ஔவை பிராட்டியார் அருளிய நீதி நூலான ஆத்திச் சூடியில் இடம்பெற்ற வரிதான் "பருவத்தே பயிர் செய்". இந்த எளிய ஒற்றை வரியின் ஊடே பொதிந்திருக்கும் வாழ்வியல் தத்துவம் மகத்தானது. அதாவது செய்யக் கூடியவைகளை காலத்தே செய்யத் தவறிவிட்டு பின்னர் வருந்திப் பயனில்லை. காலத்தே பயிர் செய்வதைப் போல நம் கடமைகளை உடலில் வலுவும் திறனும் இருக்கும் போதே செய்து விட வேண்டும். ஏனெனில் நம்முடைய இளமை நிலையில்லாதது.
இதே கருத்தினை திருமூலர் பின்வருமாறு விளக்குகிறார்.
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில ஹாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே!
காலையில் கீழ்த்திசையிலே இளமையாய் எழுந்து விரைந்து மேற்சென்ற கதிரவன் நண்பகலில் இளமைத் தன்மை நீங்கிப் பின்னர் முதுமை எய்தி மாலையில் மேற்திசையில் வீழ்ந்து மறைதலைக் கண்ணாரக் கண்டும், ‘இளமை யெழுச்சி என்றும் நிலையுடையது அல்ல’ என்பதனை மக்கள் உணர்வது இல்லை. மேலும் தன் வீட்டிலே பிறந்த பசுவின் இளங்கன்று சில ஆண்டுகளில் காளைப் பருவம் நீங்கி முதுமையடைந்து எருதாய்ச் செயலற்று இறப்பதைக் கண்ட பின்னரும், இந்த உலகில் வாழும் மனிதர்கள் தமது இளமையும் அவ்வாறு நிலையற்றது என்று உணராதவர்களாக இருக்கின்றனர் என்கிறார்.
சூரியனும், கன்றும் சீக்கிரத்தில் இளமையை இழந்துவிடும் பொழுது, மனிதன் மட்டும் எவ்வாறு தோன்றியபடியே இளமையோடு இருக்க முடியும்?
சூரிய உதயத்தையும் மறைவையும் தினம் தினம் கண் கூடாக பார்த்தும்கூட, தோன்றிய பொருளுக்கு அழிவுண்டு என்பதை அறியாது, கிடைத்தற்கரிய இளமைப் பருவத்தில் தீமைகளைச் செய்து நாம் நிர்க்கதிக்கு ஆளாகாமல் பஞ்சேந்திரியங்களையும் இளமையிலேயே ஜெயித்து வாழவேண்டும் என்கிறார் திருமூலர்.
இளமை கழிந்து போகுமுன் அருமையான செயல்களைச் செய்துவிட வேண்டும். முதுமையில் செய்ய எண்ணினாலும் கூட அச்செயல்களைச் செய்வதற்குரிய ஆற்றல் நமக்கு இல்லாது போய்விட வாய்ப்புள்ளது. இதனை திருவள்ளுவப் பெருந்தகை பின்வருமாறு கூறியிருக்கிறார்.
“அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.”