வெள்ளி, 26 ஜூலை, 2013

பட்டினத்தார் ஞானம் அடைய வழி கூறுகிறார்


கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள்
பார்க்க வேண்டும்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால்.

எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார் பாருங்கள்! பட்டினத்தார்.
ஞானம் அடைய நமக்கு வழி கூறுகிறார். கண்ணால்தான் சாதனை
புரிந்து ஞானம் அடையவேண்டும். இதை நெஞ்சே நீ அறிவாயாக
என்கிறார். ஆனால் நீ அதை விடுத்து மாயை வசப்பட்டு வேண்டாதெல்லாம்
எண்ணுகிறாய் என கூறுகிறார். மேலும் கண் மூலம் சாதனை செய்து
தான் தன்னையும் உணரவேண்டும் என்றும் அதன் மூலம் உன் ஊன
உடல் பத்தரை மாற்று பொன்னாக ஒளிர் விட்டு பிரகாசிக்கும் என்று
கூறியுள்ளார்.

நமக்குள் இருக்கும் இரகசியம்


எந்த ஒரு பொருளை உணர்ந்தால், எந்த அறிவைப் பெற்றால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ள முடியுமோ, எல்லாவற்றையும் ஐயமின்றி தெரிந்து கொள்ள முடியுமோ, அந்தப் பொருள்தான் 'அறிவை...' அறிந்து கொள்ளக் கூடிய அறிவு எனும் பொருள். அது எங்கேயோ இல்லை. நமக்குள்ளாகவே இருக்கிறது. ஒரு சிறிய உதாரணத்தோடு பார்ப்போம்.

ஒரு பெரிய செல்வந்தர் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்வதற்குப் பதிவு செய்து இருந்தார். அவர் நிறையப் பணம் எடுத்துச் செல்வதை அறிந்த மற்றொருவர், அதே நாளில் அதே பெட்டிக்குப் பதிவு செய்து கொண்டார். அந்த நாளில் இருவரும் பயணம் செய்தார்கள். அப்பொழுது பணக்காரர் தன் பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். எதிரில் இருந்தவர், பணக்காரர் பணம் எண்ணுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது, எல்லாப் பணத்தையும் வெளியில் எடுத்து எண்ணட்டும் என்று பாத்ரூமுக்குள் போய் இருந்து கொண்டார். அதன்பிறகு வந்தார். சிறிது நேரம் கழித்துப் பணக்காரர் பாத்ரூம் போனார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து வந்தார். மீண்டும் மறுமுறை பணத்தை எடுத்து எண்ணினார். மற்றவர் மீண்டும் உள்ளே போய்விட்டு பிறகு வந்தார். மீண்டும் பணக்காரர் உள்ளே போனார். உடனே, வெளியில் இருந்தவர் பணக்காரருடைய பணத்தைப் பெட்டி, தலையணை மற்றும் அவர் உடைமைகள் அனைத்திலும் தேடினார். கிடைக்கவேயில்லை. மறுபடியும் பணக்காரர் வெளியே வந்தார். பொழுது விடிகின்ற நேரம், இருவரும் புறப்படும் சமயம், மறுபடியும் பணக்காரர் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். அதற்கு மற்றவர், "நீங்கள் பணத்தை எங்கே வைத்து இருந்தீர்கள்" என்றார். "ஏன் கேட்கிறீர்கள்?" என்றார் பணக்காரர். நீங்கள் இரு தடவை பணத்தை எண்ணியதைப் பார்த்தேன். உண்மையில் நான் ஒரு திருடன். அதை எடுக்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளே போய் இருந்த பொழுது பணத்தைத் தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை" என்றார். "உன்னைப் பற்றிப் எனக்கு நன்றாகத் தெரியும், நீ திருடன் என்று. அதனால் என் தலையணைக்கு அடியில் வைத்தால் ஆபத்து என்று, பணத்தை உன் தலையணைக்குக் கீழே வைத்திருந்தேன்" என்றார் பணக்காரர்.

அதே போல எல்லாம் வல்ல இறைவன் இரகசியமான பொருட்களை நமக்குள்ளேயே வைத்திருக்கிறான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.

செவ்வாய், 16 ஜூலை, 2013

தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி .

