செவ்வாய், 27 நவம்பர், 2012

மலை வலத்தின் சிறப்பு


  பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. "அருணன்"் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். "அசலம்" என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையில் உயரம் 2688 அடி.
அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிÐங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் விசேடமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை.