திங்கள், 2 செப்டம்பர், 2013

”பகவானும் வெளிநாட்டு பக்தரும்”

ரமணாச்ரமம்.
முற்பகல் நேரம்.
ஹாலின் உள்ளே வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் பகவான் வெளியே உள்ள மரத்தடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். சுற்றி பக்தர்கள் அமர்ந்திருந்தனர். பகவான் உபதேச சாரத்திலிருந்து சில பாடல்களைக் கூறி அதன் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு வெளிநாட்டு பக்தர் ஒருவர் வந்தார். எல்லோரும் கீழே அமர்ந்திருந்ததைப் பார்த்த அவரும் கீழே அமர முயற்சித்தார். அவருக்கு அப்படி அமர்ந்து பழக்கமில்லாததால் முடியவில்லை. அதனால் சற்று தூரத்தில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து அதில் அமர்ந்தார். பகவான் சொல்வதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்.
”உபதேசிக்கும் குரு மேலே இருக்க சீடர்கள் கீழே அமர வேண்டும். அதுதான் நியதி. அது தெரியாத இந்த வெள்ளைக்காரர் பகவானுக்குச் சரிசமமாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறாரே, இது என்ன நியாயம்?” சீடர் ஒருவர் மற்றொரு சீடரிடம் முணுமுணுத்தார். மேலும் பல சீடர்களுக்கும் அதுவே எண்ணமாக இருந்தது. அவர்களில் ஒருவர் எழுந்து வெள்ளைக்காரரிடம் சென்றார்.
“நீங்கள் இதில் உட்காரக் கூடாது. கீழே தான் உட்கார வேண்டும்” என்றார்.
“ஐயா, நான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் என்னால் உங்களைப் போல் காலை மடக்கிக் கீழே உட்கார முடியவில்லை. எனக்கு அது பழக்கமுமில்லை” என்றார் அந்த வெளிநாட்டவர் ஆங்கிலத்தில்.
“எங்கள் குருவுக்குச் சமமாக நீங்களும் உட்கார்ந்திருப்பது எங்கள் குருவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. எல்லா சீடர்களும் இதையே நினைக்கிறார்கள்” 
“ஓ.. சரி, என்னால் கீழே அமரவும் முடியாது. இப்படி நாற்காலியில் அமர்ந்தால் உங்களுக்கும் கஷ்டம். அதனால் நான் சென்று விடுகிறேன்” என்று சொல்லி விட்டு எழுந்து மெள்ள வெளியே நடக்க ஆரம்பித்தார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த ரமணர், அந்த சீடரிடம், ”என்ன ஆச்சு, ஏன் வந்தவர் உடனே வெளியே போகிறார்?” என்று கேட்டார்.
உடனே அந்தச் சீடர், “பகவான். அவரால கீழே உட்கார முடியாதாம். நாற்காலியில தான் உட்கார முடியுமாம். அப்படியெல்லாம் இங்க உட்கார்றது முறையில்ல. அது பகவானை அவமானப்படுத்தறமாதிரின்னு சொன்னேன். அவரும் சரின்னுட்டு போயிட்டார்” என்றார்.
உடனே பகவான் ரமணர், “ஓஹோஹோ, குரு மட்டும்தான் உசந்த ஆசனத்துல உட்காரணுமா? சரிதான். இதோ இந்த மரத்து மேலே ஒரு குரங்கு உட்கார்ந்திண்டு இருக்கு. அதுவும் என்னை விட உசரமான இடத்தில் தான் இருக்கு. அதை என்ன பண்ணுவ? அதையும் வெளியில அனுப்படுவியா நீ? என்றார்.
சீடர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பகவான் உடனே, “இதோ பார், இந்த உலகத்துல யாரும் உசத்தியும் இல்லே! யாரும் தாழ்ச்சியும் இல்லே! அவரை உடனே கூப்பிட்டு அங்க உட்கார வைங்கோ.” என்றார் சற்றுக் கடுமையாக.
சீடர்களும் அந்த வெளிநாட்டவரை அழைத்து வந்து ஆசனத்தில் அமர வைத்தனர்.
பகவானின் உபதேச விளக்கம் தொடர்ந்தது.
அது பக்தரோ, பித்தரோ, மனிதனோ, விலங்கோ, பறவையோ எல்லாவற்றையும் ஒன்றாகவே பார்த்த, சமமாகவே கருதிய – சக ஆத்மாகவே நடத்திய – ஒப்புயர்வற்ற ஞானி பகவான் ரமண மஹரிஷி.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!