திங்கள், 28 ஜனவரி, 2013

எப்போது கடவுளின் தொண்டர்கள் ஆக முடியும்??

 
எவரிடத்தில் அருள் தாகமும், தியானமும் அதிகமாக இருக்கின்றதோ, அவர் பேரானந்தத்தை விரைவில் அடைவார். அந்தப் பேரானந்தத்தை அடைய உதவும் மெய்பொருளை அறிவதற்கான வழியானது எளியது என்றும் சொல்லலாம், கடினமானது என்றும் சொல்லலாம். அது எவ்வாறெனில், ஆணவம் கொண்...டவர்களுக்கு அது கடினமானது மட்டுமல்ல, இயலாததும் கூட. குழந்தையைப் போன்ற மனமுடையவர்களுக்கோ அது மிகவும் எளியதாகும்.

மௌனத்தால் அறிவு ஓங்குகிறது. அறிவு ஓங்கிவிட்டால் இறைவன் திருவடியை அடையலாம். மௌனமானது மனத்தகத்தில் உண்டாக வேண்டும். அவ்வாறு உண்டாகிவிட்டால் மெய்ப் பொருளை நோக்கிய நம் நெடும் பயணத்தை விரைவில் நிறைவேற்றலாம். அமைதியாக நடப்பவர்கள் நெடுந்தூரம் களைப்பில்லாமல் போக முடியும். எனவே ஆன்மீக சாதகர்களுக்கு மௌனமே உற்ற தோழன். அவன் ஒரு நாளும் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டான். தூக்கம் வராதவனுக்கு இரவு நீண்டாதாகி விடுகிறது. களைப்பாய் இருப்பவனுக்கோ பாதை நெடுந்தூரமாகி விடுகிறது. அமைதியற்றவனுக்கோ பிறவியே பெருங்கடலாகப் போய் விடுகிறது. பயணத்தின் முடிவுக்கு வந்து விட்டவனுக்குத் துன்பமில்லை. அதுபோல வாழ்வு எனும் பயணத்தின் குறியை அடைந்தவர்களுக்குப் பந்தமில்லை. தளைகளெல்லாம் அவிழ்ந்துபட்டுப் போய் விடுகின்றன.

உயிரினங்கள் அனைத்தும் இறைவனுடைய சொரூபம் என்பதை முதலில் உணர வேண்டும். இதையே தன்னை அறிதல் என்கிறார்கள். இப்படி தன்னை அறியவே நாம் உயிர் வாழ்கிறோம். எனவே இன்பத்தை நீ புறத்தே தேடாதே. அது உன்னிடத்திலேயே இருக்கிறது என்பதை உணர்ந்து கொள். இயற்கையின் நியதி என்ன வென்றால் ஒவ்வொன்றும் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வேண்டும் என்பதே. அதன்படி நீ உள்ளத்தில் வெறுப்பு கொண்டால் அது உன்னிடமே வந்து சேர்கிறது. அன்பு கொண்டாயானால் அது நேசித்த உன்னிடமே வந்து சேர்கிறது. எனவே நாம் அடைந்துள்ள யாவும் நம் எண்ணத்தின் விளைவுகளே. உயிர்கள் அனைத்தும் இறைவனின் சொரூபம் என்று உணர்ந்தவர்கள்தான் பந்த பாசங்களில் இருந்து விடுபட முடியும். நாம் நம்மைப் போன்ற மனிதர்களின் முகத்தைப் பார்க்கிறோம். கடவுளோ மனிதனின் உள்ளம் எத்தகையது என்று பார்க்கிறார். ஆண்டவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அவருடைய ஆர் உயிர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் கடவுளின் தொண்டர்கள் ஆக முடியும்.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பார்கள். இந்த வாக்கியத்தை நாம் வாழ்வியல் நடைமுறையில் தவறாகப் பயன்படுத்துகிறோம். அது எல்லாவிடத்தும் பொருந்துவதில்லை. இருளை இருளால் அகற்ற முடியுமா ? முடியாது. வெளிச்சத்தைக் கொண்டு தான் இருளை விரட்ட முடியும். அது போல, தீமையைக் கொண்டு தீமையை அகற்ற முடியாது. நலத்தைக் கொண்டுதான் தீமையை வெல்ல வேண்டும். கெட்ட வழியில் செல்லும் மனதைக் காட்டிலும் கொடிய பகை யாருமில்லை. மனதை வெல்லுதலே மேன்மையடைவதற்கு ஒரே உபாயம். தீமைகளைப் பற்றி நினைக்கும் போதே நம் மனம் அதன் வசப்பட்டு விடுகிறது. எனவே எதையும் நன்மையாகவே சிந்தித்துப் பழக வேண்டும். இதனையே இப்போது நேர்மறை சிந்தனைகள், எதிர்மறை சிந்தனைகள் என்று சொல்கிறார்கள். காதால் கேட்பவை எல்லாம் மங்களமானவைகளாக இருக்கட்டும். கண்களால் பார்க்கப்படுபவை எல்லாம் மங்களமானவைகளாக இருக்கட்டும். போற்றுதற்குரியவைகளைப் போற்றி போற்றுதற்குரியவர்களாக வாழ்வோமாக.