சனி, 29 ஜூன், 2013

குருவின் தத்துவம்!

குருவின் தத்துவம் அத்வைதம்... அத்வைதத்திலே கூட்டம் நிலையாக இருக்குமா?
எந்த ஒரு எழுத்துக்களிலும் சிலவரிகள் புரியவில்லை அல்லது தெளிவாக தெரிவிக்கப்பட வில்லை என்ற ஒரு தோற்றம் இருக்கும். ஆனால் தெரிவிக்கப்பட்ட வரிகள் பயன்படுத்தப்பட்டதன் அவசியத்தையும், இந்த வரிகளானது இந்த இடத்திலே நமக்கு என்ன சொல்ல வருகிறது என்று நோக்கினால் அதன் தன்மை புரிந்து விடும். ஆனால் அதற்கு நிலையான ஒன்றின் மேல் நாம் கொண்டிருக்கும் பற்றின் அளவினைப் பொறுத்தே தான் வெற்றி கிட்டும்.

புலன்களைக்கடந்த இறையோடு ஒன்றி இருக்கிற தன்மையின் அளவு உயர உயர நுண்மையான விசயங்கள் எல்லாம் தெளிவாக கிடைக்க ஆரம்பிக்கும்.


குருவை நோக்கி நாம் நகரும் போது, குருவின் பிரதிபலிப்பு என்பது மனதைக் கடந்து தியானிப்பவர்களுக்கு தியானத்திலே உதவியாகவும், மன அலையால் நோக்குபவர்களுக்கு அவரவர் தன்மைக்கு ஏற்ப குருவின் கட்டுரையாக, புத்தகமாக, கவிகளாக, வேண்டுபவரின் தன்மைக்கு ஏற்ப வந்து சேரும்.

சீடனின் நோக்கத்திற்கேற்றார் போல குருவின் பதில்கள் செயல்விளைவாக, இயல்பூக்க நியதியாக வந்து சேர்ந்து கொண்டே தான் இருக்கும். எமது கருத்துக்கள் என்பது எவ்விதத்திலும் முனைப்போடு எழுதப்பட்டிருக்குமேயானால், அந்த முனைப்பு உண்டானது குருவிடம் இருந்து பிரிந்ததால் ஏற்பட்டிருக்கும்.

நாம் தவமியற்றுகிறோம்... தவத்திலே சொல்லித்தந்தபடி உடலில் இருந்து உயிர் எழுந்து சகஸ்ராரம் வழியாக, சந்திரன் சூரிய மண்டலங்கள் மற்றும் பேரியக்க மண்டலங்கள் என்று எல்லா நிலைகளையும் யூகித்து பிறகு சிவகளத்தினை நோக்கும் போது நாம் சுத்தவெளி என்ற நோக்கில் தவமியற்றுகிறோம். சுத்தவெளி என்றால் என்ன செய்யவேண்டும்? ஒன்றுமே இல்லாத இடம் என்று கொண்டால், அது தவறாகும். ஏனெனில், ஒன்றுமே இல்லாத ஒன்று எப்படி அனைத்தையும் காக்கும்? என்ற கேள்வி எழும்.

இந்த சிவகளத்திலே யூகித்துக்கொண்டிருந்தால் எப்போது தான் அங்கே லயிப்பது? அதற்க்கு என்ன செய்வது? என்று குருவை முன் நிறுத்தினால்,

தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப,

எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்

என்ற வரிகளுக்கும் ஏற்ப இயல்பூக்க நியதியின் படி, அங்கே சிவகளத்திலே சீடன் குருவை அணுக அறிவினிலும் உடலினும் மாற்றங்காணுவார்.

சரி, நம்மால் குருவை தவத்திலே கொண்டுவரமுடியவில்லை. கொண்டு வந்தால் கூட தவத்திலே நிலைக்கமுடியவில்லை என்றால் குருவின் பதில்....

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை எவ்வுயிரை
ஒருவர் அடிக்கடி நினைந்தால்...

என்று சொல்கிறார்.

குருவை அடிக்கடி நினைந்தால் தான் தவத்தின் போது கூட குருவின் நினைவு தானாக இயல்பாகவே தோன்றி குருவைப்போலவே சிவகளத்திலே ஒன்றிப்போகமுடியும். அதுவரை கற்பனை தவம் தான் நிகழும்.

இப்போது சிவகளத்திலே எப்படி இருக்கவேண்டும் என்றால் குரு சொல்வார்...

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை.

அனைத்துத் தன்மையாக இருக்கும் வல்லமை ஏற்பட்டால் தான் ஈசன் நிலையோடு ஒன்றாக முடியும்.

இருளாக, மௌனமாக, எந்த இச்சையின்றி, எந்த தேவையும் இன்றி, எந்த இயக்கமும் இன்றி மாறுகிற தன்மை வந்தால் குருவோடு ஒன்றாகி விடலாம்.

இந்த ஈசன் நிலையிலே, அங்கே இருப்பாகிய ஈசனாகிய இறையைத்தவிர ஒன்றும் இல்லை.. என்று அதனோடு கரைந்து முனைப்பை அறுத்து விட்டோம். இப்போது இருப்பது = இருப்பு + அது என்று சீடன் ஆகிவிட்டான்... அதுவே துரியாதீத தவத்திலே முழுமையான நிலை. அந்த நிலையிலே இருந்து சீடன் கேட்கிறான்... " துரியாதீதத்திலே எது நிலைத்தது? நாம் புறவாழ்விலே கூட்டத்தை நோக்கிப்போகிறோமே அது நிலைக்குமா? நீடித்து நிற்குமா?"

தியானத்தின் படிமுறைகள் ....

