புதன், 29 மே, 2013

இந்த மாயையும் அப்படித்தான்

முதலில் நம்மைச் சுற்றி ஒரு சுகமான உலகை சிருஷ்டிக்கிறது. மயக்கம் நீடிக்கிறது. தவறுகள் ஏற்படுகின்றது. பின்னர் திரை சிறிது சிறிதாக விலகி தன் கோர சொரூபத்தை காட்டுகிறது. ஏனிப்படி என்றால் ”எல்லாம் நீயே வரவழைத்துக் கொண்டது” என்று பதில் வருகிறது. என்ன விசித்திரம் இந்த உலகம்! எனவேதான் கவிஞனுக்கு கோபம் உண்டாகிறது. பாரதியின் சீற்றத்தைப் பாருங்கள்.
என்னைக் கெடுப்பதற்கு எண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!- நான்
உன்னைக் கெடுப்பது உறுதி என்றே
உணர் -மாயையே
................
நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே- சிங்கம்
நாய் தர கொள்ளுமோ
நல்லரசாட்சியை -மாயையே
ஞானிகளுக்கு இத்தகைய சஞ்சலங்கள் எதுவும் கிடையாது. அவர்கள் உலகை நாடக மேடையாகக் காண்பதால் சுகமும் துக்கமும் மாறி மாறி வந்து செல்லக் கூடிய காட்சிகள் என்பதை அறிவார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் இறைவனின் சாட்சாத்காரம் ஒன்றுதான்.
ஒரு சிங்கத்தை தன்சொற்களால் பசப்பி புவனம் என்கிற பாழ் கிணற்றிலே தள்ளப் பார்க்கும் முயல் போல மாயையின் லீலையே மற்றவையெல்லாம் என்பதை அவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள்