திங்கள், 29 பிப்ரவரி, 2016

கரு வளர்ச்சியின் சூட்சுமம்...

{2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)}
ஒரு பெண்ணின் கருப்பையின்
உள்ளே கருவானது எவ்வாறு உருவாகிறது
என்பதை திருமந்திரப்
பாடல்களின் வழியே கடந்த இதழில்
கண்டோம். இனி அந்தக் கரு வளரும்
நிலைகளில் என்னென்ன
நிகழுகிறது என்று திருமூலர்
கூறியுள்ள சில கருத்துக்களைக்
காணலாம்.
ஒரு கரு உருவான உடனேயே அதில்
உயிர் வந்துவிடுவதில்லை. பிராண
சக்தியும், மறுபிறவி எடுக்கும்
ஒரு ஆன்மாவும் அந்த கருப்
பிண்டத்தின்
உள்ளே நுழையும்போதுதான்,
அது செல்களின் குவியல் என்ற
நிலையிலிருந்து உயர்ந்து உயிருள்ள
ஒரு கருவாக உருவம் பெறுகிறது.

அதுவரையில் நம் உடலிலுள்ள பல
தசைகளைப் போன்றே அந்த கருவுற்ற
முட்டையும்
ஒரு தசை போன்றே கருதப்படும்.
பிராணன் எனும்
மூச்சுக்காற்று (உயிர்க்காற்று)
கருவினுள்ளே நுழைவது குறித்து கீழுள்ள
திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.
"பூவின் மணத்தைப் பொருந்திய
வாயுவும்
தாவி உலகில் தரிப்பத்தவாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள்
வாயுவும்
கூவி, அவிழும் குறிகொண்ட போதே.'
-திருமந்திரம் பாடல் எண்-265.
தாயின் கருப்பையினுள் இருக்கும்
சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற
மூச்சுக் காற்றானது, குறிப்பிட்ட
காலம் வரும்போது ஒரு மெல்லிய
ஒலியோடு அந்த கருவின்
உள்ளே புகும் என்பது இப்பாடலின்
பொருளாகும்.
அவ்வாறு உள்ளே நுழைந்த
காற்று அந்தக் கருவின் அனைத்துப்
பகுதிகளிலும்
(அனைத்து செல்களிலும் என
வைத்துக்கொள்ளலாம்) பரவி நிற்கும்.
இதற்கு உவமையாக திருமூலர்
பூவின் நறுமணத்தைக்
குறிப்பிடுகிறார்.
ஒரு பூ மலரும்போது அதிலிருந்து வரும்
நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப்
பகுதி முழுவதும் பரவி நிற்பதைப்
போன்று, பிராணன் எனும்
மூச்சுக்காற்றும் கருவின்
உள்ளே நுழைந்து பரவி நிற்கும்!
எவ்வளவு அற்புதமான ஒரு உவமை!
இந்த மூச்சுக்காற்று சரியான
வேளையில்
உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால்
மட்டுமே, அந்தக் கரு முறையாக
வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற
முடியும்.
மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில்
தாமதங்கள் அல்லது தடைகள்
ஏற்பட்டாலோ அல்லது உள்ளே நுழைந்த
மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர
இல்லாது போனாலோ கருவின்
வளர்ச்சி பாதிக்கப்படும்.
கருச்சிதைவும் ஏற்படலாம்.
இதை அடுத்த பாடலில் திருமூலர்
விளக்குகின்றார்.
"போகின்ற எட்டும் புகுகின்ற
பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும்
ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.'
-திருமந்திரம் பாடல் எண்-266.
இந்த நான்கு வரிகளில் பல
அற்புதமான சூட்சும உண்மைகள்
பொதிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு வரியாக
சற்றே விளக்கமாகக் காணலாம்.
