புதன், 1 ஜனவரி, 2014

தியான உயர்வுக்கு சில தகவல்கள்...


குருவின் அருள் என்பது சீடனின் மனோ இயக்கத்தினைக்கடந்தே தான் எப்போதும் இருக்கிறது.
நாம் செய்யும் பல செயல்கள் அனைத்தும் கூட, ஒரு விதத்திலே, நிலையான இன்பம் தரும் என்ற நியதியிலே செய்யப்படுகிறது. இது எல்லா செயல்களுக்கும் பொதுவானது. முனைப்போ அல்லது முனைப்பன்றியோ எந்த செயல்களாக இருப்பினும் கூட.
நாம் உடல் என்ற அளவிற்குள் இருக்கும் போது, தான் தனது என்ற எண்ணத்தின் அடிப்படையிலே செயல் படுவது தவிர்க்க முடியாதது.

எண்ணம் என்பதன் அடையாளமே தான் நாம் குருவின் மௌன நிலையிலே இருந்து வெளியிலே இருப்பதால் என்று தியானத்திலே ஒடுங்க வேண்டும்.

புறச்செயல்கள் என்பது கனவைப்போலவே. கனவு கண்ட பிறகு எழும் நாம். ஓ... இது கனவா? என்று சொல்லி அதை துறக்கிறோம் அல்லவா? அதற்குக் காரணம் கனவிலே இருந்து விழித்துக்கொண்டதால் தானே? அது போல நாம் விழிப்பு நிலையாம் இறை நிலையிலே குருவோடு இணைந்து ஒன்றாகும் போது, தான் தனது என்ற எண்ணத்தைத் தரும் தன் முனைப்பை மாற்ற முடியும். அதற்கு சீரிய தவமும் குருவிடம் கொள்ளவேண்டிய பணிவும் மட்டுமே தேவை.

தான் தனது என்ற எண்ண எழுச்சியே தான் தன்முனைப்பின் ஆரம்ப நிலைகள் என்று அந்த அசைவு ஏற்பட்ட இடத்திலேயே விழிப்புடன் குருவோடு நின்று கவனித்து வளர்த்துக்கொள்ளவேண்டும்...

குருவிடம் கொள்ளும் பற்று அதிகரிக்க அதிகரிக்க, குருவோடு நாம் அடிக்கடி மனோ அலைத்தொடர்பிலே இருக்க வேண்டிய சூழல் அதிகம் வரச்செய்யும். உடல் என்ற ஒன்றுக்கோ, தான் தனது என்ற முனைப்பிற்கோ சோதனை தரும் பல விசயங்கள் சுற்றிலும் வரும். குருவிடம் சொல்லாது எந்த காரியமும் செய்யக்கூடாது. அதே நேரம், விழிப்பு நிலையிலே இருந்து மாறாமல் இருக்கும் தன்மையை விடாமல் இருக்கும் நிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

தான் தனது என்ற நிலைக்கு முக்கியத்துவம் என்பது நாம் திரும்ப கனவு உலகத்திலே காலடி எடுத்த வைத்த கதை ஆகி விடும். குருவைப் பிடித்துக்கொள்ள வரும் ஒரு வாய்ப்பாக, அந்த சோதனைகளைத் தாங்கிக்கொண்டு, பொறுத்துக்கொண்டு முன்னேறவேண்டும். தொடர்ந்த குரு மீதான ஒரு அணுகுமுறை, தவத்திலே உட்காரவைக்கும். அப்போது, முயற்சியே இன்றி, தியானமானது நமது உடலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, உடலுக்குள் இருந்து உயிரை எழுப்பிக்கொண்டு குருவின் இடத்திற்கு வரை எடுத்துக்கொண்டது போல தியானம் தானாகவே நிகழும். அங்கே நாம் தியானம் செய்தோம் என்ற சிறு முனைப்பிற்க்குக்கூட இருக்காது. இது முனைப்பு கடந்த நிலையின் வகை.

தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்
தறுக்கென்ற தன்முனைப்புக் குன்றிப்போகும்
பவவினைகள் புதிது எழா. முன்னம் செய்த
பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்

என்கிற குருவின் வரிகளை பாருங்கள்...

சில விசயங்களில் சூசகமாக சில விசயங்கள் அடங்கி இருக்கும். அது போல, குருவின் இந்த வரிகள் கூட. எதனை நினைந்தால்.... எல்லாம் கிடைக்குமோ அதை நினைந்து வர வர எல்லாவற்றிலும் உயர்வு கிட்டும்.

அந்த கவியில் குரு சொல்வார்...

சிவ நிலையை சீவனிலே உணர்ந்து கொண்டால்
சிறுமை தரும் மன மயக்க மாயை ஏது?
எவரெனினும் இவ்வழியினால் அன்றி உய்ய
ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்...
என்கிறார்.
பவ வினைகள் புதிது எழாது காத்தலும் அன்றி, முன்னர் செய்த பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும் என்கிற வரிகளை கவனித்து தம்மை உயர்த்திக்கொள்ளவேண்டும்.
இது குருவை பணிந்தால் வரும் நிலைகளின் சில வரிகள்.