சுவாமி விவேகானந்தர் தனது ராஜயோக விளக்க நூலில் கூறியது -------- நமது அறிவெல்லாம் (ஞானம்) அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டனவாம். யூகத்தின் அடிப்படையிலான (அனுமான) அறிவாகும். அறிவு என்பது சாதாரண நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு சிந்தித்து அறிவதாகும். ஆதலால் அதுவும் அனுபவத்தின் அடிப்படையேயாகும். விஞ்ஞானம் சொல்வதை மக்கள் எளிதாக தெரிந்து கொள்கிறார்கள். என்னெனில் அது ஒவ்வொரு மனிதருடைய சொந்த அனுபவங்களை ஒத்து இருக்கிறது.ஒரு தத்துவ ஆசிரியர் ஒரு பொருளைப்பற்றி நம்பிக்கை வையுங்கள் என்று கூறவில்லை. ஆனால் அவனுடைய சொந்த அனுபவங்களின் பலனாகச் சில உண்டாகியிருக்கும். அவற்றின் மேல் இதுவே உண்மை என்று கருத்துக்களைக் கூறி தான் சொல்லும் கருத்துத்தான் உண்மையானது என்று சொல்வானேயானால், அது மனிதனின் எதோ ஒரு அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கும். உண்மையான ஒவ்வொரு நூலின் மீதும் மனிதர் பொதுவான ஏற்கத் தக்கதான ஒரு மூல தத்துவம் இருக்கிறதா அதலால் அதிலிருந்து யூகித்து அறியப்பட்ட கருத்துக்களின் உண்மை, உண்மையல்லாத கருத்துக்களை நாம் எளிதில் அறிய முடியும். மதத்திற்கு அப்படி ஒரு ஏதாவது உண்டா இல்லையா என்பது அறியவேண்டும். இக் கேள்விக்கு நான் உண்டு என்றும் இல்லை என்றும் இரண்டு விதமாக பதில் கூறவேண்டியுள்ளது. இவ் உலகத்தில் எல்லோரும் எண்ணிக் கொண்டு உள்ளது போல் மதம் என்பது பக்தியையும், நம்பிக்கையையும் ஆதாரமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. மதமானது பெரும்பாலும் பலதரப்பட்ட உறுதி மொழிகளை மட்டுமே உள்ளடக்கி கொண்டுள்ளது. மதங்கள் ஒன்றோடு ஒன்று விவாதம் செய்வதை நாம் பார்க்கிறோம். மேகங்களின் மீது ஒரு கடவுள் இருந்து உலகம் முழுவதையும் ஆட்சி செய்கிறான் என்று ஒரு மனிதன் கூறி அவனது உறுதி மொழியை மாத்திரம் ஆதாரமாக கொண்டு அதை நம்பும்படி என்னை (பிறரை) கேட்கிறான், அப்படி என்றால் எனக்கு என்று சொந்தக் கருத்துக்கள் இருக்கும் அல்லவா அதை நம்பும்படி நான் மற்றவர்களுக்கு கூறுகிறேன். ஆனால் அவர்கள் என்னிடம் அதற்கான உண்மை காரணங்களை சொல்லும் படி கேட்டால் அதற்கு எந்தக் காரணமும் பதிலும் என்னிடம் இல்லை. இது போன்ற காரணங்களால் தான் மதத்திற்கும் அது பற்றிய நூல்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டானது. கற்றரிந்த ஒவ்வொருவரும் கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்.
மதங்களும் அவை பற்றிக் கூறும் நூல்களும் கூறும் கருத்துக்களும் பரிசோதித்து அறிய எந்தவித ஆதாரங்களுமில்லை. இவை ஒரு அபிப்பிராயங்களின் மூட்டைகளாகும். ஒவ்வொருவனும் அவனுக்கு பிரியப்பட்ட சொந்தக் கருத்துக்களை சொல்கிறான். அனாலும் மதத்தின் மீது இருக்கும் நம்பிக்கைக்கு பொதுவான ஆதாரம் ஒன்று உள்ளது என்று கூற வேண்டியுள்ளது. அது மதத்தின் மீது மனிதர்களுக்கு பல நாடுகளில் பலவிதங்களான உறுதி மொழிகளை, அபிப்பிராயங்களையும் நியாயப் படுத்துகிறது. இவை பற்றி யெல்லாம் நாம் ஆராய்ந்தால் அவையும் ஒரு பொதுவான அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டதாம் என்பதை நாம் காணலாம்.
இதை அறியும் பொருட்டு முதலில் உலகத்தில் உள்ள பலவிதங்களாக இருக்கின்ற எல்லா மதங்களையும் ஆராய்ந்து பார்க்கும் படி நான் உங்களிடம் சொல்கிறேன். அவை இரண்டு விதமாக பிரிந்து உள்ளதை பார்க்கலாம். ஒன்று நூல்களை ( வேதங்கள், புராணங்கள், பைபிள், குரான் போன்ற ) ஆதாரமாகக் கொண்டுள்ளது. மற்றது நூல் ஆதாரங்கள் இல்லாதது. நூல் ஆதாரங்கள் உள்ளனவோ மிக பெரிய மனிதர்களும் பலராலும் பின்பற்றக் கூடியதாகும் நூல்கள் இல்லாதவை பெரும்பாலும் அழிந்து விட்டன என்று கூறலாம். அப்படி அழியாத மதங்கள் இருந்தால் அவற்றை ஏற்றுக் கொண்டவர்கள் குறைவே. ஆனாலும் அவை யாவற்றிலும் அவை சொல்லும் கருத்துக்கள் எல்லாம் சில தனிப்பட்ட மனிதர்களின் அனுபவங்கள் என்னும் கருத்து ஒற்றுமையை நாம் பார்க்கலாம்.
