செவ்வாய், 24 நவம்பர், 2015

நீடித்த ஆயுள் தரும் கார்த்திகை தீப வழிபாடு

றைவனை ஜோதி வடிவாக வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு ஆகும்.

‘‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’’ என மாணிக்கவாசகர் கூறுவார்.

நினைத்தால் முக்தி தரும் திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவாக தோன்றினார். இதை நினைவு கூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றது.
தீப வழிபாடு என்பது நீண்ட நெடிய காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வட நாட்டில் தீப வழிபாடு என்பது ‘தீபாவளி’ என்றும், தெற்கே ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது. தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் மயிலாப்பூரில் பாடிய திருப்பதிகத்தில் பூம்பாவை என்ற பெண்ணுக்கு உயிர் கொடுப்பதற்காக பாடிய போது... ‘‘கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’’ என்று பாடியுள்ளார்.
இதன் மூலம் கி.பி 7, 8–ம் நூற்றாண்டில் இருந்தே, கார்த்திகை வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுவது தெரிகிறது. தீபத்தின் நடுவில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் முப்பெருந்தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
அடிமுடி காணாத வரலாறு
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காத்தல் கடவுளாகிய திருமாலுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாய் தோன்றினார். ‘இருவரில் யார் எனது அடியையோ (பாதம்), முடியையோ காண்கிறீர்களோ அவர்களே பெரியவர்’ எனக் கூறினார். 
திருமால், வராக உருவம் கொண்டு திருவடிகளை காணச் சென்றார். பிரம்மா அன்னப்பறவை உருக்கொண்டு திருமுடியை காண பறந்து சென்றார். ஆனால் இருவரும் அடியையோ, முடியையோ காணமுடியாமல், அகங்காரங்கள் அழிய பெற்றவர்களாக சிவ பரம்பொருளே உலகின் முழு முதற் பரம்பொருள் என்பதை உணர்ந்துகொண்டனர். தங்களது பிழையை பொறுத்து அருளுமாறு சிவ பெருமானை பிரார்த்தனை செய்தனர். 
உடனே சிவன், சிவலிங்க திரு உருவத்தோடு ஜோதிப்பிழம்பில் இருந்து வெளிப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமானது. அதில் இருந்து தோன்றிய சிவலிங்கம் அருணாசலேசுவரர் ஆனார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் தான், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மாதந்தோறும் கார்த்திகை விரத நாள் வருகிறது. கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தினத்தை ‘திருக் கார்த்திகை’ என்பர். 
விரதம் இருப்பது எப்படி?
கார்த்திகை முதல் நாளன்று பரணி நட்சத்திர நாளில், பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்த வேண்டும். கார்த்திகைஅன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலையில் காலைக்கடன் களை முடித்து நீராடி பாலினை அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். உமாதேவிக்கு சிவபெருமான் தனது இடப்பாகத்தினை கொடுத்து ஆட்கொண்டதும் இந்நாளில்தான். அன்று ‘‘ஓம் நமச்சிவாய வாழ்க’’ என்று சொல்வது தீராத வினைகளை தீர்த்து வைக்கும். நீங்காத செல்வத்தையும் வழங்கும். நீடித்த ஆயுளை தரும். 
கார்த்திகை விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்தால் சுகபோக வாழ்வு வாழலாம். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். 
வீடுகளில் மாலை பவுர்ணமி நிலவு தோன்றும் நேரத்தில் வீட்டு வாசலில் வாழைக்கன்று நட்டு வைத்து அதன்மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்குள் வெளிச்சம் தரும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றியும் அழகுபடுத்திட வேண்டும். இதைக் கார்த்திகை விளக்கீடு என்றும், சர்வலாய தீபம் என்றும் அழைக்கின்றோம். 
தீபம் இருளை நீக்கிப் பொருளை விளக்கம் பெறச் செய்கிறது. தீபம் பிரகாசமாக இருக்குமிடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 12  ஆண்டுகள் விரதமிருந்து முருகனை பிரார்த்தனை செய்வதால் வேண்டும் வரங்களைப் பெறலாம். கார்த்திகை தீபத்தன்று முருகன் ஆலயங்களில் தீப விழா இடம் பெறுவது குமாராலய தீபம் என்று அழைப்பர். 
கார்த்திகை மாதம் முழுவதும்  மாலை வீட்டு வாசலில் விளக்கேற்றி வைக்கின்ற பழக்கம் உண்டு. கார்த்திகையன்று முருகன் ஆலயங்களில் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வர். ஆலய முன்புறத்தில் காய்ந்த ஓலை, மட்டை, இலைகளால் பனைவடிவில் கட்டப்பட்ட சொக்கப்பனை ஏற்றி ஜோதி வடிவாகக் காட்சியளிக்க செய்வர்.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து தரிசனம் செய்வர்.
பூஜைக்கேற்ற விளக்கு
குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு, அதற்கு அடுத்து சிறப்புடையது. எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து அதன் மூலம் தீபம் ஏற்றி, எவரொருவர் ஒரு மண்டலம் (45 அல்லது 48 நாட்கள்) பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் கிடைக்கும்.
தீபம் ஏற்றும் முறை
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2–வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3–வது மேற்கு நோக்கி, இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்ற கூடாது. குளிர்விக்கும் போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2–வது வடக்கே உள்ள திரியையும், 3–வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி  எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?
திருக்கார்த்திகை தினத்தன்று சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில்  பனை மரத்தை நாட்டி அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்து கட்டுகின்றனர். மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சில கோவில்களில் பனை ஓலைகளை ஒரு சிறு கூண்டைப்போல கட்டி அதை எரிக்கின்றனர். ஆணவம் எரிகிறது. கூடவே அஞ்ஞானமும் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவாக காட்சி தருகிறான்.
சிவபெருமான் திரிபுரங்களை எரித்த நாள் திருக்கார்த்திகை நாளாகும். சிவன் எரித்த பாவனையை வெளிப்படுத்துவதற்காக சொக்கப்பனை கொளுத்து கின்றனர். மேலும் அடி, முடி தேடிய விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், ஆதி, அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுத்தார். நெருப்புக்கு முதலும், முடிவும் கிடையாது. சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூரும் விதத்திலும் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
விளக்கேற்ற நல்ல நேரம்
கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும். வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.
அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல்திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும், மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

