மரணத்திற்கு பிறகு உடலின் சக்கரங்கள் என்னாகும்?
நாம் இறந்த பிறகு நம் உடல் மண்ணிற்கும், உயிர் விண்ணிற்கும் போய்விடும் என்பது நாம் கேள்விப்பட்டவைதான். அப்படியிருந்தால், நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அந்த ஏழு சக்கரங்கள் என்னாகும்? உடலோடு சேர்ந்து அவையும் மறைந்துவிடுமா? இதைப்பற்றி சத்குருவிடம் கேட்டபோது… சத்குரு: சக்கரங்கள் எங்கே போகும்? சக்கரங்கள் என்பது உங்கள் உடலில் ஸ்தூலமாக இருக்கிற சக்கரங்கள் அல்ல; அவை சில சக்தி மையங்கள். நீங்கள் சுழல்காற்றைப் பார்த்திருப்பீர்கள். அது இருக்கும்போது உள்ளபடியே இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் அது மறையும்போது எங்கே போகிறதென்றே தெரிவதில்லை. இந்த தர்க்க மனம் எப்போதுமே, ஒன்று இருந்தால் அது எங்கேயோ போகவேண்டும் என்று நினைக்கிறது. ஒன்று போய்விட்டால் ஒன்று திரும்ப வரவேண்டும் என்று நினைக்கிறது. அந்த நிகழ்வு இயற்கையில் தானாகவே நிகழ்கிறது. ஒரு சமுத்திரத்தில் வருகிற மிகப்பெரிய அலை அடுத்தவினாடி எங்கே போகிறதென்று தெரியவில்லை. திரும்பிப் போய்விடுகிறது. அதன் பிறகு அங்கே எதுவும் இல்லை. சக்கரங்களும் அப்படித்தான். இந்த முழு பிரபஞ்சமே சக்திநிலைதான் என்கிறபோது சுழல் காற்றுபோல் சில மையங்களும் இருக்கின்றன. சில நேரம் அங்கு இருக்கிறது. பிறகு காணாமல் போகிறது. அது எதோ ஒரு இடத்திற்கு போவதில்லை. வருவது, போவது எல்லாம் உங்கள் கற்பனை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த தர்க்க மனம் எப்போதுமே, ஒன்று இருந்தால் அது எங்கேயோ போகவேண்டும் என்று நினைக்கிறது. ஒன்று போய்விட்டால் ஒன்று திரும்ப வரவேண்டும் என்று நினைக்கிறது. இது அப்படியல்ல. ஒரு ஜென் கதை ஒரு ஜென் குரு மரணப்படுக்கையில் இருந்தார். ஜென் மார்க்கத்தைப் பொறுத்தவரை மரணம் மிகமிக முக்கியமானது. முழு விழிப்புணர்வோடு அவர்கள் இறக்கவேண்டும். இப்போது அவருக்கு விடைகொடுக்க இன்னொரு ஜென் குரு வந்தார். அவர் பெயர் சாங் சூ. அது கடைசி வினாடி. எனவே சாங் சூ கேட்டார். “என் உதவி உங்களுக்குத் தேவையா, அதைக் கடந்து செல்ல வேண்டுமா?” எனக் கேட்டார். இறந்து கொண்டிருக்கிற ஜென் கேட்டார், “உங்களால் என்ன செய்ய முடியும்? இது வந்திருக்கிறது. போகிறது. இது தானாக வருகிறது, தானாகப் போகிறது. அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்.” அதற்கு சாங் சூ சொன்னார், “அதுதான் உங்கள் சிக்கல். வருகிறது, போகிறது என்றால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. வராமல் இருப்பதற்கும், போகாமல் இருப்பதற்கும் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார். அந்த குரு புரிந்து கொண்டார், புன்னகைத்தார், உடனே மரணமடைந்தார். உண்மைதான், உண்மையிலேயே வருவது, போவது என்பதே இல்லை. அது ஒரு மாயை, ஒரு பெரிய வேடிக்கை. அரங்கேறிக் கொண்டேயிருக்கிற வேடிக்கை. இருப்பது போல் இருக்கும். ஆனால் இல்லை. எனவே வருவதற்கும், போவதற்கும் நீங்கள் அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதனால் இப்போது இங்கே எதையும் பற்றிக் கொள்ளாமல் இருக்க முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? வருவதற்கும், போவதற்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தால் இங்கே இருப்பது மிக முக்கியமாகிவிடும். இதுதான் இயல்பு. எனவே பற்றுதல் தோன்றிவிடும். எனவே நீங்கள், “எது எங்கே போகிறது, என்ன நடக்கிறது” – இந்த அபத்தங்களை எல்லாம் விட்டுவிடுங்கள். போவதற்கு என்று எந்த இடமும் இல்லை. அப்படியே கரைந்து போய்விட வேண்டும். செய்வதற்கென்று எதுவும் இல்லை. வெறுமனே இருங்கள் போதும். கேள்வி செய்வதற்கு எதுவுமே இல்லையென்றால் இந்த ஆன்மீகப் பயிற்சிகள் எதற்கு? இதில் ஏன் எங்களைத் தீவிரமாக ஈடுபடுத்துகிறீர்கள்? சத்குரு: ஓ! செய்வதற்கு எதுவும் இல்லையென்றால் ஏன் இரவு, பகல் எங்களை இப்படி தொந்தரவு செய்கிறீர்கள் என்கிறீர்களா? செய்வதற்கு எதுவும் இல்லை என்பதல்ல பொருள். உங்கள் இயல்பு செயல்தான். ஏனென்றால் இங்கு எப்போதுமே செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் நீங்கள் இல்லை. எப்போதுமே செய்வதற்கு ஏதாவது இருக்கிறது. எதையாவது செய்தாக வேண்டும் என்கிறபோது எதையோ செய்வதற்கு இதையாவது செய்யுங்கள் என்பதுதான் பயிற்சிகளின் நோக்கம். எப்படியும் எதையாவது செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். நீங்கள் எங்கே போனாலும் சரி, இமாலயத்துக்குப் போனாலும் சரி, சென்னைக்குப் போனாலும் சரி, இல்லை ஈஷாவில் இருந்தாலும் சரி எதையாவது செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். உடலளவில் செய்யாவிட்டாலும் மனதளவிலாவது செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள். எனவே உங்கள் வளர்ச்சிக்கு வழி செய்கிற செயலை உங்களுக்குத் தரலாம் என்று முடிவு செய்தோம். அதனால்தான் இவ்வளவு செயல்களும் பயிற்சிகளும். இல்லையென்றால் இந்த செயல்களுக்கென்று எந்த அர்த்தமும் இல்லை. எந்த செயல் உண்மைக்கு மிக அருகில் உங்களை எடுத்துச் செல்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. பிற செயல்கள் உங்களை வேறு எங்காவது எடுத்துச் செல்லலாம். குறைந்தது இந்த செயலாவது உண்மைக்கு சற்று நெருக்கமாகக் கொண்டுவரும். இதுதான் யோகாவின் முழு நோக்கமே.