புதன், 20 பிப்ரவரி, 2013

புலிப்பாணி சித்தர்....சித்தர்கள் வரலாறு

குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்.  இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற் பெயரல்ல.  இப் பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு: ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும் கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார். பழனி மலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது. போகர், சமாதி நிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது. இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது. புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்: புலிப்பாணி வைத்தியம் – 500 புலிப்பாணி சோதிடம் – 300 புலிப்பாணி ஜாலம் – 325 புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200 புலிப்பாணி பூஜாவிதி – 50 புலிப்பாணி சண்முக பூசை – 30 புலிப்பாணி சிமிழ் வித்தை – 25 புலிப்பாணி சூத்திர ஞானம் – 12 புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை. தியானச் செய்யுள்: மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே மயில் வாகனனை வணங்கியவரே எம் கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலிப்பாதம் பற்றினோம். புலிப்பாணி சித்தர் பூசை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்ச்சம் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல், புலிப்பாணி சித்தரின் படத்தினை வைத்து, அப்படத்தின் முன்பு, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை கண் மூடி மனமுருகச் சொல்ல வேண்டும். பிறகு

பின்வரும் 16 போற்றிகளை வில்வம் அல்லது சாமந்திப் பூ அல்லது அரளிப் பூ கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி!

 2. தண்டபாணிப் பிரியரே போற்றி!

3. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!

4. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!

5. சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி!

 6. ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி!

7. யந்திரங்களை பிரதிஷ்டை செய்பவரே போற்றி!

8. உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி!

 9. வனத்தில் வாசம் செய்பவரே போற்றி!

 10. தெய்வயானையின் புதல்வரே போற்றி!

 11. சூலாயுதம் உடையவரே போற்றி!

13. மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி!

14. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!

15. எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி!

16. முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, மூல மந்திரமான, “ ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றிஎன்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு  உங்கள் பிரார்த்தனைகளை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். 
புலிப்பாணி ஜால வித்தைகள்:- போகரின் சீடரான புலிப்பாணி இயற்றிய நூல்கள் மற்ற சித்தர்களின் நூல்களைப் போல எளிதில் காணக் கிடைக்காதவை. அப்படியான ஒரு நூல் தான் புலிப்பாணி ஜாலம் 325. இதில் பல சித்து வகைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். அதனை இனி வரும் பதிவுகளில் காண்போம். நெருப்பில்லாமல் சோறாக்கும் ஜாலம்... "பாடினேன் அக்கினியு மில்லாமற் றான் பண்பான அன்னமது சமைக்கக் கேளு ஆடினேன் கானகத்தில் வேண துண்டு அடைவாக சதுர கள்ளி பாற் கரந்து சாடி நீ பாண்டத்தி லரிசி போட்டு சரியாக பால் தன்னை சுருக்காய் வாரு நாடிப்பார் சோறதுவும் வெந்திருக்கும் நலமாக ஜாலம் போல் லாடிப் பாரே" - புலிப்பாணி ஜாலம் 325 - ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் காட்டிலிருந்து கறந்தெடுத்து வந்த சதுரக் கள்ளியின் பாலை விட்டு கால் நாழிகை மூடி வைதிருந்து திறந்து பார்க்க சாதம் நன்றாக வெந்திருக்கும்.. ஆனால் அந்த சாதத்தை யாரும் புசித்தலாகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 137 வது பாடலான..... "பாரப்பா பாருலகில் பிரமிக்க சொல்வேன் பதிவாக மனத்தினிடம் நிறுத்திவை நீ காரப்பா கால் பலமே கற்பூரம் வாங்கி கடிதாக வாயில் போட்டு மென்று துப்பி சாரப்பா அவை தனிலே பந்தத்தை சுற்றி சரியாக கொளுத்தி அவையோருக்கு காட்டி நேரப்பா வாயிலிட்டு எக்ஷினியை என்று நிசிவாக நில்லேடி என் பாக்கள் என்னே" கால் பலம் கற்பூரம் வாங்கி வாயில் போட்டு நன்றாக மென்று உமிழ்ந்து விட்டு மக்கள் கூடிய அவையில் போய் நின்று, பந்தத்தைக் கொளுத்தி அவையோருக்குக் காட்டி "எக்ஷினி நீ என்பக்கம் வந்து நில்லடி"என்று சொல்லி பந்தத்தை வாய்க்குள் வைத்து மூடி திறந்து காட்டலாம் ஒன்றும் ஆகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 141 வது பாடலான..... "உண்ணவே இன்னுமொரு ஜாலங் கேளு இங்குரைப்பேன் விண்ணோரும் வெருண்டு நிக்க என்னவே இரங்கழிச்சில் விதை வாங்கி அதை குழித்தைலம் வாங்கிக் கொண்டு துன்னவே தைலமதை கையிற் தேய்த்து துலக்கமாதாம் தென்னைமரம் தன்னை நோக்கி கன்னவே மரத்தடியில் கைதால் குத்த கங்குமற்று காயதுவும் விழுகும் பாரே" உலகத்தோர் வியக்கும் ஜாலம் சொல்கிறேன் கேள்! , இரங்கழிச்சில் விதையை எடுத்துக் அதில் குழித்தைலம் செய்து, அத் தைலத்தை கொஞ்சமாய் எடுத்து, கையில் தேய்த்துக் கொண்டு காய்கள் காய்த்திருக்கும் தென்னை மரத்தில் ஒரு குத்து குத்த ஒருகாய் மரத்திலிருந்து விழுமாம். புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 163 வது பாடலான..... "எமனுட அக்கினியை மதியா வித்தை இயம்புகிறேன் எல்லோரும் ஆச்சரிக்க நாமனவே சனகனிட புதரு தன்னில் நலமாக பூத்திருக்கும் காளான் தன்னை சொமனவே கொண்டுவந்து புது பாண்டத்தில் சுருக்குடனே போட்டு நீ கதிரில் வைக்க ஆமனவே தைலமாதா உருகும் பாரே அதையெடுத்து பூசி தீயில் குதி" எல்லோரும் ஆச்சர்ய பட தக்கவிதமாக நெருப்பு சுடாமளிருக்கும் வித்தையைக் கூறுகிறேன் கேள், சங்கன் செடியின் புதர்களில் பூத்திருக்கும் காளானைக் கொண்டுவந்து புது மண் பாண்டத்தில் போட்டு சூரிய ஒளியில் வைக்க உருகி வரும் அதை உடம்பில் பூசிக் கொண்டு எவ்வளவு தீயில் வேண்டுமானாலும் குதிக்கலாம் சுடாது என்கிறார் புலிப்பாணி சித்தர். மணலைக் கண்ணில் கொட்டிக்கொள்ளும் ஜாலம்... புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 273 வது பாடலான..... "பாடினேன் இன்னுமொரு ஜால வித்தை பண்பான பேர்விளங்க சொல்வேன் கேளு நாடியே நத்தை சூரி வேரைக் கண்டு நவிலாமல் தாடையிலே மடக்கிக் கொண்டு கூடியே கூச்சமென திருந்திடாமல் குணமான கண்ணதனில் மணலைப் போட்டு ஆடியே இரு கண்ணும் விரலால் தேய்க்க அன்பான கண்ணும் அருகாது பாரே" நத்தை சூரியின் வேரைக் கொணர்ந்து, சிறு சிறு துண்டு துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் மென்று தாடையில் அதக்கிக் கொண்டு, இரு கண்ணிலும் மணலைப் போட்டுக் கொண்டு கையால் தேய்த்தால் கண்களுக்கு எதுவும் ஆகாது என்கிறார் புலிப்பாணி சித்தர். இத்துடன், இந்த நூலில் நத்தை வேரைக் கொண்டு செய்யும் வேறு சில ஜாலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர பச்சை பாம்பு ஜாலம், மாடன் மந்திரம், இந்திர ஜாலம், எக்ஷனி ஜாலம், வாத்தியஜாலம் போன்ற சில ஜால முறைகளையும், சில யந்திர ஜாலங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இவைகளைப் பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

புலிப்பாணி ஜோதிடம் .