வெள்ளி, 20 நவம்பர், 2015

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம்! திருவருணை,

கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வையில் மரகத மலையாகவும், நம் போன்ற சாமானியர்களுக்குக் கல்மலையாகவும் காட்சி கொடுக்கும் மலை திரு அண்ணாமலை. அண்ணுதல் என்பதன் எதிர்ப்பதம் அண்ணா என்பது அல்லவா? நெருங்க முடியாத மலை திரு அண்ணா மலை. ஈசன் ஒளிப் பிழம்பாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்க பிரம்மாவாலும், திருமாலாலும் அவனை நெருங்கவே முடியவில்லை அன்றோ? இதைத் தவிர இந்தத் தலத்திற்கு அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணன் என்பது சூர்யோதயத்துக்கு முன்னர் கீழ்வானம் காட்டும் செக்கச் சிவந்த நிறத்தைக் குறிக்கும். அப்படி சிவந்த நிறத்தாலான நெருப்பைக் குறிக்கும் அசலம் அருணாசலம். அருணாசலம் தவிர இந்தத் தலம் முக்திபுரி, அருணகிரி, திருவருணை, அருணை, சுத்த நகரம், சோணாசலம், அனல்கிரி, தென் கைலை, ஞா நகரம், அண்ணாநாடு, சிவலோகம், அண்ணாத்தூர், கெளரி நகரம், தேக நகரம், முக்தி நகரம், ஞான நகரம், சோணாத்ரி, அருணாத்ரி, தலேச்சுரம், சோணகிரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. இந்த மலையானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,700 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. 
அருணாசல புராணம், உரோமசர், குத்சர், குமுதர், சகடாயர், அகத்தியர், குமுதாட்சர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவராலும், மார்க்கண்டேய ரிஷியாலும் கூறப்பட்டது எனத் தெரிந்து கொள்கிறோம். இந்த மலை உருவான கதை அனைவரும் அறிந்ததே என்றாலும் சுருக்கமாய்க் கீழே தருகிறேன்.
பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு முறை தங்களில் பெரியவர் யார் என்பது குறித்துச் சண்டை போட்டுக் கொண்டனர். தங்களுக்குள் எவர் பெரியவர் என்பதைச் சொல்லச் சரியான நபர் ஈசனே என்பதை அறிந்து கொண்டு அவரிடம் சென்று தங்களில் யார் பெரியவர் எனக் கேட்க, ஈசனும் தன்னை அடிமுதல் முடிவரை எவர் கண்டறிந்து வந்து சொல்கின்றனரோ அவரே பெரியவர் எனச் சொல்லிவிட்டுத் தான் ஜோதி ஸ்வரூபமாய் நின்றார். வராஹ உருவில் பூமியைக் குடைந்து கொண்டு விஷ்ணு அடியைக் காணச் செல்ல, அன்னமாக மாறி பிரம்மா முடியைக் காணப் பறந்தார். வராஹ மூர்த்தியால் அடியைக் காண இயலவில்லை. மேலே மேலே பறந்து சென்று கொண்டிருந்த அன்னப் பறவையான பிரம்மாவுக்கு ஈசன் தலையில் சூடிய தாழம்பூ ஒன்று கீழே இறங்குவது கண்களில் பட, அந்தத் தாழம்பூவைச் சாட்சியாக வைத்துக் கொண்டு ஈசனிடம் தான் முடியைக் கண்டதாய்க் கூறுகிறார். வராஹ மூர்த்தியோ தன்னால் அடியைக் காண இயலவில்லை என்னும் உண்மையை ஒப்புக் கொள்கிறார். தாழம்பூவும் பிரம்மா முடியைக் கண்டதாய்ப் பொய்ச் சாட்சி சொல்ல கோபம் கொண்ட ஈசன், பிரம்மாவின் வழிபாடுகள் இனி பூவுலகில் நடக்காது என்றும், ஈசனின் வழிபாட்டில் இனித் தாழம்பூவைச் சேர்த்தல் கூடாது என்றும் கூற பிரம்மா தவறுக்கு மனம் வருந்தினார். அன்று முதல் ஈசனின் வழிபாட்டில் தாழம்பூவுக்கு இடம் இல்லை. 
தேவாதிதேவர்கள் வந்து ஈசனை வணங்கி அவர் அந்தத் திருக்கோலத்திலேயே பூவுல மக்களுக்கும் காட்சி கொடுக்கவேண்டும் எனக் கேட்க ஈசனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூற ஈசனின் வெப்பம் தாங்காமல் அனைத்து மக்களும், தேவர்களும் தவிக்க, ஈசனும் தன் பெருங்கருணையால் அக்னி மலையாக மாறி நின்றான் என்பது தல புராணம். திருஞான சம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பதிகங்கள் பாடப்பட்டது. பழைய லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதி எனச் சரித்திர ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. இதை பகவான் ஸ்ரீரமணரின் முக்கிய சீடர் ஆன பால் பிரண்டன் என்பவர் ஆதாரங்களோடு, தனது Message from Arunachala என்ற புத்தகத்தில் எழுதி இருப்பதாய்த் தெரியவருகிறது. மேலும் இந்த மலையானது இறுகிய எரிமலைக் குழம்பே என்பது விஞ்ஞான ஆய்வாளர்களால் நிரூபிக்கப் பட்டு இமயத்தை விடவும் பழமையானது என்பது கூறப்பட்டுள்ளது. அருணாசலத்தைப் பற்றிய நூல்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவை இருப்பதாயும் தெரிய வருகிறது. சாசனங்கள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. பல்லவர் காலங்களிலேயே இந்தக் கோயில் கருவறை எழுப்பப் பட்டிருக்கவேண்டும். மதில் சுவர்கள் பிற்காலச் சோழர்காலங்களில் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதைத் தவிர, நாட்டுக்கோட்டை நகரத்தார் 1903-ம் வருஷம் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கும் செய்வித்திருக்கின்றனர். 
கார்த்திகை தீபம் நெருங்கி விட்டதால் திருவண்ணாமலை தொடரை முதலில் போட்டு விட்டுப் பின்னர் சிவ வடிவங்களில் மற்றவர்கள் தொடருவார்கள். பொறுத்துக் கொள்ளவும். நன்றி.

வெள்ளி, 13 நவம்பர், 2015

உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி என்கிறது இந்துவேதம்:

இப் பூவுலகில், இப் புவிப்பரப்பில், இப்பூமியில், இவ்வையகத்தில், இந்த உலகத்தில், இந்த ஞாலத்தில் முத்தமிழ்மொழி ஒன்றுதான் பல நூறாயிரக் கணக்கான சொற்கள் பிண்டங்களையும், பயிரினங்களையும், உயிரினங்களையும், ஐம்புலன்களால் உணர்ந்தறியக் கூடியவைகளையும், ஆறாவது அறிவுக்கு அப்பாற்பட்டவைகளையும் பெயரிட்டுக் குறிப்பிட்டு பொருள் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது.
ஏனென்றால், இந்த முத்தமிழ்மொழி அண்டபேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண்சித்தர்களின் தாய்மொழியாகவும், 1359 அண்டபேரண்டங்களிலும் அருளுலக ஆட்சிமொழியாகவும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியாகவும் அருளுலகப் பேருண்மைகளை அநுபவப் பூர்வமாக அறிந்து கொள்ள உதவக்கூடிய ஒரே ஓர் உயர்தனிச் செம்மொழியாகவும் விளங்குகின்றது.
இந்த முத்தமிழ் மொழியில் வழங்கப்பட்டுள்ள இந்துவேதம் எல்லா அண்டங்களிலும் இருந்த வேதம், இருந்து வருகின்ற வேதம், இருக்கப் போகின்ற வேதம் என்ற முக்காலப் பொருளின் (வினைத்தொகை) ‘இருக்கு வேதம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது பதினெண்சித்தர்களால்.” [இருக்கு 1:4:48]
[ஆதிசிவனார் அருளிய:இருக்குவேதம் காண்டம்-1, மண்டலம்-4, நாள்வாசகம்-48:]
ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர்,
அரசயோகிக் கருவூறார்
'அன்பு சித்தர்'

செவ்வாய், 10 நவம்பர், 2015

உன்னுள் இருக்கும் மகா சக்தியை அறியும் சித்தி உன்னிடம் மட்டுமே உள்ளது..


