வெள்ளி, 18 டிசம்பர், 2015

உணர்வில் உணவின் தாக்கம்

குரு நானக் தமது சுற்றுபிரயாணத்தில் எம்னா-பாத் என்ற கிராமத்தை அடைந்தார். அவரோடு பாயி-மர்தானா வும் உடன் இருந்தார். அந்த ஊரில் பாயி-லாலோ என்ற தச்சன் வசித்து வந்தார். அவருக்கு பச்சிலைகளை வைத்து செய்யும் மருத்துவமும் ஓரளவுக்கு தெரிந்திருந்தது. அவரது எளிமையும் நேர்மையும் பக்தியும் கண்டு அவரோடு சில காலம் தங்கினார் குரு நானக். அவர் நானக் கை விட பதினேழு வருடங்கள் பெரியவர். சீக்கிய மதத்திற்கு அடிக்கல் இவருடைய வீட்டில்தான் நாட்டப்பட்டது என்றும் சொல்லப்படுவதுண்டு. இன்றைய பாகிஸ்தானத்தில் இருக்கும் அவர் வீடு சீக்கியர்களுக்கு ஒரு புனித யாத்திரை தலமும் ஆகும்.

அதே ஊரில் 'மல்லிக் பாகோ' என்ற நிலசுவான்தாரும் வசித்து வந்தார்.அவர் பதானி நவாப்பின் அரசில் ஒரு முக்கிய அதிகாரியும் கூட. உயர்குடியை சேர்ந்தவர். ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் ஒரு பெரும் விருந்து வைத்தார்.குருநானக்கிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. நானக்~கைப் பற்றி பலவிதமாகக் கேள்விப்பட்டிருந்த பாகோ விற்கு இது அதிசயமாகப் பட்டது. பாகோநானக் கை தேடி வந்து கேட்கலானார்.

“ஐயனே உயர்குலத்தில் பிறந்து, பலருக்கும் ஆன்மீக குருவான நீங்கள் கீழ்குலத்தில் பிறந்த லாலோ வுடன் ஏன் இருக்க வேண்டும் ?”

“அன்பரே, நான் குலங்களும் மதங்களும் பார்ப்பதில்லை.எனக்கு யாவரும் ஒன்றே. நான் எளிய உணவையே விரும்புபவன். அதனால்பாயி லாலோவுடன் தங்கினேன்”

“லாலோ படைத்த உணவை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் என் வீட்டு விருந்தை புறக்கணிக்கும் காரணத்தை அறியலாமா?” “அவசியம் தெரிய வேண்டுமா ?”
“ஆம்”
“உங்களுக்கு அவ்வளவு விருப்பமென்றால் சிறிது வரவழையுங்கள்” என்று மல்லிக் பாகோவிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த உயர்ந்த விருந்து வந்து சேரும் முன்னரே லாலோவின் வீட்டிலிருந்தும் சிறிது உணவை கொண்டு வரச் செய்தார்.
இரண்டும் வந்தததும் ஒரு கையில் லாலோவின் வீட்டு உணவையும் மற்றொன்றில் பாகோ வீட்டு உணவையும் எடுத்துக்கொண்டு பிழியும் வகையில் கைகளைப் பிசைந்தார். சுற்றியிருந்த அனவரும் ஆச்சரியப்படும் படியாக லாலோ படைத்த உணவில் பால் துளிகளும்பாகோ படைத்த உணவில் இரத்தமும் சொட்டத் தொடங்கின.
மல்லிக் பாகோ விற்கு முகம் வாட்டமடைந்தது.
“குருவே ஏனிந்த கண்கட்டு வித்தை. என்னை இப்படி அவமானத்திற்கு ஆளாகும்படி செய்ய என்ன தவறு செய்தேன்?”
“அன்பிற்குரிய பாகோ!
உன்னை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. நீ உண்மையை அறிய விரும்பியதால் உனக்கு அதைக்காட்ட முனைந்தேன். லாலோ கடும் உழைப்பாளி. தனக்கு நேர்மையாக வரும் கூலி மூலம் குடும்பம் நடத்தி வருகிறான். அதனால் அவன் தந்த உணவிலிருந்து பால் வெளிப்பட்டது. ஆனால் உன் விஷயத்திலோ உன் செல்வம் நேர்வழியில் வந்ததல்ல. உன் நிலங்களில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நீ தகுந்த முறையில் கூலியும் கொடுப்பது கிடையாது. அவர்களின் ரத்தத்தில் தோன்றியது உன் வசதிகளும் ஆடம்பரங்களும். ஆகவே தான் உன் வீட்டு உணவில் இரத்தம் வெளிப்படுகிறது” என்று விளக்கினார். பேச்சற்று நின்றார் மல்லிக் பாகோ.
குருவினுடைய கூற்றை உண்மையாக்கிக் காட்டினார் குரு நானக். ஆம், கபீர்தாஸரை நானக்கின் குரு என்று கூறுவோர் உளர். இன்னும் சிலர் அவர்கள் சந்தித்துக் கொண்டதே இல்லை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சீக்கியர்களின் கிரந்த சஸாஹேப் எனப்படும் புனித நூலில் கபீரின் 541 ஈரடிகளும் பாடல்களும் உண்டு. கிரந்தஸாஹேப்~ல் இல்லாத ஈரடிகளை கபீரது மூல ஈரடிகள் அல்லவென்றும் பிற்சேர்க்கையெனவும் கொள்வோர் உளர். அந்த அளவிற்கு கபீரின் போதனைகளுடன் ஒன்றியிருந்தார் குரு நானக்.

