வெள்ளி, 15 ஜனவரி, 2016

கண் திருஷ்டிகள் அகலும்.

 

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

பொதுப்பொருள்: சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்க ளைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.
(தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.)

புத்தரின் பொன்மொழிகள்



உங்களுக்கு நீங்களே ஒளியேற்றிக் கொள்ளுங்கள் இப்படி முற்படுகையில் முன்னோர்கள் சொன்னது முன்னோர்கள் நடந்தது முன்னோர்கள் எழுதியது என்று கூறி அறிவுக்கு மாறானவைகளை ஏற்றுக் கொள்ளாதிர்கள்

மற்றவர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் அப்படியே தடுமாறாதீர்கள் மற்றவர்களின் அனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கருதாதிர்கள் மாறாக உங்கள் அனுபவம் என்பதே மிக முக்கியம் அதைப் பயன் படுத்துங்கள்

சாஸ்திரங்கள், சடங்குகள் என்ற மூட்டைகளை உங்கள் முதுகிலோ, மூளையிலோ ஏற்றிக்கொண்டு வாழ்க்கை பயணத்தில் மூச்சுத் தி
றலால் அவதியுறாதிர்கள் தன் முனைப்பு என்ற மூட்டையும் மிகவும் பெருத்த சுமையே.

இவைகளை எல்லாம் களைந்து விட்டு மென்மையானதாக உங்களை ஆக்கிக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் எளிதாக அமையும் தோல்விகளும் துன்பங்களும் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ள ஏதுவாகும். 

வியாழன், 14 ஜனவரி, 2016

அகத்தியரை பற்றி மகான் புலத்தியர் இயற்றிய செய்யுள்!



குருவடி பெற்றாள் சரண் சரணம்
கும்ப முனியே  சரண் சரணம்
திருவடி நாதா சரண் சரணம்
சித்தர்களின் அருளே சரண் சரணம்
அருள் வடிவானாய் சரண் சரணம்
அமரர்களே கோவே சரண் சரணம்
பொருளடி மூலங் காட்டிஇற்று போதித்த குருவே சரண் சரணம்
போதித்த குருவே சரண் சரணம் பொதிகைவளர் அம்பலர் சரண் சரணம்
வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம் 
மெய்ஞானம் சாதித்த தேவே சரண் சரணம்
சமுசயந் தீர்த்தாய் சரண் சரணம் 
ஓதித்தருள்வாய் சரண் சரணம்
உண்மைப் பொருளே சரண் சரணம்


மகான் புலத்தியர்

சனி, 2 ஜனவரி, 2016

கஞ்சமலை அதியமானும் நெல்லிக்கனியும்


இவர் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.
அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய 
புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. 
திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன
அதியமான்  ஒளவையாரிடம்  கொண்ட  அன்பினை  எடுத்துக்  காட்டும்  நிகழ்ச்சிகளிலேயே  மிகச்  சிறந்த  நிகழ்ச்சி  ஒன்று  உண்டு.  அதுதான்  நெல்லிக்கனி  அளித்த  செயல்.  அதியன்  மிகவும்  பாடுபட்டுப்  பெற்றது   கரு நெல்லிக்கனி.  அதனை  உண்டவர்  நீண்ட  நாள்  வாழ்வார்கள்  என்னும்  சிறப்பினைப்  பெற்றது  அக்கனி.  அத்தகு  கனியைத்   தான்  உண்ணாது  ஒளவைக்குக் கொடுத்தான்  அதியன்.
அது இந்த மலையில் உள்ள கரும்பாறை பகுதியில் இருந்து 
எடுக்கப்பட்டது.

திருவள்ளுவர் ஞானம்

காப்பு


அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!

அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி

ண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1
கட்டளைக் கலித்துறை
அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்
நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன்
என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1
அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலகத் தார்வசிய மாய்க்கைப் பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2
தரவு கொச்சகம்
அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3
வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4
கட்டளைக் கலித்துறை
வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து
நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன
காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5
ஏழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6

எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி
உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண்
டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7

யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8

நேரிசை வெண்பா
இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9
ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்தரச முண். 10
சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்ன எய்துமாறு - சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண். 11
வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
பாலுமது நெய்யெனவும் பார். 12
முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13
காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண். 14
கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன். 15
என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா யானுணரு மெய். 16
உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
சொற்பாயும் வாசியில் தேகம். 17
அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி. 18
எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி போசைவிதி யுன். 19
(முடிந்தது)

