செவ்வாய், 24 நவம்பர், 2015

நீடித்த ஆயுள் தரும் கார்த்திகை தீப வழிபாடு

றைவனை ஜோதி வடிவாக வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு ஆகும்.

‘‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’’ என மாணிக்கவாசகர் கூறுவார்.

நினைத்தால் முக்தி தரும் திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவாக தோன்றினார். இதை நினைவு கூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றது.
தீப வழிபாடு என்பது நீண்ட நெடிய காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வட நாட்டில் தீப வழிபாடு என்பது ‘தீபாவளி’ என்றும், தெற்கே ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது. தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் மயிலாப்பூரில் பாடிய திருப்பதிகத்தில் பூம்பாவை என்ற பெண்ணுக்கு உயிர் கொடுப்பதற்காக பாடிய போது... ‘‘கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’’ என்று பாடியுள்ளார்.
இதன் மூலம் கி.பி 7, 8–ம் நூற்றாண்டில் இருந்தே, கார்த்திகை வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுவது தெரிகிறது. தீபத்தின் நடுவில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் முப்பெருந்தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
அடிமுடி காணாத வரலாறு
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காத்தல் கடவுளாகிய திருமாலுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாய் தோன்றினார். ‘இருவரில் யார் எனது அடியையோ (பாதம்), முடியையோ காண்கிறீர்களோ அவர்களே பெரியவர்’ எனக் கூறினார். 
திருமால், வராக உருவம் கொண்டு திருவடிகளை காணச் சென்றார். பிரம்மா அன்னப்பறவை உருக்கொண்டு திருமுடியை காண பறந்து சென்றார். ஆனால் இருவரும் அடியையோ, முடியையோ காணமுடியாமல், அகங்காரங்கள் அழிய பெற்றவர்களாக சிவ பரம்பொருளே உலகின் முழு முதற் பரம்பொருள் என்பதை உணர்ந்துகொண்டனர். தங்களது பிழையை பொறுத்து அருளுமாறு சிவ பெருமானை பிரார்த்தனை செய்தனர். 
உடனே சிவன், சிவலிங்க திரு உருவத்தோடு ஜோதிப்பிழம்பில் இருந்து வெளிப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமானது. அதில் இருந்து தோன்றிய சிவலிங்கம் அருணாசலேசுவரர் ஆனார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் தான், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மாதந்தோறும் கார்த்திகை விரத நாள் வருகிறது. கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தினத்தை ‘திருக் கார்த்திகை’ என்பர். 
விரதம் இருப்பது எப்படி?
கார்த்திகை முதல் நாளன்று பரணி நட்சத்திர நாளில், பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்த வேண்டும். கார்த்திகைஅன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலையில் காலைக்கடன் களை முடித்து நீராடி பாலினை அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். உமாதேவிக்கு சிவபெருமான் தனது இடப்பாகத்தினை கொடுத்து ஆட்கொண்டதும் இந்நாளில்தான். அன்று ‘‘ஓம் நமச்சிவாய வாழ்க’’ என்று சொல்வது தீராத வினைகளை தீர்த்து வைக்கும். நீங்காத செல்வத்தையும் வழங்கும். நீடித்த ஆயுளை தரும். 
கார்த்திகை விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்தால் சுகபோக வாழ்வு வாழலாம். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். 
வீடுகளில் மாலை பவுர்ணமி நிலவு தோன்றும் நேரத்தில் வீட்டு வாசலில் வாழைக்கன்று நட்டு வைத்து அதன்மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்குள் வெளிச்சம் தரும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றியும் அழகுபடுத்திட வேண்டும். இதைக் கார்த்திகை விளக்கீடு என்றும், சர்வலாய தீபம் என்றும் அழைக்கின்றோம். 
தீபம் இருளை நீக்கிப் பொருளை விளக்கம் பெறச் செய்கிறது. தீபம் பிரகாசமாக இருக்குமிடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 12  ஆண்டுகள் விரதமிருந்து முருகனை பிரார்த்தனை செய்வதால் வேண்டும் வரங்களைப் பெறலாம். கார்த்திகை தீபத்தன்று முருகன் ஆலயங்களில் தீப விழா இடம் பெறுவது குமாராலய தீபம் என்று அழைப்பர். 
கார்த்திகை மாதம் முழுவதும்  மாலை வீட்டு வாசலில் விளக்கேற்றி வைக்கின்ற பழக்கம் உண்டு. கார்த்திகையன்று முருகன் ஆலயங்களில் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வர். ஆலய முன்புறத்தில் காய்ந்த ஓலை, மட்டை, இலைகளால் பனைவடிவில் கட்டப்பட்ட சொக்கப்பனை ஏற்றி ஜோதி வடிவாகக் காட்சியளிக்க செய்வர்.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து தரிசனம் செய்வர்.
பூஜைக்கேற்ற விளக்கு
குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு, அதற்கு அடுத்து சிறப்புடையது. எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து அதன் மூலம் தீபம் ஏற்றி, எவரொருவர் ஒரு மண்டலம் (45 அல்லது 48 நாட்கள்) பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் கிடைக்கும்.
தீபம் ஏற்றும் முறை
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2–வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3–வது மேற்கு நோக்கி, இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்ற கூடாது. குளிர்விக்கும் போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2–வது வடக்கே உள்ள திரியையும், 3–வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி  எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?
திருக்கார்த்திகை தினத்தன்று சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில்  பனை மரத்தை நாட்டி அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்து கட்டுகின்றனர். மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சில கோவில்களில் பனை ஓலைகளை ஒரு சிறு கூண்டைப்போல கட்டி அதை எரிக்கின்றனர். ஆணவம் எரிகிறது. கூடவே அஞ்ஞானமும் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவாக காட்சி தருகிறான்.
சிவபெருமான் திரிபுரங்களை எரித்த நாள் திருக்கார்த்திகை நாளாகும். சிவன் எரித்த பாவனையை வெளிப்படுத்துவதற்காக சொக்கப்பனை கொளுத்து கின்றனர். மேலும் அடி, முடி தேடிய விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், ஆதி, அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுத்தார். நெருப்புக்கு முதலும், முடிவும் கிடையாது. சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூரும் விதத்திலும் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
விளக்கேற்ற நல்ல நேரம்
கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும். வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.
அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல்திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும், மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

வெள்ளி, 20 நவம்பர், 2015

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம்! திருவருணை,

கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வையில் மரகத மலையாகவும், நம் போன்ற சாமானியர்களுக்குக் கல்மலையாகவும் காட்சி கொடுக்கும் மலை திரு அண்ணாமலை. அண்ணுதல் என்பதன் எதிர்ப்பதம் அண்ணா என்பது அல்லவா? நெருங்க முடியாத மலை திரு அண்ணா மலை. ஈசன் ஒளிப் பிழம்பாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்க பிரம்மாவாலும், திருமாலாலும் அவனை நெருங்கவே முடியவில்லை அன்றோ? இதைத் தவிர இந்தத் தலத்திற்கு அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணன் என்பது சூர்யோதயத்துக்கு முன்னர் கீழ்வானம் காட்டும் செக்கச் சிவந்த நிறத்தைக் குறிக்கும். அப்படி சிவந்த நிறத்தாலான நெருப்பைக் குறிக்கும் அசலம் அருணாசலம். அருணாசலம் தவிர இந்தத் தலம் முக்திபுரி, அருணகிரி, திருவருணை, அருணை, சுத்த நகரம், சோணாசலம், அனல்கிரி, தென் கைலை, ஞா நகரம், அண்ணாநாடு, சிவலோகம், அண்ணாத்தூர், கெளரி நகரம், தேக நகரம், முக்தி நகரம், ஞான நகரம், சோணாத்ரி, அருணாத்ரி, தலேச்சுரம், சோணகிரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. இந்த மலையானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,700 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. 
அருணாசல புராணம், உரோமசர், குத்சர், குமுதர், சகடாயர், அகத்தியர், குமுதாட்சர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவராலும், மார்க்கண்டேய ரிஷியாலும் கூறப்பட்டது எனத் தெரிந்து கொள்கிறோம். இந்த மலை உருவான கதை அனைவரும் அறிந்ததே என்றாலும் சுருக்கமாய்க் கீழே தருகிறேன்.
பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு முறை தங்களில் பெரியவர் யார் என்பது குறித்துச் சண்டை போட்டுக் கொண்டனர். தங்களுக்குள் எவர் பெரியவர் என்பதைச் சொல்லச் சரியான நபர் ஈசனே என்பதை அறிந்து கொண்டு அவரிடம் சென்று தங்களில் யார் பெரியவர் எனக் கேட்க, ஈசனும் தன்னை அடிமுதல் முடிவரை எவர் கண்டறிந்து வந்து சொல்கின்றனரோ அவரே பெரியவர் எனச் சொல்லிவிட்டுத் தான் ஜோதி ஸ்வரூபமாய் நின்றார். வராஹ உருவில் பூமியைக் குடைந்து கொண்டு விஷ்ணு அடியைக் காணச் செல்ல, அன்னமாக மாறி பிரம்மா முடியைக் காணப் பறந்தார். வராஹ மூர்த்தியால் அடியைக் காண இயலவில்லை. மேலே மேலே பறந்து சென்று கொண்டிருந்த அன்னப் பறவையான பிரம்மாவுக்கு ஈசன் தலையில் சூடிய தாழம்பூ ஒன்று கீழே இறங்குவது கண்களில் பட, அந்தத் தாழம்பூவைச் சாட்சியாக வைத்துக் கொண்டு ஈசனிடம் தான் முடியைக் கண்டதாய்க் கூறுகிறார். வராஹ மூர்த்தியோ தன்னால் அடியைக் காண இயலவில்லை என்னும் உண்மையை ஒப்புக் கொள்கிறார். தாழம்பூவும் பிரம்மா முடியைக் கண்டதாய்ப் பொய்ச் சாட்சி சொல்ல கோபம் கொண்ட ஈசன், பிரம்மாவின் வழிபாடுகள் இனி பூவுலகில் நடக்காது என்றும், ஈசனின் வழிபாட்டில் இனித் தாழம்பூவைச் சேர்த்தல் கூடாது என்றும் கூற பிரம்மா தவறுக்கு மனம் வருந்தினார். அன்று முதல் ஈசனின் வழிபாட்டில் தாழம்பூவுக்கு இடம் இல்லை. 