இப்போது கபீரின் அந்த ஈரடியைக் காண்போமா?


பாலொக்கும் தானே வந்தது,நீரொக்கும் இரந்து பெற்றது 
ஒறுத்து ஆர்தல் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது
.

(ஒக்கும் = போல;ஒறுத்து =துன்புறுத்துதல்;ஆர்தல்= அனுபவித்தல்,புசித்தல்,குடித்தல்; செந்நீர்= இரத்தம்; கேண்மினோ =கேட்பீரே)
மாற்று :
வழிமுறை வந்தது பாலொக்கும், நீராகும் இரந்து பெற்றது 
வலித்து புசிப்பின் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது


(வழிமுறை =முறையான வழி, தர்மத்திற்குட்பட்ட வழி; வலித்து =துன்புறுத்தி 
)

உடல் வளர்ச்சியைப் போலவே ஆன்ம வளர்ச்சியும் இன்றிமையாதது. இதை அருட்செல்வம் என்பார் வள்ளுவர்.
"அருட் செல்வம் செல்வத்துள் செல்வம்...." என்று குறிப்பிடுகிறார். பால் உடலின் வளர்ச்சிக்கு ஊட்டம் தருவது. அருட்செல்வம் ஆன்மாவிற்கு ஊட்டமாகும்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும்; திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள் (754)'


என்ற குறளில் தீய வழியில் அல்லாமல் முறையறிந்து நேர்மையாக செயல் புரிந்து தேடிய செல்வம் நன்மையும் மகிழ்ச்சியும் தரும் என்கிற கருத்தை பார்க்கிறோம்.லாலோ போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள். எனவே குருஅருளுக்கு முழுவதும் தகுதியானவர்கள்.

ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் பிறன்கையை எதிர்பார்க்காமல் வாழ்க்கையை நடத்தமுடியாமல் போய்விடுவதுண்டு.அத்தகைய நிலைமையில் பிறரிடமிருந்து பெருகின்ற உதவி ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக உதவாவிட்டாலும் பாதை பிறழாது இருக்கலாம். எப்படி குடிநீரில் ஊட்டச்சத்து இல்லாவிடினும் அது உடலுக்கு அத்தியாவசியமோ அது போல சமுதாயத்தின் இயக்கத்திற்கு இரத்தலும் ஈகையும் ஒரு முக்கிய அங்கம்.

துறவிகளும், வறியவர்களும் அபலைகளும் இரத்தல் மூலமே ஈகைக்கான வாய்ப்பை பிறருக்கு அளிக்கிறார்கள்.
இதை திருவள்ளுவரும் அங்கீகரிக்கிறார்.

இரக்க இரக்கத்தக்கார்க் காணின், கரப்பின்அவர்பழி; தம்பழி அன்று (1051)
[யாசித்தலுக்கு ஏற்றவரிடம் சென்று யாசிக்கலாம்.அவர் மறைத்து இல்லை என்றால் அது அவருக்கே பழியாகும்,யாசிப்பவருக்கு இல்லை]
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள் வைப்புழி (226)
[பொருளற்ற ஏழையின் கடும்பசியைத்தீர்ப்பதே தன் செல்வத்தை தனக்குப்பின் உதவுவதற்காக சேர்த்து வைக்கும் சிறந்த இடமாகும். ]
பாலும் நீரும் உடலுக்கு இன்றியமையாதது போல ஈகையும் இரத்தலும் உலகில் அற வாழ்க்கைகு இன்றியமையாதது.

ஆனால் பிறரை துன்புறுத்தி பயனடைபவர் போக்கு அசுரகுணத்தை சேர்ந்தது. அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவை பிறரின் இரத்தத்தை குடிப்பதற்கு சமானமாக சொல்கிறார் கபீர்.

குருநானக் இந்த நிகழ்ச்சி மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எவனொருவன், பாகோ போன்ற சித்தசுத்தி இல்லாதவர் கையால் உணவை ஏற்பானோ அவனது சித்தமும் அன்னமிட்டவனின் சித்தத்தைப் போலவே அசுத்தம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. (இதை எழுதும்போது இதை ஒட்டிய இன்னொரு கதையும் நினைவுக்கு வருகிறது. பதிவின் நீளம் கருதி அதை பின்னொரு சமயம் பார்ப்போம்).
நம் எண்ண அதிர்வுகள் எந்த அளவுக்கு பிறரை பாதிக்கக்கூடும் என்பதையும் அதன் காரணமாக நல்ல எண்ணங்களை வளர்ப்பதிலும் காப்பதிலும் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பும் இதன் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறார் மகான் குரு நானக்.