வெள்ளி, 8 ஜூன், 2012

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?


நல்ல மனமும் நல்ல குணமும் உள்ள யாரும் நம சிவாய மந்திரத்தை கூறலாம். இதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு 5 நிமிடம் அவன் முன் அமர்ந்து தூய நினைவோடு தூய அன்போடு அவன் முன் அவன் நாமத்தை சொன்னால் அவன் மனமும் உருகும் அவன் அருளும் கிடைக்கும்.

ஓம் நமசிவாய
சிவ நமசிவாய
சிவாய நம சிவ
சிவ சிவ நம சிவ
சிவாய நம சிவாய
.

அதன் பிறகு நீங்கள் இயல்பாக உங்கள் பணிகளை தொடரலாம்.

அனைத்தும் ஜயமே அனைத்தும் இன்பமே

சிவாய நம என சொல்வோர்க்கு அபாயம் ஒருபோதுமில்லை.

ஓம் நம சிவாய





திருச்சிற்றம்பலம்

இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து.

செவ்வாய், 5 ஜூன், 2012

அருள்மிகு பாம்பாட்டி சித்தர் குகை கோயில்.

 

கோவையை அடுத்துள்ள புகழ் பெற்ற மருதமலையில் அமைந்துள்ளது பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த குகை கோயில்.
தனது வாழ்வியல் காலத்தில் மருத்துவ மூலிகைகள் நிறைந்த மருதமலையில் குடிகொண்டு வெகு காலம் வழிபாடு செய்து வந்தார் .சுமார் 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் பாம்பாட்டி சித்தர் இன்று நாம் வழிபாடும் குகை கோயிலில் உள்ள சுரங்கம் மூலமாக சென்று ஆதிமுலஸ்தானம் சென்று மருதமலை முருகனை பெருமானை வழிபாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சுயம்புவாக ஸர்ப்ப வடிவத்தில் அமைந்துள்ள கற்சிலையும்
நந்திகேஸ்வரருடன் கூடிய சிவலிங்க பார்வதி சமேத பாம்பாட்டி சித்தர் எழுந்தரிளியுள்ள தெய்வீக சந்நிதியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்ய சித்தர்பெருமானின் பரிபூர்ண ஆசீர்வாதம் கிடைப்பதை உணரலாம் .
அமாவாசை பௌர்ணமி ஆகிய நாட்கள் இவருக்கு உகந்த
நாட்கள் ஆகும்.நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து
வழிபட்டு வர தோஷம் நீங்கும்