புலிப்பாணி ஜோதிடம் சித்தர்களில் பலர் மக்களின் நலன்களை கருதியும், தங்களின் சீடர்களின் துயரங்களைப் போக்கிடும் வகையில் சோதிட ஆய்வுகளின் தெளிவுகளை நூலாக்கி தந்திருக்கின்றனர்.இவை எல்லாமே வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர். இத்தகைய நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இந்த நூலில் பல அரிய விபரங்களை விளக்கியுள்ளார். இதிலிருந்து ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும். வான் மண்டலத்தில் நீள் வட்ட பாதையில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்றிவரும் பாதையில் தான் இருபத்தியேழு நட்சத்திரங்களும் உள்ளன. இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின்ன் பாதைகளை பன்னிரண்டு ராசிகளாக பிரித்து, அவற்றை நூற்றி இருபது அம்சங்களாக பகுத்திருக்கின்றனர். சந்திரன் இரண்டேகால் நாழிகை ஒரு ராசியில் சஞ்சரிப்பார். பிறந்த நேரத்தினைக் கொண்டு சூரியனின் அமைப்பைக் கொண்டு ஒருவரின் லக்னத்தையும், சந்திரனை வைத்து ராசியும் கண்டுபிடிக்கபடுகிறது. ஜோதிட விதிகளின் படி நாழிகை கணக்கே வழக்கத்தில் உள்ளது. ஒருநாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதாவது இருபத்தி நாலு மணி நேரம் அறுபது நாழிகை என்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு நாள் என்று எழு நாட்கள் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் ராகு , கேது கிரகங்களுக்கு தனியே நாட்கள் வழங்கப்பட வில்லை. இப்படி கிரகங்கள் சஞ்சரிக்கும் கால அளவுகளை ஒட்டியே கிழமைகள், திதிகள், வாரம், வருஷம், எல்லாம் குறிக்கப்படுகின்றன. பன்னிரண்டு ராசிகளும் பன்னிரண்டு கட்டங்களில் குறிக்கப் படுகிறது. இந்த கட்டங்களை அந்த அந்த ராசிகளின் வீடுகள் என்று குறிப்பிடுவர். இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் இந்த பன்னிரண்டு ராசிகளுக்குள் பிரிக்கப் பட்டிருக்கும். அதாவது ஒரு கட்டத்திற்கு ஒரு ராசியும் அதற்குண்டான நட்சத்திரங்களும் பிரிக்கப் பட்டிருக்கும். அந்த கட்டத்திற்குறிய ராசியினை, ராசி நாதன் அல்லது ராசி அதிபதி என அழைப்பர். பன்னிரண்டு ராசி அதிபதிகளும் அதற்க்கு உரிய நட்சத்திரங்களின் விவரம் வருமாறு.... மேஷம் - செவ்வாய் - அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம். ரிஷபம்- சுக்கிரன் - கிருத்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , ரோகிணி, மிருகசிரீஷம் 1ஆம், 2ஆம் பாதம். மிதுனம் - புதன் - மிருகசிரீஷம் 3ஆம், 4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம். கடகம் - சந்திரன் - புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம். சிம்மம் - சூரியன் - மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் . கன்னி - புதன் - உத்திரம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் . துலாம் - சுக்கிரன் - சித்திரை 3ஆம், 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் . விருச்சிகம் - செவ்வாய் - விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை. தனுசு - குரு - முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம். மகரம் - சனி - உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1ஆம், 2ஆம் பாதம். கும்பம் - சனி - அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம் , சதயம், பூரட்டாதி 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம். மீனம் - குரு - பூரட்டாதி 4ஆம் பாதம் , உத்திரட்டாதி, ரேவதி. