செவ்வாய், 28 ஏப்ரல், 2015

ஞானிகளின் திருவடிகளைப் பூசிப்போம்!!!ஞானம் பெற்று வாழ்வோம்!!!

ந்த கலிகாலத்தில் ஆன்மீகவாதிகள் பல கோவில்களுக்குச் செல்கிறார்கள். புனித தீர்த்தத்தில் நீராடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் நோக்கம், ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்றால் தக்க ஆசான் வேண்டும். உலகத்தில் உள்ள குருமார்கள் சிலர் பொருள் வெறியர்களாகவும், ஜாதி வெறியர்களாகவும், மத வெறியர்களாகவும், காமுகர்களாகவும், வீண் ஆரவார ஆடம்பர பிரியர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஆடம்பரம் செய்வது ஆன்மீக நாட்டம் உடையவர்களை வசப்படுத்தி, பொருளாதாரத்தைச் சேகரிக்கத்தான். அவர்களுக்கு உண்மைப்பொருள் தெரியாது.மேலும், சிலர் ஜாலம் செய்வார்கள், சிலர் பரப்பிரம்மம்போல் காவி உடையும், ஜடா முடியும், புலித்தோல் ஆசனமும், யோக தண்டமும், உருத்திராட்ச கொட்டையும் அணிந்து மக்களை ஏமாற்றுவார்கள். இவர்களிடம் செல்லுகிறவர்கள் பொருளையும் இழப்பார்கள், நல்ல இல்லறத்தையும் விட்டு வந்துவிடுவார்கள் மேலும் போலி ஆசாமிகளின் பேச்செல்லாம் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும். உறுதியான கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள். பாவம் அவர்களுக்கே உண்மைப்பொருள் தெரியாது. இவர்களின்
ஆசான் அகத்தீசனைப் பூஜை செய்தால் ஞானிகளின் பெருமையை உணர முடியும். ஞானிகளின் பெருமையை உணர்ந்தவர்கள் போலி ஆடம்பர ஆசாமிகளைப் புரிந்து கொள்ள முடியும். உண்மைப் பொருள் அறிந்த குருவருள் இல்லையென்றால், இது போன்ற மூடர்களிடம் அகப்பட்டு நரகத்திற்குச் செல்வார்கள். உண்மைப்பொருள் அறிந்த ஆசானிடம் சென்றால் எல்லா நன்மையும் உண்டாகும். குருவருள் விரும்பாதவர்களுக்குக் கேடுதான் வரும்.
ஆசான் அகத்தியர் ஞான சைதன்யம் 51ல் நான்காம் கவியில் 3, 4 ஆகிய வரிகளில்
என்ன படித்தாலும் குரு இல்லாச் சீடன்
என்ன பிரயோசனமாம் அலைந்து சாவான்.
என்று ஆசான் அகத்தீசர் தம் பாடலில் பாடியுள்ளார்கள். ஆகவே, ஞானிகளை வணங்கினால் நாம் செய்த பாவங்கள் தீரும், பாவங்கள் தீர்ந்தால் அறியாமை நீங்கி, தெளிவான அறிவு உண்டாகும். தெளிவான அறிவுள்ளவர்கள்தான் நல்வினை தீவினையை அறிய முடியும். நல்வினை தீவினையை அறிந்தவர்கள்தான் தீவினையை நீக்கி நல்வினையைப் பெருக்கிக் கொள்வார்கள். நல்வினையைப் பெருக்கிக் கொண்ட மக்கள்தான் வீடுபேறு அடைவார்கள்.
வீடுபேறு அடைய விரும்புகிறவர்கள், மகான் ரோமரிஷி  அவர்கள் இயற்றிய பூஜா விதி 7ல் கவி எண் 2ல் பாடிய பாடல்
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே.
மேற்கண்ட பாடலில் காப்பான கருவூரார் போகநாதர் என்றும், கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர் என்றும், மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர் என்றும், முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர் என்றும், கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் என்றும், கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் என்றும், வாப்பான வாதத்திற்கு ஆதியான வாமுனி(வாசமுனி என்பது தூர்வாசர் ஆகும்) கமலமுனி என்றும் ஆசான் ரோமரிஷி  அவர்கள் தம் கவியில் பாடியுள்ளார்கள். இவர்கள் தான் இல்லறம் மற்றும் துறவத்திற்கு பாதுகாவலர்களாக இருப்பார்கள்.
மாமேரு எனத்திகழும், இந்த 14 ஞானிகள் அடங்கிய இந்த பாடலை தினமும் காலையிலும், மாலையிலும் படித்து பாராயணம் செய்தும், தினமும் பூஜைசெய்தும் வந்தால், மனித வர்க்கம் அடையமுடியாத, அறியமுடியாத, உணர முடியாத ஒன்றை நாம் உணர முடியும். மேலும், பொல்லாத வறுமை தீரும், கொடிய நோய் தீரும் தீராத நியாமான வழக்குகள் தீரும், குடும்பத்தில் அமைதி ஏற்படும். தீய நட்பு  நம்மை சார்ந்திருந்தாலும் தானே விலகி விடும். பண்புள்ள புத்திர பாக்கியம் அமையும், சொந்த வீடு இல்லாதவர்களுக்குச் சொந்த வீடும் அமையும். தீராத கடன் சுமையும் தீரும், செல்வமும் பெருகும், தகுதியுள்ள நட்பும் அமையும், தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தாலும், தீய பழக்கங்கள் நீங்கிவிடும். கொடிய பகையும் நீங்கும், மன அமைதி ஏற்படும். எதையும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய சிறப்பறிவு உண்டாகும். மேலும் ஆன்மா மாசுபடுவதை அறிந்து, மாசை நீக்கிக்கொள்ளவும் அறிவு உண்டாகும். நாம் மேற்கொள்ளும் காரியங்கள் எதுவானாலும் குறிப்பாக உத்தியோகம், தொழில், வியாபாரம், விவசாயம், இன்னும் குடும்பத்தில் சுபகாரியங்கள் எதுவானாலும் தடையில்லாமல் நடக்கும். எதிலும் வெற்றி! எப்போதும் வெற்றி! வெற்றியோ வெற்றி!
குறிப்பு:
தவம் என்பதே ஞானிகளின் திருவடியைப் பூஜிப்பதுதான் தவமாகும். மற்றதெல்லாம் அவமாகும். ஆகவே அகத்தீசனைப் பூஜிப்போம்! அருள்பெற்று வாழ்வோம்!!.
மகான் சட்டைமுனிநாதர் அவர்கள் இயற்றி ஞானவிளக்கம் 51-ல் 21-ஆம் பாடல்
போடுவது திலதமடா மூலர் மைந்தர்
போகர் கருவூராரைத் தியானம் பண்ணு
நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா
ஏடுதனில் எழுதினதோர் பாடல் என்று
எண்ணாதே ஒருநாளும் தப்போ இல்லை
தேடினபேர் பொருள்கோடி தனமீந்தாலும்
செப்பாதே இக்கருவை(ரகசியத்தை) உலகத்தோர்க்கே.
இப்பாடலின் சாரம்
வைணவர்கள் நெற்றியில் நாமம் இடும்பொழுது "ஓம் நமோ நாராயணா" என்றோ "ராமா" என்றோ நாமமிட்டுக்கொள்வார்கள். சைவர்களோ நெற்றியில் விபூதி வைக்கும்பொழுது "ஓம் விக்னேஷ்வரா" என்றோ "ஓம் முருகா" என்றோ "ஓம் நமச்சிவாய" என்றோ அல்லது "சிவ சிவ" என்றோ நெற்றியில் விபூதி வைத்துக்கொள்வார்கள். அது அவரவர்களின் கொள்கையாகும். மகான் சட்டைமுனிநாதர் அவர்களோ நெற்றியில் விபூதி வைக்கும் பொழுது "ஓம் திருமூலதேவாய நம" என்றும் அவர் மைந்தராகிய காளாங்கிநாதரை "ஒம் காளாங்கிதேவாய நம" என்றும் "ஓம் போகதேவாய நம" என்றும், "ஓம் கருவூர் தேவாய நம" என்றும் நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லி நெற்றியில் விபூதி வைத்தால் கணக்கில் அடங்காப் பிறவிகள் எடுத்துச் செய்த பாவங்கள் பொடிபட்டுப் போகும். மேலும், ஞானியும் ஆவார்கள்.
இந்த உலகத்தில் உள்ள சில ஆன்மீக வாதிகளோ மற்றும் உள்ள சில கல்வியாளர்களோ இதை யாரும் பின்பற்றுவதில்லை காரணம் அவர்களுக்கு யாரும் இந்த உயர்ந்த உபதேசத்தை உபதேசிப்பதில்லை. அப்படியே சிலர் உபதேசித்தாலும், சிலர் அதை கடைப்பிடிப்பதில்லை. அது அவரவர்களின் வினைப்பயன். இந்த உயர்ந்த மார்க்கத்தை ஆசான் சட்டைமுனிநாதர் ஏதோ ஏட்டில் எழுதி வைத்துவிட்டார் என்று லேசாக நினைத்துவிட வேண்டாம். இந்த மார்க்கம் புண்ணியம் செய்த மக்களே உணர்வார்கள். மற்றவர்களோ இதை உணரமாட்டார்கள். அது அவர்களின் வினைப்பயனாகும்.