முதல் இரண்டு வரிகளில்,
மூச்சுக்காற்று உள்ளே நுழையும்
முன்னர் அந்தக்
கருவினுள்ளே என்னென்ன உள்ளன
என்பதைப் பட்டியலிடுகிறார்.
கருப்பையினுள்ளே இருக்கும் சிறிய
உடலினுள்,
-போகின்ற எட்டு (8)
-புகுகின்ற பத்தெட்டு (10+8=18)
-ஒன்பது வாய்தல் (வாயில்கள்)
ஆகியவை உள்ளன.
இவை எவையெவை என்பதைக்
காணலாம்.
போகின்ற எட்டு
1. சுவை
2. ஒளி
3. ஊறு
4. ஓசை
5. வாசம்
6. மனம்
7. புத்தி
8. அகங்காரம்
ஆகிய அருவமாக உள்ள
எட்டையே போகின்ற எட்டு என்கிறார்
திருமூலர்.
புகுகின்ற பத்தெட்டு (18)
10 வாயுக்கள் 8 விகாரங்கள்
ஆகியவற்றையே புகுகின்ற
பத்தெட்டு என்கிறார்.
பத்து வாயுக்கள்
1. பிராணன்
2. அபானன்
3. உதானன்
4. வியானன்
5. சமானன்
6. நாகன்
7. கூர்மன்
8. கிருகரன்
9. தேவதத்தன்
10. தனஞ்செயன்
எட்டு விகாரங்கள்
1. காமம்
2. குரோதம்
3. உலோபம்
4. மோகம்
5. மதம்
6. மாச்சரியம்
7. துன்பம்
ஒன்பது வாயில்கள்
1. வலது கண்
2. இடது கண்
3. வலது நாசி
4. இடது நாசி
5. வலது காது
6. இடது காது
7. வாய்
8. குதம்
9. பிறப்புறுப்பு
என உடலிலுள்ள வாசல்கள் மொத்தம்
ஒன்பது. இதையே இப்பாடலில்
"ஒன்பது வாய்தலும்'
என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது வரியில் வருகின்ற
"மூழ்கின்ற முத்தனும்' என்னும்
சொற்களும் மிகவும் அர்த்தம்
உள்ளவை
கருப்பையினுள்ளே கரு பனிநீர்
எனப்படும் ஆம்ய்ண்ர்ற்ண்ஸ்ரீ
எப்ன்ண்க் என்ற
திரவத்தினுள்ளே மூழ்கி இருக்கும்
இல்லையா? எனவேதான் "மூழ்கின்ற'
என்ற வார்த்தையை திருமூலர்
உபயோகப்படுத்தியிருக்கிறார்.
"முத்தன்' என்ற சொல்லுக்கும்
ஆழமான அர்த்தம் உள்ளது.
கடவுளுக்கும்கூட "முத்தன்'
என்றொரு பெயருண்டு. படைத்தல்,
காத்தல், அழித்தல் ஆகிய
மூன்று செயல்களையும்
முறையே பிரம்மன், திருமால், சிவன்
ஆகிய மூன்று கடவுள்களும்
செய்வதாகக் குறிப்பிட்டாலும்
மூவரும் ஒருவர்
என்பதே உயர்நிலைத் தத்துவம்.
மூன்று குணங்களை-
செயல்களை உடைய கடவுள்
"முத்தன்'.
கிறிஸ்துவ மதத்திலும் "தந்தை, மகன்,
தூய ஆவி (பிதா, சுதன், பரிசுத்த
ஆவி)' என கடவுள்
மூன்று நிலைகளில் இருந்தாலும்,
ஒரே கடவுளே என்ற
கோட்பாடு கற்பிக்கப்படுகிறது.
கடவுளுக்குச் சரி;
மூன்று நிலைகளில் ஒன்றாக
இருப்பதால் முத்தன் எனலாம்.
கருவிலிருக்கும்
குழந்தைக்கு "முத்தன்' என்ற
சொல்லை திருமூலர் ஏன்
பயன்படுத்துகிறார்?
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
மூன்று உடல்கள் உள்ளன. நாம்
கண்ணால் காணக்கூடிய
பருவுடலை ஸ்தூல சரீரம்
என்பார்கள். இது தவிர சூட்சும சரீரம்,
காரண சரீரம் என மேலும்
இரு உடல்கள் ஒவ்வொருவருக்கும்
உண்டு. இவை சக்தி நிலை உடல்கள்
(Energy Bodies). சூட்சும சரீரம்,
ஸ்தூல சரீரம், காரண சரீரம் ஆகிய
மூன்றும் இணைந்தே மனிதன்
உருவாகிறான். கருவிலிருக்கும்
குழந்தைக்கும் இது பொருந்தும்.
மூன்று உடல்களால் உருவாவதால்
கருவையும் திருமூலர் "முத்தன்'
என்கிறார்.
இனி பாடலின் அடுத்த
இரண்டு வரி களுக்கு வருவோம்.