இயற்கையின் ரகசியங்களை நீங்கள் அறியத் தொடங்கிவிட்டால், உங்கள் சுவாசத்தின் அளவையும் கவனித்துக்கொள்ளுங்கள், இல்லையேல் பூமியில் உங்களுக்கு இடம் இல்லாமல் போய்விடும். ஏன் என்றால்
இயற்கையின் ரகசியத்தை அறிய முற்படும் போது ஆயுளின் மீது பற்று இருக்க
கூடாது என்பதே முதல் படி ஆகும். என்றும் அனைத்தும் தெரியும் என்ற கர்வம்
தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் தலை பாரம் தாங்காமல் கீழ விழுந்துவிடப்போகிறது. சமுதாயத்தில் மதிப்பும் , கெளரவமும் நாம்
கேட்டு வாங்கும் பொருள் அல்ல! நமது நடவடிக்கைகளை (செயல்பாடுகளை)
கவனித்துக்கொண்டு இருக்கும் சமுதாயம் தானாக கொடுப்பதே மதிப்பும் கௌரவமும் ஆகும்! இயற்கையின் இரகசியங்களை அறிய முற்படும்
போது இப்பூவுலகில் இருக்கும் அனைத்தையும் அதன்
நிலையிலேயே ஏற்றுக்கொள்ளுங்கள். அனைவரையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்,
சம அனுபவம் உடையவர்களிடம் உங்கள் திறமைகளை காட்டுங்கள், உங்களை விட
அனுபவம் குறைந்தவர்களிடம் உங்கள் திறமைகளை காட்டாதீர்கள். மேல் நோக்கிய
பார்வையே உங்களை மேலும் உயரச் செய்யும் !
{ தனக்குள் இருக்கும் சாவியை அறிந்து கொண்டால் பிரபஞ்சத்தின்
பூட்டை திரக்கமுடியும். }
{ தன்னை பற்றி அறிய முற்படுபவன் மகான் ஆக போகிறான் என்று
அர்த்தம்... உன்னுள் இருக்கும் மகா சக்தியை அறியும் சித்தி உன்னிடம் மட்டுமே
உள்ளது... }
ஓம் நமசிவய

செவ்வாய், 3 நவம்பர், 2015

திருமூல நாயனார் ஞானம்

அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி
அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலந் தன்னில்
முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்
படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்
படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
அடியாகு மூலமதே அகார மாகி
அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1

அதுவாகி அவனளாய் எல்லா மாகி
அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி
மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
அதுவாரும் அகாரமதே மூலமாகி
அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம்மூலமே. 2

மூலமெனு மாதார வட்டந் தானே
முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்
சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்
திருவடியுந் திருமேனி நடமுமாகும்
கோலமுடன் அன்ட மெல்லாந் தாங்கிக்கொண்டு
கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி
ஆலமுண்ட கண்டமெலாந் தானாய் நின்ற
அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே. 3

அரிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்
அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்
பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்
பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்
அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை
அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. 4

நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே. 5

ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்
பேசாத மந்திரமு மிதுவே யாகும்
பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்
நிலையான ஓங்கார பூட மாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்
கின்பமுடன் கயிலாச மெய்த லாமே. 6

எய்தரியா பரசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி
மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்
இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
இருநேர மர்றிடத்தே யிறைஞ்சிக் காணே. 7

காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் கானா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே. 8

தெளிவரிய பாதமது கார மாகிச்
சிற்பரமுந் தற்பரமுந் தானேயாகி
அழிவரிய சோதியது தானே யாகி
அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூலமாகி
முச்சுடர்ந் தானாகி முடிந்த் சோதி
சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்
சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்துப் பாரீர். 9

(முடிந்தது)

சனி, 17 அக்டோபர், 2015

அருள்மிகு ருத்ராம்பிகா சமேத அருள்மிகு ருத்ரேஸ்வரர்


காஞ்சிபுரம் மாவட்டம் 1000 வருடங்களுக்கு முன்னர் உள்ள சிவாலயம், மிகப் பெரிய சிவ லிங்கத்துடன் இருக்கிறது.. இது கல்பாக்கம் அருகே அனுபுரம் குடிபெரம்பாக்கம், கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட குடிபேரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு ருத்ராம்பிகா சமேத அருள்மிகு ருத்ரேஸ்வரர் ஆலயம் உள்ளது. (இக்கோயில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை )
(கல்பாக்கம்)அனுபுரத்தில் இருந்து சுமார் 1கி.மீ. தொலைவில் அல்லது சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் தாண்டி வெங்கம்பாக்கம் இடம் வரும், அங்கிருந்து சுமார் 3கி.மீ. தொலைவில் குடிபேரம்பாக்கம் உள்ளது. இக்கோயிலுக்கு கிழக்கே அருகில் மற்றொரு மிகவும் புராதனமான சிவன் கோயிலும் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த , நமது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய சிவலிங்கத்தை இங்கு காணலாம். கோயிலை "குடி'' என்று தெலுங்கில் குறிப்பிடுவர். தமிழில் "தளி'' எனக் குறிப்பிடுவர். திருக்கோயில்கள் நிறைந்த இவ்வூர் முன்பு "தளிபெரும்பாக்கம்" என்று அழைக்கப்பட்டதை இவ்வூருக்கு அருகில் உள்ள "வீராபுரம் சிவன் கோயில்" கல்வெட்டு குறிப்பிடுகிறது. குடிபேரம்பாக்கம் ருத்ரேசுவரர் ருத்திரர்களால் வழிபாடு செய்யப்பட்டவர்., இவரை சிவராத்திரி நாட்களில் அந்தி சாயும் பொழுதில் நெய் தீபம் ஏற்றி, வில்வத்தால் அர்ச்சனை செய்து, மணிவாசகரின் சிவபுராணம் பாராயணம் செய்து தொடர்ந்து 8 மாத சிவராத்திரி நன்னாட்களில் வழிபட தீயவை, எதிரி தொல்லை, பகைமை, வறுமை, உடல் பிணிகள் ,மன கவலைகள் அகன்று ,வாழ்வில் ஒளி பிறக்கும், வளமும் நலமும் சேரும்...நீண்ட ஆயுள் கிட்டும் என்று நம்பப் படுகிறது..நன்றி

