திங்கள், 9 செப்டம்பர், 2013

காய கல்பம் - மகான் கருணாகர சுவாமிகளின் கருணாமிர்த சாகரம்


காய கல்பம் என்பது பற்றி மகான் கருணாகர சுவாமிகள் தனது கருணாமிர்த சாகரம் என்ற நூலில் கூயியுள்ளதை இங்கு பகிர்கிறேன்.

யோக சித்தி மூலம் வான் பொருளை அடைய பக்குவப்படுத்தும் காய கல்பத்தை, சித்தர்களும் ஞானிகளும் "அண்டக்கல்" என்று வழங்கினர். மேல்நாட்டு ஞானிகள் இதையே, ஞானிகளின் கல் (Philosopher's Stone) என்றனர். இது பஞ்சபூதங்களும் சேர்த்து கட்டப்பட்ட உருண்டை வடிவம் கொண்டது. சிறு கல் என்றும், அதன் நிறம் வானவில் போன்று பலநிறங்களைக் கொண்டதென்றும், ரசாயன மாறுபாடுகளுக்கு உட்படாதது என்றும், குழந்தைகள் எடுத்து விளையாடக் கூடியதென்றும், வேலையாட்கள் கண்டால் கூட்டிப் பெருக்கும் சாதாரனத் தோற்றம் என்றும்,  ஆலகால விஷத்தையொத்தது என்றும், பக்குவப் படுத்தினால் தொடுவதற்கு மிருதுவானது, குளிர்ந்த வாசனையுடையது, மதுரமான சுவையுடையது, தண்ணீரைப் போல் வழிந்து ஓடக் கூடியதென்றும் ஈரமாகாததென்றும், மோட்சத்திற்குரியதென்றும், ஊடுருவிப் பாயக்கூடியதென்றும், சூரியனையும் அக்கினியையும் ஒப்பிடத்தக்கதென்றும், மேல் நாட்டாரும் இந்த நாட்டாரும் ஒப்பக் கூறுகின்றனர்.
எப்படி நவ கிரகங்களும் பரவெளியில் அடங்கியிருந்து இயங்குகின்றனவோ, அதே போல் நவகிரகங்களின் சக்திகளையும் தன்னிடத்தே கொண்ட அண்டக்கல் என்பது அமுதகலசம் (அ) அட்சயப் பாத்திரம் என்றும் 'ஞானிகளின் பாத்திரம்' (Vase of Philosopher's)  எனவும், ஓர் பெட்டகத்துள் இருப்பதாகவும் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த அமுத கலசத்தை அறிந்தாலொழிய அண்டக் கல்லை அடைய முடியாது. வெளியுலகில் எப்படி சூரியனை மையமாகக் கொண்டு, மற்றைய கிரகங்கள் சுற்றி வருகின்றனவோ அதே போல் அமுதகலசம் என்னும் நடுவிடத்தை சூரியனாகக் கொண்டு மற்ற கிரகங்களும் அதனுள்ளேயே அதனைச் சுற்றி வருகின்றன. நவகிரகங்களின் சக்திகளைனத்தும் ஒன்றாக்கப் பட்டதுதான், அண்டக்கல் என்பதை உணர்ந்தால் அமுத கலசத்தை நவகிரகங்களுடன் ஒப்பிட்டிருப்பதை உணர்வது கடினமல்ல.

பஞ்ச பூதங்களுள் அகர, உகர, மகரங்கள் (வாயு, வன்னி, அப்பு) ஒன்று சேர்ந்ததே   ஓங்காரமாகிய பிரணவம். இப்பிரணவமே அண்டம் என்பது சித்தர்கள் கருத்து.
அதுவே ஓங்காரமும் ஆன்படியால் மக்கள் பலவிதத்தில் உருவைக் கொடுத்து எழுதி வருகின்றனர். இன்று நம் நாட்டில் நம் மொழியில் எழுதப்படும் "ஓம்" உண்மைக்கு வெகு அண்மையில் இருப்பினும் அதுதான் உண்மையானது என்று கொள்ள முடியாது. ஏனெனில் ஓங்காரமானது உருவில் அமுதகலசம் அல்லது அட்சயபாத்திரம் இதை ஒத்திருப்பது.

இதையே சித்தர்கள் மருந்து கூறுமிடத்து "முப்பூ" எனவும், சித்துகள் கூறுமிடத்து "மை" எனவும்,  மந்திரம் கூறுமிடத்து "திரு நீறு" எனவும் கூறியுள்ளனர். இவ்வாறு பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டு வரும் அண்டத்தின் மூலமாய்த்தான் காய சித்தி, யோக சித்தி பெற்று நாம் வான் பொருளாவோம். ஆனால் இத்தகைய வான் பொருளை அடைவதற்கு இடையூறாய் இருப்பது நான்கு பூதங்களும், நவகிரகங்களுமாகும். இவைகளைப் பூசித்துப் போற்றி சித்தி பெற்றாலொழிய, வான் பொருளை அடைய முடியாது என உணர்ந்த சித்தர்கள் அண்டத்தின் மூலமாக சுலபமாக வான் பொருளை அடையும் இரகசியத்தை மறைமுகமாகக் கூறியுள்ளார்கள்.

அண்டத்தை தேடியடைந்து பக்குவமாக்கிவுண்டால், வான் பொருளுக்கும் நமக்கும் இடையேயுள்ள நவகிரகங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, வான் பொருளை அடையலாம், மேற்படி கிரகங்களும் அப்போது நமக்குச் சாதகமாக இருக்கும். இவ்வரிய இரகசியத்தை உணராத பலர் நவக்கிரக பீஜாட்சரங்களை கோடிக் கணக்கில் ஜபித்தும் பலன் காணாது உண்மை ஞானத்தை உணராமலேயே மாயையின் வல்லபத்தால் சரீரத்தை இழக்கின்றார்கள். எனவே மந்திரத்தாலும், தந்திரத்தாலும் வான் பொருளை அடைய முடியாது என்பது உண்மை