வியாழன், 24 மார்ச், 2016

சனீஸ்வரனின் தொல்லைகள் நீங்க....

சனிக் கிரகத்தினால் ஏற்படும் ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி மற்றும் கண்டச் சனியினால் பாதிப்புக்கு ஆளாயிருப்பவர்கள் இந்த பதிகத்தை தினம் தோறும் இடை விடாது படித்தால் சனிதிசையின் தாக்கம் முற்றிலும் நம்மை அண்டாது என்பதில் ஐயமில்லை..     
 திருச்சிற்றம்பலம் 
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த 

நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. 2
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. 3
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. 4
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. 5
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. 6
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 7

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி

நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. 8
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. 9
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 10
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே. 11
திருச்சிற்றம்பலம் 

வெள்ளி, 18 மார்ச், 2016

அங்கவை சங்கவை திருமணம்

மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர். மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. வஞ்சனையே உருவான மூவேந்தரும் வஞ்சகத்தால் பாரியை வீழ்த்த எண்ணினர். போரை விரும்பாத பாரிவள்ளலிடம் கூத்தர் போல் வந்து வஞ்சனையாக அவன் உயிரைக் கவர்ந்தனர்.பாரி கொல்லப் பட்டதும் பறம்பு மலை மூவேந்தர் வசமாயிற்று. பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியுடனேயே உயிர் விடத் துணிந்தார். ஆனால் தன் இரு பெண்களையும் கபிலர் வசம் ஒப்படைத்து " இருந்து வருக " எனக் கூறி மடிந்த பாரியின் சொல்லுக்காகத் தன் உயிரைத் தாங்கியிருந்தார். பாரி மகளிரை மணம் செய்து தரும் பொருட்டு பலப் பல மன்னர்களைத் தேடிச் சென்றார். மூவேந்தருக்கு அஞ்சியோ வேறு யாது காரணம் பற்றியோ பாரி மகளிரை மணம் கொள்ள மறுத்தனர் சிற்றரசர்கள். மனமொடிந்த கபிலர் தன் மக்களாகக் கருதிய அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவலூரிலுள்ள ஒரு பார்ப்பனரிடம் அடைக்கலமாகத் தந்து விட்டு வேள் பாரியுடன் சேர்வதற்காக தென்பெண்ணை யாற்றின் கண் வடக்கிருந்து உயிர் நீத்தார். இவர் வடக்கிருக்குங்கால் பாடிய பாடல்கள் புறநானூற்றின் கண் இலக்கியச் சான்றாகத் திகழ்கின்றது.

பாரி மகளிர் திருக்கோவிலூர் பார்ப்பனரிடத்தே அடைக்கலப் படுத்த யாது காரணம்? என நமக்கு ஐயம் தோன்றுவது இயல்பு. அக்காலத்தே பார்ப்பனரிடம் உள்ள பொருளுக்கோ அவரின் அடைக்கலப் பொருளுக்கோ யாதொரு தீங்கும் செய்ய மாட்டார். மகட்கொடை வேண்டி அவரிடத்துச் செல்வதோ போர் தொடுப்பதோ செய்ய மாட்டார். எனவே அவரின் அடைக்கலப் பொருளான பாரிமகளிற்குத் தீங்கு நேராது என எண்ணினார் கபிலர்.