திங்கள், 21 செப்டம்பர், 2015

இல்லறமே நல்லறம்

சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்
சருகருத்தில் தேகங்குன்றிச் சஞ்சலமுண் டாகுமே
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்குஞ் சிவாயமே.
மகான் சிவவாக்கியர் பாடல் - கவி 532.
இப்பாடலின் சாரம்
இயற்கை படைப்புகளில் மனித வர்க்கமே சிறந்ததாகும். மனிதனுக்குள் எல்லாம் வல்ல இயற்கை அன்னை, சொர்க்கத்தையும், நரகத்தையும் வைத்திருக்கிறாள். நரகமாகிய மும்மல தேகம் துணை கொண்டு தான் சூட்சும தேகமாகிய ஒளி உடம்பு பெற முடியும். எல்லாம் வல்ல இயற்கை அன்னை பெறுதற்கரிய மானுட தேகம் தந்ததே, இல்லறத்தில் இருந்து விருந்தை உபசரித்தும், மனைவி, மக்கள், தாய், தந்தை மற்றும் உறவினர்கள் துணையோடு நித்தமும் காலையிலும், மாலையிலும் "ஓம் அகத்தீசாய நம" என்று நாம ஜெபம் செய்து, ஆசான் அகத்தீசன் ஆசி பெறுவதற்கே.
காம விகாரம் தணிதற்கு மனைவி அவசியம். காம விகாரம் தணியாமல் மனம் ஒருநிலைப்படாது. எப்பொழுதும் மனம் போராட்டமாகவே இருக்கும். தியாமும் செய்ய முடியாது. இல்லறத்தில் இருந்தால் தான் நமக்கு எந்த உணவு உடம்பிற்கு ஒத்துக்கொள்ளுமோ அந்த உணவை மனைவி சமைத்துத் தருவாள். அது மட்டுமல்லாமல் ஏழை எளியவர்களுக்கு பசியாற்றவும் துணையாக இருப்பாள். தாய் தந்தைக்கு செய்யக் கூடிய கடமைக்கும் துணையாக இருப்பாள். மனம் தளர்ச்சி அடையும்பொழுது பிள்ளைகளைத் தொடுதலாலும், அவர்களது மழலைச் சொல் கேட்பதாலும் மனம் ஆறுதல் அடையும். மேலும் தகுதியுள்ள நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மகிழும்படியாக உணவுவகைகள் கொடுத்து, நட்பை பெருக்கவும் அவள் துணை இருக்க வேண்டும். தகுதியுள்ள இல்லறத்தான் தான் கடவுளை அடையமுடியும்.
ஒருவன் கடவுள் தன்மை அடையவேண்டுமென்றால் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகலாம். வினை காரணமாக கூடும் அல்லது குறையும். ஆகவே வாழ்க்கையின் நிலை உணர்ந்து மக்கள், இருக்கக்கூடிய இல்லறத்தையும் மற்றும் உள்ள சுற்றுப்புறச் சூழ்நிலையையும் நன்கு பயன்படுத்தி, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்வார்கள். ஆகவே, நித்திய கடமைகளை சலிப்பில்லாமல் செய்துவரவேண்டும். பொருள் ஈட்டுதல், நற்காரியங்களுக்குச் செலவு செய்தல் போன்ற பொருளின் இயல்பை அறிந்து (நிலையில்லாத பொருளைப் பெற்றால் நிலையான அறத்தைச் செய்துகொள்ள வேண்டும்) செயல்படுவார்கள்.இதையெல்லாம் உணராத சிலர், மனைவி மக்களை விட்டுவிட்டு அனைத்தும் பொய் என்று வீண் கற்பனை செய்து கொண்டு, அருவிகள் உள்ள மலையடிவாரத்தில் தங்கி பச்சை காய்கறி இலை தழைகளைப் பறித்தால் பாவம் வரும் என்று எண்ணி, மரத்தில் இருந்து உதிரக்கூடிய சருகுகளை மட்டும் உண்டு அருவியில் வருகின்ற தண்ணீரைக் குடித்தும், தவத்தைச் செய்ய நினைப்பார்கள். சருகையும் தண்ணீரையும் சாப்பிட்டால் ஜீரணமாகாது வயிற்றில் தங்கிவிடும், மலச்சிக்கல் ஏற்படும் மனித வர்க்கத்திற்கென்றே உணவு வகைகள் இருந்தும் அதைப்பற்றி அறியாது வெறும் சருகைத்தின்றால் கிட்டத்தடட் 15 அல்லது 20 நாட்கள் அல்லது 1 மாதம் தான் அவர்களால் உயிரோடு இருக்கமுடியும். இப்படி அநியாயமாக சாவதற்காகத் தவம் செய்வதில்லை. வாழ்வதற்காகத் தான் தவம் செய்ய வேண்டும். ஆகவே உடம்பின் இயல்பைப் பற்றியும், உணவின் அவசியத்தைப் பற்றியும் நன்கு உணர்ந்தவர்கள் இப்படி ஊர் ஊராகச் சுற்றிக் காலத்தை வீணாக்கமாட்டார்கள்.
ஆகவே, ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டுமென்றால், உடம்பின் இயல்பையும் உடலைக் காப்பாற்றிக் கொள்ள உணவின் இயல்பையும் அறிந்து நித்திய கடமைகளைச் செய்தும், ஆசான் அகத்தீசரை தியானம் செய்தும் முக்தி பெறுவார்கள்.
எடுத்துக் காட்டு :
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
இல்வாழ்க்கை - குறள் 47.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.
இல்வாழ்க்கை - குறள் 46.
குறிப்பு
1. உடம்பின் இயல்பை அறிந்து, இல்லறத்தைச் செம்மையாக நடத்தியும், விருந்தை உபசரித்தும் மற்றும் அறப்பணிகளைச் செய்து வந்தால், தலைவனைத் தேடி நாம் போகவேண்டியதில்லை. தலைவன் நம்மை நோக்கி வருவான்.
2. சிலபேர் பச்சைக் காங்கறிகளைத் தின்றால் உடம்புக்கு பலவகையான சத்துக்கள் கிடைக்கும் என்பார்கள். வேகவைத்த உணவு வகைகளைச் சாப்பிடும் பொழுதே அஜீரணக்கோளாறு ஏற்படுகிறது. மனித வர்க்கத்திற்கே வேகவைத்த உணவுதான் உடம்புக்கு நல்லது என்று முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கின்றார்கள். இடையில் சிலபேர் உணவு பழக்கவழக்கங்கள் அறியாது பச்சைக்காய்கறிகள் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்று சொல்வார்கள். பாவம் அவர்கள் சாப்பிடட்டும், குற்றமில்லை. மற்றவர்களுக்குச் சொல்லாதிருப்பதே புண்ணியமாகும்.
3.ஒருவன் கடவுள் தன்மை அடையவேண்டுமென்றால், உடம்பைப்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அறிந்தவர்கள்தான் இந்த உடம்பை கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாக எண்ணுவார்கள். அவர்கள்தான் காமத்தை மலரினும் மென்மையானது என்று உணர்வார்கள். உணர்ந்து தன் உடம்பை காப்பாற்றிக்கொள்வார்கள். அப்படி உடம்பை காப்பாற்றிக் கொண்டவர்கள்தான் ஒளி உடம்பு பெறுவார்கள். ஒளி உடம்பு பெற்றவர்கள் கோடானுகோடி யுகம் வாழ்வார்கள். அவர்கள் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்வார்கள். எல்லாம் வல்ல இயற்கை உயிரினங்களை தோற்றுவித்தல், வாழ்வித்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை மட்டும்தான் செய்ய முடியும். ஆனால் இயற்கையை வென்றவர்களோ ஐந்தொழிலும் செய்வார்கள். இதையெல்லாம் நாம் அறியவேண்டுமானால் ஐந்தொழிலும் நினைத்தமாத்திரத்தில் செய்யக்கூடிய வல்லமையுள்ள ஆசான் அகத்தீசரைப் பூஜிக்க வேண்டும். பூஜிக்க பூஜிக்க தன்னைப்பற்றி உணரக்கூடிய அறிவு வரும். தனக்குள்ளே இருக்கும் பகைமையையும்(மும்மலம்), நட்பையும்(ஒளி உடம்பு) அறிய முடியும். அறிந்து பகைமையை நீக்கி நட்பாகிய ஞானதேகம் பெறலாம். இதுவே வீடுபேறு ஆகும்.
4.உடம்பின் இயல்பை அறியாதவர்கள் விந்து விட்டால் நொந்து விடுவான் என்று சொல்வார்கள். அது யோகிக்கே உரிய வித்தைகள் ஆகும். இவை புரியாது விந்து விடக்கூடாது என்று மனைவியை புறக்கணிப்பார்கள். இது திருமணம் செய்வதற்கு முன்பே இந்த புத்தி இருக்க வேண்டும். திருமணம் செய்துவிட்டு மனைவியை புறக்கணித்தால் ஆன்மீக நரகத்தில் சேர்வார்கள். விந்துவாகிய சுக்கிலம் உடம்பில் தேங்கினால் கொழுப்பு மண்டிவிடும். இரத்த சுத்தி ஏற்படாது. உடல் ஆரோக்கியம் இருக்காது. உடல் உஷ்ணம்; அதிகமாகும். மேலும் மூளையும் வேலை செய்யாது. எனவே உடம்பைப் பற்றி அறிந்தவர்கள் இல்லறத்திலிருந்து உடம்பைப் பொன் உடம்பாக்கி கொள்வார்கள்.
போலி ஆன்மீகவாதிகளின் செயல்
அறிவு தெளிவில்லாத போலி ஆன்மீகவாதிகள் நல்லதொரு இல்லறத்தானை அழைத்து மனைவியிடம் கூடாதே, பந்தபாசம் ஆகாது என்பார்கள். அவன் பாவ புண்ணியம் இல்லை என்று சொல்பவனைவிட கொடுமையானவன். எனவே, அதுபோன்ற ஆன்மீகவாதிகளிடம் சென்றால் ஆன்மீக நரகம்தான் கிட்டும்.ஆன்மீக நரகம் என்பது கடவுள் நாட்டம் உள்ளவர்கள் உடல்கூறு தெரியாது பிராணயாமம் செய்தலும், பட்டினி கிடத்தலும் மற்றும் ஊர்ஊராய் சுற்றியும் அதனால் உடல் நலிவுற்று நோய்வாய்ப்பட்டு இறப்பதே ஆன்மீக நரகமாகும்.