தெளிந்த அறிவிலே நிறைபேறு பெற குரு என்ற உதவி மட்டுமே எப்போதும் உள்ளது...
மனிதன் முன் பின் எந்த ஒரு குருவினிடம் ஆழ்ந்த மன அலைத்தொடர்பு கொண்டு இருக்கிறாரோ, அவருக்கெல்லாம் குருவின் உதவியானது தொடர்ந்து கிடைப்பது மட்டுமின்றி, ஆழ்ந்த தொடர்பின் அளவிற்க்கு அறிவின் உயர்வும் உணர்த்தப் பட்டு விடுகிறது...
குரு என்ற இருப்பானது உடல் வடிவத்தினை ஆரம்பத்திலே நாம் பார்த்தாலும், காலப் போக்கிலே அணுகும் சீடனின் ஆழ்ந்த தியானத்திலே இறை அனுபவத்தினை உணர்வதற்கு உள்ள உதவியாகிறது...
ரமண மகரிஷி நான் யார்? என்று ஆத்ம விசாரம் மூலம் தியானத்திலே உயர்ந்து, சஹஜ சமாதி நிலையிலேயே ஆழ்ந்து ஒடுங்கி எப்போதும் அந்த அசையாத ஆழ்ந்த மௌனத்திலே இருந்து விலகாது பேரின்ப நிலையிலேயெ இருந்தார்...
அவரிடம் குண்டலினி தியானத்தினைப் பற்றிக் கேட்ட போது, மனம் தான் குண்டலினி என்றார்...
குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் குண்டலினி தியானத்தினை மூலாதாரத்திலே தொட்டு உணர்த்தி, உயர்த்தி, ஆக்ஞா சக்கத்திரத்திலே உயிரின் இருப்பை ஒரு கணத்திலே தொட்டு உணர்த்தும் வல்லமையான தியானத்தினைத் தந்திருக்கிறார்..
கணபதி முனி என்கிற தவ சீலர் திருவண்ணாமலையிலே ஆழ்ந்த தியானத்திலே ஆழ்ந்து இருந்த போது, கடுமையான வலியிலே தவித்தார்... வெங்கடராமன் என்கிற பெயரை மாற்றி, பகவான் ரமண மகரிஷி என்று மாற்றியவர் தான் இந்த காவிய கண்ட கணபதி முனி அவர்கள் தான் ...
அவரை காப்பாற்றுமாறு அவரின் சீடர்கள், பகவான் ரமணரிடம் முறையிட்ட போது, ரமணர்,  கணபதி முனி அவர்களை பார்த்து, இந்த வல சிறிது நேரத்திலே மாறிவிடும் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாராம்... சிறிது நேரத்திலே அவர் அந்த வலி போய்விட்டதாம்...
ரமணரிடம் கேட்டபோது, அவர் சொன்னாராம், ஆழ்ந்த தியானத்திலே லயிக்கும் போது எழும் குண்டலினி எழும் போது சில நேரத்திலே இந்த மாதிரியான உபாதைகள் இருக்கும் என்றும், தனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதாகவும் சொன்னாராம்....
நமது தியான நெறியிலே இருந்து ஆழ்ந்த தவத்திலே லயித்து மணிக்கணக்கிலே ஆழ்ந்து தியானம் செய்பவர்கள் அவரவர் அனுபவத்தினை சொல்வது என்பது மறை பொருள் விளக்கமாகவே ஆகும்...
தொடர்ந்து குருவோடு பேசிக் கொண்டே மன அலைத்  தொடர்பிலே ஆழ்ந்து இருந்த போது, இறை நிலை தவத்திலே ஆழ்ந்த நிலையிலே செல்லச் செல்ல எமக்கு ஏற்படற அனுபவம், அவரவர்க்கு தனியானது.. 
ஆழ்ந்த இறை தவத்திலே சிவ களத்திலே தொடர்ந்து நீடித்து நிலைத்து நிற்க , நிற்க எண்ணங்கள் குறைந்து வர வர, விடும் மூச்சின் அளவு குறைந்து கொண்டே வரும் என்பதை உணரலாம்..

 

வியாழன், 27 ஜூன், 2013

என்பது பட்டினத்தடிகளின் வரிகளிலிருந்து...

உண்மை பக்தியை, சிவ போகத்தை, வளர்த்துக் கொள்ளும் முறையை பட்டினத்தார் கூறுகிறார்.
அஞ்சக் கரம் எனும் கோடாலி கொண்டு இந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்காட்டை வேர் அற வெட்டி வளங்கள் செய்து
விஞ்சத்திருத்தி சதாசிவம் என்கின்ற வித்தை இட்டுப்
புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே

(அஞ்சக்கரம் = நம: சிவாய என்ற நாமம், ஐந்து அட்சரம்; அக்ஷரம் என்பது அக்கரம் ஆகும்
வஞ்சப் புலக் காட்டை = ஐம்புலன்கள் வஞ்சகம் செய்து மனதை திசைதிருப்பும் இவ்வுலகப் பற்றை
புஞ்சக் களை= காமம் என்கின்ற களை)
தூய்மையான பக்தி ஒருவருள் வளரவேண்டுமானால் ஐம்புலன்களையும் வெட்டித் திருத்த வேண்டியது அவசியம் என்பது பட்டினத்தடிகளின் வரிகளிலிருந்தும் தெளிவாகிறது.

ஞானம் தேடும் பக்தர்கள் :-


தேடுகின்ற பொருள் என்ன ஏன் நமக்கு
தெரிந்தவர் யார் கிடைக்குமிடம்எது ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்,
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார், உளம்நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்துப் போவதைப் போல முரண்பாடன்றோ? ...

ஏடுகளின் மூலம் எழும் ஞான ஆர்வம் :-
ஏட்டினிலே கதைத்து விட்ட ஞானம் கற்று
ஏக்கமுற்று அதையடைய எண்ணம் கொண்டு,
போட்டவிடந்தனிற் பொருளைத் தேடிக் காணும்
பொது அறிவைக் கூட உபயோகிக்காமல் -
நாட்டிலுள்ள அனுபோகப் பொருட்கள் மீது
நாடி நிற்கும் அறிவைப் பண்படுத்த வேண்டி
காட்டுக்குப் போய் கனியும் கிழங்கும் உண்டு
காலத்தைக் கழிப்பதனால் பலன் தான் என்ன?

