வெள்ளி, 18 மார்ச், 2016

அங்கவை சங்கவை திருமணம்

மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர். மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. வஞ்சனையே உருவான மூவேந்தரும் வஞ்சகத்தால் பாரியை வீழ்த்த எண்ணினர். போரை விரும்பாத பாரிவள்ளலிடம் கூத்தர் போல் வந்து வஞ்சனையாக அவன் உயிரைக் கவர்ந்தனர்.பாரி கொல்லப் பட்டதும் பறம்பு மலை மூவேந்தர் வசமாயிற்று. பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியுடனேயே உயிர் விடத் துணிந்தார். ஆனால் தன் இரு பெண்களையும் கபிலர் வசம் ஒப்படைத்து " இருந்து வருக " எனக் கூறி மடிந்த பாரியின் சொல்லுக்காகத் தன் உயிரைத் தாங்கியிருந்தார். பாரி மகளிரை மணம் செய்து தரும் பொருட்டு பலப் பல மன்னர்களைத் தேடிச் சென்றார். மூவேந்தருக்கு அஞ்சியோ வேறு யாது காரணம் பற்றியோ பாரி மகளிரை மணம் கொள்ள மறுத்தனர் சிற்றரசர்கள். மனமொடிந்த கபிலர் தன் மக்களாகக் கருதிய அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவலூரிலுள்ள ஒரு பார்ப்பனரிடம் அடைக்கலமாகத் தந்து விட்டு வேள் பாரியுடன் சேர்வதற்காக தென்பெண்ணை யாற்றின் கண் வடக்கிருந்து உயிர் நீத்தார். இவர் வடக்கிருக்குங்கால் பாடிய பாடல்கள் புறநானூற்றின் கண் இலக்கியச் சான்றாகத் திகழ்கின்றது.

பாரி மகளிர் திருக்கோவிலூர் பார்ப்பனரிடத்தே அடைக்கலப் படுத்த யாது காரணம்? என நமக்கு ஐயம் தோன்றுவது இயல்பு. அக்காலத்தே பார்ப்பனரிடம் உள்ள பொருளுக்கோ அவரின் அடைக்கலப் பொருளுக்கோ யாதொரு தீங்கும் செய்ய மாட்டார். மகட்கொடை வேண்டி அவரிடத்துச் செல்வதோ போர் தொடுப்பதோ செய்ய மாட்டார். எனவே அவரின் அடைக்கலப் பொருளான பாரிமகளிற்குத் தீங்கு நேராது என எண்ணினார் கபிலர்.