முதல் இரண்டு வரிகளில் கருவில்
என்னென்ன உள்ளன என்பதைப்
பட்டியலிட்ட திருமூலர், அடுத்த
இரு வரிகளில்,
"இவை அனைத்துமே ஒரு கருவில்
இருந்தாலும், குண்டலினி சக்தி,
பிராண சக்தி ஆகிய
இரு சக்திகளை இறைவன் சரியான
நேரத்தில் கருவுக்குள் செலுத்தினால்
மட்டுமே, அந்தக்
கரு வளர்ந்து ஒரு குழந்தையாக
மாறும். அது நடைபெறாவிடில்
கரு பாழாகிப் போகும்' என்கிறார்.
"நாகமும் எட்டுடன் நாலு புரவியும்'
என்ற
மூன்றாவது வரியை சற்றே அலசிப்
பார்க்கலாம்.
குண்டலினி சக்தியையே "நாகம்' என
குறிப்பிடுகிறார் திருமூலர்.
நமது உடலில் மூலாதாரச்
சக்கரத்திற்கு அருகில் உறங்கிக்
கிடக்கும் அற்புதமான
சக்தியே குண்டலினி சக்தியாகும்.
சமஸ்கிருத மொழியில் "குண்டலா'
என்றால்
குவிந்து கிடப்பது அல்லது சுருண்டு
கிடப்பது என்று பொருள்.
பாம்புகள் ஓய்வாக
இருக்கும்போது சுருண்டே இருக்கும்.
எனவேதான் வடமொழி யில்
பாம்புக்கு "குண்டலா' என்ற பெயரும்
உண்டு. தூக்கத்தில்
சுருண்டு கிடக்கும் பாம்பைப்
போலவே நமது குண்டலினி சக்தி தூங்கிய
நிலையில் மூலாதாரத்தின்
அருகே சுருண்டு கிடக்கிறது. இந்திய
மரபுப்படி சக்தி என்பதைப்
பெண்பாலாகவும் தேவியாகவும்
உருவகப்படுத்துவர். எனவேதான்
சுருண்டு கிடக்கும்
சக்திக்கு குண்டலினி,
குண்டலினி தேவி எனப் பெயரிட்டனர்.
எதையும் நேரடியாகக் கூறாமல்
சங்கேத வார்த்தைகளால்
கூறுவது சித்தர் மரபு. எனவேதான்
திருமூலர் குண்டலினியைக் குறிக்க
"நாகம்' என்ற சங்கேத மொழியைப்
பயன்படுத்தியுள்ளார்.
அடுத்து வரும் "எட்டுடன்
நாலு புரவியும்' என்பதுவும் சங்கேத
வார்த்தைகளே. நேரடி யாக அர்த்தம்
கொண்டால் "12 குதிரைகள்'
என்றே அர்த்தம் வரும். ஆனால்
திருமூலர்
இங்கே மூச்சுக் காற்றையே புரவி என்ற
சங்கேத மொழியில் கூறுகிறார்.
சாதாரண
மனிதர்களுக்கு மூச்சுக் காற்று கண்டத்திற்குக்
கீழே எட்டு விரற்கடை பரவி நிற்கும்.
யோகிகளுக்கு கண்டத்திற்கு மேலே நான்கு
விரற்கடை பரந்து நிற்கும்.
இதையே எட்டுடன் நாலு புரவியும்
என்று சங்கேத மொழியில் கூறுகிறார்.
கடைசி வரியில் வரும் "பாகன்' என்ற
சொல் கடவுளைக் குறிக்கும்
(சிவனை) சங்கேதச் சொல்லாகும்.
"பாகன்' என்பதற்கு செலுத்துபவன்,
கட்டுப்படுத்துபவன் என பல
அர்த்தங்கள் உண்டு.
குண்டலினி சக்தியையும்
மூச்சுக்காற்றையும் கருவின்
உள்ளே செலுத்து பவனாகையால்
கடவுள் இங்கே "பாகன்' ஆகிறார்.
இவை இரண்டையும் பாகனாகிய
கடவுள் அந்தக் கருவின்
உள்ளே செலுத்தா மல் போனால்
அந்தக் கரு வளர்ச்சியடையாது.
வீணாகப் போய்விடும்.
ஐயன் வகுத்த
திருக்குறளை சிறு அடிகளில் பெரும்
உண்மைகளை விளக்கும்
சிறப்பு வாய்ந்த நூலாகக்
கொண்டாடுகிறோம். "கடுகைத்
துளைத்து, ஏழ் கடலைப்
புகுத்தி குறுகத் தரித்த குறள்'
என்று புகழ்வார்கள். திருவள்ளுவரின்
திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல
திருமூலரின்
திறமை என்பதற்கு திருமந்திரப் பாடல்
சான்றாக உள்ளதல்லவா?
நான்கு வரிகளில்
எத்தனை எத்தனை சூட்சுமங்கள் ?

