1.
தாய்-தந்தை செய்த உதவிகளை நன்றி மறவாது அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதே புண்ணியமாகும்.
2.
மனைவி அறிந்தோ அறியாமலோ குற்றம் செய்தால் அதை மன்னித்து மறப்பது புண்ணியமாகும்.
3.
ஒருவரிடம் வேலை வாங்கும் போது அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதும் புண்ணியமாகும்.
4.
உற்ற நண்பர்களுக்கு துன்பம் வந்த காலத்தில் உதவி செய்வது புண்ணியமாகும். விருந்தை உபசரித்து அவர்கள் மனம் மகிழும்படி நடந்து கொள்வதும் புண்ணியமாகும்.
5.
நமக்கு மனது சோர்வு இருந்தாலும், நம்மை நோக்கி வரும் அன்பர்களிடம் இனிமையாக பேசுவதும் புண்ணியமாகும்.
6.
வரவுக்கு உட்பட்டு செலவு செய்ய வேண்டுமென்ற எண்ணமும் புண்ணியமாகும்.
7.
ஜாதிதுவேசம் பார்க்காமல் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்று எண்ணி அன்பு காட்டுவது புண்ணியமாகும்.
8.
நாம் பேசும்பொழுது நமது பேச்சால் மற்றவர்கள் மனம் புண்படாது இருக்க வேண்டுமென்று நினைப்பது புண்ணயமாகும்.
9.
நம்மீது பகை கொண்டவர்கள் நம்மிடம் வரும்பொழுது நாம் பகைஉணர்வை வெளிப்படுத்தாது இனிமையாக பேசுவது, அவர்களிற்குத் தேவையான உதவிகளை செய்வது புண்ணியமாகும்.
10.
எப்பொழுதும் உடன்பாடு உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவது எல்லோருக்கும் இயல்புதான். நம்மிடம் முரண்பாடு உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசி பகைமையை நீக்கி கொள்வது புண்ணியமாகும்.
11.
நம் சித்தர் பெருமக்களைத் தினமும் பூஜித்து வருவதும் புண்ணியமாகும். இயற்கை அன்னை நமக்கு தானியங்களையும், காய்கறிகளையும், கீரை வகைகளையும், பல்வேறு கனிகளையும் கொடுத்திருக்கின்றாள். இந்த உணவுவகைகள் போதாது என்று மற்ற உயிர்களை கொன்று அந்த உடம்பை உண்ணாதிருப்பது புண்ணியமாகும். நம்மிடம் இருக்கக்கூடிய அறிவே தெளிவில்லாமல் இருப்பதால் மேலும் போதை பொருட்களும் மற்றும் மதுபானம் அருந்தி அறிவை மாசுபடுத்திக்கொள்ளாதிருப்பதும் புண்ணியமாகும்.
12. வருகின்ற செய்திதாள்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலை போன்ற செய்திகள் மிகுதியாக வருவதால் அதை படித்தால் மனம் அமைதி கெடும். எனவே அதை படிக்காதிருப்பது புண்ணியமாகும்.
13.
பொருட்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்காமல் மாற்றி வைத்து விட்டு மற்றவர்கள் மேல் பழி சுமத்துவார்கள். மேலும், தம் வீட்டில் பொருள் காணாமல் போனால் சம்மந்தம் இல்லாதவர்கள் மேல் சந்தேகப்படுவார்கள். மேலும் காவல்துறையில் புகார் கொடுப்பார்கள். எதையும் நிதானித்து முடிவெடுப்பதே புண்ணியமாகும்.
14.
அறப்பணி செய்வோருக்கு வீடு அவசியம் தான். அதற்காக பெரிய வீடாக கட்டி ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல் இருப்பதும் புண்ணியமாகும்.
15.
திருக்குறள், திருமந்திரம், திருவருட்பா, திருவாசகம் போன்ற அறநூல்களை பயபக்தியுடன் தொடுவதும், படிப்பதும் புண்ணியமாகும்.
16.
சாலையில் செல்லும் காலத்தில் ஆணி, உடைந்த கண்ணாடிகள், கற்கள், முட்கள், வாழைப்பழத்தோல் போன்றவை கிடக்கும் அதை அப்புறப் படுத்துவது புண்ணியமாகும்.
17.
கண்ட இடங்களில் சுகாதாரகேடு வரும்படி அசுத்தம் செய்யாதிருப்பதும் புண்ணியமாகும்.
18.
வாரம் ஒருநாள் ஆசான் அகத்தீசன் ஆசி பெறுவதற்காக காலையிலும் மாலையிலும் உணவு உண்ணாது மதியம் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணுவது புண்ணியமாகும்.
19.
எல்லாம் வல்ல பரப் பிரம்மமாகிய மெய்ப் பொருளை அறியாத மூடர்களை காணாதிருப்பதும் புண்ணியமாகும்.
20.
மெய்ப் பொருளை கற்றுணர்ந்த ஞானிகளுக்கு தொண்டு செய்து ஆசி பெறுவது புண்ணியமாகும்.