 
மனிதன் அறிவு மற்றெல்லாவற்றையும் விடச் சிறப்புற்றிருந்தும் அது ஐம்புலன் உணர்ச்சிகளில் சிக்குண்டு மயங்கி இன்ப துன்ப அனுபோக அனுபவங்களிலேயே சுழன்று கொண்டிருக்கின்றது. ஆன்மாவின் களங்கங்களான பழிச்செயல் பதிவுகளைத் தூய்மை செய்து பரம்பொருளை உணர்ந்து அதோடு கலந்து முடிவதற்கே உடலை ஒரு கருவியாக அமைத்துக் கொண்டிருக்கும் உண்மையினை மறந்து, மயக்கத்தில் (மாயை நிலையில்) செயல்புரிந்து கொண்டிருக்கின்றது. அறிவு முதிர...்ந்து சிந்தனையினால், தானே தெளிவு பெறும்போது அல்லது தெளிந்தவர் சுட்டிக்காட்டி உணர்த்தும்போது அறிவு விழிப்புநிலை அடைகிறது. கடவுள் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அறிவில் ஓரளவு உயர்ந்தோர்களுக்கே ஏற்படுகின்றது. அறிவின் கூர்மை பெற்றவர்கள் மாத்திரமே சிந்தித்து அக்குறையை அறிவின் விளக்கத்தால் போக்கிக் கொண்டவர்கள் சிலர். அந்நிலையை உணர்ந்த ஞானிகள் விளக்கிய போதனைகளை கடைபிடித்து நலம் பெற்றவர்கள் பலர்..

திங்கள், 15 ஜூலை, 2013

சிவவாக்கியர் - வள்ளலார்

அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற் காட்டநேராவே - நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திருவருட் சீர் வண்ணமென்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து. - வள்ளலார்

நேத்திரங்கள் என்றால் கண்கள். சாத்திரங்களை நாம் உண்மை அறியாது படிப்போமானால்
 நமக்கு தடுமாற்றமே உண்டாகும்-புரியாது. ஆனால் கண்களாகிய சிற்றம்பலத்தில் குடியிருக்கும் இறைவனை அறிந்து பார்த்தோமானால் கண்கள் நமக்கு அனைத்தையும் அறிவிக்கும். எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இந்த உலகத்தையும் இது
 போன்ற பற்பல உலக நிலையும் நமக்கு உணர்த்தும், நாமும் உணரலாம் - ஞானமடயலாம். பரிபூரண அறிவு பெறலாம்.

சனி, 13 ஜூலை, 2013

"ஞான வாக்கியம்" -- குமரகுருதாசர்

"ஏழுவகைத் தோற்றமும் அழிதல் நிச்சயமே ".        
ஏழு வகையான பிறப்புகளும் அழிதல் உறுதியாகும்.

"ஐம்புல நுகர்ச்சியில் பம்பும் அக்கன்மம் ".
ஐம்புலன்களின் மூலம் போகங்களை அனுபவிப்பதால்
அவ் வினைகள் வளரும்.

"ஏறு கன்மங்கள் காறு அறு பிறவி".
வளரும் வினைகள் அளவற்ற பிறப்புகளை உண்டாக்கும்.

"இளமை விவேகி பின் தளர்வறும் யோகியே". 
இளமையில் பொய் எது மெய் எது எனப் பகுத்தறிவோர்
 பிற்காலத்தில் திடமான யோகியாவார்.

"அனந்தல் குறைந்தால் மனம் செலும் மேலே".
தூக்கம்  குறைந்தால் மனம் சத்துவ குணத்திற் செல்லும்.

"கண்டப் பொருள் அறிகண்  துப்பு இலதே".
உருவப் பொருள்களை அறியும் கண் அறிவிலாச் சடம்.

"காணாப் பொருளைக் காண்கன்  மெய்க்கண்".
தூலக் கண் காணாப் பொருளைக் காணும் கண்  ஞானக்கண்.

"குருஅருள் இன்றி அருள் வரல் இன்றே".
குருவின்  அருள்  இல்லாமல்  இறை  அருள்  வருவதில்லை.

