வியாழன், 31 டிசம்பர், 2015

மனம் ஒருநிலைப் பட தியானமே முக்கியம்


தியானம் செய்ய வேண்டும் என்றால், மனம் ஒருநிலைப்பட வேண்டும். மனம் ஒருநிலைப்பட வேண்டும் என்றால், உடம்பைப்பற்றியும் உயிரைப்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். நமது தோற்றமே ஆண் பெண்ணின் காமத்தின் சேர்க்கையால் வந்ததாகும். ஆகவே, நமக்குக் காம விகாரம் இருப்பது இயல்பே. இந்த காம விகாரம் தணிவதற்கு, புனிதத் தலங்கள் சென்றாலோ, புனித நீராடினாலோ தணியாது. அதற்குத்தான் பெரியோர்கள் ஆண் பெண் சேர்க்கையாக இல்லறம் அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆண் பெண் சேர்க்கையாகிய இல்லற ஈடுபாடு இல்லையென்றால், உடம்பு கெட்டுவிடும். இல்லறத்தில் ஈடுபட்டவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபடாவிட்டால் உடல் உஷ்ணம் மிகுதியாகும், மலச்சிக்கல் ஏற்படும், இரத்த சுத்தி ஏற்படாது, மூளையும் வேலை செய்யாது, கண் எரிச்சல் ஏற்படும்.
எனவே, இயற்கையின் படைப்பே பெண்பாலையும் ஆண்பாலையும் சேர்த்தே தோற்றுவித்திருக்கிறது. உடம்பும் உயிரும், ஆண் பெண் சேர்க்கையில் வந்தது என்று அறிந்து அதன் போக்கிலேயே சென்று, தினமும் காலை 5 மணிக்கே எழுந்து காலைக்கடன் முடித்துவிட்டு 10 நிமிடம் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்து, பிறகு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்றும், மனம் ஒருநிலைப்பட்டு உமது திருவடியைப் பற்றி தியானிக்க வேண்டும் என்றும், உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்து கொள்ள அருள் செய்ய வேண்டும் என்றும், உடல் மாசு பற்றி அறிந்து, உமது திருவருள் கடாட்சத்தால், உடல்மாசு நீங்க அருள் செய்ய வேண்டும் என்றும், உயிராகிய ஆன்ம ஜோதியைக் காண வேண்டும் என்றும், ஆன்மஜோதியைக் காண்பவர்கள் தான், ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகும் என்பதை அறிந்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள் என்பதை உமது திருவருளால் அறிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையை நன்கு உணர்ந்த ஆன்மீகவாதிகள், இல்லறமே நல்லறம் என்று சொல்வார்கள். ஏனென்றால், ஒருவன் வீடுபேறு அடைய வேண்டுமென்றால், இருபது வருடம் ஆகலாம். இல்லறம் தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றத் துணையாக இருக்கும். இயற்கையைப் பற்றி அறியாதவர்களோ, பிரம்மச்சாரியம் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்கள். பாச பந்தம் கூடாது என்பார்கள். இதை நம்பி, ஆண்களும் பெண்களும் சிலர் இளம் வயதிலேயே துறவு மேற்கொள்வார்கள். வாழ்க்கை முழுவதும் மனப் போராட்டமாகவே இருக்கும். அவர்களால் மன ஒருநிலையோடு தியானமும் செய்ய முடியாது, தர்மமும் செய்ய முடியாது. ஆகவே வாழ்நாள் முழுவதையும் வீணாக்கிக்கொள்வார்கள்.
எனவே, துறவை விரும்புகிறவர்கள், சுத்த ஆன்மீகவாதிகளிடம் சென்று உபதேசம் பெறவேண்டும். அப்படிபெற வாய்ப்பில்லையென்றால் "ஒம் அகத்தீசாய நம" என்று காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் நாமஜெபம் செய்தால் ஆசான் சற்குருநாதராகிய அகத்தீசர் உணர்வோடும் உணர்ச்சியோடும், நாடி நரம்புகளில் சார்ந்திருந்து நமக்கு ஆசானாக இருந்து உணர்த்துவார்கள். இதுவே முக்தியடைவதற்கு உற்ற துணையாக இருக்கும். இதை விட்டு விட்டு போலி ஆன்மீகவாதிகளிடம் சென்றால், பந்த பாசம் கூடாது என்பார்கள், பட்டினி கிடக்கவேண்டும என்பார்கள், பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பார்கள்;; ஊர் ஊராகச் சுற்றச் செய்வார்கள். உனக்கு உள்ள சொத்துக்களை எல்லாம் என்னிடம கொடு என்பார்கள், நமது பாவச் சுமை எல்லாம் பூரணமாக வாங்கிக் கொள்வார்கள். நாமும் தெளிவடைய முடியாது, ஏமாற்றப்படுவோம், அவர்களும் தேறமாட்டார்கள்.
தியானம் செய்யும் முறை
தியானம் செய்யவேண்டும் என்றால், சமமான இடத்தில் வெண்ணிறத் துணியை விரித்து, அதன்மேல் அமர்ந்து நாமஜெபம் செய்ய வேண்டும். அங்கு கொசு, எறும்பு, ஈ, புகை மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. நறுமணம் உள்ள பத்தி இருக்கவேண்டும். முடிந்தால் திருவிளக்கு வைத்துக்கொள்ளலாம். இங்கு திசை முக்கியமல்ல. பக்திதான் முக்கியம். காலை மாலை உறுதியாகத் தியானம் செய்கின்ற மக்களுக்குத் தன்னிடம் உள்ள குணப் பண்புகளைப் பற்றியும், குணக்கேடுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். நமது மனமே, நம்மைப் பற்றி உயர்த்தியே எண்ணிக் கொண்டிருக்கும். இது பாவத்தின் சின்னமாகும். இந்த விபரங்கள் யாவும் சித்த புருஷர்கள் சொல்லியிருப்பவை...
தினமும் தியானம் செய்யச் செய்யத்தான் நம்மிடம் "யான்" என்ற கர்வம் உள்ளதா? பொறாமை உள்ளதா? பேராசை உள்ளதா? ஜாதிவெறி உள்ளதா? மதவெறி உள்ளதா? வஞ்சனை உள்ளதா? பழிவாங்கும் எண்ணம் உள்ளதா? லோபித்தனம் உள்ளதா? பிறரை மதிக்கக் கற்றுக்கொண்டோமா? இன்னும் அநேக பலஹீனங்களைப்பற்றியும் அறிந்துக்கொள்ள முடியும். தியானம் செய்யாவிட்டால், நமது மனம் நம்மை உயர்த்தியே எண்ணி, நரகத்தில் தள்ளிவிடும். எனவே, அன்னதானம் செய்வோம். தினமும் அகத்தீசனைக் குறித்து தியானம் செய்வோம். அகத்தீசன் ஆசி பெறுவோம். இன்புற்று வாழ்வோம்.