21.
பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் செம்பொருள் காண்பது புண்ணியமாகும்.
22.
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொற்கள் ஆகிய நான்கு தீமைகள் நீங்கி வாழ்வது புண்ணியமாகும்.
23.
பொருளின் இயல்பே நிலையில்லாதது என்று அறிந்து பொருள் இருக்கும்பொழுதே அறப்பணி செய்து ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்வது புண்ணியமாகும்.
24.
நாம் காணுகின்ற அத்தனையும் அழியக் கூடியது என்று அறிந்து அதை கண்டு மயங்காது தெளிவடைவது புண்ணியமாகும்.
25.
நாம் காணுகின்ற பொருள்களில் உண்மையும் உண்டு, பொய்யும் உண்டு. அதில் உண்மையை மட்டும் காண்பது புண்ணியமாகும்.
26.
இந்த உடம்பு பொய் தான். அதில் உண்மைப்பொருள் இருப்பது அறிந்து அந்த உண்மைப் பொருளாக தாம் ஆகிவிடுவது புண்ணியமாகும்.
27.
ஆன்ம நாட்டம் உள்ளவர்கள் உண்மை உணர்ந்த ஆசானை தேடி அலைவார்கள். அவர்களுக்கு உண்மை பொருள் உணர்ந்த ஆசான் கிடைத்தால் அதுவும் புண்ணியமாகும்.
28.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தீய நட்போடு சேர்ந்திருந்தாலும் அந்த நட்பு நம்மை விட்டு நீங்கி விடுவது புண்ணியமாகும்.
29.
குடிப் பழக்க்ம், சூதாடும் பழக்கம் போன்ற பழக்கங்களிலிருந்து விடுபடுவதும் புண்ணியமாகும்.
30.
சில பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிவிடுவார்கள். அவர்கள் விரும்பினால் மறுமணம் செய்து வைப்பது புண்ணியமாகும்.
31.
வியாபாரம் செய்யும் பொழுது நாம் விற்கக் கூடிய பொருட்களை நியாயமான விலைக்கு விற்பது புண்ணியமாகும்.
32.
செத்துபிறக்கின்றவர்களை சமாதி வைத்து அதை பூஜை செய்யாதிருப்பதும் புண்ணியமாகும்.
33.
நமக்கு தக்கசமயத்தில் உதவி செய்தவர்களை சாகும்வரை மறவாதிருப்பதும் புண்ணியமாகும்.
34.
உண்மை பொருளறிந்த ஆசானுக்கு பண்புள்ள சீடன் அமைந்தால் அதுவும் புண்ணியமாகும்.
35.
தகுதியுள்ள நண்பர்கள் சிலசமயத்தில் அறியாமையால் குற்றம் செய்தாலும் அதை அனுசரித்து நடப்பதும் புண்ணியமாகும்.
36.
நமது செயல்பாடுகள் மற்ற உயிர்கள் மகிழ்ச்சியடையும்படி இருந்தால் அதுவும் புண்ணியமாகும்.
37.
நமக்கு துன்பம் வந்த காலத்தில் கடன் கொடுத்து உதவி செய்தவர்களுக்கு நாம் பெற்ற கடனை திரும்ப கொடுத்து விடுவது புண்ணியமாகும்.
38.
நமக்கு வீடு இல்லாத காலத்திலும், வியாபாரத்திற்கு கடை இல்லாத காலத்திலும், வாடகைக்கு வீடும் கடையும் கொடுத்து உதவியவர்களுக்கு அவர்களுக்கு தேவையான காலத்தில் கடை மற்றும் வீட்டை காலி செய்து கொடுப்பதும் புண்ணியமாகும்.
39.
நமது வீட்டில் டேப்ரெக்கார்டர், ரேடியோ, டி.வி போன்றவைகளை பயன்படுத்தும் காலத்தில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சத்தம் அதிக என்று சொன்னால் சத்தத்தை குறைத்து வைத்துக் கொள்வது புண்ணியமாகும்.
40.
நாம் பேருந்தில் செல்லும் காலத்தில் கர்ப்பஸ்திரீகள், வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், கையில் குழந்தையோடு நின்று பயணம் செய்கின்றவர்களுக்கும், முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகட்கும், நாம் அமர்ந்திருக்கும் இடத்தை விட்டுக் கொடுப்பது புண்ணியமாகும்.
41.
நமது வீட்டில் உள்ள பசு,ஆடு அல்லது எருமை பால் கறக்கும் முன்னர் கன்றுக்கு பால் விட வேண்டும் என்று நினைப்பது புண்ணியமாகும்.
42.
தாய்ப் பால் இல்லா குழந்தைகளுக்கு பசும்பாலே தாய்ப்பால்போல் பாதுகாப்பதால் நாம் பசுவைப் பாதுகாப்பது புண்ணியமாகும்.
43.