"கெடுதியாவது வடுவு உடை இச்சை".
குற்றமுள்ள ஆசையே  கேடு  எனப்படும்.

"கோட்டை ஆவது மாட்சிமை மோனம்".
சிறந்த  மௌனமே  ஒருவனக்கு  அரண்  ஆகும்.

"சகமே மறையும் அகம் முகம் அழுந்தின் ".
மனம் அடங்கினால் உலகமே மறைந்துவிடும் .

"சித்தி விரும்பார் முத்தி வரம்போர்". 
முத்திபெறும்  குறிக்கோளுடையார்  சித்துகளை  விரும்பார் .

"சுக  வழிபாடு பகிர்முகம் அன்று". 
முத்திக்குரிய வழிபாடு புறப்பூசையால் அன்று .

"சோர்வு படாது அருளார் சிவ ஆக்கம்".    
அருள் நிறைந்த  சிவனை நினைத்து வாழும் வாழ்வு கெடாது .

"ஞேகிழ்தல் மயங்கல் அகல முயல்க". 
தவத்தின் போது  சோர்தலும் மயங்கலும் நீங்க  முயல்க.

"தன்னை அறிதல் தவத்தில் தவமே". 
தான் யார் என்று அறிதலே தவத்தில் சிறந்த தவம் ஆகும் .

"நுகர்வன கண்டு நுகர்க பசித்தால்". 
பசித்தால் மட்டும் உண்ணத் தக்க உணவைத் தேர்ந்து உண்க.

"நெருப்பைப் போலக் கருத்தனை நினைக".
கடவுளை நெருப்பைப் போலக் கருதுக.

"பீடை தருமே மூடர் உறவு". 
மூடருடைய உறவு துன்பம் தரும்.

"புயல்போல் மறைக்கினும் வெயிலவன் போல்நில்". 
மேகம் போல் மறைத்தாலும் சூரியன் போல் நிற்பாயாக.

"பூரணம் ஆம்வரை  தாரணை  நீங்கேல்". 
ஒரு பொருளில் மனம் நிலைபெறுவது முழுமையாகும் வரை
அச் செயலை விட்டு நீங்காதே.    

"பெருஞ்சுவை  ஊண்இன்று அருந்துக சிறுக". 
வித விதமான பெரிய சுவை உணவுகளின்றிச் சாதாரண
உணவைச் சிறிதளவு உண்க.

"பேசா  நாட்கள்  பிறவா நாட்கள் ".
மௌன நாட்களே பிறவாமைக்கு ஏதுவான நாட்கள்.

"பொன்மண்  ஆசை  மண்மண்  ஆகும்". 
பொன் ஆசையும் மண் ஆசையும் உள்ள உயிர்  அழியும்.

"முன்வினை ஒழிவில் தன்நிலை தெரியும்". 
பலவினை ஒழியும்போது உயிர் தன் இயல்பை அறியும்.

"வானம் போலத் தியானம் செய்யே". 
மனத்தை வானம் போலத்தூய்மையுடனும்
அசையாமலும் வைத்துக்கொண்டு தியானம் செய்வாயாக .

"வினை எது புரியினும் அனகனை  மறவேல்". 
எந்த செயல் செய்தாலும் இறைவனை மறவாதே

"வெல்லுக வெளியில் செல்லும் மனத்தை". 
வெளியில் செல்லும் மனத்தைச் செல்லவிடாமல்
வெல்வாயாக.  

                               "ஓம் குமரகுருதாச குருப்யோ நம"  

திருமூலர் திருமந்திரம் -- மோனத்தில் உதித்த திருமந்திரம்


திருமூல நாதர் சித்தர் தன் மோனத்தில் இருந்து வருடம் ஒரு முறை உதித்து, ஒரு பாடலை இயற்றி பின் நிட்டையில் சென்றார் என்று செவி வழி கதைகள்  கூறுகிறது. இவ்வாறு அய்யன்  3000 ஆண்டுகள் இயற்றி மந்திர பாடல்களே பின் "திருமந்திரம்" என்ற பெயரை கொண்டு தொகுக்க பெற்றது. வேதங்களுக்கும் உபநிஷட்களுகும் இணையான ஒரு தமிழ் மறை நூலாக இப்பாடல்கள் விளங்குகிறது. இந்த சம்பவம் நடந்த இடம் ஆடுதுறை ஆகும். இதன் அருகே வுள்ள திருவாவடுதுறை கோவிலில் அக்கால வனமாகவும். அதன் ஒரு மரத்தின் அடியில் தவம் இயற்றி வரைந்த நூலே திருமந்திரம்.
யோக சூத்திரங்களில் இந்நூல் பதஞ்சலி முனிவரின் வடமொழி பாடல்களுக்கு இணையானது. இறைவன் என்னை நன்றாக படைதான் தன்னை நன்றாக தமிழ் செய்ய என்று கூறுகிறார்

"பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்திலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
"

அய்யன் மற்றும் இதர சித்தர்கள் எழுதும் மந்திரங்கள் அகத்தில் இருந்து வருவது. அகத்திலிருந்து வரும் போதமே அகவல். புறத்திலிருந்து வரும் கருத்துக்கள் வெறும் தகவலே.
இவ்வாறு அகத்தில் கண்ட அனுபவத்தை திருமூலர் சித்த பெருமான் நமக்கு இங்ஙனம் உரைக்கிறார்..
உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம் 
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் 
தெள்ள தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம் 
கள்ளபுலன் ஐந்தும் காணா மணி விளக்கே
இது பாடல் மட்டும் அல்ல இதனை கோவில் வடிவமாகவும் தில்லையில்
காணலாம். அய்யன் சீவ தலமான சிதம்பரத்தில் கோவில் கட்டுமானமே நம்மை நமக்கு
உணர்த்தும் தத்துவமாக விளங்குகிறது.
பொன்னம்பலம் மேல் உள்ள  தங்க ஓடுகளின் எண்ணிக்கை  21,600. இது நமது  சுவாச காற்று இனையாக உள்ளது. அதன் மேல் பொருந்திய தங்க ஆணிகள் கணக்கு 72000. இது நமது நாடி கணக்கு. வெட்டவெளி என்னும் ஆகாயத் தலத்தில் பொன்னம்பல மேடையில் சிவசக்தி தாரணை  பிரதான
ரகசியமாய் வெளியாகிறது.இதே நம்முள் இருக்கும் சொர்ண தத்துவம்.  இப்படி பட்ட சொர்ணமான உத்தமன் உள்ளிருக்க அவனை வெளியே விடாமல் பலகாலம் வேண்ட வழிகளை கீழே அய்யன் சொல்கிறார்
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

 இவ்வாறு உயிர் வளர்த்து நாம் காணும் இறைவன் என்ன உணர்வுடன் இருக்கிறான்? அவனும் அன்பும் ஒன்று தான் வேறு இல்லையென்று அய்யன் தெளிவாக கூறுகிறார்
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

 ஆகையால் நாம் உயர் நிலை வந்தால் தான் அன்பு வருமா ? அல்லது அன்பு வந்தால் தான் உயர் நிலை வருமா ? குழப்பம் வேண்டாம் கீழே பாருங்கள்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
வில்வதையோ,  துளசியை , அருகம்புல்லை வைத்து கூட இறைவனுக்கு அன்பை செலுத்துங்கள்.   பசுவிற்கு ஒரு வாய் புல் அன்புடன் கொடுங்கள்.
உண்ணும் பொது ஒரு கவளத்தை முன் வாசலிலோ பின்புறமோ மற்ற உயிரினத்துக்கு அன்போடு அளியுங்கள். சுற்றி இருக்கும் பிறர்க்கு அன்புடன் இன்சொல் கூறுங்கள்.

இது பேர் அன்பு. இதை செய்தால்  தெய்வத்தின் அருள் கிட்டும். அது கிட்டினால் பிரபஞ்சம் மற்றும் சித்தர்கள் அன்பு நமக்கு நேரிடையாக கிடைக்கும். அது கிடைத்தால் தன்னைத் தான் அறியும் ஆசியும் வழியும் கிட்டும். அதுவே சாகா கலைக்கும் வழி வகுக்கும்.