எடுத்துக்காட்டு
மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர் வாழ்வு சிறக்குமே....
மகான் சிவவாக்கியர் பாடல்.
மகான் சட்டைமுனிநாதர் அவர்களின்
குருசூத்திரம் 20ல் - பாடல்கள் 17-18
அற்பமாம் மூடர் அறியாமல் யோகம்
சொற்பமாய் எண்ணி செய்தே மரித்தார்
கற்பம் இல்லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர் செய்யோகம் அழிம்பிது பாரே -17
பார்த்தே சிலநூல் பாடினதைக் கற்று
காத்தே அடைத்து கனயோகி என்று
சேர்த்தே சீசரைச் செய்து உபதேசம்
கூத்திது ஆகும் கூடாது முத்தியே -18
நல்ல வழியை நாடுவோம்

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை  ; பூஜித்து ஆசிபெற்றுக்கொள்ள வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அகத்தீசன் ஆசி இருக்கும்பொழுது எந்த தீமையும் நம்மை ஆணுகாது என்று உறுதியாக இருப்பார்கள், மேலும் எதற்காகவும் பயப்பட மாட்டார்கள்.
ஆகவே, சற்குருநாதராகிய அகத்தீசரை பூஜிப்போம்,
பிறப்பில்லாப் பெருவாழ்வு பெற்று வாழ்வோம்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

இருமுனை அம்பாக இருங்கள்


★பொதுவாக அனைவரும் நம் சக்தியை வெளியே வீசிக் கொண்டிருக்கிறோம்.
யாருமே அந்த சக்தியை சேகரிப்பது இல்லை.
நான் இப்போது உங்களிடம் பேசும்போது நான் பேசுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள். 

★அப்போது நீங்கள் என்னுடைய தன்னுணர்வில் இருக்கிறீர்கள்.
இது ஒருமுனை அம்பை போன்றது.
அம்பை வெளியே வீசிக்கொண்டிருக்கிறீர்கள்.
இதை வேறு வகையில் கவனிக்க முடியும்.
நான் பேசுவதையும் கவனித்து, கூடவே நீங்கள் கவனித்து கொண்டிருப்பதையும் கவனியுங்கள்.

★இப்போது உங்களுடைய தன்னுணர்வில் இருக்கிறீர்கள்.
இருமுனை அம்பாக இருங்கள்.
நாம் அனைவரும் பிறந்த சில மாதங்கள் வரை இருமுனை அம்பாகவே இருந்தோம்.
காலப்போக்கில் தூங்கி விட்டோம்.
ஒரு பிறந்த குழந்தை தன்னையே வேறொரு ஆளாக பார்க்கிறது.
அப்போது யாருடைய கோபமும் அதை பாதிப்பதில்லை. இதை முயற்சி செய்து பாருங்கள்.

★உங்களை ஒருவர் கோபப்படுத்தும்போது அவர் உங்களிடம் கோபமாக பேசுவதை கவனியுங்கள்.
கூடவே, கோபமாக இருக்கும் உங்களையும் சேர்த்து கவனியுங்கள்.
இருமுனை அம்பாய் மாறிவிடுங்கள்.

-- ஓஷோ

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கான யோசனைகள் சில

சரியான இடம் (The Right Place):
★உங்கள் தியானத்தை உயர்த்தக் கூடிய ஓர் இடத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாய், ஒரு மரத்தடியில் அமர்வது அனுகூலத்தையளிக்கும். ஒரு திரையரங்கில் அமர்வதை விட, இயற்கையை நாடிச் சொல்லுங்கள். மலைகளிலும், மரங்களிலும், ஆறுகளிலும் ‘தாவோ’ கூறும் இயற்கை ஆற்றல்களின் ஒன்றுபட்ட திறன் இருக்கிறது. அந்த சக்தியின் துடிப்பு எங்கும் பரவி நிற்கிறது.
‘சந்தடியற்றிருப்பதும்,
தன்னுணர்வின்றியிருப்பதும்
தியானமே’.
மரங்கள் நிலையான தியானத்திலிருக்கின்றன. உங்களை மரமாகும்படி நான் கூறவில்லை, ஒரு புத்தராகிவிடுங்கள்.
★ஆனால், புத்தருக்கும் மரத்துக்கும் பொதுவான விசயம் ஒன்றிருக்கிறது. அவர் மரத்தைப் போலவே பசுமையானவர், மரத்திலுள்ளது போலவே அவருள்ளும் சாரமிருக்கிறது. என்ன ஒரு வித்தியாசம். அவர் உணர்வோடிருக்கிறார், மரம் உணர்வற்றிருக்கிறது அவ்வளவுதான். மரம் தன்னுனர்வில்லாமலே ‘தாவோ’ (Tao)வில் இருக்கும், புத்தர் உணர்வுடன் ‘தாவோ’வில் இருப்பார். அது மிகப் பெரிய வேறுபாடு, வானத்துக்கும் பூமிக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
ஒரு மரத்தினடியில் அமர்ந்து பாருங்கள். அங்கே சுற்றிவர அழகிய பறவைகளின் பாடலும், மயிலின் ஆடலுமாய், இருக்கும். நதி நீரின் ஓடுகின்ற ஓசை அல்லது அருவி நீரின் வீழ்கின்ற ஓசை என்று எல்லாமுமாய் ஒரு சிறந்த இசை!
இயற்கையின் அமைதி குலைக்கப்படாத, மாசுபடுத்தப் படாத ஓர் இடத்தைக் கண்டுபிடியுங்கள்.

★அப்படியோர் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்கள் அறையின் கதவுகளை மூடிக் கொண்டு உள்ளே அமர்ந்துவிடுங்கள். முடிந்தால் உங்கள் வீட்டில் தியானத்துக்கென்று ஒரு பிரத்யேக அறை வைத்துக் கொள்ளுங்கள்.
சிறு மூலை போதும், ஆனால், தியானத்துக்கு மட்டுமே பயன்படுவதாய் இருக்க வேண்டும். ஏன் குறிப்பாய் தியானத்துக்கு மட்டும் என்பது? ஒவ்வொரு செயலும் தனக்கே உரிய அதிர்வுகளை உருவாக்கும். அந்த இடத்தில நீங்கள் தியானித்தால் அது தியானத் தன்மை கொண்டதாகிவிடும். தினமும் தியானிப்பீர்கள்.

