செவ்வாய், 5 ஜூலை, 2016

முக்திக்கு நாலு வழி!, அவை....



பிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப் படுகிறது.இந்த முக்தி நிலையினை அடைய நான்கு வழிகள் இருப்பதாக சித்தர்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்கின்றனர். இந்த நான்கு முறைகளைப் பற்றியும் அதனால் கிடைக்கப் பெறும் முக்தி நிலை பற்றியும் சிவவாக்கியர் தனது சிவவாக்கியம் நூலில் பின் வருமாறு கூறுகிறார்.

"தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்

தெளிந்த நற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே

தெளிந்த நல் யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்

தெளிந்த ஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே"

- சிவவாக்கியர் -

"சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்

சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே

சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்

சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே"

- சிவவாக்கியர் -
சரியை
நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

கிரியை

சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.

யோகம்
தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப் படும்.
ஞானம்
நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.