வெள்ளி, 12 ஜூலை, 2013

இறைவன் திருவடி கண்மணியே


" மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக் கழகே அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியே நொருவரைநின் பத்மபாதம் பணிந்த பின்னே"

அபிராமி பட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி பாடல்
இது! ஆசி வழங்கி அருள் பாலித்தார் பட்டர் பெருமான்!

மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக எழுதவில்லை!
மணியே என்றால் மாணிக்கமே என்று பொருள் சொல்லி இருக்கின்றனர். அப்படியல்ல!
மணியே - கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியில் உள்ள ஒளியே , ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி பொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின் ஒளியே, அணுகாதவருக்கு பிணியே - கண்மணி ஒளியை அணுகாதவருக்கு பிறவி பிணியே, பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணி தீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இது தான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியை இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நாம் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள்.

இதுவே ஞானப் பொருள். இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு ! அபிராமி பட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப் பிணி தீர நம் கண்மணி யிலுள்ள ஒளி தான் மருந்து என்றார். இதையே வள்ளலாரும் நல்ல மருந்து இம்மருந்து சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்சோதி மருந்து என்றார்.

அபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்த பின் வேறொருவரை பணிய மாட்டேன் என்றார். இதையே திருநாவுக்கரசரும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார்.
ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்று தான்! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றை தான் சொன்னார்கள்! நன்றைத் தான் சொன்னார்கள்!
"கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நாந் தொழுந் தெய்வமே"

தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும் மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார்
தாயுமான சுவாமிகள்.
காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்'
என் திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

வியாழன், 4 ஜூலை, 2013

மகான்கள் கண்ட மனம்


உலகில் மிக மிக சிரமமான செயல் எது என்றால் அது மனதைக் கட்டுப்படுத்துவது தான். மனதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மனதால் கட்டுப்பட்டு அது போன போக்கில் போவது தான் பெரும்பாலான மனிதர்களுக்கு சுலபமாக இருக்கிறது. அதுவே இயல்பாகவும் இருக்கிறது. ஆனால் உண்மையான ஆன்மீகத்தின் அடித்தளமே மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தான். எனவே உண்மையான மகான்கள் எல்லாம் இறை நிலை அடையும் முன் மனதுடன் பெரும் போராட்டங்களையே நடத்தி உள்ளார்கள் என்று சொல்லலாம். அப்போது அவர்கள் மனதை எப்படியெல்லாம் கண்டார்கள், வர்ணித்தார்கள் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் பார்ப்போமா?
தாயுமானவர்:
இவர் அளவுக்கு மனதை ஏசியவர்கள் இருக்க முடியுமா என்று சந்தேகப்படும் அளவுக்கு மனதை இவர் ஏசியுள்ளார். சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது என்று பாடிய இவர் அந்த சிந்தையை வெல்லும் முன் அது அவரைப் பாடாய் படுத்திய போதெல்லாம் கடுமையாக விமரிசிக்கத் தவறவில்லை. இதோ சில உதாரணங்கள்-
இரும்பு நேர் நெஞ்சக் கள்வன் – (இரும்பு போல் கடினமாக இருக்கும் திருட்டு மனம்)

ஆயிரம் சொன்னாலும் அறியாத வன்னெஞ்சம் (எவ்வளவு சொன்னாலும் உண்மையை அறியாத கடுமையான நெஞ்சம்)
வஞ்சனை அழுக்காறாதி வைத்திடும் பாண்டமான நெஞ்சு (வஞ்சனை, பொறாமை முதலானவற்றை வைத்திருக்கும் பாத்திரமான நெஞ்சம்)
இரும்போ கல்லோ மரமோ எனும் நெஞ்சம் (இரும்பா கல்லா மரமா என்று தீர்மானிக்க முடியாத நெஞ்சம்)
என்னெஞ்சம் ஐயா தீயுண்டிருந்த மெழுகலவோ (தீயின்வாய்பட்ட மெழுகாய் இருக்கும் நெஞ்சம்))
உள்ளம் கனலில் வைத்த பாகோ மெழுகோ (உள்ளம் தீயில் வைத்த பாகா, மெழுகா?)
தெளியாது சுழலும் சிந்தை (தெளிந்திடாமல் சுழன்று கொண்டே இருக்கும் மனம்)
வெந்து வெடிக்கின்ற சிந்தை (வெந்து ஆத்திரத்தில் வெடிக்கின்ற மனம்)