★தியானிக்கிறபோது அது உங்களுடைய அதிர்வுகளை உறிஞ்சும். அடுத்த நாள் நீங்கள் வரும்போது அந்த அதிர்வுகள் உங்கள் மீதே திரும்பவும் விழும். அவை அனுகூலமாயிருக்கும், கொடுத்து வாங்கும், எதிர்ச் செயல்புரியும்.
ஒருவர் உண்மையிலேயே தியானிப்பவராகி விடும்போது அவரால் திரையரங்கிலும், இரயில்நிலைய மேடையிலும் கூட தியானிக்க முடியும்.
நான் பதினைந்து ஆண்டுகளாய் நாடு சுற்றிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து பயணந்தான். இரவும் பகலும் ஆண்டு முழுதும் பயணம் செய்கிறேன். இரயிலிலும், ஆகாய விமானத்திலும், காரிலும் பயணிக்கிறேன். எதுவும் வித்தியாசப்பட்டுவிடவில்லை. உங்கள் இருப்புணர்வில் (Being) நீங்கள் நிலைத்துவிட்டால் எந்த ஒன்றும் வித்தியாசத்தை ஏற்ப்படுத்த முடியாது. ஆனால், இது தொடக்க நிலையில் உள்ளவருக்குச் சாத்தியமில்லை.
மரம் வேரூன்றி விட்ட (நிலையாக) பிறகு காற்று அடிக்கட்டும், மழை பொழியட்டும், மேகங்கள் இடியொலி எழுப்பட்டும். எல்லாமே நல்லதுதான். அது ஒரு சீரிய நிலை (integrity)யை மரத்துக்குத் தந்துவிடும்.

★ஆனால், அந்த மரம் மிகச் சிறியதாய், மென்மையாய் இருக்கும்போது ஒரு சின்ன குழந்தையும் அதற்கு ஆபத்தை விளைவித்துவிடும். அல்லது அந்த வழியே போகிற ஒரு பசுவினால் கூட ஆபத்து ஏற்படலாம்.
-ஓஷோ

புதன், 5 ஆகஸ்ட், 2015

உங்கள் வாழ்க்கையை நீங்கள் விபத்தாகவும் எதிர்கொள்ளலாம், அதிசயமாகவும் எதிர்கொள்ளலாம்.



நடந்து கொண்டிருப்பது,
நடந்தது,
நடக்கப் போவது
எல்லாம் மங்களத்தன்மையே .
வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது மங்களத் தன்மையைத் தான் உங்களுக்குச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.
ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, நாம் செய்ய வேண்டியது எல்லாமே ஒரேயொரு விஷயம்தான். கொஞ்சம் சிரத்தையோடு நம் வாழ்க்கையை நாமே ஆழ்ந்து பார்த்தல். ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தல். "மோதிரம் போட்டுக் கொள்கிற அளவுக்கு எனக்குச் சொத்தைக் கொடுக்கவில்லையே" என்று கடவுளைக் காலையிலிருந்து மாலை வரைக்கும் திட்டுகின்ற நாம், மோதிரம் போட ஒரு விரலைக் கொடுத்தாரே என்று நினைப்பதே இல்லை.
மோதிர விரலைக் கொடுத்திருக்கிறாரே என்பதற்காக ஆனந்தப்படுவதில்லை.
மோதிரம் போடுவதற்குச் சொத்தில்லையே என்பதற்காகத்தான் காலையிலிருந்து மாலை வரைக்கும் கடவுளைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லை எதையோ, யாரையோ சலித்துக் கொள்கிறோம்.
கடவுளைச் சலித்துக் கொள்வதும் வாழ்வைச் சலித்துக் கொள்வதும் இரண்டுமே ஒன்று. இந்த சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். பிரபஞ்சத்திற்கென்று ஒரு தர்மம் இருக்கின்றது.

பிரபஞ்சத்தை இயக்கும் தர்மமே மங்களத்தன்மைதான். பிரபஞ்சத்தால் உங்களுக்குக் கஷ்டங்க¨த் தரமுடியாது. கஷ்டங்கள் என்பதே, மனிதர்கள் உருவாக்கியதுதான். இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் கஷ்டம் என்ற ஒன்றே கிடையாது.

தியான ஆராய்ச்சி

சாபங்களைக் குறைத்து வரங்களை அதிகரிக்கும் பயிற்சி இது.

1. ஒவ்வொரு நிமிடமும் வாழ்வு எப்படி நகருகின்றது? வெறுமைத் தன்மையோடு, வெளியே சிரித்து, உள்ளே வேறு ஏதோ குறை உணர்வோடு நகருகின்றதா?

2, அடிக்க 'ச்சே!' 'சை!' என்ற சலிப்புச் சத்தங்கள் உங்களிடமிருந்து வெடிக்கின்றதா?

3. டி.வி பார்ப்பதிலிருந்து, மற்றவரோடு பேசி சிரிப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைத் தருகின்றதா?

4. அருமையாய் சிரித்து, இனிமையாய்ப் பேசுபவர்களைப் பார்த்தால், ஏக்கம் வருகின்றதா?

5. அழகாய் இருப்பவர்களை, நன்றாய் வாழ்பவர்களைப் பார்த்தால், பொறாமை கிளப்புகிறதா? என்னால் முடியவில்லையே என்ற துக்கம் உள்ளுக்குள் கசிகிறதா?


இந்த ஐந்து கேள்விகளுக்கம், எந்தெந்த கேள்விகளுக்கு பதில் 'ஆம்!' என்று சொல்கின்றீர்களோ, அதன் தீவிரத்தைப் பொறுத்து இருபது மதிப்பெண்கள் வரை அதிகபட்சமாகத் தலாம். ஆம்! அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் என்னை ரொம்ப மோசமாக இது பாதிக்கவில்லை என்று, எந்தெந்த கேள்விகளுக்குத் தோன்றுகிறதோ, அதற்குப் பத்து மதிப்பெண்கள் வரை பாதிப்பின் தீவிரம் பொறுத்து மதிப்பெண் அளியுங்கள். ஐந்து கேள்விகளின் மதிப்பெண்களைக் கூட்டுங்கள். அதுதான. நீங்கள் எவ்வளவு சதவிகித கஷ்டத்தை உருவாக்கி வாழுகின்றீர்கள் என்பதின் அளவீடு.

எவ்வளவு மதிப்பெண் வந்திருக்கின்றதோ, அவ்வளவு நீங்கள் பிரபஞ்ச சக்தியை இழந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

ஒரு வேளை 40% மதிப்பெண் என்றால், 40% வாழ்வை, ஒவ்வொரு நிமிடமும் இழந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். அப்படியென்றால், இவர் தன்னுடைய அணுகுமுறையை இப்போது 40% சதவீதம் மாற்றினாலே போதும், அவர் வாழ்வில் முழு மங்களத்தன்மையை அடைந்து விடுவார். உங்கள் வாழ்வில் உள்ள அமங்களத்தை மங்களமாக்க, நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான ஆராய்ச்சி இது! செய்து பாருங்கள், சாபங்கள் குறையும், வரங்கள் அதிகரிக்கும்

சனி, 1 ஆகஸ்ட், 2015

நன்மை தரும் நமச்சிவாய நாமம்

நாக உலகத்திற்கரசனாம்  வாசுகியை நளினமுற அணிந்தவனும்
தேகமெலாம் வெண்ணீறு உடையவனும் திரினயணம் கொண்ட திகம்பரனும் போகமுடி தேவர்க் கீசனும், புனித மகேஸ்வரனும், நித்தியனும் ஆகவந்த ஐந்தெழுத்து மந்திரத்தில் அடிபணியும் முதல் எழுத்தே 'ந' என்றாகும்.

மந்தாகினி நீரைச் சந்தனமாய் மார்புரம் தரித்தவனும்,
மந்தாரை மலர் பலவாய் வழிபட்ட மகேஸ்வரனும், நந்தி தேவ கணத்திற்கெல்லாம் நாயகனாய் வழி நடத்த வந்துதித் தோன்
ஐந்தெழுத்தில்  வணங்கும் 'ம' வே  இரண்டும் நிலையாகும்.

சிவனையும், உமையவள் கமலமுகம் செம்மையுற மலரவரும் சூரியனுமாய்த்  தவ ஞான வேள்வி செய்த தட்சனது யாகமதை அழித்தவனும், யுவராஜ நீலகண்டன் காலைக் கொடியுடைவனும் - ஐந்தெழுத்தில் சிவ ராஜ யோகம் மிகும் 'சி' கரமாகும் சிரம் வணங்கும் மூன்றாவதாகும். 