புதன், 24 பிப்ரவரி, 2016

புண்ணிய பாவம்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே! விழியன்பொழுக

மெத்தய மாதரும் வீதிமட்டே! விம்மிவிம்மியிரு 

கைத்தல மேல்வைத்தழு மைந்தருஞ்சுடு காடுமட்டே 

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே! 

--பட்டினத்தார்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

பக்திக்கு முதல் தகுதி!

ஒரு சமயம் மேலே பறந்த பறவையை பார்த்த கண்ணன் அர்ஜுனனிடம், ""மைத்துனா! அது புறா தானே,'' என்றார். 

அர்ஜுனனும் "ஆம்' என்றான்.
"இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது,'' என்றார் கண்ணன்.
"ரொம்ப சரி...அது கழுகே தான்,'' என்றான் அர்ஜுனன்.
"அர்ஜுனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை...'' என்றதும், "அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான்'' என்று மூன்று முறை அடித்துச் சொன்னான்.
"என்னடா நீ! நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...! அது என்ன பறவை என தெளிவாகச் சொல்,'' என்ற 
கண்ணனிடம், ""கண்ணா! என் பார்வையை விட உன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை அதிகம். மேலும், அந்தப் பறவையை நான் "புறா' என்று சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப் பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன்,'' என்றான்.
பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! 
""புராணங்களில் அப்படி சொல்லி இருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே... நம்புகிற மாதிரி இல்லையே...'' என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்க பழனி மலை மீது சிலையைவைத்துள்ளார் போகர்...

பழனி மலைமீது ஏறும் பொழுது உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வேலைகளைக் கொடுத்துவிட்டு நம் எண்ணம் அனைத்தையும் வானை நோக்கி எண்ணி மகரிஷிகள் காட்டிய அற்புதமான தெய்வ நிலைகள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு நம் கண்ணான புலனறிவில் ஊட்ட வேண்டும்.

அப்பொழுது கதிரவனுடைய நிலைகள் பூமி சுழலும் பொழுது கிழக்காகின்றது. நாம் கிழக்காகப் பார்த்து வணங்கும் பொழுது அந்த சூரியனுடைய காந்த அலைகள் நமக்குள் ஈர்க்கப்படுகின்றது. விண்ணிலே இருக்கக்கூடிய மெய்ஞ்ஞானியின் நிலைகளை ஈர்க்கக்கூடிய நிலைகள் வருகின்றது.

அவ்வாறு மெய்ஞானிகளுடைய நிலைகள் நமக்குள் வரும்பொழுது சூரியனுடைய ஆற்றல் மிக்க நிலைகள், அந்த காந்தசக்தி பெருக காரணமாகின்றது.

அந்த மெய்ஞானிகளுடைய சக்தியைக் கொண்டுதான்
நமது வாழ்க்கையில் நம்மை அறியாது சேரும்
அசுர குணங்களைப் போக்கமுடிகின்றது.

உதாரணமாக நாம் சாலையில் செல்லுகின்றோம் என்றால் ஒரு மாடு மிரண்டு வருகின்றது. அதனுடைய பயத்தை நம் கண் கவருகின்றது.

அந்தப் பயம் நமக்குள் வந்தபின்தான் உணர்வின் நடுக்கமாகி தற்காத்துக் கொள்ளும் உணர்வு வருகின்றது. நமக்குள் வந்து நம் நல்ல குணத்தை செயல் இழக்கச் செய்கின்றது.