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

செவ்வாய், 25 ஜூன், 2013

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் "

 
சித்தர்கள் சித்தத்தை வென்றவர்கள் எனவும் எண்ணிய காரியத்தில் ' சித்தி ‘ அதாவது வெற்றி பெற்றவர்கள். தம் உயரிய பண்பினால் சித்தனாம் இறைவனைக் கண்டு இரண்டறக் கலந்தவர்கள். இச் சித்தர்களின் செயல்களிற் சிலர், மந்திரத்தினால் விளைவதைப் போன்று தோன்றினாலும், அவர்கள் மந்திரம், தந்திரம், மாயை ஆ கியவற்றினைப் பயில்பவரோ , கடைப்பிடிப்பவரோ அல்லர். தன் ஆ ன்மீக வளர்ச்சியினால் அறிவியல் சாதனைப் புரிந்த இச்சித்தர்களை அறிவியலுக்கும், ஆ ன்மீகத்திற்கும் அமைந்த பாலங்கள் எனக் கூறுவது பொருந்தும்.
 
சித்தர்கள் சாதி பேதங்களை வன்மையாக கண்டித்தனர். அகப்பேய்ச்சித்தர்" சாதிபேதமில்லை அகப்பேய் தானாகி நின்றவர்க்கே " என்று கூறுவதன் மூலம் இறைவனை தன்னுள்ளே கண்டவர்க்கு சாதிபேதம் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.
" எவ்வகையாக நன்னீதி- அவை
எல்லாம் அறிந்தே எடுத்து நீ போதி
ஒவ்வா வென்ற பல சாதி- யாவும்
ஒன்றென்று அறிந்தே யுணர்ந்ததுற வோதி..." என்பார்.
" கஞ்சாப் புகை பிடியாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடியாதே...! "
அஞ்சவுயிர் மடியாதே - பத்தி
அற்ற அஞ்ஞானத்தில் நூல் படியாதே ..." என்றும்.பட்டினத்தார்,
" பொய்யை ஒழியாய்ப், புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய்; அறம் செவ்யாய் - வெய்ய
சினமே ஒழியாய்; திருவெழுத்தைந்தும் ஓதாய்;
மனமே உன்ககென்ன மாண்பு...!
என்று பாடுவதிலிருந்து தனி மனித அறனை வலியுறுத்துகிற பாங்கு புலப்படுகிறது. அறம் ஓங்கும் போது சமூகம் மேன்மையடைகிறது.
மருத்துவ நூல், புவி நூல்,கணித நூல்,மந்திர நூல், யோக நூல்,
சோதிட நூல் எனப் பல தனி நூல்களை எழுதியமை போன்று சமுதாய நூல் எனத தனி நூல் எழுதவில்லை எனினும், எல்லாச் சித்தர் பாடல்களிலும் சமுதாயம் செம்மைப்பட வேண்டும் என்ற உரிய நோக்கம் பிரதிபலிப்பதைக் காணலாம். சான்றுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.
தேடுகின்ற புராண மெல்லாம் பொய்யே யென்றேன்
சிவன்பிரமன் விஷ்ணுவின் பெயர்களென்றேன்
டுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்தமென்றேன்
அகஸ்தியர் சூத்தி¢ரம் :30
மூகருடன் பழகாதே பொய் சொல்லாதே
பின்னே நீதிரியாதே பிணங்கிடாதே
பேசாதே யொருவருக்கு மிந்த நூலை
- நந்தீஸ்வரர் சூத்திரம் :100
கள்ளனென்ற சீடரை நான் தள்ளச் சொன்னேன்
பொய்யான பொய்யுரைக்கும் புலை சண்டாளன்
பொருளீந்து பிறர்க்குரைக்கும் பாவச்சீடர்
ஐயாவென்ற அடுத்தாலும் தள்ளச் சொன்னேன்
அஞ்ஞானி யாவர்களுடன் பேச்சொன்னாதே
- தட்சணாமூர்த்தி பூரண பூசாவிதி 200
தவளையைப்போல வேதமெல்லாம் சாற்றுகின்றீர்
வந்தவழி அறியார்க்கு மந்தரமேது
- ஞானவெட்டியான் 1500
சமுதாயத்தில் காணப்படும் பயனற்ற பொருளற்ற , சாதி, சாத்திரம், சடங்கு, சமயம், போன்ற பாகுபாடுகளை அஞ்சாமல் சாடியவர்கள் சித்தர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரது அரிய கொள்கையின் உண்மையை உணர்ந்தவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள். ராமலிங்கசுவாமிகள் ஆ ன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை என்னும் தொடரால் அதனை விளக்குகிறார். சாதி - சாதிக்குள் சாதி -எனத் தம்மைத் தாமே பகுத்து, பகைமையையும் பிரிவினையும் வளர்த்துக்கொண்டே காலத்தில் துணிந்து அவை பொய் எனச் சாடிய துணிவு குறிக்கத்தக்கது, மக்களைப் பிரிக்கும் மாயையாகிய அச்சாதியை ஒருமித்த குரலோடு சித்தர்கள் தாக்குகின்றார்கள்,
இப்பிரிவினையை மிகுதிப்படுத்துவது சாத்திரமும் சடங்கும் ஆ கும். சாதினால் தீமையே அன்றி அணுவளவும் நன்மை இல்லை என்பது சித்தர்கள் கருத்து. " கண்மூடிப் பழக்க மெல்லாம் மண் மூடிப் போக " எனப் பெரிதும் வருந்தி சாடியவர் இராமலிங்க சுவாமிகள்.
சித்தர் சமுதாயத்திற்க்கு செய்த மிகப்பெரிய தொண்டு ஒன்று என்றால் அது கடவுள் பற்றிய கொள்கையை ஆ லயங்களில் மட்டும் இறைவன் இருப்பதாக எண்ணிக்கொண்டு இருந்த காலத்தில்- கண் மூடித்தனமான சம்பிரதாயங்களில் தமது பொழுதையும் ,பொருளையும் விரயம் செய்து வந்த காலத்தில் மிக அரிய கொள்கையை உலகுக்கு உணர்த்தினார்கள்.
 மலை, கடல், முதலியவற்றால் பிரிக்கப்பட்ட மனிதன் , மேலும் தனக்குள் சாதி, சடங்கு முதலியவற்றால் பிரித்துக் கொண்டான். இப்பிரிவினைக்கு உரம் ஊட்டுவது போல் கடவுட் கொள்கை சமயமும், சேர்த்துகொண்டான். '" உங்கள் தெய்வம் ,எங்கள் தெய்வம் என்று கருதிக் கருத்து வேறுபாடுகளைப் பகுத்துக் கொள்ளுகின்ற பாதர்களை தெய்வம் எங்கும் உண்டு " எனச் சாடுகின்றார்.
தனை தனது ஞானவெட்டியான் 1500 என்னும் நூலில் :
" உங்கள் தெய்வ உண்டெனவும் வேறு செய்து
அங்கங்கள் வேறுளதா யாகமங்களுற் பவித்தார்
பங்கமதாய் வேறு செய்யும் பாதகரே அங்குமிங்கும்
எங்கெங்குமாய் நிறைந்த ஈசனென்றறிகிலீரே "
- ஞானவெட்டியான் பாடல் 616
" ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே "
- பட்டினத்தார் பாடல் :30  " ஒருவனென்றே தெய்வத்வதை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனி லிருக்க வேணும்
- பட்டினத்தார் பாடல் 68
கட்டோடே கனத்தேடே வாழ்ந்து , பட்டோடே பணியோடே திரிந்து , கொட்டோடே முழக்கோடேகோலங்கண்டு, பண்ணாத தீமைகள் பண்ணி ,பகராத வன்மொழிகள் பகர்ந்து , நண்ணாத தீயினம் நண்ணி, நடவாத நடத்தை நடந்து ,உள்ளொன்று வைத்து புறமொன்றுப் பேசித் திரிவார்; ஆ லயம் சென்று புற அபிசேகம் செய்தல், பாவம் போக்கும் என்று வந்தனர்- வருகின்றனர்.
இத்தகையோரைப் பார்த்துப் பாடுவதே இவ்வறிவுரைப் பாடல்கள் பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி, அப்பனி மலர் எடுக்க
மனமும் நண்ணேன் எனத் தாயுமானார் பாடுவதுவதும்
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"
என இராமலிங்க சுவாமிகள் பாடியது போலவும், மனம் செம்மைப் படுவதே  உயரிய வழிபாடுகும்.

" மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் " எனத் திருமூலர்  கூறுவதைக் காணலாம்.
 எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் , பொதுவாகச் சீர்திருத்தம் பேசியவர்கள் ஏதாகிலும் ஒரு வகையில் அரசியலோடு தொடர்பு கொண்டவர்களாவே விளங்குகின்றனர்
ஆனால், சித்தர்கள் அவ்விதிக்கு விலக்காவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மனிதரில் சிலருக்கு இருக்கும் பலவீனமான நம்பிக்கையைப் பயன்படுத்திச் சிலர்சமய துறையில் இருந்துகொண்டு பயன்படுத்திக் கொண்டு வயிற்றையும், பொருளையும் பெருக்கி வருகிறார்கள். அத்தகையயோர் எக்காலத்தும் இருப்பார்கள் போலும். இவர்களைச் சாடிப் பாடும் பாடல்கள் சில,
போலிகளைச் சாடி சித்தர்கள் பாடிய சில பாடல்கள் :-

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உத்தேசம் பகர்வோ என்பான்
ரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
காசப் பொய்களையும் அன்றோ சொல்வான்
நேர்ப்பா சீடனுக்குப் பாவமாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சு
வீரப்பா அடக்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோல முடிந்ததென்று விளம்புவானே..
சித்தர் ஞானக்கோவை : காகசுண்டர் பாடல் :35.   இத்தகைய போலித் துறவிகளின் மாய வித்தைக்கண்டு மனதைப் பறிகொடுக்க வேண்டாம் என்பதே சித்தர்களது அறிவுறுத்தல். இத்தகைய வேடதாரிகளை இனங்கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காக மெய்ஞ்ஞானிகளின் இலக்கணத்தைக் கூறுகிறார் பட்டினத்தார்.
 பேய்போல திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கைரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே  பத்திரகிரியாரும், சிவவாக்கியரும் ஏற்க்குறைய ஒத்த கருத்துக்களை கூறிகிறார்கள். எத்துணை உயர்ந்த நிலை இது.! அனைத்தும் அடங்கிய நிலை அன்றோ இது ! இத்தகையாரே தூய துறவிகள் அவர்கள் சமுதாயம் உய்யும் , போலித் துறவிகளைப் பின்பற்றுவதால் அழிவு நேரும் என்கிறார் திருமூலர்:
 குடுடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழு மாறே -
திருமந்திரம் 1652.
என்பது பாடல். " வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்றும் கருத்து வேதமும் கூறுவது இங்கு நோக்கத்தக்கது.
உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு மக்கள் உள்ளார்கள். ஆதியிலே அதனை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இன்னும் பலர் விடை காணவில்லை.
நாமும் உண்மையை உணராது - உணர முயலாது சாதிலும், மதங்களிலும் சமய நெறிகளிலும்,சாத்திர சந்தடிகளிலும், கோத்திரச் சண்டையிலும் அலைந்தலைந்து வீண் போகின்றோம்.
தமிழ் புலவர்களும், அறிஞர்களும் தம் இலக்கியங்களில் வாய்ப்பு நேரும்
போதெல்லாம் தமிழை போற்றினர், வளர்த்தனர், மேன்மையுற செய்தனர்.
சித்தர்கள் தாமரை இலை நீராக சமுதாயத்தில் இருந்தாலும், பற்றற்றவர்களாக இருந்தாலும் மொழி உணர்வு நீங்காமல் வாழ்ந்தனர் என்பதை அவர் தம் பாடல் வழி, நூல்கள் வாயிலாக அறியமுடிகிறது.
" முத்தி தருபவன் அவனே ; முத்தியாய் விளங்குபவனும் அவனே ;
ஞானம் தருபவன்அவனே ; ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்"
எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன்,
தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்.
"முத்தியை ஞானத்தை முத்தமிழ ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "- திருமந்திரம்.
வேறு ஒரு பாடலில் திருமந்திரப் பாடலில் சாத்திரத்தை தமிழில் படைக்கும்அருளைக் கூட்டிப் பாடச் செய்த பெருங் கருணையைப் பாடி பரவுகிறார். :
" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."
இவ்வரிகளில் தமிழில் பாடும் அருள் கிட்டியதன் பெருமை தொக்கி நிற்பதைக் காணலாம்.
" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் "
ஞானவெட்டியான்.  "பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "
 " சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்
காவியந்தானாயிரத்தில் கல்லா யொரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்
அகஸ்தியர் ஞானம் 100
பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போத ¡த்தமிழ் வாக்கியம் - ஞான வெட்டியான் 1500
கருத்து விளக்கத்திற்காகப் பயன் படுத்தப்படும் உவமை இலக்கிய சுவைக்கு மெருகூட்டுவதாகும். சித்தர் பாடல்களில் கணக்கற்ற உவமைகள் காணப்படுகின்றன.
விழுமிய கருத்துக்களை கூறுவனவாக இருப்பினும் சித்தர் இலக்கியங்களில் மற்ற இலக்கியங்களைப் போலவே சொல், பொருள், நயம் மிகுதியாக காணலாம்.

முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் . இச் சொல்லாட்சி வைத்துப் பட்டினத்தார்
சுவையான பாடல் ஒன்றினைக் காண்போம்.
" முதற்சங்கம் அமுதூட்டும் மொகுழலார் இசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச் சங்கம்
இம்போதது ஊதும் அம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த நலம்.
மனித வாழ்வில் மூன்று நிலை முக்கியமானது. குழவி பருவம்,வாலிப பருவம், முதுமைப் பருவம் என்பன. இம் மூன்று பருவங்களும் வாழ்க்¨யின் திருப்பு முனைகளாகும்.
குழவி பருவம் வாலிபப் பருவத்திற்கும், வாலிபப் பருவம் முதுமைப் பருவத்திற்கும் முதுமைப் பருவம் மரணத்திற்கும் திருப்புமையாகும்.இம்மூன்று, நிலைகளிலும் சங்கம் [சங்கு] பெறுகிறது. குழவி பருவம் சங்கம் - அமுதூட்டும் வாலிபப் பருவத்தில்
சங்கம் மணவிழாச் சின்னம் ; முதுமையின் சங்கம் மரணத்திற்கு சின்னம். எனவே இம் மூச்சங்கமும் முறையே தோற்ற வளர்ச்சி மறைவைக் குறிக்கிறது. 
சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை, நூல்களை
படைத்துள்ளனர். மொழி நூல், யோகநூல் ; மந்திரம் ; தந்திரம் ; யந்திரம் ;
மருத்துவ நூல் ; புவியியல் நூல் ; தாவரயியல் நூல் ; சோதிட நூல் ;
கணித நூல் ; வானநூல் என தமிழுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.  ஆ னால் அவைகள் யாவும் இன்னும் 'பாழாய் பழங் கனவாய் ' தான் உள்ளது.
சில அனுவபங்களை படித்தால் புரியும் , சில கேட்டால் , சில நுகர்ந்தால், சிலவே உணர்ந்தால் புரியும். அத்தனை விதங்களிலும் , நிறைவாய் , சுகானுபவமாய் நமக்கு சாந்தமும் -இன்பமும் அளிப்பது இலக்கியம்.

மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தை எண்ணி பங்கம் போதாதே - தங்க இடம் பாரப்பா....
இதுவே சித்தர்களின் கொள்கை.
நலம் சிறக்க , நல்லன விளைக.

திங்கள், 24 ஜூன், 2013

பிறப்பென்னும் பேதமை

பிறவி என்பதே துன்ப மயமானது என்பதை யாவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உணரத் தொடங்குகிறோம்.
தாயுமானவர் கூற்றின்படி சொல்ல வேண்டுமானால்
....மெய்ஞான சுகநிட்டை சேராமலே
சோற்றுத் துருத்தியை சதமெனவும் உண்டுண்டு
தூங்க வைத்தவர் ஆர்கொலோ
தந்தைதாய் முதலான அகிலப் பிரபஞ்சம்
தனைத் தந்தது எனது ஆசையோ
தன்னையே நோவனோ பிறரையே நோவனோ
தற்காலமதை நோவனோ
பந்தமானது தந்த வினையையே நோவனோ
பரமார்த்தம் ஏதுமறியேன்
...... (பரிபூர்ணானந்தம் -7)
(பரமார்த்தம் =பரம அர்த்தம், உட்பொருள்)
சோற்றுத் துருத்தி என்று இந்த உடலை வருணிக்கிறார் தாயுமான சுவாமிகள். இதை நிலையானதாகக் கருதி உண்பதும் தூங்குவதுமாக மெய்ஞானத்தைப் பற்றிய சிந்தையின்றி பொழுதை கழிக்கிறேனே; இந்த உடலை எடுப்பதற்கு காரணம் என்று நான் எதையெதையெல்லாம் நொந்து கொள்வது என்று பரிதவிக்கிறார்.
இதே பரிதவிப்பை கபீரின் வரிகளிலும் காணலாம்.

