வியாழன், 24 மார்ச், 2016

சனீஸ்வரனின் தொல்லைகள் நீங்க....

சனிக் கிரகத்தினால் ஏற்படும் ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி மற்றும் கண்டச் சனியினால் பாதிப்புக்கு ஆளாயிருப்பவர்கள் இந்த பதிகத்தை தினம் தோறும் இடை விடாது படித்தால் சனிதிசையின் தாக்கம் முற்றிலும் நம்மை அண்டாது என்பதில் ஐயமில்லை..     
 திருச்சிற்றம்பலம் 
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த 

நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. 2
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. 3
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. 4
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. 5
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. 6
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 7

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி

நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. 8
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. 9
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 10
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே. 11
திருச்சிற்றம்பலம்