தீதெல்லாம் ஒன்றாய் வன்மை செறிந்திருட்படலம் போர்த்த பாதகச் சிந்தை
(எல்லாத்தீமையும் ஒன்று சேர்ந்து கடுமையான இருட்படலத்தை போர்த்திக் கொண்டிருக்கும் பாதகமான மனம்)
பாதரசமாய் மனது சஞ்சலப்படுதலால் (பாதரசம் அடிக்கடி மாறக்கூடியது. அப்படி சஞ்சலப்படும் மனம்)
ஆசையெனும் பெருங்காற்றூடிலவம் பஞ்செனவும் மனமது அலையும் (ஆசை என்ற பெருங்காற்றில் இலவம் பஞ்சு சிக்கினால் எப்படி அந்தப் பஞ்சு காற்றில் எல்லா இடங்களுக்கும் அலைபாயுமோ அப்படி அலைபாயும் மனம்)
வன்னெஞ்சோ, இரங்காத மர நெஞ்சோ
இரும்பு நெஞ்சோ, வைரமான கன்னெஞ்சோ
அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம்
(கடுமையான நெஞ்சமோ, இரக்கமே இல்லாத மர நெஞ்சமோ, இரும்பாய் இறுகிய நெஞ்சமோ, வைரம் போன்ற கல் நெஞ்சமோ, அல்லது மண்ணாங்கட்டி போல் உறுதியே இல்லாத நெஞ்சமோ எனது நெஞ்சம் என்று கேட்கிறார். இதில் ஒவ்வொன்றாகவும் மனம் ஒவ்வொரு சமயங்களில் இருக்கிறதல்லவா?)

பாழ் நெஞ்சே பொன்னைப் புவியை மடப்பூவையரை மெய்யெனவே (பொன், உலகம், பெண் ஆகியவற்றை மெய் என நினைத்து அதன் பின்னோடும் பாழாய் போன நெஞ்சமே)

இப்படியெல்லாம் பாடாய் படுத்தும் மனதை ஒரு பொருட்டாய் நினைக்க மாட்டேன் என்று மிகவும் உறுதியாக ஓரிடத்தில் கூறுகிறார்:
நெஞ்சே உனையொரு காசாய் மதியேன் நான்

இன்னொரு இடத்தில் அலைகள் இல்லாத நீர்நிலை போல தெளிவான மனத்தை அடைவேனோ என்று சலித்துக் கொள்கிறார்.
திரையிலா நீர் போல் சித்தம் தெளிவனோ

மனமோ அலைகிறது. அதன் பின்னே உறுதியில்லாது மனிதனும் அலைந்தால் அதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? இதை நேரடியாக இன்னொரு இடத்தில் மனதிடமே கேட்கிறார்.
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர்
வள்ளலார்:

வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அவருடைய பிரார்த்தனை நமக்கு நினைவிற்கு வராமல் போகாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பாடிய மகான் அவர். மனம் அந்த அளவுக்குத் தூய்மையாகவும் நடிப்பில்லாததாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த அவரும் மனதை சில இடங்களில் பாடுகிறார்.
சும்மா அலையுமென் வேட நெஞ்சம் (வேட்டையாட காட்டுக்குச் சென்ற வேடன் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்க மாட்டான். அதே போல் அலையும் என் நெஞ்சம்)
மனத்தாசையொரு கடலோ! (கடலளவு ஆசையை உள்ளடக்கிய மனம்) 
வாயொருபாற் பேச மனமொருபாற் செல்ல (வாயொரு ஒரு விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் கூட மனமோ அதில் நிலைக்காமல் வேறொரு பக்கம் சஞ்சரிக்கிறது)

திருவருட்பா:

திருவருட்பாவிலும் ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மனம் கடுமையாக சாடப்படுகிறது.

