வியாழன், 12 செப்டம்பர், 2013

இயற்கையின் பரிணாம வளர்ச்சி!!!


இயற்கையின் இயல்பே பரிணாம வளர்ச்சியின் இயக்கமாகும். நாம் இதை பற்றி   அறிந்துகொள்ள வேண்டும் என்றால், இயற்கையை வென்ற ஆசான் அகத்தீசரை பூஜைசெய்ய பூஜைசெய்ய மனித வர்க்கம் உணரமுடியாத ஒன்றை நமக்கு உணரச்செய்து அதற்குரிய பரிபக்குவத்தையும் தந்து, பரிணாம வளர்ச்சிக்கு அகப்படாத ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு தருவார். அந்த உடம்பைப் பெற்றவர்கள் கோடானு கோடி யுகங்கள் வாழலாம், மரணமே இராது. இந்த வாய்ப்பு மனித வர்க்கத்திற்கு இருந்தும், தக்க ஆசானை நாடாமலும், தானும் அதைப்பற்றிச் சிந்திக்காமலும், வீணே காலத்தைக் கழித்தால், கபமும், இருமலும், முதுமையும், நரைதிரையும் வந்து நலிந்து, அழிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே ஆசான் அகத்தீசனைப் பூஜித்து அழிவில்லாப் பெருவாழ்வு பெற்று வாழ்வோம். குறிப்பு:
இந்த உடம்பும் தாயின் உடம்பு, இந்த உயிரும், தாயின் உயிர். குழந்தை பிறக்கும் வரையில் தாய் இறக்காமல் இருந்தால், குழந்தை உயிரோடு இருக்கும். தாய் இறந்துவிட்டால் குழந்தையும் கருப்பையிலேயே இறந்துவிடும். ஆகவே குழந்தை பிறக்கும் வரையிலும் தாயின் உயிர் தான். மேலும் வாழ்வதும் தாயின் உயிர் தான்.
பரிணாம வளர்ச்சியும் அதன் இயல்பும்
ஜடப்பொருள் நீங்கலாக மற்ற எல்லா ஜீவராசிகளும் அதனதன் அமைப்பின் படி பரிணாம வளர்ச்சிக்குட்பட்டிருக்கும். இதை உண்மைப் பொருள் அறிந்தவர்கள் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. அதன் போக்கில் தான் சென்று சாகவேண்டும். ஆனால் மனிதன் மட்டும் தடுக்கவும் வெல்லவும் முடியும்.
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.
ஆக 84 லட்ச தோற்றபேத ஜீவராசிகளாகும். மேற்கண்ட பாடலில் 7 வகை தோற்றத்தைப் பற்றி உள்ளது. இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றும். குறிப்பாக கருப்பை முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றும்.தரையில் ஊர்ந்து செல்வது 11 லட்சம் தோற்ற பேதங்கள் உதாரணமாக பாம்பு, பல்லி, தேள், நட்டுவாக்கிளி, புழு போன்றவைகள். மானுடம் 9 லட்சத் தோற்ற பேதமுடைய மனிதர்கள். நீர்வாழ் ஜீவராசிகள் பத்துலட்ச தோற்ற பேதமுடையவைகள். உதாரணமாக மீன், திமிங்கலம், முதலை, தவளை போன்றவை. பறவை இனங்கள் 10 லட்ச தோற்ற பேதமுடையவை. உதாரணமாக புறா, காகம், கிளி போன்றவை. நாற்காலோர்(நான்கு காலுடைய ஜீவராசிகள்) பத்து லட்ச தோற்ற பேதங்கள். உதாரணமாக யானை, குதிரை, மான் போன்றவை.
நமது கண்களுக்குப் புலப்படாத 14 லட்சம் தேவர்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் ஆசான் சுப்ரமணியரால் படைக்கப்பட்ட தேவர்கள் ஆவார்கள். தாவரங்கள் மட்டும் 20 லட்சம் தோற்ற பேதங்கள் கொண்டவை. மனிதர்கள் உட்பட மற்ற எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ இயற்கை கொடுத்தது. புல், செடி, கொடி, மரம் நான்கு தான். புல் வகை என்பது குறுகிய கால பலன் தரக்கூடிய கம்பு, நெல், கேழ்வரகு, சோளம் போன்றவை. செடி என்பது மிளகாய், தக்காளி, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை. கொடி வகைகள் : அவரைக்காய், புடலங்காய், பீக்கங்காய், சுரக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் மற்றும் சில கொடி வகை மூலிகைகளும், வேலிப்பருத்தி முதல் உண்டு. மரம் : மா, தென்னை, பனை ஆகிய கணக்கில் அடங்கா வகைகள்.
குறிப்பு 1
மனிதனுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பசி இயற்கையே. அதனதன் உடல் இயல்புக்கேற்ப உணவும் இயற்கையே, அதை உண்ணுவதும் இயற்கையே, அதை உண்டபின் ஜீரணமாகக்கூடிய இயல்பும் இயற்கையே. உணவில் உள்ள சத் அசத்தை பிரித்து, அசத்சை நீக்கி, சத்தை மனிதனுக்கு 72 ஆயிரம் நாடி நரம்புகளையும் உரமேற்றுவதும் இயற்கையே. பின்பு அதன் காரணமாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்த கரணங்களும் இயற்கையே. மெய், வாய், கண், மூக்கு, செவி, என்று சொல்லப்பட்ட பொறிபுலன்கள் அடங்கிய தத்துவம் 96ம் இயற்கையின் செயல்பாடுகளே. நாம் நமக்கு பசி வந்ததாகவோ, நாம் உண்ணுவதாகவோ நினைக்க கூடாது. பசியும் இயற்கையே, நாம் உண்ணுவதும் இயற்கையே, அறுசுவையும் இயற்கையே, உறங்குவதும் இயற்கையே, உறங்கி விழிப்பதும் இயற்கையே, உடல் இன்பமும் இயற்கையே, கரு கூடி பின் குழந்தை ஆவதும் இயற்கையே. ஆக அனைத்தும் இயற்கையின் செயல்பாடாகும்.
மேற்கண்ட அத்தனையும் எல்லாம் வல்ல இயற்கை அன்னையால் படைக்க பட்டவையாகும். எல்லாம்வல்ல இயற்கை அன்னை படைக்கும் போதே பரிணாம வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் தந்து நம்மை அநியாயமாகக் கொன்று விடுவாள். இதை வெல்லுகின்ற வல்லமை ஆசான் அகத்தீசனுக்கே உண்டு. ஆசான் ஆசி பெறாமல் இயற்கை அன்னையின் செயல்பாட்டை அறிந்து  கொள்ளமுடியாது. அவள் செயல்பாடே காப்பதுபோல் காத்து, அறுசுவைகளையும் மற்றும் உடல் இன்பத்தையும் தந்து நம்மைக் கொன்றுவிடுவாள். எனவே இயற்கை அன்னையை வெல்வதற்கு "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்வோம். ஞானம் பெற்று இன்புற்று வாழ்வோம்.
குறிப்பு 2
ஆன்மீகவாதிகள் ஆரம்ப காலத்தில் பூஜைசெய்யும்பொழுது, மனம் ஒருநிலைப்படாது என்பது உண்மையே. அதற்கு சோர்வடைய வேண்டியதில்லை. எந்த அளவிற்கு பூஜையும், அறப்பணிகளும் செய்கிறார்களோ அந்த அளவிற்கு மனப்போராட்டங்களைப்பற்றி அறிந்து கொள்ளலாம். மனப்போராட்டங்களைப்பற்றி அறிந்து கொண்டாலே மனம் ஒருநிலைப்படுவது பற்றி அறிந்துகொள்ள முடியும்.
குறிப்பு 3
இயற்கை அன்னை அந்த காமதேகம் தந்து அதன் உள்ளே வீடுபேறு அடைவதற்குரிய அற்புத சக்தியை படைத்திருக்கிறாள். புறதேகமாகிய காமதேகம் துணையில்லாமல், அக தேகமாகிய சூட்சும தேகத்தை ஒளி உடம்பு ஆக்க  முடியாது. எனவே, ஒன்றை துணைக்கொண்டு தான் மற்றொன்றை வளர்க்க முடியும்.
மேற்கண்ட தத்துவங்கள் அத்தனையையும் படித்து உணரவேண்டும்.