திங்கள், 14 மார்ச், 2016

சுவாமி சிவானந்தரின் பிரார்த்தனை

பூசிக்கத்தக்க புண்ணியமூர்த்தியே

உயிர்கள் அனைத்திலும் உறைபவனே
உனக்கு பலகோடி வணக்கங்கள்
இறைவா நீ இவ்வுலகத்தின் எல்லா பொருள்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ளாய்
இதயத்திலும், மனத்திலும்,புலன்களிலும் ,பிராணன்களிலும் பஞ்சபூதங்களிலும் இடம் பெற்றுள்ளாய் .வலப்புரத்திலே ,இடப்புறத்திலே பின்புறத்திலே,மேற்ப்புரத்திலே
கீழ்புரத்திலே உள்ள எல்லா உயிர்களிடத்தும் நீ விளங்குகிறாய்
என் குருதேவர் வடிவிலும், இவ்வுலகில் உள்ள கண்ணுக்குத் தோன்றும்,
தோன்றா பொருட்கள் அனைத்திலும் நீ அவதாரம் செய்கிறாய்.
ஒ காருண்ய மூர்த்தியே,உனக்கும், உன் வண்ண தோற்றங்கள் அனைத்திற்கும் பணிபுரிய உடல்நலமும் பலமும்,,கொண்ட இன்னுமொரு நாளை நீ அளித்துள்ளாய்
ஆகவே நான் என்றும் நன்றி உள்ளவனாயும் , கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்.
மனித குலத்திற்கு சேவை செய்வதன் மூலம் என்னைப் புனிதப்படுத்திக்  கொள்ள அரியதொரு வாய்ப்பை நீ எனக்கு அளித்துள்ளாய்
நடத்தையிலே கண்ணியமும் பணிவும், மரியாதையும் கொண்டவனாய்
திகழ்வேனாக!
இன்றும், என்றும்,பிறர் மனம் புண்படும்படியோ கோப உணர்ச்சிக்கு ஆளாகும் படியோ என் எண்ணமோ செயலோ அமையக்கூடாது
இரக்கமே உருவான இறைவா!   என்னிடத்தில் உள்ள குற்றங்குறைகள் யாவும் என்னை விட்டு நீங்கட்டும் .
பிரம்மச்சரியம் அஹிம்சை சத்தியம் ஆகிய விரதங்களில்
நான் சிறிதும் தவறாது நிலை பெற்று இருப்பேனாக.
என் இறுதி காலம் வரை கடவுட் பாதையில் நடந்து செல்வேனாக.
என் மனசாட்சிக்கு உண்மையாக பணி புரிவேனாக.
நான் தர்மத்தின் வழி நிற்பேனாக
என் வாழ்வு முடியும் வரை தெய்வ சிந்தனை உடையவர்களின்
கூட்டுறவோடு இருப்பேனாக
.நான் உன்னை நினைக்காத நேரமில்லை.
நான் நினைப்பதெல்லாம் ஒவ்வொருவரது முகத்திலும் நீயாக காட்சியளிக்கவேண்டும்.வேறென்ன வேண்டும்? அய்யனே!
இதனைப் பெற நீ எனக்கு அருள் புரிதல் வேண்டும் ,
பொய்மையினின்றும் உண்மைக்கும் ,இருளிலிருந்து ஒளிக்கும்
அழியும் தன்மையினின்று அழியாத்  தன்மைக்கும் எனக்கு நீ வழி காட்டுவாயாக!
மீண்டும் மீண்டும் உனக்கு என் அன்பு வணக்கங்கள் உரித்தாகுக
காக்கும் கருணாகரனே ! தாழ்வுற்றோரைத் தாங்கும் தயாபரனே !
என் னைக் காப்பாற்று !கரை சேர எனக்கு வழிகாட்டு !அருளொளி கொடு .
நாமெல்லோரும் இன்புற்றிருப்போமாக
தொல்லையிலிருந்தும் , துன்பத்திலிருந்தும் விடுபடுவோமாக !
உலகெங்கும் நீங்கா அமைதியும் அன்பும் நிலவட்டும் !
வாழ்விலே வளம் சுரக்க நலம் செழிக்க , நாமெல்லோரும் நட்புணர்வோடும் ,தியாக உணர்வோடும் ,ஒன்றுபட்டு உழைப்போமாக !
நம் இதயங்கள் இணைந்து வாழட்டும்
நமது நோக்கம் பொதுவாக இருக்கட்டும் .
ஓம் அமைதி . அமைதி . அமைதி