புதன், 4 மார்ச், 2015

சூத்திர ஞானம் - வால்மீகர் - 11 - 16

சிவசிவா பதினெண்பேர் பாடற் கெல்லாம்

திறவுகோல் வால்மீகன் பதினா றாகும்;
சிவம்பெத்த சித்தரெல்லா மென்னூல் பார்த்துச்
சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்;
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக;
நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே
நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால். 11

நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது;
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
வாசிவரு மிடத்தில்மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே. 12

காணரிதே யெவராலு மிருசு வாசம்;
காண்பவனே சிவசித்த னவனே யாகும்;
பூணரிதிவ் வுலகத்தி லிந்நூல் கிட்டில்
பூலோக சித்தனென வுரைக்க லாகும்;
காணரிது சிவசக்தி திருமூச் சாகும்;
காட்டாதே மூடருக்கே யிந்நூல் தன்னை;
தோணரிது விழிமயக்கம் சும்மாப்போமே
சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னே னப்பா. 13

சூட்சமிந்நூல் சொல்லுகிறேன் வாசி காண;
சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா;
சாட்சியில்லை துணையில்லை கேள்வி யில்லை;
சந்தேக மொன்றுமில்லை விழியைக் காணக்
காட்சியென்ன கற்பகத்தில் வசிக்கு மாப்போல்
காரணத்தைக் கண்ணாலே கண்டி ருக்க
ஆட்சிதரு முமையாளப் படியே கண்டேன்;
ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே. 14

காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு;
காய்கனிகள் பஞ்சரசம் பரமான் னங்கள்
ஏற்கையுட னுண்டுகொண்டு சிவத்தைக் காத்தே
என்மகனே சித்தருடைக் குருநூல் பாராய்;
ஆத்துமத்துக் கழிவில்லா திருக்க வேணும்;
அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்;
தீர்க்கமுட னின்றவர்க்கு வாசி சித்தி
சிறப்புடனே பதினாறும் பலிக்குந் தானே. 15

தானவனா யிருக்கவென்றால் வாசி வேணும்;
தனக்குள்ளே தானிற்க இடமும் வேணும்;
வானவனாம் நின்றவர்கட் கெல்லாஞ் சித்தி
வானுக்குள் மனமிருக்க மதிபோல் காணும்,
தேனவனாஞ் சித்தருக்குத் தெவிட்டா மூலி
சிரசப்பா வுடலுக்குப் பதியே யாகும்
கோனவனா யிருக்கவென்று குறியைச் சொன்னேன்
குவலயத்தில் பதினாறுங் குறுகத் தானே.