இந்த உயரிய மார்க்கத்தை மகான் சட்டைமுனி அவர்கள் சொன்னதே உலக ஆன்மீகப் பிள்ளைகளே பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கருணையோடு சொன்னதாகும். எனவே காலை 5 மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்துவிட்டு வெண்ணிறத்துணியை விரித்து, அதன்மேல் அமர்ந்து திருவிளக்கு ஏற்றியும், நறுமணம் உள்ள பத்தி ஒன்றை வைத்தும், காலையில் 10 நிமிடம், மாலையில் 10 நிமிடமும் "ஓம் அகத்தீசாய நம"இ"ஓம் திருமூலதேவாய நம"இ "ஓம் காளாங்கிதேவாய நம"இ "ஓம் போகதேவாய நம"இ "ஓம் கருவூர் தேவாய நம" என்று திரும்பத்திரும்ப நான்கு மகான்களின் நாமத்தை நாமஜெபம் செய்து வந்தால் வீடுபேறு அடையலாம்(முக்தி பெறலாம். 
மேற்கண்ட பாடல் வைரம் பெருந்திய தீவினையாகிய மரத்தை வேரோடு வெட்டித்தள்ளும் கோடாலி ஆகும்.
சில ஆன்மீகவாதிகள் பலப்பல சித்தச் தத்துவ நூல்களைப் படித்தும், பக்தி நூல்களைப் படித்தும் இதில் என்ன சொல்லியுள்ளது, அதில் என்ன சொல்லியுள்ளது என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். பூஜை செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு முதுமை வந்துவிடும். அவர்களுடைய ஆராய்ச்சிகளுக்கும் முதுமை வந்துவிடும். ஆகவே எந்த ஆன்ம லாபமும் பெறமுடியாமல் வீணாகி விடுவார்கள். மேற்கண்ட நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லி பூஜை செய்து வந்தால் எந்த நூலையும் படிக்கவேண்டிய அவசியம் இல்லை, ஆராய்ச்சியும் அவசியம் இல்லை. பல சாஸ்திர நூல்களையும், தோத்திர நூல்களையும் படித்து, பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டே இருந்துவிடுவார்கள். சலிப்பில்லாமல் தினமும் ஞானியர்களைப் பூஜை செய்து வருபவர்கள் எல்லையில்லாப் பேரானந்தம் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.
நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லி பூஜிப்போம்,
மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று இன்புற்று வாழ்வோம்.
பெண்கள் நெற்றியில் பொட்டு(திலகம்) வைக்கும் பொழுது என்ன சொல்ல வேண்டும்
பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும்பொழுது "ஓம் திருமூலதேவாய நம", "ஓம் காளாங்கிதேவாய நம", "ஓம் போகதேவாய நம", "ஓம் கருவூர் தேவாய நம" என்று சொல்லி நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு காலை, மாலையில் நான்கு மகான்களின் நாமத்தைச் சொல்லிவிட்டு, நெற்றியில் பொட்டு வைத்தால், உடல் ஆரோக்கியம் உண்டாகும்,  திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடக்கும், பண்புள்ள புத்திர பாக்கியம் அமையும், தகுதியுள்ள கணவன் அமைவான், இனம் புரியாத கவலைகள் நீங்கும், தன்னம்பிக்கை உண்டாகும், எந்த துன்பத்தைக் கண்டும் சோர்வடையமாட்டார்கள், எதையும் தாங்கிக் கொள்ளும் மன உறுதி ஏற்படும், எல்லா நோய்களும் நீங்கும், வீண் ஆடம்பரத்தில் நாட்டம் கொள்ளமாட்டார்கள், மற்றவர்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தமாட்டார்கள், தாம் உண்டு தன் வேலை உண்டு என்று தம் கடமையைச் செய்வார்கள், இன்னும் அநேக நற்குணங்களும் அமையும். மேலும், ஞானமும் சித்திக்கும். 
ஞானியர்களின் திருவடியைப் பூஜிப்போம், ஞானம் பெற்று வாழ்வோம்!