வெள்ளி, 26 ஜூன், 2020

ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன ?]




                                                                          கபீர்

உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது என்ன என்ற கேள்வி நம்மில் பெரும்பாலருள் எழுகிறது.
உலகத்தவர் பார்வையில் பெரும் தனம் தேடியவன் வெற்றி பெற்றவன். புகழ் அடைந்தவன் வெற்றி பெற்றவன். அதிகாரங்களை அடையப் பெற்றவன் வெற்றி பெற்றவன்.
ஆனால் ஞானிகள் இந்த கருத்தின் அடிப்படையையே தவறு என்று கருதுகின்றனர் போலும். 
கபீர்தாஸ் சொல்வதைப் பாருங்கள்.
"நன்று அடியார்க்கு தோல்வியே, புவியோர்க்கு சேரட்டும் வெற்றியே
வென்றவர் போவார் எமபுரமே, தோற்றவர் அடைவார் அரியிணையே".  
 அரியிணை =ஹரியின் இணையடி; எமபுரம் = பிறவிச் சுழல்]கபீர்தாஸரின் கருத்தை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த புனித இக்னேஷியஸ் லயோலா என்ற கிருத்துவ போதகரும் வலியுறுத்தினார். அவர் கிருத்துவ மதத்தில் ஜெசுயிட்(Jesuit) வழிமுறையை பாரீஸ் பல்கலைக் கழகத்தில் துவக்கியவர். ஸ்பெயின் தேசத்து போரில் தன் கால்களை இழந்து பின்னர் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியவர். மண் ராஜ்யத்தை விட்டு விண் ராஜ்ஜியத்திற்கான தன் போராட்டத்தை ஆரம்பித்தவர்.
அவரை விட இளையவரான கல்லூரி ஆசிரியர் பிரான்ஸிஸ் சேவியரிடம்(1506- 1551) அடிக்கடி சொல்வதுண்டாம்.
“Master Francis! What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"
[பிரான்ஸிஸ் பெருந்தகையே! ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன ?]

அறிவு கூர்மை மிகுந்தவர் பிரான்ஸிஸ். அவருடைய பேருரைகளை கேட்க பல்கலை கழகத்தில் மக்கள் திரளாகக் கூடினர். அவர் ஒரு பன்மொழி வித்தகர். வாலிப வயதினரான அவருக்கு மிக நல்ல எதிர்காலம் காத்திருந்தது. நல்ல குடும்பம், செல்வம், புகழ் என்பன போன்ற வெற்றி அவருடைய காலடியிலே கிடந்தது என்றும் சொல்லலாம்.
ஆனால் இக்னேஷியஸ் லயோலாவின் கேள்வி பிரான்ஸிஸ் சேவியரின் மனதில் ஆன்மீகக் கனலை கொழுந்து விட செய்தது.
லயோலாவுடனான சத்சங்கம் அவரை இறைவனின் சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டியது. தம் பதவியை துறந்தார். இக்னேஷியஸ் லயோலாவை தமது குருவாகக் கொண்டு பிரார்த்தனையிலும் தியானத்திலும் நேரத்தை செலவிட்டார். தனது செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்க்கு வழங்கி விட்டு கால்நடையாக ஜெருசலேமுக்கு தலயாத்திரை மேற்கொண்டார். ஏசுவின் புகழை சென்ற இடமெல்லாம் பரப்பினார். எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு பிறர் கொடுக்க முன் வந்த வெகுமதிகளை வாங்க மறுத்தார். அவருடைய தன்னலமற்ற இந்த பண்பு மக்களை அவர் பக்கம் ஈர்த்தது.

