புதன், 24 ஏப்ரல், 2013

யோகர் சுவாமி

யோகர் சுவாமி என்று அழைக்கப்பட்ட சித்தர் மக்களின் ஆறுதலுக்காக தன்னை அர்ப்பணித்தவர்.

சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964) ஈழத்தில்ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.
அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.

கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்க பாதிரிமாரின் நிறுவனமொன்றில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலமும், தமிழும் படித்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில்இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.

தம்முடைய உத்தியோகக் கடமைகள் தவிர கனிதரும் மரங்களை நட்டுக் கவனமாகப் பராமரித்து வந்தார். அவ்வாறு அவர் நட்டு பராமரித்த மாமரம் ஒன்று இன்றும் "சுவாமியார் மரம்" எனும் பெயருடன் கிளிநொச்சியில் உள்ளது.

1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. இவரைக் கண்டவுடனேயே செல்லப்பா சுவாமி சிங்கக் கர்ச்சனையாக "டேய்! நீ யார்?" என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என உறுமினார். செல்லப்பாசுவாமியின் குரலிலும் பார்வை கூர்மையிலும் கட்டுப்பட்ட சதாசிவம் அக் கணமே வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார்.
குரு தீட்சை பெற்று சாமியின் மிதியடிகளை வாங்கி கொண்டு அவரின் ஆசீர்வாதத்துடன் கொழும்புத்துறைக்கு போனார். அங்கு ஒரு இலுப்பை   மரத்தடியில் அமர்ந்திருப்பது வழமை. செல்லப்பா சாமி 1911 இல் சமாதி அடைந்த பின்னர் சாமியின் பக்தர்கள் கொழும்புத்துறையில் சிறு குடில் அமைத்துக் கொடுத்தார்கள். அங்கு சுமார் ஐந்து வருடங்கள் கடும் தியானம் புரிந்தார். ஆனால் யோகருக்கும் குருவைப் போன்று ஊர் சுற்றுவது பிடித்த காரியம். யோகர் கால் படாத தெருவே யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம். வேட்டி, சண்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு இவற்றுடன் எங்கும் நடந்து திரிவார். யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் இவருக்கு பக்தர்கள் இருந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களிலும் மரியாதை இவருக்குக் கிடைக்கப்பெற்றது. மார்கழி 1934 இல் சிவா தொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தினார். 1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா சென்றார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.
பங்குனி 1964 ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகர்  சுவாமிகள் தனது 91வது வயதில் கொழும்புத்துறையில் உள்ள அவரது ஆசிரமத்தில் ஜீவ சமாதியானார்.
யோகசுவாமிகள் தன்னிடம் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்குத் திரும்பத்திரும்பக் கூறுவது:

எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை

இவர் யோகர் சுவாமியின் சீடர்ஹவாய் தீவில் ஆச்சிரம வாழ்க்கை வாழ்ந்தார்.

சனி, 20 ஏப்ரல், 2013

ஞானம்தான் மனிதன் அடைய வேண்டிய உன்னத லட்சியம்

ஞானம் அடைய முயற்சிகள் செய்யும்பொழுது, நமக்கு ஏற்படும் சில அனுபவங்கள் நம்மை அந்த முயற்சியிலிருந்து விலக வைக்கும் வல்லமை உள்ளது. அது பற்றி நான் பலருடன் விவாதித்ததுண்டு. இருந்தாலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. நான் புரிந்த வரை, அவை பற்றிய எனது சிந்தனைகள்.
முதலில் வருவது - அளவுக்கதிகமான ஞான ஆர்வத்தினால் தம் கடமைகளை மறத்தல் / மறுத்தல்.சிலருக்கு ஞான ஆர்வம் வந்ததும் தத்தம் குடும்பக் கடமைகளை மறந்து, அதை மறுத்து ஞானத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக, குடும்பக் கடமைகளையே செய்ய முடியாவிட்டால் நிச்சயம் ஞானக் கடமைகளை செய்ய முடியாது.
இதற்கு முக்கிய காரணம், ”நாம்” முயற்சி செய்து நாமே ஞானம் அடைகிறோம் என்கின்ற ஆணவம் தான். இதை முதலில் விடவேண்டும். ஞானம் நம்மைத் தேடி நிச்சயம் வரும். முயற்சி மட்டுமே நம்முடையது. இந்தத் தெளிவை நம் குரு மட்டுமே தர முடியும். நம் மீது உண்மையான அக்கறை கொண்ட ஞான குரு நிச்சயம் நம்மை சரியான வழியில் வழி நடத்துவார்.
அடுத்து இந்த வரிசையில் வருவது - அமானுஷ்ய சக்திகள். இந்த சக்திகள்தான் ஞான மடைவதற்கு முக்கிய எதிரிகள். நம் மனித முயற்சி தேவைப்படாத எதுவும் நமக்கானதில்லை. அது நமக்காக செய்யப்பட்டாலும் பிறருக்காக செய்யப்பட்டாலும்.
ஞான மார்க்கத்தில் செல்லும் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இதைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. சிலர் இந்த அமானுஷ்ய சக்திதான் ஞானம் என்று அதிலேயே இருந்துவிடுவார்கள்.
அடுத்து வருவது - பதவி, புகழ். பதவி, புகழ் என்பது ஒரு போதை. அதற்கு அடிமையாக ஆகாமல் இருக்கவேண்டும். தவிர்க்க முடியாமல் வரும் பதவி, புகழ் இவற்றால் ஏற்படும் போதை தலையில் ஏறாமல் ஞான மார்க்கத்தை விட்டு விலகாமல் சென்றால் வெற்றி நிச்சயம்.
புகழின் சில விளைவுகள் - நம் ஆணவம், அகங்காரம் அதிகரித்தல். சொல் பேச்சு கேளாமை. தான் தோன்றித்தனம். தன்னை முன்னே நிறுத்தி காரியங்கள் செய்ய முயல்தல். இவை அனைத்தும் ஞானப் பாதைக்கு எதிரானவை.
அடுத்து வருவது - அளவுக்கதிகமான பணம், செல்வம். நம் தேவைக்கு, தகுதிக்கு அதிகமான செல்வம் வருவது போல இருந்தால் நிச்சயம் பிரச்சினைதான்.
பதவி, புகழின் அனைத்து விளைவுகளும் பணத்துக்கும் உண்டு.
அடுத்தது - தான் ஞானம் அடைந்துவிட்டதாக தானே எண்ணுதல். சிலருக்கு ஞானப் பாதையில் செல்லும்போது திடீரென்று தான் ஞானம் அடைந்துவிட்டதாகத் தோன்றும். அதற்கு போலியாக சில அறிகுறிகளும் அவர்களுக்கு இருக்கும். சுற்றி இருக்கும் சிலரும் அதை வழி மொழிவார்கள். அதையே பிடித்துக் கொண்டு ஞானப்பாதையை விட்டு விலகிவிடுதல்.

நமக்கு ஞானம் வந்தால் நிச்சயம் அது நமக்கு தெரியாது. இதை சரியாக கணிக்க வேண்டியவர் நம் குரு மட்டுமே.

எவ்வளவு இருந்தாலும், ஞானம்தான் மனிதன் அடைய வேண்டிய உன்னத லட்சியம். அதை நோக்கி பயணிப்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. ஞானப் பயணமே நம் லட்சியப் பயணம்.