திங்கள், 16 டிசம்பர், 2013

உடலும் உயிரும்..................

                                                                             போகர்
கல்தோன்றி மண் தோன்றிக் காற்றும் நெருப்பும் நீரும் தோன்றியதன் காரணமாக உயிரணுக்கள் தோன்றின. பாசியிலிருந்து புல்தோன்றி நெல் தோன்றி எண்ணற்ற செடி கொடிகள், புதர்கள், மரங்கள் அடர்ந்த காடுகள் இப்படியாக இடம் விட்டுப் பெயராத உயிர் வகைகள் வளர்ந்து கொண்டிருந்த அதே காலத்தில் மார்பால் ஊர்ந்து நகர்வன, தெளிவன, நீந்துவன, பறப்பன, நடப்பன என்று நடமாடும் பிராணியினங்களும் தோன்றலாயின.
மற்ற உயிர்களுக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு? மனிதனை மிகவும் முதிர்ச்சியடைந்த உயிரினமாகக் குறிப்பிடுவதன் காரணம் என்ன?
ஆச்சப்பா மாந்தருக்குப் பஞ்ச பூதம்
அப்பனே ஆத்துமமாம் என்ன லாகும்
மூச்சடங்கும் மிருகமதுக் கறிவு நாலு
முனையான சீவன் என்றே செப்பலாகும்
பாச்சலுடன் பறக்கின்ற பட்சி யப்பா
பாங்கான அறிவதுவும் மூன்றே யாகும்
மேச்சலுடன் மார்பதனால் நகரும் ஜந்து
மேன்மையுடன் அறிவது தான் ரெண்டதாமே.
போகர் 7000 / 5603
இரண்டான விருட்சத்துக்கு அறிவு ஒன்று
எழிலான சாத்திரத் தொகுப்பின் கூறு
திரண்டதொரு கவிவாணர் சொன்ன வாக்கு
திக்கெட்டும் சித்தர் முனி கண்டாராய்ந்து
போகர் 7000 / 5603
மனிதர்களுக்கு ஐம்புலன்களால் அறியப்படும் அறிவு ஐந்தும்
ஆத்மா ஒன்றாக ஆறறிவு. மிருகங்களுக்கு நான்கு அறிவுகளும் சீவனுமாக ஐந்து. பறவைகளுக்கு அறிவு மூன்றே மார்பினால் நகரும் பிராணிகளுக்கு இரண்டு அறிவு. தாவரங்களுக்கு அறிவு ஒன்று. இதை எட்டுத்திக்குகளிலும் உள்ள சித்தர்கள் முனிவர்கள் கண்டு ஆராய்ந்து அறிந்து கூறினர். உயிரினத்தில் வேறுபாடுகள் தோன்றிய காரணத்தை போகமுனிவர் அழகாக விளக்கிக் கூறுகிறார்.
இவ்வாறு தோன்றி வளர்ச்சியடைந்த மனித உடலின் சிறப்பை நன்கு உணர்ந்து அதை உலகுக்கு எடுத்துக் காட்டியவர்கள் சித்தர்களே எனலாம். சமயச் சார்வான உள்ளங் கொண்டவர்கள் உடலை இழிவானதாகக் கருதினர். உடலை வருத்திக் கடும் தவம் செய்வதும் கடினமான விரத நியமங்களைக் கைக்கொள்வதும்தான் முக்திக்கு ஆன்ம விடுதலைக்கு வழி என்றே கருதினர். எல்லா மதங்களும் இதை ஒப்புக் கொள்கின்றன. இதையே கூறுகின்றன.
ஆனால் சித்தர்கள் இதற்கு முற்றிலும் மாறான ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தனர்.
உடம்பினை முன்னும் இழுக் கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்
று டம்பினை யானிருந் தோம்புகின்றேனே.
- திருமந்திரம் – 725
எவ்வளவு அழகாக, அழுத்தமாக, ஆணித்தரமாக இங்கு சித்தர் நெறி பேசப்படுகிறது. அதுவும் திருமூலர் பிரானால்.
மாந்தர்களே! உங்களைப்போல் நானும் இந்த உடல் ஓட்டைப் பாண்டம் – ஒன்றுக்கும் உதவாதது என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த உடம்புக்குள்ளேதான் இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டேன். என்று சொல்கிறார்..