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் எந்த வீட்டில் குறிக்கிறதோ அதை முதலாவதாக கொண்டு எண்ணுதல் வேண்டும். முதலில் ராசி வேறு லக்னம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும், பிறந்த வேளையில் சந்திரன் எங்கு இருக்கிறதோ அதுவே ராசி ஆகும். இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான குணாம்சங்களை கொண்டவை. இவை ஒவ்வொன்றும் பிற கிரகஙக்ளோட நட்பு, பகை அமைப்புகள் கொண்டவை. இதனை வைத்து ராசி கட்டங்களில் நட்பு வீடுகள், பகை வீடுகள், ஆட்சி , உச்ச , நீச வீடுகள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள்....இவை பன்னிரெண்டு கட்டங்களில் அமைக்கப் பட்டிருப்பது அதன் விவரங்கள் என்னவென்பதை கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம். ஒருவர் பிறந்த நேரத்தினை வைத்து லக்கினம் கணிப்பதும், ராசியினை நிர்ணயித்து அவருக்கான ஜாதக கட்டங்கள் அமைப்பதன் அடிப்படைகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இனி இந்த பதிவில் கிரகங்களின் குணாம்சங்களை கவனிப்போம்.... கிரகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை, இவை மற்ற கிரகங்களோடும், ராசிகளோடும் எத்தகைய அணுகு முறையினை வைத்திருக்கிறது என்பதும் மிக முக்கியமானது. இதை நட்பு நிலை, பகை நிலை, வலுவடைந்த நிலை, வலுக் குறைந்த நிலை, வலு இழந்த நிலை என்பதாக பிரித்திருக்கின்றனர். முதலில் ராசிகளோடு நட்பு நிலை பாராட்டும் கிரகங்களைப் பார்ப்போம்.... சூரியன் - விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.  சந்திரன் - மிதுனம், சிம்மம், கன்னி. செவ்வாய் - சிம்மம், தனுசு, மீனம். புதன் - ரிஷபம், சிம்மம், துலாம். குரு - மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம். சுக்கிரன் - மிதுனம், தனுசு, மகரம், கும்பம். சனி - ரிஷபம், மிதுனம். ராகு, கேது - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம். ராசிகளோடு பகை நிலை பாராட்டும் கிரகங்களைப் பார்ப்போம்... சூரியன் - ரிஷபம், மகரம், கும்பம். செவ்வாய் - மிதுனம், கன்னி. புதன் - கடகம், விருச்சிகம். குரு - ரிஷபம், மிதுனம், துலாம். சுக்கிரன் - கடகம், சிம்மம், தனுசு. சனி - கடகம், சிம்மம், விருச்சிகம். ராகு, கேது - கடகம், சிம்மம். சந்திரன் - எல்லா வீடுகளுமே நட்பு தான் பகை வீடு கிரகங்களின் ஆட்சி, உச்ச, நீச, திரிகோண நிலையங்கள்... கிரகங்களின் பார்வைகள்.... எல்லா கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது வீட்டை அதாவது ஏழாவது கட்டத்தினை பார்ப்பார்கள். செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7 , 8 வீடுகளை பார்க்கும் தன்மை உண்டு. { 4ம், 8 ம் பார்வை விசேட பார்வை}. குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 வீடுகளை பார்ப்பார். { 5ம், 9 ம் பார்வை விசேட பார்வை}. சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். { 3ம், 10ம் பார்வை விசேட பார்வை}. புலிப்பாணி சித்தரின் சோதிட நூலினைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், இதுவரையில் நாம் பார்த்த சோதிட அடிப்படைகள் சிலவற்றை நினைவு படுத்திட விரும்புகிறேன். ஒருவரின் ஜாதக பலனை கணிப்பதற்கு, அவரின் பிறந்த நேரம் வைத்து ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை வரையறுக்கப் படுகிறது. இராசி வேறு லக்னம் வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இராசி என்பது பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கு இருக்கிறதோ அது தான் ராசி. அந்த ராசியை கொண்டு தான் கிரகங்களின் சஞ்சாரங்களை கணித்து பலன் கூற வேண்டும். இதையே கோசார பலன் என்று அழைப்பர். லக்னம் என்பது குறிப்பிட்ட ஜாதகருக்கு என்ன திசை நடக்கிறது என்பதையும், எந்த கிரகம் எத்தனையாவது வீட்டில் உள்ளது என்பதையும், அதன் அதிபதி யார்?, அவர் என்ன நிலையில் இருக்கிறார்? அவர் ஆட்சி பெற்றிருக்கிறாரா?, அல்லது உச்சம் பெற்றிருக்கிறாரா?, அல்லது நீசம் அடைந்திருக்கிறாரா?, என்பதை அறிய