நமக்குள் அது நல்ல குணங்களைத் துடிக்கச் செய்யும் பொழுது இந்த அலைகள் நமக்குள் அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது. நாம் சுவாசித்த உணர்வு நம் உயிரிலே பட்டு அந்த அலைகளைப் பிரம்மமாகச் சிருஷ்டித்து அந்த அலைகள் நமக்குள் அதிமாகப் பெருகிவிடுகின்றது.

ஒரு அணுவின் தன்மை மற்ற கசப்பான நிலைகள் கொண்டு இனிப்பின் நிலைகள் சிறுத்து இருக்கும் பொழுது கசப்பின் அலைகளுக்குள் சிக்கியவுடன் கசப்பின் துணை கொண்டுதான் இனிப்பின் செயல் இருக்கும்.

இதைப் போன்று மனிதருக்குள் நல்ல குணங்களுக்குள் அசுர குணம் சேர்ந்து விடுகின்றது.

இதை மாற்றுவதற்குத்தான் பழனி மலையில் இடையில் இடும்பன் என்ற நிலையை வைத்து இந்த அசுர குணம் வேண்டாம் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கி மலையில்கிரிவலம் வருவது.

மனிதனாகப் பிறந்த நாம் இந்த அறுகுணமான தெய்வ நிலைகள் பெறவேண்டும் என்று அவர்கள் உணர்த்திய எண்ணத்தின் தன்மை கொண்டு கிரிவலம் வந்து தூப ஸ்தூபியைப் பார்த்து, அதன் அருகில் நின்றபின்
அங்கிருந்து சன்னதி தெரிகின்றது என்றால்
இந்த தெய்வ குணத்தைப் பெற வேண்டும்,
இதை அருளிய மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
என்று விண்ணை நோக்கி ஏங்க வேண்டும்.

யார் நமக்கு உணர்த்தினாரோ எந்த உணர்வு கொண்டு நாம் வந்தோமோ அந்த உணர்வு கொண்டு சுழன்று வந்து அந்த சிலையைப் பார்த்தவுடன் சன்னதிக்கு முன் நின்று இதை அருளிய மகரிஷிகளின் அருள்சக்தி நான் பெற வேண்டுமென்று ஏங்கும் பொழுதுதான் நமக்குள் அந்த மெய்ஞ்ஞானிகளின் அருள் ஒளி கிடைக்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் மனித உடலுக்குள்ளும் உண்டு என்ற நிலைகளில்பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைச் சிலையாக்கி அதை பழனி மலைமேல் வைத்தார் போக
ர் மாமகரிஷி.

அதில் சொட்டு நீரை விழ வைத்து
அந்தச் சிலையின் சத்தை ஆவியாக்கி,
நம்மைச் சுவாசிக்க வைத்து,
நம்மை அறியாது நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்கினார்.

மலை மீது ஏறிச் செல்லும் பொழுது மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டுமென்று ஏங்கிச் செல்லும்போது கருவறைக்குள் அந்தச் சிலையை வைத்து, அதன் சத்தை நீர் சொட்ட வைத்து ஆவியாக்கி அதை நமக்குள் சுவாசிக்கச் செய்தார்.

ஆகவே பழனி மலைக்குச் சென்றால் அந்த போக மாமகரிஷி காட்டிய அறுகுணமான நிலைகள் பெறவேண்டும், எங்கள் பேச்சும் மூச்சும் பிறரின் துன்பத்தைப் போக்கும் நிலையாக அமைய வேண்டும் என்று எண்ணி வணங்க வேண்டும்.

நீ முருகனாகு என்று ஒவ்வொருவரையும் எண்ண வைத்தார்.
சக்திவேல் என்றால் கூர்மையான எண்ணம்.
ஞானவேல் நமது ஆறாவது அறிவு. எதனையும் அறிந்திடும் அறிவு.