மாயையென்னும் நிறையாறு சூழும் துரும்பாய் சுழலுமென்னெஞ்சு (மாயை என்னும் நிறைந்த ஆற்றில் துரும்பாய் சிக்கி சுழல்கின்ற என் நெஞ்சம்)

வஞ்ச நெஞ்சம் கல்மலையோ, இரும்போ, செம்மரமோ
பாறைக்கல்லோ முருட்டுக்கட்டையோ

கன்னெஞ்சமோ கட்டை வன்னெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ
என்னெஞ்ச என்னெஞ்சமோ

(தாயுமானவர் வர்ணித்தது போலவே இந்த இரண்டு பாடல் வரிகளிலும் வர்ணனை ஒத்துப் போகிறது. இரண்டாவதிலோ எட்டிக்காய் போல கசக்கும் நெஞ்சம் என்பதனையும் சேர்த்து இந்த நெஞ்சம் என்ன நெஞ்சமோ என்று சலித்தும் கொள்கிறார்)

கணிகை போலெனைக் கலக்கிற்றுள்ளம் (விலைமகள் மயக்குவது போல மனம் மயக்கிக் கலக்கியது)

சிந்தை மயங்கித் திரிகின்ற நாயேனை (மனம் மயங்கி ஒரு இலக்கும் இல்லாமல் திரிகின்ற நாய் போல இருக்கிறேன்)

மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் (பக்குவம் இல்லாத மனமான சிறு பிள்ளை அனைத்தும் அறிந்த அறிவாகிய குருவை மதித்திட மாட்டான்.)

விகாரமெனும் பேய்க்கு நெஞ்சம் பறி கொடுத்து நிற்கின்றேன் (மன விகாரம் என்ற பேய்க்கு நெஞ்சை பறிகொடுத்து விட்டு நிற்கின்றேன். அதாவது அது ஆட்டிய படியெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறேன்)

நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் (ஓரிடத்தில் நிலைத்து நிற்காத நெஞ்சமும் பொல்லாத மாயையும் சேர்ந்து என்னைப் பாடாய்படுத்துகிறது.

கல்நெஞ்சமே மான் போல் குதித்துக் கொண்டாடேல் (கல் நெஞ்சமே மான் போல் தாவிக் குதித்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டாட வேண்டாம்)

திருநாவுக்கரசர்:

திருநாவுக்கரசர் மனதுடன் போராடியதை விட அதைத் தூய்மைப்படுத்தி இறைவனை அங்கு இருத்தி கொண்டாட முனைவதில் அதிக கவனம் கொள்கிறார். துவக்கத்தில் ’குறிக்கோளிலாது கெட்டேன்’ என்று சுய ஆராய்ச்சியில் காண்கிறார். மனதில் குறிக்கோள் உறுதியாக இருக்கின்ற போது தடுமாற்றம் இல்லையல்லவா?

கரப்புறு சிந்தை காண்டற்கரியவன் (வஞ்சனை நிறைந்த மனதால் இறைவன் அறிய முடியாதவன்)
மனத்தினுள் விளக்கொன்றேற்றி உன்னுவார் உள்ளத்துள்ளார் (மனதினில் ஞான விளக்கை ஏற்றி ஆழமாக எண்ணுபவர்கள் நெஞ்சத்தில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான்)

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் (இறைவனே என் நெஞ்சத்தை உனக்கே இடமாகக் கொடுத்து விட்டேன்)
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே! (இறைவனை தன்னுள் இருத்திய பிறகு மனதிடம் வியந்து கேட்கிறார். என்ன பெருந்தவம் செய்தாய் என் நெஞ்சமே-இறைவனை இருத்திக் கொள்வதற்கு)
இப்படி மனம் ஆன்மீகத்திற்கு இடையூறாக இருக்கும் போது மகான்களால் கடுமையாக விமரிசிக்கப்படுகிறது. மனம் அலைவதை நிறுத்தி இறைவனில் நிலைத்து அமைதியும் ஆனந்தமும் அடையும் போது பாராட்டவும் படுகிறது.இறைவனை எட்டவும் மனம் மிக அவசியம் என்பதையும் மகான்கள் மறுத்து விடவில்லை. திருமந்திரம் ”சிந்தை தெளிந்தார் சிவமாயினார்களே” என்று சொல்வது போல மனம் தெளிவடையும் போது மனிதன் தெய்வமேயாக முடிகிறது என்பதும் அவர்கள் அறிவாக இருக்கிறது.