புதன், 18 செப்டம்பர், 2013

“சித்திகள் சாதனைக்குத் தடை” என்று கூறியவர் பகவான் ரமணர்

அவன் ஒரு சிறுவன். அவனது பெயரும் வேங்கடராமன்தான். பகவானின் பரம பக்தையான அவனது பாட்டி எச்சம்மாள் வைத்த பெயர் அது. ஒரு வயதிலேயே தாயை இழந்த அவனை எச்சம்மாதான் வளர்த்தாள். சிறுவயதிலேயே ஆச்ரமச் சூழலில் வளர்ந்தான் அவன். தினந்தோறும் காலையும், மாலையும் ஆச்ரமம் வந்து சேவித்துச் செல்வாள் பாட்டி. உடன் சிறுவனையும் அழைத்து வருவாள்.
அவனுக்கு 10 வயது நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் கார்த்தீகை தீப தினம். அன்று ரமணரின் அனுமதியும் ஆசியும் பெற்று அண்ணாமலையார் ஆலயத்திற்குச் சென்றான். அன்று அவனது தாத்தாவின் திதி தினம் வேறு. அதனால் சிவகங்கைக் குளத்தில் முழுகிக் குளித்து பின்னர் ஈசனைத் தரிசிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவன், குளத்திற்குக் குளிக்கச் சென்றான். குளக்கரையில் யாருமில்லை. பாசி படர்ந்த அந்தக் குளத்தில் மிக ஜாக்கிரதையாகக் கால் வைத்து இறங்கினான். இரண்டு படிகள் இறங்கி இருப்பான். அப்படியே பாசியில் கால் வழுக்கி விழுந்தான். நீரில் மூழ்க ஆரம்பித்தான். நீச்சலும் தெரியாது என்பதால் பயத்தால் அலறினான். கதறினான். யாரையாவது துணைக்கு வருமாறு கத்தினான். ஆனால் மூழ்கிக் கொண்டிருந்த அவன் குரல் யார் காதிலும் கேட்கவேயில்லை.
உடல் கீழே செல்ல ஆரம்பித்தது. சிறுவன் போராடி மேலே வர முயற்சி செய்தான். இயலவில்லை. எங்கும் கருமை சூழ்ந்தது. அப்போது ’திடீர்’ என்று தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தெரிந்தது. அதில் பகவான் ரமணரின் அருள் பொங்கும் முகம் தெரிந்தது. உடனே அந்த உருவம் மறைந்தது. அவ்வளவுதான். தண்ணீரை அதிகம் குடித்த அந்தச் சிறுவன் மெள்ள மெள்ள மயங்க ஆரம்பித்தான். யாரோ அவனது காலைப் பிடிப்பது போலிருந்தது. ஒளி தோன்றி மீண்டும் அதில் பகவான் ரமணரின் முகம் தெரிந்தது. அந்தப் பையன் மூர்ச்சையாகிப் போனான்.
அவனுக்கு நினைவு திரும்பியபோது சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டில் படுத்திருந்தான். உடலிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தண்ணீரில் மூழ்கிப் போன தான் எப்படி மீண்டு வந்தோம் என்பது தெரியாமல் திகைத்தான். தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களிடம் தன்னைக் காப்பாற்றியது யார் என்று கேட்டான்.
அங்கிருந்த ஒருவர், “கம்பத்து இளையனாரைச் சுற்றி வந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென குளத்துப் பக்கம் ஓடினார். அப்படியே தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் உன்னைக் கரையேற்றி இங்கே கிடத்தி விட்டு கோயிலுக்குள் வேகமாகப் போய் விட்டார். அவர் யார் என்பது தெரியவில்லை” என்றார்.
சிறுவன் ஆலயத்திற்குள் சென்றான். தன்னைக் காப்பாற்றியவர் அடையாளம் காண்கிறாரா, அவரிடம் நன்றி சொல்லலாம் என்று தேடிப் பார்த்தான். யாருமே அவனைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலையாரைத் தரிசித்தான். பின்னர் வீட்டுக்குச் சென்றான். சொன்னால் திட்டுவார்கள் என்பதால் தனக்கு நேர்ந்த விஷயத்தை வீட்டில் அவன் யாரிடமும் சொல்லவில்லை.
மறுநாள் பாட்டி எச்சம்மாளுடன் ரமணாச்ரமம் சென்றான்.
இருவரும் பகவானை தரிசித்தனர். அப்போது பகவான் சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனை நோக்கி “ ஆமாம். சிவகங்கைக் குளம் எவ்வளவு ஆழம் இருக்கும்?” என்று கேட்டார்.
பகவான் அப்படிக் கேட்டதும் அந்தச் சிறுவன் திகைத்துப் போனான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. (அந்த வயதில் அது அவனுக்குப் புரியவில்லை) பயந்து போய் அந்த இடத்தை விட்டு வெளியே ஓடி விட்டான்.
பிற்காலத்தில் கே.வி.மாமா என்று பிற பக்தர்களால் அழைக்கப்பட்ட கே.வேங்கடராமனுக்கு, வளர்ந்து இளைஞனான பின் தான் அந்தச் சொல்லின் பொருள் புரிந்தது. தன்னைக் காப்பாற்றியது முக்காலமும் உணர்ந்த பகவானன்றி வேறு யாராக இருக்கும் என்று உணர்ந்தவர், அவரைப் போற்றி வணங்கினார்.
“சித்திகள் சாதனைக்குத் தடை” என்று கூறியவர் பகவான் ரமணர். சாதகர்கள் சித்திகளிலேயே மனம் லயித்து வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு கூறினாரே தவிர, சித்திகளை இழித்துரைப்பதற்காக அல்ல. என்றாலும் பக்தர்களைக் காப்பதற்காக அவர் சித்தி பற்றிய தனது விதியை பலவிதங்களில் தளர்த்திக் கொண்டார் என்றே சொல்லலாம். பலருக்கு பல ரூபங்களில் அருணாசல ரமணர் அருள் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றை அவர் எப்போதும் வெளிச் சொன்னதில்லை. பக்தர்கள் அதுபற்றி ஏதாவது பேசினாலும் கூட ‘ஓஹோ, அப்படியா’ என்பது போல கேட்டுக் கொண்டிருப்பாரே தவிர, அவற்றைச் செய்தது தான் தான் என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை. சமயங்களில் ‘ஏதோ ஒரு சக்தி அப்படிச் செய்திருக்கலாம்’ என்று சொல்லி மழுப்பி விடுவார்.
அவர் தான் ரமணர்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!