உதவும். இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்ட எவரும் "புலிப்பாணி ஜோதிடம் 300 " என்ற நூலை எளிதில் புரிந்து கொள்ள முடியும். "புலிப்பாணி ஜோதிடம் 300 " என்ற நூலில் காப்பு அடங்கலாக மொத்தமாக 309 பாடல்கள் உள்ளன. அந்த பாடல்கள் அனைத்திற்கும் தெளிவான பொருள் கூற தெரிந்தவர்கள் உலகிலுள்ள எந்த ஒரு மனிதரின் ஜாதக பலன்களையும் துல்லியமாகக் கணிக்க முடியும். நான் அறிந்த வரையில் மிகச் சிலரே இதில் விற்பன்னராய் இருக்கின்றனர். அவர்களை தேடியறிந்து பலன் கேட்பதே சிறப்பு. இந்த நூலில், "ஆதியெனும் பராபரத்தின் கிருபை காப்பு அன்பான மனோன்மணியாள் பாதங் காப்பு சோதி எனும் பஞ்ச கர்த்தாள் பாதங் காப்பு சொற்பெரிய கரிமுகனுங் கந்தன் காப்பு தீதி எனும் மூல குரு முதலாயுள்ள நிகழ்ச்சித்தார் போகருட பாதங் காப்பு வாதிஎனும் பெரியோர்கள் பாதங் காப்பு வாழ்த்துகிறேன் ஜோசியத்தின் வண்மை கேளே" ஆதிக்கும் ஆதியாய் விளங்கும் பரம்பொருளுக்கும், அன்பான மனோன்மணி அம்மனின் பாதத்திற்கும், ஜோதிவடிவான பஞ்ச பூதங்களின் பாதத்திற்கும், முதற் கடவுளான ஆனைமுகனுக்கும், கந்தனுக்கும், என்றும் வாழும் சித்தராகிய போகருக்கும், எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சான்றோர்களையும் வணங்கி நல் வாழ்த்துக்களுடன் ஜோதிடத்தின் சிறப்பை சொல்கிறேன் கேள் என்பதாக ஆரம்பிக்கிறார். புலிப்பாணி முனிவர் இந்த நூலினை ஒரு புதிர் விளையாட்டினைப் போல அமைத்திருக்கிறார். எந்த ஒரு மனிதரின் பலனையும் துல்லியமாய் அறிந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட இந்த நூலின் கட்டமைப்பு அசாத்தியமானது. ஒன்றைத் தொட்டு ஒன்றாய் தொடந்து செல்வதாக வடிவமைத்திருக்கும் புலிப்பாணி முனிவரின் அறிவுத்திறம் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது. நூலின் துவக்கத்தில் லக்னங்களைப் பற்றி விவரித்து விட்டு, தொடர்ச்சியாக கிரகங்களின் தன்மையினை விளக்குகிறார். பின்னர் லக்னத்தை கொண்டு குறிக்கப்படும் ஒவ்வொரு பாவங்களின் பலன்களை விவரிக்கிறார். அதைத் தொடர்ந்து என்ன லக்னத்திற்கு என்ன பலன் என்று விளக்கி விட்டு. ஒவ்வொரு கிரகமும் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை விவரித்துக் கொண்டு சொல்கிறார். கிரகங்களின் பார்வைகளும் அதன் பலன்களையும் சொல்லும் வேளையில், ஒருவரது ஜாதகத்தில் உள்ள யோகங்களைப் பற்றி விளக்கும் அவர், தோஷங்களைப் பற்றியும் அதற்குரிய பரிகாரங்களையும் சொல்கிறார். உதாரணத்திற்கு பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க என்ன பரிகாரம், நாகதோஷம், செவ்வாய் தோஷம், காரியத்தடை எதனால் ஏற்படுகிறது அதை நிவர்த்திசெய்வது எப்படி? எந்த கிரகநிலை உள்ளவர் என்ன தொழில் செய்தால் அதிக லாபமீட்டலாம் என்பதையும், அத்துடன் என்ன கிரக நிலை உள்ள ஜாதகர் என்ன கற்பார் என்றும் , சில கிரகங்களின் அமைவிடத்தை வைத்து அந்த ஜாதகருக்கு புதையல் கிடைக்கும் என்பதையும் வரையறுக்கும் முறையும் சொல்லியுள்ளார். இந்த கிரகங்களின் மகா திசையில் இந்த புத்தி நடைபெற்றால் இன்ன பலன் என்பதையும் வரையறுத்து தெளிவாக சொல்கிறார். இவை எல்லாம் விளக்கமாக சொல்லும் அவர் இடைக்கிடையே தன்னுடைய குரு போகரின் அருளால் பக்குவமாக சொல்கிறேன் புலிப்பாணி என்று கூறிச் செல்கிறார். "பாரே நீ போகருட கடாட்சத்தாலே பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே" இந்த நூலின் அமைப்பினையும், தன்மையும் நானறிந்த வகையில் விளக்கியிருக்கிறேன். இதை பயன் படுத்தும் முறையினை பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். தமிழுக்கும், சோதிட கலைக்கும் கிடைத்த அரும்பெரும் கொடை இந்த நூல் என்றால் மிகையில்லை. இந்த நூலை முறையாக பயன் படுத்தினால் எவரும் தங்களின் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.