பாதாதி கேசம் என்னுள் பேதமை,தந்ததே பிறவி என்னும் மாமை
தாதா! நீயும் தீ்ர் என் துன்பம்,தொலைத்திடு இத்துயர் தரும் சென்மம்
(மாமை =துன்பம் ; தாதா= பெருங்கொடையாளன்,அளவின்றி தருபவன்)'காலிலுள்ள நகக்கண் முதல் சிரம் வரையிலும் ஒவ்வொருவரு திசுவிலும் என்னுள் அறியாமை பொங்கி வழிகிறது. அப்படி இருக்கும் பொழுது பிறவியை ஒழிக்கின்ற ஞான்ம் எங்கிருந்து வர சாத்தியம்' என்ற தன் இயலாமையை குறிப்பால் உணர்த்தி அதற்கானத் தீர்வையும் இறைவனிடமே விட்டு விடுகிறார் கபீர்.'எல்லாவற்றையும் அருளக்கூடிய அருளாளா ! இந்தப் பிறவித்துன்பத்தையும் போக்கிடுவாய்' என்று சரணடைகிறார்.
அருணகிரிநாதரும் கந்தரனுபூதியில் இதைப் போன்றே
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ ...25
('மெய்யே என'= உண்மையானது என்று; உகந்து =மிக்க விருப்புடன்)
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?.....27
(மின்னே நிகர் = மின்னலைப் போன்று தோன்றி மறைவது)
பாழ்வாழ்வெனும் இப்படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ .... 31
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய் .....35
என்று பலவாறாக பிறவியெனும் பிணிக்கானக் காரணத்தை எண்ணியெண்ணி கந்தனிடம் முறையிடுகிறார்.
'விதி காணும் உடம்பை விடா வினையேன்' என சொல்லும் கபீரின் கருத்தொற்றுமை நன்கு விளங்குகிறது.
வித்திலிருந்து மரமும் பின்னர் அதிலிருந்து பலநூறு வித்துகளும் மீண்டும் அவற்றிலிருந்து மரங்கள் உற்பத்தியாவதும் தொடர் நிகழ்ச்சி போல உடல் எடுத்ததன் காரணமாய் வினை புரிதலும் பின்னர் அவ் வினைகளே அடுத்தடுத்து பிறவிகளுக்கு காரணமாய் அமைவதையும் 'வெவ்வினை' என்று உரைக்கிறார் அருணகிரியார்.
தலைப்பட்டார் தீரத்துறந்தார் ;மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் .....348
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு ..........358
'மயங்கி வலைப்பட்டார்' என்பதிலும் 'பிறப்பென்னும் பேதமை'என்பதிலும் வள்ளுவர் அறியாமையில் சிக்கித்தவிப்பவர்கள் நிலையை சொல்வது போலவே கபீரும் 'நக்-ஸிக் பரா விகார்' என்று உணர்த்துகிறார். பரா விகார் என்பது 'மன விகாரங்கள் நிறைந்த' என்று பொருள்படும்.
'கதி காண மலர்கழல் என்று அருள்வாய்'என வேண்டும் அருணகிரி போல் 'மேரீ கரோ ஸம்ஹார்' என்று விடுதலைக்காக இறைஞ்சுவதிலும் கபீர், ஞானிகளின் கருத்து ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறார்.

புதன், 19 ஜூன், 2013

குருவின் அருளும் அசைவும்!!!

குருவானவர் சீடன் முற்றிலும் இறையோடு கலக்கும் வரை கூடவே வருவார் என்பது அனுபவம்.
உடலை விட்டு உயிர் எழுந்து சிவ களத்திலே அடங்கி விழிப்போடு கலக்க ஆரம்பித்த போது ஏதோ ஒரு ஆற்றல் எம்மை வழி நடத்திச் சென்று கொண்டே, புலன்களை அடக்கும் கலையை போதித்துக் கொண்டே இருப்பது ஒரு பக்கமும், அறிவானது அந்த ஆற்றலைத் தொட முடியாத நிலை நீடித்தது... ஆரம்பத்திலே குருவிடம் கொண்ட சரணாகதியினால் தவத்திலே மேன்மை கிடைக்க ஆரம்பித்ததோ, அது இறையோடு கலத்தல் என்ற நிலை வரை கூடவே இருந்தது என்பதும், அறிவிற்கு இது வரை கேட்காத யோசிக்காத பல விளக்கங்கள் அந்த நுண்ணிய நிலையிலே கிடைக்கப் பெற்றது...
அதுவரை பேதம் கொண்டு அனுபவத்தைப் பதிவு செய்த அறிவு, அதற்கு பேதமில்லாது இறையோடு ஒன்றாக ஆரம்பித்த போது சொல்ல முடியாத, விளக்க முடியாத, பூரிப்பான நிலையைத் தந்து கொண்டே எம்மை இழுத்துக் கொண்டு போனது...
எம்மால் அதுவரை மட்டுமே குருவை ஏற்க முடிந்தது... அப்பாவானவர் கொடுப்பதற்குத் தயாராக கூடவே வந்து கொண்டே தான் இருந்தார்... ஏனோ எம்மால் தான் ஏற்றுக் கொள்ள முடியாமல் பேரறிவிலே இருந்து அசைந்து விட்டேன்.
எப்போது அசைந்தேனோ அப்போதே இறையிடம் இருந்து விலகி விட்டிருந்தேன்...
குருவின் அருளானது அணுகும் போதெல்லாம் பதில் தந்து கொண்டே தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.... .

 

சனி, 15 ஜூன், 2013

நிறைவும் அமைதியும் :

வாழ்வின் உண்மை என்ன என்று சிந்திப்போம். பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்கு பின்னும் நமது நிலையென்ன? வாழ்வு காலத்தை எவ்வாறு அறிவின் விரிந்த நிலையில் கணித்துப் பார்க்கலாம். அறிவை விரிவாக்கிக் கொள்வோம். உண்மை உணர்வு ஏற்படுகின்றது. இந்தப் பேருலகம் ஒரு சத்திரம் போன்றது. பிறக்கும் ஒவ்வொருவரும் உலகம் என்ற சத்திரத்தில் தங்குகிறோம். நாம் குடிபுகும் அறையில் முன்னமே சிலர் இருந்தார்கள். பிறகும் சிலர் வந்து சேர்கிறார்கள். இதுவே குடும்பம். அவரவர்கள் தங்க வேண்டிய காலம் முடிந்தவுடன் புறப்பட்டு இயற்கையோடு கலந்து விடுகிறார்கள். வாழும்போது உடன் வாழ்பவர்கள் நட்பு ஏற்படுகிறது. அது முன்னும் இல்லை - பின்னும் இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள இந்த நட்பு பயனாகிறது. வாழத் தெரிந்தவர்கள் இந்த நட்பை வளர்த்து வருகிறார்கள். இன்பமடைகிறார்கள். வாழத் தெரியாதவர்கள் நட்பை குலைத்து துன்பத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். மேலும் ஒரு உண்மை உணர்வோம்....
பேருலகம் என்ற சத்திரத்திற்கு வரும்போது எவரும் ஏதும் கொண்டு வந்ததில்லை. அதிலிருந்து புறப்பட்டு போகும்போதும் ஏதும் கொண்டு போவதில்லை. மக்கள் பற்று, குடும்பப் பற்று எங்கே? சொத்து பற்றோ பொருள் பற்றோ எங்கே இருக்கிறது; இன்னும் விரிந்து உணர்வோம், எவ்வளவோ பொருட்களைத் தனது என்று உரிமை பாராட்டுகிறோம். இருக்கட்டும். குடல் சீரணிக்கும் அளவுக்கு மேல் உணவை கொள்ள முடியுமா? சுமக்கும் அளவிற்கு மேல் ஆடை உடுத்த முடியுமா? உடல் பருமனுக்கு மேல் நிலத்தை அனுபவிக்க முடியுமா? இவ்வுண்மைகளை விளங்கிக்கொண்டு அடிக்கடி நினைத்து நினைத்து அறிவில் அழுத்தமாகப் பதிவுகொண்டு குடும்பத்தில் அவரவர்கள் கடமைகளை ஆற்றினால் இது பற்றற்ற வாழ்வு ஆகாதா? எந்த சிக்கலையும் எளிதில் தீர்க்கும் கூர்மையும் அறிவுக்கு எப்போதும் இருக்கும். நிறைவும் அமைதியும் இந்த நிலையில் தானே கிடைக்கும்? இதை விடுத்து குடும்பத்தை விட்டு ஓடிப்போகும் கோழைத்தனம் துறவு ஆகுமா? தன்னை வளர்த்த, வாழவைத்த சமுதாயத்தையும் ஏமாற்றிவிட்டு தானும் ஏமாறும் ஒரு இழிவான செயலல்லவா கடமைகளை மறந்து நழுவிப் போய்விடும் செயல்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