ஒரு கிருத்துவர் – ஒரு இந்து – ஒரு முகமதியர் இவர்களில் எல்லோரும் தனது மதத்தை நம்புங்கள் என்றும் கிருஸ்த்து, (நபிகள், ராமரை,கிருஷ்ணனை ) இவர்களை கடவுள் அவதாரம் அவரின் தூதர் நம்புங்கள் என்றும் ஓர் ஆன்மாவையும் அவ்வான்மாவின் விசேசமான அவதாரங்களையும் நம்புங்கள் என்று உங்களிடத்துக் கூறுகின்றார். ஆனால் அந்நம்பிக்கைக்கு காரணமான ஆதாரத்தைக் கூறமுடியாது. ஆனால் கிருத்துமதத்தை ஆராய்ந்தால் அது அது அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டதாம். ஏன்னெனில் இயேசு கடவுளைக் கண்டேன் என்று கூறினார். அவரது சிஷ்யர்கள் தங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் உண்டானது என்று கூறினார், இவ்விதமே, புத்தமதம் புத்தரது அனுபவத்தையும், இஸ்லாம் மதம் நபிகளின் அனுபவத்தையும், இந்து மதம் வேத புராண ரிசிகள் எழுதிய அவர்களின் அனுபவத்தைக் ஆதாரமாகக் கொண்டதாம். எல்லோரும் சில தத்துவங்களை அனுபவித்து, அவற்றை ஆராய்ந்து பார்த்து அவைகளோடு உறவாடி அனுபவத்தை வெளிப்படுத்தினார்கள். ஆதலால் உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் கண்ணுக் தெரிந்த அனுபவம் என்கிற ஒரே அடிப்படையைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்பதுவே உண்மையாகும். எல்லா மதத்தலைவர்களும் கடவுளை பார்த்தனர். தங்கள் சொந்த ஆன்மாவைக் கண்டனர், என்றும் உள்ளது எதிர்காலத்திலும் உறுதி என்று நம்பினர். அவர்கள் அறிந்த அனுபவத்தை வெளிப்படுத்தினர்.
மதத்தை அனுசரிக்கும் இக் காலத்தில் ஒரு கருத்தை வாதிடுகின்றனர். அதாவது முன் காலத்தில் கிடைத்த அனுபவங்களை இன்று காண்பது இயலாத காரியம் என்பதாகும். எல்லா மதத்திலும் அதன் முதல் நிருவனர்களுக்கே அவர்கள் கூறிய அனுபவங்கள் சாத்தியமாகி உள்ளது. ஆனால் இக்காலத்தில் அத்தகைய அனுபவங்களை எங்கும் யாருக்கும் நேரில் கிடைப்பது இல்லை. ஆனால் மக்கள் இக்காலத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நான் இதை முற்றிலும் நிராகரிக்கிறேன். அறிவின் கண் ஏதாவது ஒரு தனிப்பட்ட ஓர் அனுபவம் இவ் உலகில் ஒரு தடவை உண்டானதாயின் அவ் அனுபவமும் அதன் முன்னரும் இனியும் என்றென்றும் அவ அனுபவம் கிடைக்கும் என்பதுவே உண்மையாகும். ஒரு பொருள் என்பது உலகில் நிரந்தரமாம் ஆதலால் ஒருதடவை உண்டானது எக்காலத்திலும் உண்டாகும்.
எனவே மதங்கள் என்பது புராதன காலங்களாக உள்ள அனுபவங்களை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆனால் அவ் அனுபவங்களின் உண்மை நமக்கு ஏற்படும் வரை அவன் உண்மையான மதத்தினன் அல்ல. இது குறித்து யோகநூல்கள் நமக்கு இத்தகைய அனுபவங்களை உண்டாவதற்கு உரிய வழிகளை சொல்கின்றன. அனால் இதை அனுபவித்து அறியும் முன் மதங்களில் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டு அதைப் பற்றி கூறுவது அர்த்தமில்லாததாகும் என்று யோக நூல்களின் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஏன் கடவுளை முன்னிட்டு இத்துனை கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்பட வேண்டும்? மற்ற காரணங்களை விட கடவுளை முன்னிட்டே அதிகம் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மக்கள் ஒவ்வொரு மதத்தினரும் அந்த ஒரு மதத்தின் ஆதிகால உற்பத்தி இடத்தின் அனுபவத்தை அறியாத காரணத்தினால் தான் இவர்கள் தங்கள் முன்னோர்களின் வார்த்தைகளை அப்படியே அனுபவப்படாமல் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு பிறரையும் நம்பும்படி வற்புறுத்துவதுமாகும். தான் அனுபவித்து அறியாத ஒரு ஆன்மா உண்டென்றும், கண்டறியாத கடவுள் உண்டு என்றும் சொல்ல ஒருவனுக்கு என்ன நியாயம் உள்ளது. ஒருகடவுள் இருப்பது உண்மையானால் அவரை நாம் காண வேண்டும். ஒரு ஆத்மா உண்டு என்றால் அதை நாம் காண வேண்டும். அவ்வாறு நாம் அனுபவித்து அறியாவிடில் அதை நம்பாமல் இருப்பதுவே நலமாம். ஒரு கபட பக்தனாய் இருப்பதை விட ஒரு நாத்திகனாக இருப்பது உத்தமம்.