் புரியும்.
நம்மை சுற்றி எது நிகழ்ந்தாலும், காலத்தால் இயற்கையை மீறி எதுவும் நிகழ்ந்து விடாது. இறை நிலையை மீறிய வலிமை எதுவும் இல்லை என்பது அதன் அழுத்தத்தை உணர்ந்தால் தான் நமக்கு இயல்பான நம்பிக்கையாக அமையும். அது வரை அமைதியும், ஆனந்தமும் முழுமையாகாது.
மௌனத்திலே கரைந்து கருணையை இயல்பாக்கி, அருட்காப்பு கொண்டு இந்த பிரபஞ்சத்திலே வாழும் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வாழ்த்திக்கொண்டே இருப்போம்...
எந்த நிலையிலும் கூட, இறை நிலை இல்லாது போனது இல்லை. எல்லாவற்றையும் ஈர்த்துக்கோள்ளும் அந்த அழுத்தமானது, இயற்கையாக தன் ஆற்றலினால், நெறியை மெலோங்க வைக்கும்...
எல்லாம் புரிந்தவனும், ஏதும் அறியாதோரும் தான் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்... மற்றவர்கள் எல்லாம் மௌனத்தை விட்டு விலகி நின்று வருந்துகின்றார்கள்!
அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத்தொழில்களிலும் உறு துணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதுமாகவும் அமையுமாக!