மலமாயை உள்ளவனுடைய சித்தம் தெளிவாக இருக்காது, சித்தர் பெரு மக்கள் துணை கொண்டு மல மாயையை அறுக்காமல் மனமாசு நீங்காது. மனமாசு நீங்காது விட்டால் தெளிவான அறிவு இருக்காது. தெளிவான அறிவுள்ளவன் தான் உடம்பையும் உயிரையும் அறிவான். உடம்பையும் உயிரையும் சேர்த்து அவர்கள் துணை கொண்டு ஒரு வேதியல் செய்தால், உடம்போடு உயிரும் இரண்டறக் கலந்து விடும்.
சராசரி மனிதனுக்கு உடம்பும் உயிரும் இணைந்திருப்பது போல் இருந்தாலும் உடம்பை விட்டு உயிர் போய் விடும். உடம்பையும், உயிரையும் சேர்த்து குருவின் துணை கொண்டு வேதியல் செய்தால் உடம்பை விட்டு உயிர் போகாது. இதை அறிந்தவன் தான் சித்தனாவான். இந்த வேதியல் முறையை அறியாது விட்டால் மீண்டும் மீண்டும் பிறப்பான்.
இதை அறிந்துகொள்ள, சித்தர்களின் திருவடியை பூஜிக்க வேண்டும். அவ்வாறு பூஜிக்க பூஜிக்க சித்தர் பெருமக்கள் நம் உணர்வோடும் உணர்ச்சியோடும் நாடி நரம்போடும் ஊடுருவி இந்த தத்துவத்தை உணரச் செய்து அவரும் நாமும் இரண்டறக் கலப்பதற்கு அருள் செய்வர்.
உடம்பு ஆதியில் அசைவற்ற பரப் பிரம்மத்திலிருந்து வந்து பல்வேறு வகையான பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு பல்வேறு பிறவிகளுக்கு ஆட்பட்டு இயற்கையின் மீளா துன்பத்திற்கு ஆட்படுகிறது. ஆனால் ..........குருவருளின் துணை கொண்டு இந்த துன்பத்திலிருந்து விடுபட்டு மீண்டும் பரப் பிரம்மத்தை அடைவதே உண்மையான ஞானம் ஆகும். இதை உணர ஆசான் சித்தர்கள் துணை வேண்டும். இதற்கு நல்வினை வேண்டும். உங்கள் அனைவருக்கும் அவர்கள் அருகாமை கிடைக்க மனசார வேண்டுகிறேன்...