புதன், 12 நவம்பர், 2014

எரியும் விளக்கின் தூண்டுகோலாக நம் தேடலுக்கு கேள்விகள் அமைகின்றன...


கேள்விகளைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பதிலைத் தேடி அலைகிறோம். இப்போது புதிய கேள்வி வந்து விழுந்து விட்டது.
"யோகம், யோகம் என்று அடிக்கடி சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன ? விளக்க முடியுமா ?'' இது கேள்வி.
நமது கிரியையான செயலுக்கும் ஞானத்திற்கும் இடையே செயல்படும் தத்துவம் யோகம். மனம் என்கிற குரங்கை, ஆர்ப்பரிக்கும் கடலை, மதயானையை அடக்கும் அதாவது அமைதிப்படுத்தும் கலை யோகம். மனதை அடக்க பயன்படுத்தப்படும் யுக்தி யோகம் எனப்படுகிறது. அந்த நிலையில் மனதை அலைய விடாமல், கவனம் சிதறாமல் தன் பணியை முனைப்புடன் செய்பவரை கர்ம யோகி என்பார்கள். அந்த யோகத்தை நிலை நிறுத்திக் கொள்வதால் ஞானமும், ஞானத்தின் விளைவாக முக்தியும் உண்டாகும். அதாவது கற்பது சரியை. அதன்படி நடப்பது கிரியை. ஆனால் கற்றபடி நடக்க எத்தனிக்கையில் உலக மாயையில் மனமானது அலை பாய்கிறது. அங்குதான் யோகம் தேவைப்படுகிறது. ஆக அந்த யோகம் என்ற கருவியைக் கொண்டு மனதை அடக்க அல்லது அமைதிப்படுத்த பழகிக் கொண்டால் ஞானம் விளையும். இதையே சரியை, கிரியை, யோகம் ஞானம் என்று நம் முன்னோர்கள் தெளிவாக வரிசைப் படுத்தி கூறி இருக்கிறார்கள்.
ஞானம் என்ற மலை உச்சியில் இருக்கும் கோவிலுக்கு பாதைகள் பல உண்டு. அவரவர் தேர்ந்தெடுக்கும் பாதையில் விருப்பமுடனும், கவனம் சிதறாமலும், சோர்வடையாமலும் போனால் ஞானமாகிய கோவிலுக்கு சென்று முக்தியாகிய இறைவனை தரிசிக்கலாம். பரம் பொருளை பற்றிய அனுபவத்தை மெய்ஞானம் என்கிறோம். மற்ற நடைமுறை உலகியல் சார்ந்த அறிவு விஞ்ஞானம் எனப்படுகிறது. ஒரு உடலை விஞ்ஞானிகள் பிண்டமாகவே பார்ப்பார்கள்.அதன் அழிவுக்குப் பின் வேறெதுவும் இல்லை என்பது அவர்கள் கருத்து. மெய்ஞானியோ அந்த உடலை முக்திக்கான கருவியாக எடுத்துக் கொள்கிறான். கூடு அழியுமே தவிர ஆன்மா அழியாது. அது பரமனைத் தேடிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறான். ஆனால் உண்மையில் விஞ்ஞானரீதியாக உடலை ஆராய்ந்து அதன் தத்துவத்தை முழுவதுமாக உணர்ந்தால் மட்டுமே மெய்ஞானியால் ஞானத்தைப் பெற முடியும். உலகில் விஞ்ஞானிகளாகவும், பரத்தில் மெய்ஞானியாகவும் திகழ்ந்தவர்களே நம் சித்தர் பெருமக்களும், ரிஷிகளுமாவார்கள். எப்போதும் ஆராயும் குணமுடையவர்களாக இருந்தார்கள். ஆராய்ந்து தெளிந்துதான் ஞானத்தை அடைந்தார்கள். இந்த அவர்களின் முயற்சியில் விஞ்ஞானம் என்பது சித்தியாகவும் மெய்ஞானம் என்பது முக்தியாகவும் திகழ்கிறது. இந்த யோக முயற்சியில் விஞ்ஞான மயமான சித்தியை அடைந்ததினால் அவர்கள் சித்தர்கள்.
கிரியை மற்றும் ஞானத்திற்கும் நடுவில் ஜொலிக்கும் யோக நிலைகளாக 64 நிலைகளை ரிஷிகளும் சித்தர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதில் 32 முக்கிய யோகங்களாகவும், 32 உப யோகங்களாகவும் சொல்லப்பட்டுள்ளது. 32 முக்கிய யோகங்கள், சிவ இராஜயோகம்,வாசியோகம், பசுபதியோகம், ஆதியோகம், சமாதியோகம், குளிகையோகம், ஞானயோகம், கெவுனயோகம், சிவயோகம், சித்தியோகம், கும்பயோகம், பூர்வயோகம், பிண்டயோகம், அட்டாங்க யோகம், கற்பயோகம், மௌனயோகம், தீட்சையோகம், தவயோகம், நிஷ்டையோகம், பிராணாயயோகம், கருயோகம், குருயோகம், சத்தியோகம், அதீதயோகம், மகாராஜசம்பத்துயோகம், கெவுனவண்டயோகம், இராஜானந்தயோகம், அம்பிகாயோகம், சாங்கியயோகம், குண்டலினியோகம், தாரகயோகம், மானசயோகம், அங்கியோகம் என்று நீண்டு கொண்டே போகிறது. எத்தனை பாதைகளானாலும் முடிவு முக்தியே. யோகங்கள் பலவாக இருந்தாலும் கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், அட்டாங்கயோகம், குண்டலினியோகம்,மந்திரயோகம், லயயோகம், ஹடயோகம், இராஜயோகம் கற்ற ஞானிகளை நாம் அறிந்திருக்கிறோம். மந்திரயோகம், லயயோகம், ஹடயோகம், இராஜயோகம் போன்ற நான்கு யோகங்களிலும் பிராணன் எனப்படும் ஜீவக்காற்றும், அபானன் எனப்படும் மலக் காற்றும் ஒன்று சேர வேண்டும் என்பது தத்துவமாகும். மலக்கற்றாகிய அபானனும் சக்தி வாய்ந்ததே என்பதை சொல்வது இந்த யோகங்களாகும். குண்டலினியோகத்தில் மூலாதாரத்தில் உறையும் சக்தியை சிரசில் ஏற்றி அட்டமாசித்திகளைப் பெற்று மெய்ஞானத்தை அடைவார்கள். இது சற்று கடினமாக இருந்தாலும் அனைவராலும் போற்றப்பட்ட யோகமாகும். இந்த யோகத்தை போற்றிப் புகழாதத யோக நூல்களே இல்லை எனலாம். குருவருளாலும், திருவருளாலும் மட்டுமே இது சித்தியாகும். தற்போது சில யோகங்களில் உள்ள முக்கியமான நிலைகளைக் கலந்தும் புதுமையாக யோகங்களைக் கற்றுத் தருபலர்களும் இருக்கிறார்கள். யோகத்தைப்பற்றிச் சொல்ல ஆயுள் காலம் போதாது. எனவே மிகவும் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். எனவே புத்தியை தெளிவிக்கும் ஏதாவது ஒரு ஞானமார்கத்தை குருவின் துணையுடன் கடைபிடித்து மேன்மையடையும்படி வாழ்த்துகிறேன்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்கவளமுடன்!