திங்கள், 4 ஜூன், 2012

தவழ்ந்து சென்று தரிசனம் காணலாம்





காலாங்கிநாதர் சீனாவில் சமாதி கொண்டதாக பலர் கூறினாலும், அந்தப் புதிரை போகர்தான் தெளிவாக ஒரு பாடலில் விடுவிக்கிறார். தமிழ்நாட்டில்தான் அவர் சமாதி கொண்டதாக கூறுகிறார்.
“ஆதியென்ற சிதம்பரமே திருமூலராச்சு
அவருடன் பதினெண் பேரதிலே யாச்சு
சோதியன்ற காலாங்கி நாதர் தாமும்
துலங்குகின்ற காஞ்சிபுரந் தனிலே யாகும்”
காஞ்சிபுரத்தில் எங்கு எனும் குறிப்பு காணப்படவில்லை. ஆனால், நிச்சயம் நாமெல்லாரும் அவரின் சமாதியை வணங்கிக் கொண்டிருப்போம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், பொதுவாகவே இந்தியாவிலுள்ள கோயில்களை பல வகைகளாக பிரிக்கலாம். ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட லிங்கமாக இருந்து ஆலயமாக உருவெடுத்திருக்கலாம். தேவர்களால் வணங்கப்பட்டு அதுவும் ஆலயமாக மாறியிருக்கலாம். அதற்கும் அப்பால் சித்தர்களின் ஜீவ சமாதிகளும் காலகிரமத்தில் பெரிய ஆலயங்களாக விளங்குகின்றன என்பது எல்லோரும் அறிந்த உண்மை. மேலே கண்ட பாடல்படி பார்த்தால் காஞ்சிபுரத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில் ஏதாவது ஒன்று காலாங்கிநாதரின் சமாதியாக இருக்கலாம். எப்போதுமே ஞானியரின் ஜீவ சமாதிகளுக்கு தனித்துவமான ஆகர்ஷண சக்தி இருக்கும். காலாங்கிநாதர் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருந்ததாக போகர் தன்னுடைய பாடலில் தெரிவிக்கிறார்.
“புகலுவேன் காலாங்கி நாதருக்கு
சரியுடனே மூவாயிரம் சொச்சமப்பா
சாங்கமுடன் வயதுதான் என்னலாகும்”
என்று உறுதிபடக் கூறுகிறார்.
சதுரகிரி எனும் பெயர் காரணத்தை ஓரிடத்தில் அழகாக தெரிவிக்கிறார். ‘‘தானான வேதங்கள் நான்கு
மொன்றாய்ச் சார்ந்திங்கோ ருருவாகச் சமைந்ததாலே” என்கிறார். நான்கு வேதங்களும் இங்கு நான்கு மலையாக உருவெடுத்ததால் இதற்கு சதுரகிரி என்று பெயரோ என வியக்கிறார். மேலும், இங்கு வசிப்போரை
எல்லோரும் சித்தர்கள் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா?
‘‘தேனான மகாலிங்க ரடியைப்போற்றி
செய்து சதா சேவித்து யோகநிஷ்டை
ஊனான வுடலெத்தோர் புரிவதாலே
உயர்முனிவர் சித்தரெனப் பேருற்றாரே”
எப்போதும் மகாலிங்கத்தையே வணங்கி, திவ்ய பாதங்களையே போற்றி, அங்கேயே யோகநிஷ்டையில் அமர்ந்தார்கள். இவ்வாறு பிறவியாகிய உடலெடுத்தோர்கள் பக்தி செய்ததாலேயே உயர் முனிவர் சித்தர் என உயர்நிலையில் நின்றார்கள். இங்கு மகாலிங்கத்திடம் சரணாகதி உற்ற அந்தக் கணமே ஜீவன் சித்தனாகும் என்கிறார்.
சதுரகிரியில் கோரக்கரும், போகரும் காட்டிய ஒவ்வொரு சித்தரின் குகைக்கான வழியைப்போல காலாங்கிநாதரும் ஒவ்வொருவருடைய இருப்பிடத்தையும் தெரிவிக்கிறார். ‘‘குன்றந்த சாய்வோரம் செல்லும்பாதை கூடினால் நவசித்தர் குகையொன்றுண்டு”. தாணிப்பாறையிலிருந்து மேலே கொஞ்சம் சென்றால் சிறுமலைகளை காணலாம் என்றும் அதன் ஓரமாக பார்த்தால் ஒன்பது சித்தர்களையும் ஒரே குகையில் சந்திக்கலாம் என்று ஓரிடத்தை கூறுகிறார். இன்னும் கொஞ்சம் கடந்தால், ‘‘உயர்ந்திருக்கும் மலையருகில் குகையைப்பாரே பாரப்பா அக்குகையினுள்ளே பாம்பாட்டிச் சித்தருமங் கிருப்பார்கண்டு” என்று பாம்பாட்டி சித்தரை தரிசிக்கும் வழியை தெரிவிக்
கிறார்.
