புதன், 23 ஜனவரி, 2013

அகத்தியர்.

தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார். பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர் தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர். வடக்கே இமயமலையும் தெற்கே நம் பொதிகை மலையும் இவருக்கு ஒன்றேதான். தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரின் சுவையான சரிதம் இது! பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேத காலத்து சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப் படுகிறார். இவை போதாதென அகத்தியர் குறித்த எண்ணற்ற செவி வழி கதைகளும் வழங்கப் படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.அத்துடன் இவர் எழுதிய
அகத்தியர் ஐந்து சாத்திரம்,
அகத்தியர் கிரியை நூல்,
அகத்தியர் அட்டமாசித்து,
அகத்தியர் வைத்தியரத்னசுருக்கம்,
அகத்தியர் வாகட வெண்பா,
அகத்தியர் வைத்திய கௌமி,
வைத்திய ரத்னாகரம்,
வைத்தியக் கண்ணாடி,
வைத்தியம் 1500,
வைத்தியம் 4600,
செந்தூரன் 300,
மணி 400,
வைத்திய சிந்தாமணி,
கரிசில்பச்யம்,
நாடி சாஸ்திரப் பசானி,
பஸ்மம்200,
வைத்திய நூல்கள் பெருந்திரட்டு,
சிவசாலம்,
சக்திசாலம்,
சண்முக சாலம்,
ஆறேழுத்து அந்தாதி,
கர்மவியாபகம்,
விதி நூன் மூவகை காண்டம்,
அகத்தியர் பூஜா விதி,
அகத்தியர் சூத்திரம் 30,
அகத்தியர் ஞானம்
என்ற நூல்கள் முக்கியமானவையாக போற்றப் படுகிறது.
இத்துடன் "அகத்தியம்" என்னும் ஐந்திலக்கணமும், அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி நூலும் இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. . தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர். புதுச்சேரிக்கு அருகிலுள்ள உழவர் கரையில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி அகத்தீஸ்வரம்என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.