தேவாதிதேவர்கள் வந்து ஈசனை வணங்கி அவர் அந்தத் திருக்கோலத்திலேயே பூவுல மக்களுக்கும் காட்சி கொடுக்கவேண்டும் எனக் கேட்க ஈசனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூற ஈசனின் வெப்பம் தாங்காமல் அனைத்து மக்களும், தேவர்களும் தவிக்க, ஈசனும் தன் பெருங்கருணையால் அக்னி மலையாக மாறி நின்றான் என்பது தல புராணம். திருஞான சம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பதிகங்கள் பாடப்பட்டது. பழைய லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதி எனச் சரித்திர ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. இதை பகவான் ஸ்ரீரமணரின் முக்கிய சீடர் ஆன பால் பிரண்டன் என்பவர் ஆதாரங்களோடு, தனது Message from Arunachala என்ற புத்தகத்தில் எழுதி இருப்பதாய்த் தெரியவருகிறது. மேலும் இந்த மலையானது இறுகிய எரிமலைக் குழம்பே என்பது விஞ்ஞான ஆய்வாளர்களால் நிரூபிக்கப் பட்டு இமயத்தை விடவும் பழமையானது என்பது கூறப்பட்டுள்ளது. அருணாசலத்தைப் பற்றிய நூல்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவை இருப்பதாயும் தெரிய வருகிறது. சாசனங்கள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. பல்லவர் காலங்களிலேயே இந்தக் கோயில் கருவறை எழுப்பப் பட்டிருக்கவேண்டும். மதில் சுவர்கள் பிற்காலச் சோழர்காலங்களில் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதைத் தவிர, நாட்டுக்கோட்டை நகரத்தார் 1903-ம் வருஷம் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கும் செய்வித்திருக்கின்றனர். 
கார்த்திகை தீபம் நெருங்கி விட்டதால் திருவண்ணாமலை தொடரை முதலில் போட்டு விட்டுப் பின்னர் சிவ வடிவங்களில் மற்றவர்கள் தொடருவார்கள். பொறுத்துக் கொள்ளவும். நன்றி.

வெள்ளி, 13 நவம்பர், 2015

உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி என்கிறது இந்துவேதம்:

இப் பூவுலகில், இப் புவிப்பரப்பில், இப்பூமியில், இவ்வையகத்தில், இந்த உலகத்தில், இந்த ஞாலத்தில் முத்தமிழ்மொழி ஒன்றுதான் பல நூறாயிரக் கணக்கான சொற்கள் பிண்டங்களையும், பயிரினங்களையும், உயிரினங்களையும், ஐம்புலன்களால் உணர்ந்தறியக் கூடியவைகளையும், ஆறாவது அறிவுக்கு அப்பாற்பட்டவைகளையும் பெயரிட்டுக் குறிப்பிட்டு பொருள் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது.
ஏனென்றால், இந்த முத்தமிழ்மொழி அண்டபேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண்சித்தர்களின் தாய்மொழியாகவும், 1359 அண்டபேரண்டங்களிலும் அருளுலக ஆட்சிமொழியாகவும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியாகவும் அருளுலகப் பேருண்மைகளை அநுபவப் பூர்வமாக அறிந்து கொள்ள உதவக்கூடிய ஒரே ஓர் உயர்தனிச் செம்மொழியாகவும் விளங்குகின்றது.
இந்த முத்தமிழ் மொழியில் வழங்கப்பட்டுள்ள இந்துவேதம் எல்லா அண்டங்களிலும் இருந்த வேதம், இருந்து வருகின்ற வேதம், இருக்கப் போகின்ற வேதம் என்ற முக்காலப் பொருளின் (வினைத்தொகை) ‘இருக்கு வேதம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது பதினெண்சித்தர்களால்.” [இருக்கு 1:4:48]
[ஆதிசிவனார் அருளிய:இருக்குவேதம் காண்டம்-1, மண்டலம்-4, நாள்வாசகம்-48:]
ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர்,
அரசயோகிக் கருவூறார்
'அன்பு சித்தர்'