வரங்கொண்ட மாமுனிவர் வசிஷ்டர் - அகத்தியர் , கௌதமரும், தரங்கொண்ட வானுறையும் தேவரும் தலை வணங்கும் கங்கை தனை சிரம் கொண்டும்,  ரவி - மதி -  அக்கினியைச் சிவனுடைய
முக்கண்ணாய் ஒளிர விடும் அரண் கொண்ட ஐந்தெழுத்தில் அருள் வடிவாம் 'வ' கரமே நான்காகும்.

யட்ச வடிவினாய், சடை முடி தரித்தவனாய்,
யாண்டும் அழியாத் தெய்வீகப் பேரொளியாய்  
மெச்சும் உயர் பிளகவில்லுடையோனாய் 
மேவும் திக்கெல்லாம் மேனி நிறை உடை அணிவோனாய்ப்
பட்சமில்லா பரஞ்சோதி சொரூபனாய்ப் பாங்கு நிறை
ஐந்தெழுத்தில் பதிவாகும் அட்சரமாம் 'ய' கரணமய ஐந்தாகும்
அடிபணிவோம், நமச்சிவாய  ஓம் .

பல சுருதி:

இவ்வைந்தெழுத்து துதியினை தவ நெறி முறையோடு எவரொருவர் தவறாது சொல்வார் எனில் பவரோக வினை நீங்கிப் பாவமெல்லாம் பறந்தோடச் சிவ போக சாம்ராஜ்யம் சிறப்புற பெற்றுய்வரே!!!

வெள்ளி, 17 ஜூலை, 2015

திருச்செந்தூரில் வழிபாடு செய்யும் முறை

முதலில் நாழிக்கிணற்றில் குளிக்க வேண்டும்; பிறகு கடலில் குளிக்க வேண்டும். கடலில் எவ்வளவு நேரமானாலும் குளிக்கலாம்; குளித்தபின்னர், கடற்கரையில்
 காசிச்சுவாமிகள், மவுனம் சாமிகள், ஆறுமுகச்சாமிகள் என மூன்றுபேர்களின் ஜீவசமாதிக்கு முதலில் செல்ல வேண்டும்.குளித்த ஈர ஆடையோடு சென்று இந்த மூவர் ஜீவசமாதியில் நமது கோரிக்கைகளை மனப்பூர்வமாக வேண்ட வேண்டும்.

அதன் பிறகே, திருச்செந்தூர் முருகக் கடவுளை வழிபடவேண்டும். வழிபட்ட அன்று முழுவதும் குளிக்கக் கூடாது; வழிபட்ட அன்றே வீட்டுக்குப் புறப்படலாம். தப்பில்லை;

ஜோதிடத்தை முழு நேரமாக செய்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலமாக,அதுவரையிலும் ஜோதிடருக்கு இருந்த நவக்கிரக சாபங்கள் நீங்கும். ஏனெனில், ஜோதிடர், தன்னை நாடி வருபவர்களின் ஜாதகத்தை கணித்து, நவக்கிரகங்களின் செயல்பாடுகளைக் கண்டறிந்து, பலனாகக் கூறுகிறார். கிரகங்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கூறி, ஜாதகரை பாதுகாத்துவிடுவதால், நவக்கிரகங்கள் அந்த ஜோதிடரை சபிக்கும். இந்த சாபம் ஓரளவுக்கு மேல் அதிகரிக்கும்போது, ஜோதிடரின் உடல் எரிச்சலை எட்டும். சில மாதங்களிலேயே அந்த எரிச்சலைக் கட்டுப்படுத்தவேமுடியாது.இதைச் சரி செய்ய திருச்செந்தூர் சென்று மேற்கூறிய முறைகளின் படி திருச்செந்தூர் முருகக் கடவுளை வழிபடவேண்டும்.

திங்கள், 29 ஜூன், 2015

சதுரகிரி வரலாறு.....