முதன் முதலாக இறைப்பணிக்கென 1542 -ல் கடற்பயணம் மேற்கொண்டார். கப்பலில் சீமான்களோடு அமர்ந்து உணவு அருந்த வேண்டியவர் சாமானியர்களோடு அமர்ந்து உணவு உண்டார். நோயுற்றவர் அருகிலிருந்து சிகிச்சை அளித்தார். தமது முப்பத்தி ஆறாம் வயதில் மேற்கு கடற்கரையில் கோவாவில் வந்திறங்கினார். நீண்ட பயணத்தினால் உடல்நலம் மிகவும் குன்றியிருந்தது. ஆனால் உற்சாகம் குறைந்திருக்கவில்லை.
பொது இடங்களில் எல்லாம் அவருக்கு வரவேற்பு என்பது கிடையாது. அன்னியராகக் காணப்படும் ஒருவரிடம் எவரும் நெருங்கிப் பழகத் தயங்குவர். கூடவே புதுப் புது மொழிகள் அதனால் வரும் பிரச்சனைகள். இந்தியா தவிர இலங்கை, சீனா ஜப்பான் என பல நாடுகளிலும் இறைத் தூதர் ஏசுவின் புகழ் பாடி இருபது ஆண்டுகள் பல இன்னல்களுக்கிடையே சேவை புரிந்தார்.
இப்போது சொல்லுங்கள்! அவரது வாழ்க்கை வழிமுறை வெற்றிக்கானதா தோல்விக்கானதா?
சாமானியர்கள் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர், ஆனால் கபீரின் பார்வையில் அவரே வென்றவர். விண்ணுலகை சொந்தமாக்கிக் கொண்டவர். தன்னலம் பாராது பிறர் மேன்மைக்காக உழைக்கும் எவருக்கும் இறைவன் தன் கதவுகளை திறந்து வைத்துக் காத்திருக்கிறான்.

இறைவன் அருள் வேண்டுமானால் முதலில் பணிவு மனப்பான்மை வேண்டும். தமக்கு வருவதை எல்லாம் அவனருளாகக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். அப்படி ஒரு நிலைக்காக எப்படி நம்மை இறைவன் வழிப்படுத்துகிறான் என்பதை இந்த ஆங்கிலக் கவிதை அழகாக சொல்கிறது
I asked God for strength, that I might achieve
I was made weak, that I might learn humbly to obey..
I asked for health, that I might do great things
I was given infirmity, that I might do better things..

I asked for riches, that I might be happy
I was given poverty, that I might be wise..
I asked for power, that I might have the praise of others
I was given weakness, that I might feel the need of God
I asked for all things, that I might enjoy life
I was given life, that I might enjoy all things


இந்த உண்மையை அறியாது உலகை வெற்றி கொள்ள முயலுவோர் போக்கை பகவத்கீதை வெண்பா சிறப்பாக சித்தரிக்கிறது.
நினைத்ததை அடைந்தேன் இன்று, நில்லேன், வேறொன்றை
நினைத்து அதை அடைவேன், இன்னும் நிசம் காண்- எனக்கோ
அதுவுண்டு இதுவுண்டு, எது பெரிது எங்குண்டோ
அதுவும் எனக்கே உடைமையாம் (16:13 )
எண்ணம் பல மனதில், என்றும் ஒரே குழப்பம்
மண்ணில் மயக்க வலைப்பட்டே- கண் தெரியார்
ஆழ்வர், இவர் காம அனுபவத்திற் சிக்குண்பார்
பாழ் நரகமே சம்பளம்
. (16: 16)

[பகவத்கீதை வெண்பா, மூன்றாம் பாகம்: ஏ பெரியத்தம்பிப்பிள்ளை (1976) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம், இணைய வழி தரவிறக்கம்]
பலப்பல வெற்றிகளுக்காக மதி மயங்கி, வாழ்க்கையை கழித்தோர் கடைசியில் சம்பாதித்தது ‘பாழ் நரகமே” என்பது, கபீர்வென்றார் போவார் எமபுரமே என்று சொல்வதை உறுதி செய்ததாகிறது.
இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள இக்னேஷியஸ் லயோலா அவர்களின் தினசரி பிரார்த்தனையை மனதில் வைத்தால் முத்திக்கு வழி தேடலாம்.
Dearest Lord,
Teach me to be generous.
Teach me to serve you as you deserve;
To give and not to count the cost;
To fight, and not to heed the wounds;
To labor, and not to seek to rest;
To give of myself and not to ask for reward,
Except the reward of knowing that I am doing
YOUR WILL.