இதற்குமுன்பே வணிகன் ஒருவனுக்கு கோயில் கட்டுவதற்காக உலோகத்தை தங்கமாக்கும் தைலத்தை செய்தார் என்று பார்த்தோம். அதை பிலாவடிக் கருப்பருக்கு அருகே கிணற்றினுள் வைத்து மூடி வைத்தார் என்பதையும் பார்த்தோம். இதை அவரே தன்னுடைய பாடலில்,
‘‘நோக்கியே தேவியையும் கருப்பனையும்
நொடிக்குள்ளே தருவித்துக் காவல்வைத்துப்
பாக்கியே யிருந்ததிந்தத் தயிலந்தன்னைப்
பாதுக்காத்து இருங்களெனப் பகர்ந்திட்டேன்” என்று உறுதிபட தெரிவிக்கிறார். அதை யாருக்கு கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். ‘‘சிகரமறி சித்தர்முனி முத்தர் வந்தால் திறந்தெடுத்துக் கொடுங்களென்று செப்பி வந்தோம்” என்கிறார். அதாவது சித்தர்களான முனிவர்கள் வந்தால் நீங்களே திறந்து எடுத்துக் கொடுங்கள் என்று கருப்பனுக்கு ஆணையிட்டிருக்கிறார். அப்போது யாருக்கு கிடைக்காது என்பதை, ‘‘அகரம்மாமறி யாமூடர்க்கும் அரும்பாவி கருமிகட்கு மிதுகிட்டாது” என்று வெளிப்படையாகவே கூறுகிறார்.
எல்லா சித்தர்களுக்குமே காலாங்கிநாதர் மீது மிக்க மரியாதை உண்டு. அதிலும் சதுர
கிரியில் காலாங்கிநாதரை தரிசிப்பதை தங்கள் பாக்கியமாக அவர்கள் கருதினர். அப்படிப்பட்ட காலாங்கிநாதர் குகை எனப்படும் தவசிப்
பாறையைப் பார்க்கலாம்.
தவசிப்பாறை என்னவோ சிறு குகைதான். ஆனால், அதன் மீது பெரிய பாறைகள் அடுக்கி வைத்தது போன்ற அமைப்பை உடையது. மிக மிக குறுகிய வாயில். படுத்துக் கொண்டே கைகளால் தேய்த்துத் தேய்த்து பத்தடி தூரம் நகரவேண்டும். பிறகு தவழ்ந்து செல்லும் அளவுக்கு இடமிருக்கும். அப்படியே இடமும் வலமுமாக சுமார் முப்பதடி தூரம் வரை படுத்துக் கொண்டும், தவழ்ந்தும் சென்றால் குகையில் இறுதியில் சிறு சிவலிங்கத்தை தரிசிக்கலாம். இந்த லிங்கம் யாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தெரியவில்லை. எப்போதேனும், யாரேனும் வந்தால் அதற்கு பூஜை செய்கிறார்கள். அவ்வளவுதான். சற்று பருமனானவர்கள் உள்ளே சென்று வருவது சிரமமான காரியம். உள்ளே இருக்கும் கனத்த அமைதி நம்மை தியான நிலைக்கு செலுத்துகிறது. குகைக்குள் சென்று வரும்போது உள்ளத்தை யாரோ துடைத்து விட்டது போன்று இருக்கிறது. எவ்வளவு சித்தர்கள் உள்ளே கூடி தவத்தில் ஆழ்ந்திருப்பார்கள் என்கிற பிரமிப்பே நிம்மதி தருகிறது.
தவசிப்பாறைக்குள் ஆர்வமுள்ளவர்கள் தரிசித்தாலே போதும். ‘‘இவ்ளோ தூரம் சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு வந்துட்டு இதைப் பார்க்காம எப்படி போறது” என்றெல்லாம் சிலர் கட்டாயப்படுத்துவார்கள். மேலும், வயதானவர்களும், பெண்களும் குழந்தைகளோடு ஏறத் துணிவதும் அவ்வளவு நல்லதல்ல.
குகைக்கு வெளியேயிருந்து பார்த்தால் சுந்தரமகாலிங்கத்தின் தோற்றம் அற்புதமாக இருக்கும். எப்போதும் தென்றல் வீசியபடி இருக்கும். இந்த இடத்திலிருந்து பார்க்க மூன்று மலையும் சமமாக இருப்பது புரியும். இயற்கையின் அழகும், அதன் முரண்பாடும் என்னவிதமான பூமி இது என்கிற திகைப்பும், நான் எனும் அகந்தையை அடித்து வீழ்த்தும். இதனால்தான் சித்தர்கள் இதுபோன்ற இடங்களுக்கு நம்மையும் அழைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றும். தவசிப்பாறையிலிருந்து மலையில் உச்சியாகவே பயணித்து கொஞ்சம் கீழிறங்கினால் பெரிய மகாலிங்கத்தை தரிசிக்கலாம். ஒருகணம் அதை காணும்போது நம் மேனி சிலிர்த்துப் போடுகிறது. அப்படி என்னதான் அங்கு இருக்கிறது?