கடவுளால் படைக்கப்பட்ட ஆடு, மாடு, கோழி மற்றும் ஜீவராசிகளை கடவுளுக்கே வெட்டி பலி கொடுப்பது பாவமாகும். அதுபோன்ற காரியங்கள் செய்யாதிருப்பது, செய்வதைத் தடுப்பதும் புண்ணியமாகும்.
44.
நாம் கற்றறிந்த உண்மையை மற்றவர்களுக்கு மனதில் பதியுமாறு சொல்வதும் புண்ணியமாகும்.
45.
நாம் அனுபவிக்கக்கூடிய இன்பங்கள் அனைத்தும் பிறரால் பழிக்கப்படாதிருப்பது புண்ணியமாகும்.
46.
இறை மேல் பக்தி கொண்டவர்களுக்கும், சமூக சான்றோர்களுக்கும் உதவி செய்வது புண்ணியமாகும்.
47.
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது பாவமாகும். கலப்படம் செய்யாதிருப்பது புண்ணியமாகும்.
48.
சில பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிவிடுவார்கள். அவர்கள் சுபகாரியங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்றும், சுபகாரியங்களுக்குச் செல்லும் காலத்தில் அவர்கள் எதிரே வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் சுபகாரியங்கள் தடைப் படும் என்றும் சொல்வது கருணை இல்லாத செயல்களாகும். அவ்வாறு அவர்கள் மனம் புண்படும்படி பேசாதிருப்பது புண்ணியமாகும்.
49.
உண்மைப் பொருள் உணர்ந்த ஆசான் நமக்கு மனமுவந்து உபதேசித்தால் அது அளவில்லா புண்ணியமாகும்.
50.
மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணம் மும்மலமாகிய களிம்புதான். களிம்பு அறப் பாடுபடுவது புண்ணியமாகும்.
51.
கடவுளால் செய்யப்பட்ட திருக்குறளை தொட்டு வணங்குவதும், படிப்பதும், அதை பரப்புவதும் புண்ணியமாகும்.
52.
குடும்பத் தலைவன் தன் மனைவியின் தாய், தந்தையாகிய மாமன், மாமிக்கு பாதுகாவலராக இருப்பது, அவர் தம் உற்றார் மகிழும்படி நடந்து கொள்வது புண்ணியமாகும். அதே போல குடும்பத் தலைவி தன் கணவனுடைய தாய், தந்தையாகிய மாமன், மாமி அவர் தம் உற்றார் மகிழும்படி நடந்து கொள்வது புண்ணியமாகும்.
53.
ஆண்களை படைத்த அதே கடவுள் தான் பெண்களையும் படைத்திருக்கிறான். பெண்களை மதித்து நடப்பதே புண்ணியமாகும்.
54.இயற்கையை நேசித்து நடக்க வேண்டும், இயற்கையை பாதுகாக்க எம்மால் இயன்ற வரை பாடுபட வேண்டும். கழிவுகளை அதனதன் கழிவுக்குரிய இடங்களில் இட வேண்டும்.. ஏதோ ஒரு உயிர் தான் அதனைக் கையாளப் போகிறதென்கிற உணர்வோடு குப்பையை வீசுங்கள்.. நாம் செய்யும் அந்தத் தவறை அனுபவிக்கும் இடத்தில் நாமே பிறக்கக் கூடும் என்கிற சிந்தனையை சிந்திப்போமானால், கண்டிப்பாக அதன் கஷ்டத்தை நாம் உணர்வோம்..
55. பறவைகளுக்கு, எறும்புகளுக்கும் ஆகாரம் கொடுங்கள்... ஒரு பருக்கை சோறுடைய அருமை எறும்புக்குத் தான் தெரியும்.. ஆகவே உணவை வீணாக்காதீர்கள்.. குப்பைத் தொட்டிக்குள் போடுவதை விட ஏதோ ஒரு ஆத்மாவுக்கு பசியாற கொடுங்கள்..
56.தலை முடியை வெளியில் போடாதீர்கள், பறவைகளின் காலில் பட்டால் சிக்கிக் கொண்டு பரக்கவோம் இரையை தேடவோ முடியாது, பரிதாபமாக உயிரை இழக்கும்..(Bubble Gum) வெளியில் வீசினால், பறவை அதை உணவென்று சாப்பிட்டால் தொண்டைக்குள் சிக்கி இறந்து விடும்..
.
மனித வர்க்கம் அத்தனையும் கடவுளால் படைக்கப் பட்டதாகும். எனவே, உள்ளும், புறமும் வேற்றுமையில்லாமல், சமமாக மதிப்பவர்கள் மனிதர்களில் தெய்வமாகும். அவர்களை கண்டு தரிசிப்பதே புண்ணியமாகும்.
மேற்கண்ட அனைத்து புண்ணிய செயல்களுக்கும் இறையின் ஆசி இருக்க வேண்டும்.
ஆகவே, சித்தப் பெருமக்களை மனசாரப் பூஜிப்போம்,
அவர்கள் ஆசி பெற்று இன்புற்று வாழ்வோம்!!!.