சதுரகிரி இயற்கை வனங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோயில்களும் நிறைந்த மலை, இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஆன்மீகச் சிறப்பும், பதினெண் சித்தர்களும், பற்பல ஞானிகளும், ரிஷிகளும் உருவமாய் வாழ்ந்த சிறப்பும், அருவமாய் உலவும் சிறப்பும் கொண்டிருக்கிறது, சதுரகிரி. கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் சுமார் 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது இந்த மலை.
அப்படியென்ன ஆன்மீக ஈர்ப்பு, என்கிறீர்களா? பக்தர்களை ஈர்க்கும் நம்பிக்கைகளில் ஒரு சில இதோ:
  • சிவபெருமான் – உமாதேவி திருமணத்தின்போது உலகை சமநிலையாக்க தென்புலம் வந்த அகத்தியர் சில காலம் மனம் விரும்பி சதுரகிரியில் தங்கி தவம் செய்தார். இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி வேண்டினார். இறைவனின் திருமணக் காட்சியை மீண்டும் ஒரு முறை சிவபெருமான் உமாதேவி சகிதம் நிகழ்த்திய இடம் சதுரகிரி. அத்தனைத் தெய்வங்களும் தேவாதி தேவர்களும் திருமணத்தை முன்னிட்டு ஒரு சேரக் காட்சி தந்த இடம் என்பதால், ‘பூலோக கைலாயம்‘ என அழைக்கப்படுகிறது.
  • அகத்தியர் சதுரகிரியிலிருந்த போது பூஜைக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிட்டை செய்தார். அகத்தியமாமுனியால் பிரதிட்டை செய்யப்பட்ட லிங்கமே சதுரகிரியில் மகாலிங்கம் சன்னதியில் உள்ளது.
  • சிவபெருமானே சித்தராக வடிவெடுத்து வந்து, பச்சைமால் என்ற பக்தருக்கும், சித்தர்களான சுந்தரானந்தருக்கும், சட்டைநாதருக்கும் காட்சி தந்து, சுயம்புலிங்கமாக வடிவெடுத்த இடம் சதுரகிரி. அந்த லிங்கமே மகாலிங்கமாக, மகாலிங்கம் சன்னதியில் வழிபடப்படுகிறது.
  • பார்வதி தேவி சிவபெருமானின் சரிபாதி ஆக, தவம் செய்த இடம் சதுரகிரி. அவளது தவத்தை தொடர்ந்து இருவரும் அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி பெற்றது இங்குதான். அன்னை தேவி பிரதிட்டை செய்த லிங்கமே சந்தன மகாலிங்கமாக இங்கு உள்ளது.
  • பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
  • இலங்கைப் போரின் போது லட்சுமணனின் உயிரைக் காக்க அனுமன் எடுத்து வந்த சஞ்சீவி மலையின் ஒரு பாகம் சதுரகிரியில் மத்தியில் விழுந்து மூலிகை வனமானது. அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களை ஈர்த்தது இந்த மூலிகைகளே! மரணமிலாப் பெருவாழ்வு எனும் சித்தி நிலைக்கு இட்டுச் செல்லும் காயகல்ப மூலிகைகள் இங்கு உள்ளன.
  • மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை‘ என்கின்றனர்.
  • ஆதிபராசக்தி, சப்த கன்னியர், காலாங்கிநாதர் போன்றோர் உருவாக்கிய நீர் வரத்துக்கள், தடாகங்கள் இன்றும் உள்ளன. இவற்றின் நீர் மூலிகைக் குணமும், தெய்வீகத் தன்மையும் கொண்டிருப்பதாகப் போற்றப்படுகிறது.
  • இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை
    உபயோகித்துள்ளார்கள்.
  • சிவனும் விஷ்ணுவும் வேறல்ல. அரியும் சிவனும் ஒன்றே என்று சிவபெருமான் ‘சங்கர நாராயணனாக‘ காட்சியளித்து, இரட்டை லிங்கமாகச் சதுரகிரியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
  • நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை
வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 66 ஆயிரம் ஏக்கர்.
சதுர்‘ என்றால் நான்கு. கிரி என்றால் மலை, நான்கு பக்கமும் சந்திரகிரி, வருணகிரி, குபேரகிரி, ஏமகிரி எனும் நான்கு மலைகளால் சூழப்பட்டும், தன்னுள் சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்திகிரி எனும் நான்கு மலைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது சதுரகிரி. கூடவே, மத்தியில் எண்ணில் அடங்கா மூலிகைகளைக் கொண்டிருக்கிற சஞ்சீவி மலையையும் கொண்டிருக்கிறது.
மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 10 கி.மீ மலை ஏறினால் மலைமேலிருக்கும் மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்குச் செல்லலாம். அங்கிருந்து மலை ஏறினால், தவசிப்பாறை என்றும் ஒருபுற மலை முகட்டுக்குச் செல்லலாம்.
சற்றுக் கடுமையான மலையேற்றம் தான். சீரற்ற படிகள், சறுக்கும் பாறைகள், ஒத்தையடிப் பாதைகள், கரடுமுரடான ஏற்ற இறக்கங்கள், செங்குத்தான வழுக்குப்பாறைகள், கரடியும், குரங்கும் பாம்பும் தொந்தரவு தருமோ என அச்சமூட்டும் காடுகள், நீரோடும் வழித்தடங்கள் போன்றவற்றை ஒருவித சாகச உணர்வுடன்தான் கடக்க வேண்டியிருக்கும்.
குடிக்கத் தண்ணீரும், உணவும் இடையில் கிடைப்பது அரிது. கையோடு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இரவுப் பயணம் ஆபத்து. மலை மேலே மின் வசதி கிடையாது. சூரிய சக்தி புண்ணியத்தில் கொஞ்ச நேரம் இருட்டை விரட்டலாம். இரவில் தங்க ஓரிரு பொது மண்டபங்கள் உண்டு. குளிப்பதும், கழிப்பதும் திறந்த வெளியில்தான். போதுமான வசதிகள் இல்லாத சூழல்.
மலைப் பயண நேரம் 5 மணி முதல் 8 மணி நேரம் வரை ஆகும். வயதானவர்கள், மூட்டுவலி, கால்வலி உள்ளவர்கள் தவழ்ந்தும், தடியுடனும், துணையுடனும் திண்டாட வேண்டியிருக்கும். ஆனால், இவ்வளவு சிரமங்களையும் மீறி மலை ஏறிவிட்டால் எக்கச்சக்கமான தன்னம்பிக்கையும், எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கும் ஏற்பட்டுவிடும். நம்மைவிட, வயதானவர்கள் நூற்றுக்கணக்கில் கோயிலுக்கு வந்திருப்பார்கள். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கூட்டம் ஆயிரக்கணக்கில் இருக்கும். நவராத்திரி தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நாள் கணக்கில் தங்கி இருப்பார்கள்.
மீண்டும் அடிவாரம் இறங்குவதும் கடினமான பயணம் தான். ஆனால், இறங்கியவர்கள் யாரைக் கேட்டாலும் அடுத்த முறையும் கண்டிப்பாக ஏறிப் பார்க்க வேண்டும் என்று ஆசை பொங்கச் சொல்வார்கள். தொடர்ந்து மாதம் தோறும் வருபவர்க்கும், இவ்விதம் ஐம்பது ஆண்டுகள் வரை வந்து கொண்டிருப்போரும் பல்லாயிரம் பேருக்கு மேலிருக்கும் என்பது நிஜம். அது தான் சதுரகிரி!
இயற்கை விரும்பிகளுக்கும், சூழலியலாளர்களுக்கும் கண்டிப்பாகச் சதுரகிரியைப் பிடிக்கும். மாசுபடாத இயற்கை, தூயகாற்று, அருவி நீர், தடாகநீர், மூலிகைக் காற்று வருவோரைச் சுண்டி இழுக்கும். ஆனால் இதற்காக வருபவர்கள் மிகக்குறைவே.
அதே சமயம் உண்மையான பக்தியும், ஆன்மீகத் தேடலும் உள்ளவர்களுக்கு சதுரகிரி ஒரு பூலோக கைலாயம், இப்படிப்பட்ட பக்தர்கள் கூட்டமே அதிகம் வருகிறது.
இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி. மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது, ஸ்ரீவில்லிபுத்தூர் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கிருஷ்ணன் கோவில் இங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் சுமார் 15 கி.மீ பயணித்தால் வத்திராயிருப்பு வரும்.அங்கிருந்து 7 கி.மீ பயணித்தால் தாணிப்பாறையை அடையலாம்.இதுதான் சதுரகிரி அடிவாரம்.இதிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்றால் சதுரகிரி சுந்தரமஹாலிங்கம்,சந்தன மஹாலிங்கம் கோயிலை அடையலாம்.
அல்லது, மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் – செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி – கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி – அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தாணிப் பாறைக்கு – மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும். ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
மலைக்கு மேலே – சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க ” கஞ்சி மடம் ‘ உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்-திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி‘ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, “நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.



இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலிமுனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும்அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்றுதூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
“சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,”என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, “”நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “”சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,” என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை “பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.  தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5250 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் “மஞ்சள் ஊத்து’ தீர்த்தம் உள்ளது.
தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை “நவக் கிரக கல்‘ என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள “ஏசி’ பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் “வெள்ளைப்பிள்ளையார்’ பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை “பெரிய மகாலிங்கம்‘ என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
சுந்தரமூர்த்தி : கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை “கும்ப மலை’ என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்‘ எனப்படுகிறது. அருளை வழங்குவது “சுந்தரமகாலிங்கம்‘, பொருளை வழங்குவது “சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து “அர்த்தநாரீஸ்வரர்‘ ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்.





இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.
இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள். 

லிங்க வடிவ அம்பிகை : சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்’ இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம்
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.  
கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ”பாவகரி நதி” என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்
இச்சதுரகிரியின் மேல் ‘காளிவனம்’ என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய ‘திருமஞ்சனப் பொய்கை’ உண்டு.
காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட ‘பிரம்மதீர்த்தம்‘ ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட ‘பொய்கைத் தீர்த்தம்”, ”பசுக்கிடைத் தீர்த்தம்”, ‘குளிராட்டித் தீர்த்தம்’ போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.  பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை
அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் ‘உதகம்‘ என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.
இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் ‘உதகம்’ என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம்என்னும் மரம் உள்ளது.
இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்‘ என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும்.
இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
தவசி குகை செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட மரம் இருக்கு.அந்த மரத்தில் இருந்து வடியும் பால் ரத்த சிவப்பாக இருக்கிறது.அதன் கீழே தேங்கியிருக்கும் பால் ஆட்டு ரத்தம் கொட்டியது போல திகில் கிளப்பியது.மரத்தின் பெயர் என்ன தெரியுமா? ரத்த காட்டேரி மரம்.
தவசி குகையின் அருகில் மஞ்சள் நீர் நிறம்பிய சுனை இருக்கிறது.தங்கம் போல அந்த நீர் மினு மினுக்கிறது…தங்க பஸ்பம் போல…குடிச்சா வேலை செய்யுமோ.
இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ”மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள், மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன.
வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் “கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.
உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால், இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை.
அருள்மிகு சுந்தர மகா லிங்கத்துக்கு ஆரோஹரா!