வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பனித்திரை!, மனத்திரை!


மனித மனம் என்பது எண்ணற்ற அனுபவங்களின் தொகுப்பு ஆகும். இவையே நமது ஞாபக இடுக்குகள் எங்கும் பரவி படிந்து நம்மை ஆளுகின்றன. இந்த அனுபவ தொகுப்பானது நன்மை, தீமை என்கின்ற இரண்டு எல்லைகளில் நின்று ஒன்றுக்கு ஒன்று முரணாகி குழம்புவதையே மனசாட்சி என உருவகித்துக் கொள்கிறோம்.இந்த மன சாட்சிதான் நமது எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகளை முன்னெடுத்து நடத்துகின்றன.

தெளிவான சிந்தனை உள்ளவன் சிறந்தவனாகவும், குழம்பிய சிந்தனை உடையவன் தோல்வியடைந்தவனாகவும் இருக்கின்றான். ஆக ஒருவனை உயர்த்துவதும், தாழ்வடைய செய்வதும் மனம் என்றாலும், அதன் மூலம் மேலே சொன்ன அனுபவங்களில்தான் அடங்கியிருக்கிறது.
இந்த தத்துவத்தை இன்னமும் எளிதாய் பாம்பாட்டி சித்தர் பின்வருமாறு விளக்குகிறார்.

"சூரியனைக் கண்ட பனி தூர ஓடல்போல்
சொந்த பந்தஞ் சிந்தபரி சத்த தலத்தில்
சூரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன்
அகலாமல் பற்றித் தொர்டந்து ஆடாய் பாம்பே!"
- பாம்பாட்டிச் சித்தர் -
பனி, புகைமூட்டம் போல் மிக அடர்த்தியானது. அதன் ஊடாக எதனையும் தெளிவாக பார்க்க முடியாது. இதனையே பனித்திரை என்பர். ஆனால் அப்படிப்பட்ட குழம்பிய பனித் திரையானது சூரியனின் ஒளி பட்ட மாத்திரத்தில் மாயமாய் மறைந்துவிடும்.
அந்த மாயத்திரை போலவே பாச பந்தங்களினால் சூழப் பட்டு, அதனில் திளைத்து குழம்பியிருக்கும் நமது மன நிலையானது, பரிசுத்த வஸ்துவான மேலான பரம் பொருளை மனதில் நிறுத்திய மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல், பொய்யான சிற்றின்பங்களை உணர்ந்து, அதன் மாயைகளில் இருந்து அகன்று தெளிவடையும் என்கிறார்.
இவ்வாறு பனித் திரையின் மாயையை நீக்கும் சூரியனைப் போல, நம் மனத்திரையின் மாயையை நீக்கும் பரம்பொருளின் பேரானந்த நிலை அகன்றுவிடாமல் தொடர்ந்து பற்றியிருப்போம் என்று ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.