செவ்வாய், 31 ஜனவரி, 2017

வாசி யோகம் என்னும் சிவயோகம்


ஞானம் என்பதை உணர முடியுமே அன்றி இன்னதென்று சொல்ல முடியாதது ஆகும். அது சாகாக்கல்வி ஆதலால் உடனேயே எடுத்தவெடுப்பில் அறிய முடியாத ஒரு இரகசியம் ஆகும்.பலர் யோகங்களைப் பற்றி தங்களுக்கு அறிந்தவையையே முதன்மைப் படுத்தி வருகிறார்கள்.அதைப்போல் வாசி யோகத்தைப் பற்றி பலர் பலவிதமாக தங்கள் கருத்துக்களை முன்னிலைப் படுத்துகிறார்கள். சித்தர்கள் கலையான வாசியோகம் மறைபொருளாகவே உணர்த்தப்படுகிறது. தவமியற்ற, தவமியற்ற சாதகனுக்கு அதன் சூட்சுமங்கள் செயலுக்கு வந்துவிடும். மிகப்பெரும் பொறுமை இங்கே தேவைப்படுகிறது.

வாசி யோகம்   சிவயோகம்

வாசி யோகம்  செய்து சித்தர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.
வாசி யோகத்தினால் பல சக்திகளையும் பெற்றார்கள் என்கிறது சுவடிகள். நாமும் செய்கிறோம் வாசி யோகம் நமக்கு ஏன் நடக்கவில்லை ?
காரணம் வாசி யோகத்தை முழுமையாகச் செய்வதில்லை. இதுவே காரணமாகும். நாம் செய்வது வாசியோகமே இல்லை.  வாசியோகம் என்பது ஒரு வீடு மாதிரி.  நாம் வீட்டிற்கு செல்லும் படிக்கல்லில் நின்று விடுகிறோம்.

அப்படி என்றால் இப்ப நாங்க செய்வது வாசி யோகம் இல்லையா?
கண்டிப்பாக மூக்கின் மேல் கை வைத்து செய்வது வாசி யோகத்தின் அடிப்படை.. அதாவது நாடி சுத்தியை மட்டும் தான் விரல் வைத்து செய்ய வேண்டும். விரல் மூக்கின் மேல் வைக்காமல் செய்வதுவே வாசியோகம். 
இன்றும் சிலர் சித்தர்கள் சொன்ன முறையில் வாசி யோகம் 
செய்து நீண்ட காலம் வாழ்பவரும் உண்டு. சக்திகளைப் பெற்றோரும் உண்டு.
ஏன் அவர்களைப் பார்க்க முடியவில்லை?
பார்க்க முடியவில்லை என்பதில்லை. பார்த்திருக்கலாம் அவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. அவர்கள் தம்மைக் காட்டிக் கொண்டால், அவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் என்பதால் காட்டிக் கொள்வதில்லை. 
அவர்களின் பயணத்தைத் தடைப்படுத்தி விடுவார்கள். அதனால் தான் அவர்கள் தம்மைக் காட்டிக் கொள்வதில்லை.

வெறும் வாசியோகத்தின் அடிப்படையை மட்டும் தெரிந்து கொண்டு இன்று யோகி என்றும் ஆசான் என்றும் பிதற்றுகிறார்கள். இது போல உள்ளவர்களுக்கு சித்தர்களின் ரகசியம் ஒருபோதும் கிடைக்காது.
வாசியோகத்திற்குள் அனைத்தும் அடக்கம். வாசியோகம் முழுமையாகத் தெரிந்து கொண்டால், தியானம், தவம்,மந்திரம், யோகா, எனப்  பலவும் சேர்ந்தவையே வாசி யோகம் ஆகும்.
அனைத்திற்கும் வாசியோகமே அடிப்படையாகும். உண்மையான வாசி யோகம் பயிற்சி கொடுப்பவர் சீடனிடம் சித்தர்கள் முறையில் சத்தியப் பிரமாணம் செய்த பிறகே பயிற்சி வழங்குவார்.

இப்படிக் கொடுப்பதே சத்தியத்தின் நியதியாகும்.

"நல்ல குருவைத் தேடுங்கள். சித்தர்களை வணங்குங்கள், நல்லதே நடக்கும்".
” விட்டகுறை இல்லாவிட்டால் தொட்டாலும் வாராது,
தொட்டகுறை இல்லாவிட்டால் சுட்டாலும் வாராது”
இது சித்தர்களின் வாக்கு.. அவர்களைப் புரிதல், அவர்களின் அறிவை ஆராய்தல் என்பது இலகுவானதாக இருக்காது.. காலத்தால் பழகிய விடயங்கள் நம்மை மாற்றத்துக்கு கொண்டு செல்ல விடாது தான்,, ஆனால் அதை மீறி உழைக்க வேண்டும், தேட வேண்டும்.. அப்போது தான் எது இன்பம் என்பது புரியும்..
உலகம் மாயையின் வடிவம் என்கிறீர்கள், மாயை என்பது தானே பரிபாசை.. அதை சரியாகப் புரிந்தால்….. நீங்கள் பிறந்த காரணம் தெரியவரும்…
உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பம்,..
நாம் இதைப் பதிவிடுகின்றோம். 
உங்களைப் பின்பற்றச் சொல்லி நாம் கூறவில்லை.. முடிந்தால் ஆய்வு செய்யுங்கள்.  
உண்மையைத் தேடுங்கள்.. 
உண்மையைத் தேடும் ஆன்மாக்களுக்கு இது புரிந்தால் போதும்..
மாற்றம் என்ற சொல்லை விட மற்ற எல்லாமும் மாறும்..
“மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே
பணியேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே”..

நன்றி!