வெள்ளி, 1 ஜனவரி, 2016

கஞ்சமலை:கரடி சித்தர்

கரடி சித்தர் என்பவர் காலங்கிநாதர் தான். அவர் இந்த பகுதியில் கரடி உருவம் எடுத்து அடிக்கடி இங்கு உலவிக்கொண்டு இருப்பார்.  இந்த ஊரையாண்ட சிற்றரசனின்  மகள் ஒரு ஏழையை விரும்பினாள்,அதனால்  அவன் மகளை ஒரு ஏழைக்கு கல்யாணம் செய்து தரமுடியாது என்பதற்காக அவனை இந்த பகுதியில் உள்ள புலியை வேட்டையாடினால் தன் மகளை திருமணம் செய்து தருவதாக  வாக்களித்தான். அதற்கு சாட்சியாக அங்கு உலவிகொண்டிருந்த கரடியை பார்த்து இது தான் சாட்சி என்றான் . கரடி வந்து சாட்சி சொல்லாது என நினைத்து கூறினான். சொன்னபடியே  புலியை வேட்டையாடி வெற்றி கொண்டான். ஆனால் மன்னன் தன் மகளைத் தர முடியாது என்றான். இதற்கு யார் சாட்சி என்று கேட்க ஏழை அதிர்ந்து போனான், உடனே நான் தான் சாட்சி என்றது ஒரு குரல்  பார்க்க ஜடாமுடியுடன் ஒரு முனிவர். யார் நீ? என்றார் அரசர், நான் தான் காலாங்கி இந்தமலையை  வளம் வருபவன்.  நீ சாட்சியாக கூறியபோது நான் கரடி உருவில் இருந்தேன் என்றார். உடனே கரடியாக உருமாறினார் பின் மன்னன் மனம் வருந்தி தன்  மகளை ஏழைக்கே மணம் முடித்து வைத்தான். அன்று முதல் இவரை  அங்கு கரடி சித்தர் என்று எல்லோரும் அழைத்தனர் மேலும் இவரை கஞ்சமலையான் என்றும் அழைப்பர் . 

கஞ்சமலை ஒரு அறிமுகம்!

கஞ்சமலை இது ஒர் அதிசயமலை பலருக்கும் தெரியாத ஒரு மலை. சித்தர்கள் வாழ்ந்த மலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை.
இது கொல்லிமலையின் ஒரு பகுதியாகும்.
இங்கு பதினெட்டு சித்தர்களுள் முதன்மையானவர்களான திருமூலர், காலங்கிநாதர்,அகத்தியர்,கோரக்கர் ஆகியோர் வாழ்ந்த மலையாகும்
மேலும் இது பல சிறப்புகளையுடையதாகும். அது பற்றி இனி நாம் பார்க்கப் போகிறோம். பலரும் கொல்லிமலை,கல்வராயன்மலை,

பர்வதமலை,பொதிகைமலை,சதுரகிரி என பல மலைகள் பற்றி கூறியிருக்கிறார்கள், ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக கூறவில்லை. அதனால் இதன் சிறப்புகள்,அமைவிடம்,வரலாறு,
மூலிகைகள் ஆகியவற்றை பற்றி கூறுகிறேன். இதில் தவறு இருப்பின் தாங்கள்  தாராளமாக சுட்டிக் காட்டலாம் மேலும் சித்தர்கள் ஆசிர்வாதத்துடன் இதை பதிவு செய்கிறேன்.
இதன் சிறப்புகள் பற்றி இன்று பார்ப்போம்:

காலங்கிநாதரின் குருபக்தியை திருமூலர்  கண்டது இந்தமலையில் தான்.  அவ்வையாருக்கு அதியமான் நெல்லிகனிகொடுத்ததும் இங்கு தான், அது விளைந்த இடமும் இங்கு தான். அங்கவை,சங்கவை திருமணம்நடந்ததும்,
அகத்தியர் இங்கிருந்து பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், போகலாம் எனவும்அவரே குறிப்பிடுகிறார்.
சிவனும்,பெருமாலும் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும். 
 சுலுமுனை சித்தர் குகை,  அகத்தியர்குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது.
சித்தர் பீடம், 77அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் சிலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

குருவைத் தேடி....

 "குரு பரம்பரை" என்கிற இந்த ஒற்றை தத்துவத்தின் மீது கட்டமைந்ததுதான் சித்தரியல்.  இங்கே குரு ஆதியும், அந்தமும் ஆனவர். அவருக்கு மிஞ்சியது என எதுவும் இல்லை. எல்லாம் அவரால் ஆனதே, அவரன்றி ஓரணுவும் அசையாது என்பதைப் போன்ற ஆழ்ந்த சத்தியமான கருத்தாக்கங்களின் வழி நிற்பதுதான் நம் சித்தர்களின் பாரம்பரியம். இந்த அடிப்படைகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை. ஆதி குருவான சிவனில் துவங்கி அவருடைய அணுக்க சீடர்களின் வழி வந்தவர்களே நம் சித்தர் பெருமக்கள். 

இப்போதெல்லாம் தெருவுக்கு நாலு குருமார்கள் விளம்பர பதாகைகளோடு வலிய வந்து ஞானம் தரவும், தீட்சை கொடுக்கவும்  தயாராக இருக்கின்றனர். என்ன அவர்கள் வசூலிக்கும் தட்சிணைதான் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. இத்தகைய குருமார்களின் வேடம் கலைகிற போது மட்டுமே நாம் மெய்யான குருவைப் பற்றி யோசிக்கவும், தேடவும் விழைகிறோம்.  மெய்யான குரு என்பவர் யார்?, அவர் எங்கிருப்பார்? அவரை எப்படித் தேடி கண்டறிவது? என்கிற கேள்வியும் குழப்பமும் நம்மில் அநேகருக்கு உண்டு.

