வியாழன், 7 நவம்பர், 2013

இருட்டும், இறை இயல்பும்

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை.

எல்லாம் வல்ல இறை நிலையை உணர்த்துவதற்கு குரு சொன்ன எளிய வேதம் இந்தக் கவி.
குருவின் வரிகளை எளிதாக பிரித்து பிரித்து பார்க்கும் போது, நமக்கு அதன் அர்த்தங்கள் புலப்படும்...

இருளாக இருப்பதுவே ஈசன் நிலை...
மௌனமாக இருப்பதுவே ஈசன் நிலை...
இப்படியே... இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை என்று பார்க்கலாம்.

இருளாக இருப்பதுவே ஈசன் நிலை என்கிற போது, இருள்/இருட்டு இறை நிலை என்று தோன்றுகிறது. ஆனால் நமது மனது தியானத்திலே இறை நிலையினை உணர்வதற்கு குரு சொன்ன ஒரு தொடக்கப் பயிற்சியே தான் இந்த வரி.

மனதைக் கொண்டே தான் தியானம் செய்கிறோம்.
மனதினை நாம் இறை தன்மையாக மாற்றவே தான் குரு இந்த தொடக்கப்பயிற்ச்சியினைத் தருகிறார்.

இருளே ஈசன் நிலை என்று சொல்லும் போது தான், இருட்டினிலே இறையை மறைத்துவிடுகிற தன்மையும் ஆகிறது.
நாம் இந்த தன்மையிலே இருந்து உயர வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. ஏனெனில், மனம் என்ற ஆறாவது/ புலன் உணர்வாக இறை நிலையை இருட்டு என்று கணிக்கிறது.
இறையை பற்றி ஏதாவது கூற வேண்டும் என்றால் அதற்க்கு புலன்களின் துணை தேவையாகிறது. எப்போது புலன்களின் இயக்கம் நின்று விடுகிறதோ அப்போது தான் மனதைத் தாண்டி விரியும் தன்மை நமக்கு உண்டாகிறது.
புலன்களின் தன்மையினை தாண்டவே தான் குருநாதர் இருளாக என்று ஈசன் நிலையை இறை நிலையை குறிப்பிடுகிறார்.
இருள் ஏதுமற்றது என்று சொல்வார் புலன் அறிவினிலே !
என்று ஒரு கவியிலே குரு சொல்வார்.
இருளாக மௌனமாக என்ற கவியிலே,
இருள் நிலைக்கு மனமடங்கி, ஈசனோடு ஒன்றாகி
இணைந்த பின்னே உணர்வது தான் மெய்ப் பொருள் உணர்வாம்..
என்று சொல்வார்.
இருள் நிலைக்கு மனம் அடங்கி என்கிற போது, மனது தன் இயக்கத்தினை நிறுத்திக்கொள்கிற போது தான் மெய்ப்பொருளின் உணர்வு கிட்டும் என்று சொல்கிறார்.
அதுவரை, புலன் அறிவு இயங்குவது இயல்பு. அதாவது மனம் இயங்குவது இயற்கையே... ஆக, மனத்தினால் தான் இறை நிலையை, இருட்டு என்றும்,ஏதுமற்றது என்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
இறை நிலை என்ற நிலையை இருட்டு என்று, ஏதுமற்றது என்று கூறுவோரின் நிலை என்பது தொடக்கப் பள்ளி மாணாக்கர்களே என்று ஆகிறது.
மனம் அடங்கிய பிறகு, அங்கே இறை நிலை உணர்வை இருட்டு என்றோ, ஏதுமற்றது என்றோ கூறுதல் என்பது இயலாத ஒன்று ஏனெனில் அங்கே புலனறிவின் இயக்கம் நின்று விடுகிறது.
ஆனால் குருவின் துணையால், சாட்சியாக தன்னையே வைத்து மறை பொருள் ரகசியத்தினை உணர முடியும்.
அது வரை இருட்டு தான் இறையின் இயல்பு என்று கூறத்தோன்றும்...