செவ்வாய், 10 நவம்பர், 2015

உன்னுள் இருக்கும் மகா சக்தியை அறியும் சித்தி உன்னிடம் மட்டுமே உள்ளது..


இயற்கையின் ரகசியங்களை நீங்கள் அறியத் தொடங்கிவிட்டால், உங்கள் சுவாசத்தின் அளவையும் கவனித்துக்கொள்ளுங்கள், இல்லையேல் பூமியில் உங்களுக்கு இடம் இல்லாமல் போய்விடும். ஏன் என்றால்
இயற்கையின் ரகசியத்தை அறிய முற்படும் போது ஆயுளின் மீது பற்று இருக்க
கூடாது என்பதே முதல் படி ஆகும். என்றும் அனைத்தும் தெரியும் என்ற கர்வம்
தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் தலை பாரம் தாங்காமல் கீழ விழுந்துவிடப்போகிறது. சமுதாயத்தில் மதிப்பும் , கெளரவமும் நாம்
கேட்டு வாங்கும் பொருள் அல்ல! நமது நடவடிக்கைகளை (செயல்பாடுகளை)
கவனித்துக்கொண்டு இருக்கும் சமுதாயம் தானாக கொடுப்பதே மதிப்பும் கௌரவமும் ஆகும்! இயற்கையின் இரகசியங்களை அறிய முற்படும்
போது இப்பூவுலகில் இருக்கும் அனைத்தையும் அதன்
நிலையிலேயே ஏற்றுக்கொள்ளுங்கள். அனைவரையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்,
சம அனுபவம் உடையவர்களிடம் உங்கள் திறமைகளை காட்டுங்கள், உங்களை விட
அனுபவம் குறைந்தவர்களிடம் உங்கள் திறமைகளை காட்டாதீர்கள். மேல் நோக்கிய
பார்வையே உங்களை மேலும் உயரச் செய்யும் !
{ தனக்குள் இருக்கும் சாவியை அறிந்து கொண்டால் பிரபஞ்சத்தின்
பூட்டை திரக்கமுடியும். }
{ தன்னை பற்றி அறிய முற்படுபவன் மகான் ஆக போகிறான் என்று
அர்த்தம்... உன்னுள் இருக்கும் மகா சக்தியை அறியும் சித்தி உன்னிடம் மட்டுமே
உள்ளது... }
ஓம் நமசிவய

செவ்வாய், 3 நவம்பர், 2015

திருமூல நாயனார் ஞானம்

அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி
அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலந் தன்னில்
முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்
படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்
படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
அடியாகு மூலமதே அகார மாகி
அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1

அதுவாகி அவனளாய் எல்லா மாகி
அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி
மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
அதுவாரும் அகாரமதே மூலமாகி
அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம்மூலமே. 2

மூலமெனு மாதார வட்டந் தானே
முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்
சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்
திருவடியுந் திருமேனி நடமுமாகும்
கோலமுடன் அன்ட மெல்லாந் தாங்கிக்கொண்டு
கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி
ஆலமுண்ட கண்டமெலாந் தானாய் நின்ற
அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே. 3

அரிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்
அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்
பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்
பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்
அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை
அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. 4

நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே. 5

ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்
பேசாத மந்திரமு மிதுவே யாகும்
பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்
நிலையான ஓங்கார பூட மாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்
கின்பமுடன் கயிலாச மெய்த லாமே. 6

எய்தரியா பரசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி
மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்
இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
இருநேர மர்றிடத்தே யிறைஞ்சிக் காணே. 7

காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் கானா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே. 8

தெளிவரிய பாதமது கார மாகிச்
சிற்பரமுந் தற்பரமுந் தானேயாகி
அழிவரிய சோதியது தானே யாகி
அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூலமாகி
முச்சுடர்ந் தானாகி முடிந்த் சோதி
சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்
சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்துப் பாரீர். 9

(முடிந்தது)