மெய்யான குருவை கண்டறிவது என்பது ஒரு வகையான வாழ்நாள் பயணம். நம்மில் பலரும் இப்படி மெய்யான குருவை தேடிக் கொண்டிருப்பவர்கள்தாம். குருவை தேடிக் கண்டு பிடிக்கும் இந்த பயணத்தை எப்படித் துவங்குவது அல்லது எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில்தான் பலருக்கும் குழப்பம் வருகிறது. இதற்கு நம் முன்னோர்கள் எளிய தீர்வினை அருளியிருக்கின்றனர். 

ஆம் மிக எளியவழி. அது இதுதான்  "மாதா, பிதா, குரு தெவ்யம்" . ஆம் நம் பெற்றோரே நமது முதல் குரு,  இதை உணர்ந்து நம் தாய் தந்தையரை போற்றிப் பணிந்து  அவர்களின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கும் போது அடுத்த கட்டமாய் மெய்யான குரு நம்மைத் தேடி நம் முன்னே வருவார்.  இத்தகைய வழி நடத்துதலில்தான் நாம் எதைத் தேடுகிறோமோ அதையே அடைகிறோம்.

இந்த எளிய அடிப்படையை புரிந்துணர்ந்து பயணிக்க ஒருவருக்கு மெய்யான குருவின் தரிசனம் கிடைக்கும்.   குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்.  மெய்யான குரு நம் அக இருளை நீக்கக் கூடியவர். இத்தகைய குருவின் உதவியால் நம்மை நாமே உணரத் துவங்கும் போது, நான் என்கிற அகந்தை அழியும் போது நம்மில் மிளிர்ந்திருக்கும் ஒப்பற்ற பரம்பொருளை நாம் உணரக்கூடியவர்களாய் ஆகி விடுகிறோம். இதனையே சித்த நிலை என்கிறோம். தெய்வ நிலை என்பதும் இதுதான்.

மாணிக்க வாசகர் மற்றும் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் இறைவனே குருவாக நேரில் வந்து உபதேசம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவனோ உருவமற்ற சூக்குமமானவர். அப்படி சூக்குமமான நிலையிலிருந்தே ஏன் குரு உபதேசம் செய்யாமல் மனிதவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழுவது இயற்கையே.."ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" என்கின்றன வேதங்கள். கடவுளாக இருந்தாலும் மனித உருவில் வந்து ஆகவேண்டும் என்பதே இதன் பொருள். ஆக சூக்கும வடிவில் இருக்கும் ஒருவர் அது கடவுளாக இருந்தாலும் குருவாக இருந்து போதிக்க முடியாது என்பது இவற்றில் இருந்து தெளிவாகிறது. 

சித்தரியலிலும் சூக்கும நிலையில் இருந்து எந்த குருவானவரும் போதித்ததாக எந்தவித குறிப்புகளும் கிடைக்கவில்லை. மாறாக ஜீவ சமாதி அடைந்த ஒரு சித்தர் அதிலிருந்து மீண்டுவந்து உபதேசம் செய்து பின்னர் வேறொரு இடத்தில் மீண்டும் ஜீவ சமாதியடைந்ததாக குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. 

அந்தவகையில்அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் குருவானவரை அணுகி பயனடையும் வழிவகையை விளக்குகிறார்.

பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.

திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே

கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு

பல நூல்களைத் தேடிப் படித்து அறிந்து பக்குவமடைய நமது வாழ்நாள் போதாது அதனால் சிறுவயது என்றாலும் கூட மகத்தான் குருவை தேடியடைந்து, அவருக்கு அணுக்கமாய் இருந்த்  அவர் மனம் கோணாதபடி நடந்து கொண்டு அவரிடம் கற்கவேண்டும் என்கிறார்.  அப்படி இருந்தால் மட்டுமே குருவானவர் சிவ சக்தி தீட்சை தந்து, சிறப்பான ஆதி அந்த திறன் எல்லாம் உபதேசிப்பாராம். சகல கலை செய்திகள் முதல் மௌனத்தின் திறங்கள், நிஷ்டை முறைகள், காயகற்ப வகைகள் என அனைத்தும் உபதேசிப்பாராம். அத்துடன் செய்த நன்மைகள் அதனால் கிடைக்கும் பலன்கள் முதல் கர்ம வினைகள் நீக்குவதற்கான வகைகளை சொல்லி சமாதி நிலைக்கும் வழிகாட்டுவாராம் என்கிறார். 
இப்படி நேரடியாக குருவுடன் இருந்து கற்றால் குருவானவர் கருணையுடன் எல்லாம் சொல்லிதருவாராம். அதனால் காயசித்தியும், புத்திக்கூர்மையும், பேரானந்த நிலையும் கிடைப்துடன் புருவ மத்தியில் தீப ஒளியையும் காணலாமாம். என்கிறார். அந்த வகையில் இந்த பதிவினை எல்லாம் வல்ல குருவுக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.