வெள்ளி, 14 ஜூன், 2013

குலம் தருமோ பெருமை ? --கபீர்

 

கல்விப் பெருமை, செல்வத்தின்கண் பெருமை, அதிகாரப் பெருமை மற்றும் வனப்பின் பெருமை இவை யாவும் மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் ஒரு பெரும் மாயையின் சக்தி. ஓரளவு இவைகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பெருமை உண்டு. அது தான் குலப்பெருமை.
மனித குலம், காணும் எல்லாவற்றிலும் ஒரு உயர்ச்சி அல்லது தாழ்ச்சி கற்பிக்கிறது. இவைகளுக்கு குதிரை, பசு, காளை, நாய் பூனை போன்ற விலங்குகளும் விதிவிலக்கல்ல. ஆயிரக்கணக்கில் பணம் கொட்டி உயர் ஜாதி நாய்க் குட்டிகளை செல்வந்தர்கள் வாங்கி செல்வதை காண்கிறோம். அதனுடன் கணிணியில் பதிவு செய்யப்பட்ட அதன் மூதாதையர்களின் வரலாறும் உண்டு. எவ்விதத்திலும், எந்த நிலையிலும் அதன் உயர்ச்சிக்கு குறைவு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்கவே இந்த ஏற்பாடு.
இப்படி இருக்கையில் தன் இனத்தை மட்டும் விட்டு வைப்பானா மனிதன். 'அவங்க ராஜா பரம்பரை' 'எங்கள் முப்பாட்டனார் திவான் பகதூராக்கும்' என்பன சில, கடந்த கால நிகழ்வுகளிலேயே, பெருமை பேசித் திரியும் பலரது போக்காகும். சாதி சண்டைகள் என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகும். இதற்கு எந்த ஒரு தேசமும் விதிவிலக்கு அல்ல. இது வேறுபாடு பாராட்டும் பாமர மனிதருடைய போக்கு. படைப்பு எல்லாவற்றிலும் ஒருமையை ஓர்ந்து, அன்பு போற்றும் ஞானிகள் இதை மாற்ற முயற்சிக்கின்றனர்.
ஆறறிவு கொண்ட மனிதனை அவன் பின்பற்றும் பண்பாடுகளையும் கொள்ளும் கோட்பாடுகளையும் கொண்டே தரம் பிரிக்க வேண்டுமே அன்றி பிராணிகளைப் போன்று பிறக்கும் குடியைக் கொண்டு அல்ல. அவைகளின் குணம் வெறும் மரபு வழியாக நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் மனிதனுக்கோ அவனுடைய பூர்வ ஜன்ம கர்ம வினைகளை ஒட்டியே குணங்களும் திறமையும் அமைகின்றது.
ஹரிபிரசாத் சௌராசியாவின் புல்லாங்குழல் இசையில் மயங்காதவர்களே இருக்க முடியாது. இவர் சிறுவனாக இருக்கும் பொழுதே அதை கற்க மிக்க ஆர்வம் கொண்டு பல சிரமங்களுக்கிடையே உழைத்து வெற்றி கண்டவர். சிரமங்களுக்கான காரணம் அவருடைய குடும்பத்தில் இசை என்பதின் வாசனை கூட கிடையாது. அவரது தந்தையார் ஒரு குத்து சண்டை வீரர். தன்னைப் போலவே தன் மகனும் அதில் தேர்ச்சி பெற்று முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். அந்த குடியிலே ஒரு இசை மேதை பிறக்க வேண்டும் என்பது இறைவன் சித்தம்.
நான்மணிக்கடிகையில் வரும் ஒரு பாடல்:
கள்ளி வயற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும் ; பெருங்கடலுள்
பல் விலய முத்தம் பிறக்கும் ; அறிவார் யார்
நல் ஆள் பிறக்கும் குடி ?

நாம் பொதுவில் பயனற்றவையாகக் கருதும் முள் நிறைந்த கள்ளி, உப்பு கரிக்கும் கடல், காட்டில் வாழும் மான் ஆகியவை கூட பல மதிப்பற்ற பொருள்களை தர வல்லன. அதைப் போன்றே மேன்மக்கள் பிறக்கவேண்டிய குடி இதுதான் என்று எவரும் நிர்ணயம் செய்ய முடியாது.
ஒரு அபூர்வப் பிறவி வந்து தன்னுடய குலத்திற்கே பெருமை சேர்த்துப் போய்விடுகிறது. அதன் பின், சந்ததியினர் பொறுப்பு அதிகமாகிறது. இதை ஒரு நல்ல உதாரணத்துடன் கபீர் சுட்டிக் காட்டுகிறார்.

