ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தல வரலாறு

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலம்
ஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.



இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)

'திருமஞ்சனக் கோபுரம் ' எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

சண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது; முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்; அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட, வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.