நமக்குள் ஆறாவது அறிவின் கொண்டு பிறரின் தீமைகளை அறியும் பொழுது விஷத்தின் தன்மை பெறுகின்றது. இதைப் போக்குவதற்கு போகர் செய்த நிலை தான் ப
ழனி.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

சுவாமி கல்யாண்தேவ்ஜி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாக்பட் என்ற ஊரில் 1876, ஜூன் 21ம் தேதி காலூராம் பிறந்தான். இளம்வயதிலேயே புதானா என்ற ஊரில் ஜமீன்தாராக விளங்கிய தன் தாய் மாமன் புல்லா பகத்தின் வீட்டிற்கு அடிக்கடி செல்வான். யாத்திரை செல்லும் பல சாதுக்கள் பகத்தின் வீடு தேடிச் செல்வர். அங்கு ஸ்ரீமத் ராமாயண பிரவசனம் நடக்கும். இந்தச் சூழ்நிலையில் காலூராம் வளர்ந்து வந்தான். அதிகாலையில் எழுந்து சுவாமி அறையில் அமர்ந்து மாமா படிக்கும் ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தை அன்றாடம் கவனமாகக் கேட்பான். ராமாயணமும் பஜனைகளும் காலூராமின் இதயத்தைக் கொள்ளை கொண்டன. தான் சந்தித்த சாதுக்களின் துறவையும் அவர்கள் அனுபவித்து வந்த ஆனந்தத்தையும் கவனித்த காலூராம் இறைவனைத் தரிசிப்பதற்காக ஒரு நாள் வீட்டைத் துறந்து கிளம்பி விட்டான். எந்த உடைமையும் இன்றி, பிச்சை எடுத்து உண்டு, வழி விசாரித்தபடி தான் காணத் துடித்த அயோத்தியை அடைந்தான். அங்கு சுவாமி ராமதாஸைச் சந்தித்தான். அந்த மகான் அவனுக்கு ஹிந்தி மொழியைக் கற்றுத் தந்தார். அறிவுக்கூர்மை மிகுந்த காலூராம் உற்சாகத்தோடு படிக்கத் துவங்கினான்.

காலூராம் ஹரித்வாரில் இருந்தபோது தனது 21-வது வயதில் விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். விவேகானந்தர் 1893-இல் சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவைப் பற்றி அறிந்தார். சுவாமிஜி ஜெய்ப்பூர் வழியாக கேத்ரி செல்கிறார் என்பதை அறிந்தவுடன் அவரைத் தரிசிக்க எண்ணினார் காலூராம். காலூராம் ஜெய்ப்பூரை நோக்கி நடந்தார். ஆனால் பாவம்! அவர் ஜெய்ப்பூர் செல்வதற்குள் சுவாமிஜி கேத்ரிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். விவேகானந்தர் கல்கத்தா திரும்பும்போது வேறு வழியாகப் போய்விடுவார் என்று அறிந்தார். கேத்ரியை நடந்து சென்று அடைவது மிகக் கடினம். ஆனால் முன்வைத்த காலைப் பின் வைத்தறியாத காலூராம் கேத்ரியை நோக்கி நடந்தார். விவேகானந்தரை கேத்ரி மன்னரின் தோட்டமாளிகையில் தரிசித்து அருளுரைகளைப் பெற்றார். அவர் கூறிய கருத்துகளைக் கேட்டு அவரைப் பின்பற்றத் தொடங்கினார்.

விவேகானந்தர் எனக்கு அளித்த மந்திரம் ஏழைகளுக்குச் சேவையாற்றுவதன் மூலம் கடவுளை அடையலாம் என்பதே. கடவுளை நீ அடைய விரும்பினால் ஏழை, எளியவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், துன்பப்படுபவர்களுக்கும் சேவை செய் என்று கூறினார். அந்தத் தாக்கம் என்னை ஆட்கொண்டதால் என்னால் அதை மறக்கவோ, செயல்படுத்தாமல் இருக்கவோ முடியவில்லை. குடிசைகளில் வாழும் விவசாயிகளும் ஏழைக்கூலிகளும் கடவுளின் இரண்டு குழந்தைகள். காலையில் கட்டாயம் இரு ஒலிகள் நம் செவிகளை வந்தடையும். ஒன்று கஷ்டப்படுபவர்களின் கூக்குரல்; அடுத்தது, கோயில் மணியோசை. நாம் முதலில் கேட்ட ஒலிக்குச் செவிமடுத்து ஏழைகளின் துயரை நம் சக்திக்கேற்ப தீர்க்க முயல வேண்டும். அதன்பின் கோயிலுக்குப் போகலாம் என்பது நான் சுவாமிஜியிடம் கற்றது. சுவாமிஜியிடம் விடைபெற்று ஹரித்வார் திரும்பியதும், ரிஷிகேசில் முனி - கி -ரேதி என்ற இடத்தில் சுவாமி பூர்ணானந்தாவைச் சந்தித்தார். 1900-ல் அவர் காலூராமிற்கு சந்நியாசம் அளித்து சுவாமி கல்யாண்தேவ் என்ற நாமம் வழங்கினார். குருநாதரின் கட்டளைப்படி, இமயமலை சென்று சில ஆண்டுகள் கடுந்தவத்தில் ஈடுபட்டார் கல்யாண்தேவ். ஆனால் அவர் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்தது. மலையிலிருந்து இறங்கி, பலவிதத் தொண்டுகளில் ஈடுபட்ட பிறகே அவர் மனம் அமைதி அடைந்தது. சுவாமி கல்யாண்தேவ்ஜி தமது வாழ்க்கையைச் சமுதாய சேவை எனும் யாகத்திற்கே அர்ப்பணித்தார்.

தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலம், கிராமம் கிராமமாகச் சென்று ஏழைகளுக்குச் சேவையாற்றி, அவர்களது துயர் துடைத்தார். இடையறாத முயற்சியினால், 300-க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் சேவை நிறுவனங்களை நிறுவினார். உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பல மாநிலங்களில் அவர் அமைத்த நிறுவனங்களுள் முறைசாராத் தொழில்நுட்பப் பள்ளிகள், ஆயுர்வேதக் கல்லூரி, மருத்துவமனைகள், ஸம்ஸ்கிருதப் பள்ளிகள், தர்மசாலைகள், காதுகேளாதவர் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பள்ளிகள், யோக மையங்கள், வயதான பசுக்களுக்கான சரணாலயங்கள், அநாதை விடுதிகள், சமய மற்றும் ஆன்மிக மையங்கள் போன்றவை அடங்கும். இவை போன்ற நவீன அமைப்புகளின் மூலம் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் சுவாமி கல்யாண்தேவ். தீண்டாமை, மதுப்பழக்கம், குழந்தைத் திருமணம் போன்ற சீர்கேடுகளுக்கு எதிராக அவர் மக்களை வழிநடத்தினார். நூற்றுக்கணக்கான நிறுவனங்களை நிறுவினாலும் கல்யாண்தேவ்ஜி அவை எதிலும் பதவி வகிக்கவில்லை! புறக்கணிக்கப்பட்டு இடிந்த நிலையிலிருந்த பல சமய, வரலாற்றுச் சின்னங்களையும் புதுப்பித்துள்ளார் சுவாமிகள்.

உதாரணமாக மீரட்டிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள, பரீக்ஷித் அரசனுக்கு சுகமகரிஷி பாகவதம் கூறிய சுக்தல் என்ற இடத்தில் சுகதேவ ஆசிரமத்தையும், சேவா சமிதியையும் ஸ்தாபித்தார். எளிமையாக வாழ்ந்த கல்யாண்தேவ்ஜியை, காலை முதல் இரவு வரை பல தரப்பட்ட மக்கள் சந்தித்துத் தங்கள் பிரச்னைகளை அவரிடம் கூறி, தீர்வுகளைப் பெறுவார்கள். 1915-இல் காந்திஜியைச் சந்தித்தார் சுவாமி கல்யாண்தேவ். பண்டித நேரு, மதன்மோகன் மாளவியா போன்ற தலைவர்களும் இவருடன் நெருங்கிப் பழகினர். 1982-இல் பத்மஸ்ரீ விருதும், 2000-இல் பத்ம பூஷண் விருதும் வழங்கி, இந்திய அரசு இவரைக் கவுரவித்தது. தன் 128-வது வயதில்கூட சளைக்காமல் ஏழைகளுள் இறைவனைக் கண்டு சேவையாற்றியவர் சுவாமிகள். சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றிய இந்தத் தொண்டர், பயம் அறியாதவர். நோய்களையோ, கவலைகளையோ அவர் பொருட்படுத்தியதே இல்லை. சுவாமி விவேகானந்தர் கூறிய துறவுக்கும் தொண்டுக்கும் தமது வாழ்வை அர்ப்பணித்த சுவாமி கல்யாண்தேவ்ஜி ஜூலை 14, 2004-இல் மகாசமாதி அடைந்தார்.