பிறப்பு தருமோ பெருமை, ஒருவர் செய்வினையாயின் கடை
சிறப்பு தருமோ பொற்கலம், உரவோர்க்கண் கள்ளாகும் கடை

(உரவோர் =மேன்மக்கள்; சுபரன் என்பது சுவர்ணம் என்பதன் திரிபு)கள்ளுண்ணாமை, புலால் மறுப்பு, இன்னா சொல்லாமை போன்ற நற்குணங்களை மேன்மக்கள் வாழ்க்கையின் நியதியாகக் கொள்வர். அத்தகைய ஒருவர் விலையுயர்ந்த தங்கக் கலசத்திலேயே படைக்கப் பட்டாலும் கேடு விளைவிக்கும் கள்ளை நிந்திப்பர். அது போல் சமுதாயத்தில் ஒருவனுடைய செயல் கீழ்தரமானதாக இருப்பின் அவன் உயர் குடியில் பிறந்திருந்தாலும் அவன் நிந்தனைக்குரியவனே.
வள்ளுவர் சொல்வதும் அதுவே:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

ஆகவே நல்ல சந்ததியருக்கு அடையாளம் குடிப் பெருமைக்கு களங்கம் வராமல் நடந்து கொள்வதே.
சாதாரண மனிதர்களே சாதி பேதங்களில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, சிறுமதியோர் சாதுக்களையும் ஞானிகளையும் விட்டு வைப்பார்களா ? அதிலும் கபீர் இந்த விஷயத்தில் சற்று அதிகமாகவே அடிபட்டவர். ஆனால் ஞானிகள் இத்தகைய சில்லறைத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அறிவுரைத் தேவைப்படுவது சாதாரண ஜனங்களுக்கே. அவர்களுக்கு கபீர் கூறுகிறார்.

குலம் பொருட்டு ஆவது என், அடியவர் நிறை தெரிந்து ஏற்று
பலம் பொருட்டு குனை வாள் சிறப்பு, கிடக்கட்டும் அதன் தடறு
(தடறு= ஆயுத உறை ; நிறை =மாட்சிமை ; ஏற்று= போற்று ; குனை வாள் = கூர்மையான வாள் ) போருக்குப் புறப்பட்டிருக்கும் ஒருவன் எடுத்துச் செல்ல வேண்டிய வாளின் உறுதியையும் கூர்மையையும் பார்த்து தேர்ந்தெடுப்பானா அல்லது வாளின் உறையையும் அதன் வேலைப்பாட்டையும் பார்த்து எடுத்துச் செல்வானா? மனித உடல் வெறும் கூடு. ஒருவரின் ஆன்மீக சக்தியை இந்தக் கூட்டைப் பார்த்து முடிவு செய்தல் கூடாது. பிறப்பை ஒட்டி அந்த சக்தி நிச்சயிக்கப் படுவதில்லை. அது பல பிறவிகளின் மூலம் தவம் செய்து வந்திருக்கும் ஒரு சக்தி. அத்தகைய மாட்சிமை உடையவரின் குடிப்பிறப்பைப் பற்றி விவாதிப்பதே தவறு. தமிழ் மண்ணில் ஒரு நந்தனார், மகாராஷ்டிரத்தில் ஒரு நாமதேவர் (இவருடய தந்தை தையல் தொழில் செய்தவர்), கர்நாடகத்தில் குயவர்கள் குடும்பத்தைச் சார்ந்த கோரக்கும்பர் இப்படி இறை அனுபூதி பெற்ற மகான்கள் எண்ணிற்கடங்காது.
கண்ணன் கீதையில் சொல்வது (9-32) :
என்னை சரணடைந்தவர், பெண்ணோ, வைசியனோ அல்லது சூத்திரனோ யாராயிருப்பினும் மிக உன்னத நிலையை அடைந்தவர் ஆவர்.
மேற்கண்ட மகான்கள் கண்ணனின் கூற்றை மெய்ப்பித்தவர்கள். எனவே எத்தகைய சந்தர்பத்திலும் குலம் சாதி போன்ற எண்ணங்களை மனதுக்குள் அனுமதிக்கக் கூடாது. இதற்காக குறைந்த பட்சம் ஒன்றை நாம் கடைப்பிடிக்க முடியும். எங்கெல்லாம் சாதி மத சர்சைகள் நடக்கின்றதோ அவற்றை விட்டு விலகியிருந்தாலே ஆன்மீக மார்க்கத்தில் மேலும் ஒரு படி ஏறி விட்டோம் என்று வைத்துக் கொள்ளலாம்.

சனி, 8 ஜூன், 2013

வாழும் இறைவன் : சுவாமி விவேகானந்தர்

"வாழும் இறைவன்" என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதையின் தமிழாக்கம்:
மீண்டும் மீண்டும் பிறந்து, ஆயிரமாயிரம் துயர் பட வேண்டும்.
ஏனெனில், நிஜமான இறைவனை வழிபட வேண்டும்.
நான் நம்பும் ஒரே இறைவன் - அவன்
எல்லா ஆன்மாக்களின் கூட்டுத் தொகுதியாய் இருக்கிறான்.
அவன் உன்னுள்ளும், அதன் வெளியேயும் இருந்து,
உழைப்பாளிகளின் ஒவ்வொரு கையிலும்  செயல்பட்டு,
நடமாடும் ஒவ்வொரு கால்களிலும் நடந்து வருகிறான்.
அவன் உடலில் இருப்பது நீ.
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!
உயர்விலும் தாழ்விலும், துறவியிலும் பாவியிலும்,
கடவுளிலும் புழுவிலும்,
காணக்கூடிய, அறியக்கூடிய, உண்மையான எங்கும் நிறைந்த
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!
முற்பிறவியும் அடுத்த பிறவியும் இல்லாமல்,
இறப்பும் இல்லாமல், வருவதும் போவதும் இல்லாமல்,
எப்போதும் நாம் 'ஒன்றேயென' அவனில் இருப்பதுமான,
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!
இப்படிப்பட்ட "வாழும் இறைவனை"யும் அவனது பிரதிபலிப்பையும்
புறந்தள்ளி, பொய்யான நிழல்கள் பின்னால் அலையும் மூடர்களே,
இதனால் சண்டையும் சச்சரவும் தான் மிச்சம். கண்கண்ட
இறைவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்