ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

மறு பிறவி


 இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம் மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?

இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து இனியும் பிறப்பது அல்ல!?
...
இந்த பிறவி இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குதான் நம் ஞானிகள் வழி
கூறுகிறார்கள்.

அது என்ன? எப்படி? நாம் ஞான குரு ஒருவரை பெற்று
உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே மறுபிறவியாம்! அதாவது
உடலால் பிறந்த நாம் உணர்வால் நம் சூட்சம உடலை பிறப்பிக்க ஒரு
குருவை பெற்றே ஆகவேண்டும்!

யார் நம்மை, சூட்சம சரீரத்தை பிறப்பிக்க செய்கிறாரோ அவரே குரு!
நம் வாழ்வின் பெரும் பேறே இதில்தான் இருக்கிறது! ஞானமடைய
இதுவே வழி!

நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும
தேகம் உள்ளது! முதலில் அதை உணரவேண்டும்! குருவானவர் தீட்சையின்
மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்க செய்கிறார்!

ஸ்தூல தேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறு பிறவி!
பிறந்த இப்பிறவியிலே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!
இதை யார் உணர்கிறார்களோ அவரே ஞானம் பெறுகிறார்!

வேதங்களில் சொல்லபடுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே!

மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்"
மறுபடியும் பிறந்தால் தான் பரலோக ராஜ்யம்!? எப்படி?
எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ? அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!

அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழிகூறும் உபநயனம்!

வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்!

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!

பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!

குரு மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!

பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்!