செவ்வாய், 23 ஜூன், 2020

இறையை நோக்கிய பயணம் .....

"நீ”, “நான்” என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்). அதுவே, மனமடங்கி, எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை ஞானம். அந்த நிலையின் பெயர், சாயுச்சியம். அதாவது, இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல். நாம் முதன்முதலில் அரிச்சுவடி (LKG) படிக்கிறோம். பின்னர் முதல் வகுப்புக்கு வருகிறோம். நம் கல்வியின் திறம் மேம்படுகிறது. ஆயினும், அரிச்சுவடியில் இருப்பவனைப் பார்த்து அவனுக்கு ஒன்றும் தெரியவில்லையென இகழக்கூடாது. முதல் வகுப்பில் படிக்கும்பொழுது, மணலில் வீடு கட்டி விளையாடுகிறோம். ஆனால், ஆறாம் வகுப்பில் படிக்கும்பொழுது சீட்டுக்கட்டு அட்டையில் வீடுகட்டி மகிழ்கிறோம். அப்போது மணல் வீட்டை வீடு என ஒத்துக் கொள்வதில்லை. நிலை மேம்பட்டபொழுது, மெய்யாகவே(உடலாகவே) செங்கல் வைத்துக் கட்டியதைத்தான் வீடு என ஒத்துக்கொள்கிறோம். நிலை வேறுபடப்பட உண்மை நமக்குப் புரிய ஆரம்பிக்கிறது.

அதுபோலத்தான் ஆண்டவனையடையும் வழிமுறைகளும். முதலில் இறைவன் இருக்கிறான் எனக்காட்டவே தாய்தந்தை கோவிலுக்கு அழைத்துச் சென்று இதுதான் இறைவன் என சுட்டுகிறார்கள். அங்குதான் சரியை ஆரம்பம். சரியையில் கிரியை ஆக்கிரமிக்கிறது. புறச் சடங்குகளால் மட்டும் இறைவனை அடையமுடியும் என நம்புகிறோம். நம்பிக்கை தவறெனக் கூறவில்லை. கிரியையில் மனமொடுங்கினால் அங்கே இறையுண்டு. எங்குதானில்லை?

கிரியைக்கு அடுத்த நிலை யோகம். யோகம் என்பது பயிற்சி முறையே. அதிலும், இராசயோகம், வாசியோகம், இன்னும் பல பிரிவுகள் உண்டு. அதிலும், என் வழிதான் சிறந்தது எனக் கூறுதலாகாது. ஒரு வழியில் செல்வோரை மற்றவர் இகழக்கூடாது. பயிற்சி முற்ற விளைவு ஆரம்பம். ஞானம் முளைக்கும்.

ஈங்கு முதலில் இறைவன் யார்? எனத் தெளிதல் மிக இன்றியமயாத ஒன்று. அண்டமாகிய அகிலத்தில் உள்ளது இப்பிண்டமாகிய உடலிலும் உண்டு என ஆன்றோர் கூறியுள்ளனர். அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்தவன் இறைவன். இவ்வண்டத்தில் இறைவனைத் தேடுதல் எளிதோ? அல்ல, பிண்டத்தில் தேடுதல் எளிதோ?

அண்டத்தில் இறைவனைத் தேடுதல் சரியை, கிரியை.

பிண்டத்தில் தேடுதல் யோகம், ஞானம்.

இறைவன்தான் எல்லாவற்றையும் படைத்தான்; எங்குமுளான். அப்போது பிண்டத்திலும் இருக்கவேண்டுமல்லவா? எங்கே?

பரமசிவன் கைலாயவாசி; உயர்ந்த மலைமேல் உள்ளவன். பிண்டமாகிய நம் உடலின் உச்சியே மலையுச்சி.  ஆக, இறைவன் நம்முடலில்  உள்ளான். அண்டத்தில் தேடுவதை விட நம் உடலுக்குள் தேடுதல் எளிதல்லவா? நம் ஆயுளில் குறுகிய காலத்தில் காலன் வருமுன் கண்டுகொள்ளலாமல்லவா? அதிவிரைவில் இறைவனையடைய வழி ஞானமே என்பதன் பொருள் இதுதான்.

இறைவன் உருவகிக்கப்பட்டுளான். பிண்டத்தில் அறிவாகி, அறிவில் உணர்வாகி, உணர்வில் நினைவாய், நினைவில் கருத்தாகி நிற்பவனே இறைவன். நினைவைப் பிடிக்கவே யோகம், ஞானம்.


"அறிவை அறிவால் அறிவதே அறிவு !!!!!!"

"மனித வாழ்க்கை என்பது நமக்குக் கொடுக்கப்படும் கடைசிச் சந்தர்ப்பம். சரியாக பயன்படுத்தினால், ஞானி...."