அன்னை வாலாம்பிகை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் பல நாட்களாக இருந்து வந்தது. இவள் சித்தர்களுக்கு முழு முதற் கடவுள். இவளைக் கொண்டே அறுபத்து நான்கு கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். இவளைத் திரிபுரை என்றும் , வாலை என்றும் , பத்து வயதானவள் என்றும், பதினாறு வயதாள் என்றும், கனியென்றும்,பச்சை நிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும், தேவியென்றும், மாயையென்றும், புவனையென்றும், அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும், தாயென்றும் உண்ணாமுலையென்றும் ,கோவுடையாளென்றும் , அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள். வைத்தீஸ்வரனான ஈஸ்வரனே இவள் தயவில்தான் மண்ணையே மருந்தாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் புரிந்து வருகிறான்.
இவளை அறிய ஏழு பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் நம் சித்தர்கள். இவளால் தர இயலாதது எதுவும் இல்லை. இவளைப் பூசை செய்யும் செய்யும் முறையைப் பற்றி சட்டை முனி கூறுவதைப் பாருங்கள்.
சட்டை முனி ஞானம் -4 பூசை செய்யும் முறை
காணப்பா பூசை செய்யும் முறையைக் கேளாய்
கைம் முறையாய்ச் சுவடி வைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து
புகழாக பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தை பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே
உத்தமனே பூசை செய்வார் சித்தர்தானே! பாடல் (1)
தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்கு தீட்சை வேண்டும்
சிறுபிள்ளையாமொருவன் தீண்டப் போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்னாராகில்
கோனென்ற வாத சித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே! பாடல் (2)
கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தைக் கேளாய்
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீ பூசைபண்ண
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாக புவனையை நீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளை யாறெழுத்தைக் கேளாய்
அவளுடைய பதம் போற்றி பூசை பண்ணே! பாடல் (3)
பண்ணிய பின் யாமளையை ஐந்தெழுத்தைக் கேளாய்
பண்பாக தீட்சையைந்தும் முடிந்தபின்பு
வன்னியதோர் வாசியென்ற யோகத்துக்கு
மைந்தனே வைத்துப் பிராயாமந் தீரும்
கன்னியதோர் இத்தனையு மறிந்திருந்தாற்
காயசித்தி விக்ககினங்கள் இல்லை யில்லை
உன்னியதோர் உலகமென்ன சித்தரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! பாடல் (4)
சிலர் தீபம் வைத்து பூசை செய்வார்கள் . சிலர் இந்த வாலைப் பெண்ணை வைத்து பூசை செய்வார்கள் . சிலர் சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் .சிலர் மகா மேருவை வைத்து பூசை செய்வார்கள் .சித்தர்கள் நாற்பத்து முக்கோண சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் சித்தர்கள் . மேருவைப் பூசிக்கின்றவர்கள் சாபமிட்டால் அண்டரண்டமெல்லாம் தீயாய்ப் பிடித்து வேகும். இதற்கு தீட்சை அவசியம் வேண்டும் . சிறுபிள்ளைபோல எண்ணி யாரும் இதைத் தொடல் ஆகாது.வான் தத்துவமாகிய இந்த மேரு பூஜை செய்கிறவர்கள் வாயைத் திறந்து யாருக்காகிலும் உபதேசம் ( இரு தேசங்களைப் பற்றிய ரகசியங்களை) சொல்ல முற்படுவரானால் , அவர்களுக்கு ஞான , யோக, வாத ரகசியங்கள் எல்லாம் வசப்படும்.
வாலையின் மூன்றெழுத்தான அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய்.திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) புரிந்து பூசை செய்வாய்.எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் .அவள் அருள் உனக்குக் கிடைக்கும். யாமளையாகிய அவளின் ஆறெழுத்தையும் நீ உணர்ந்து பூசை செய்வாய்.
ஐந்தெழுத்தாகிய பஞ்ச பூதங்களின் உறைவிடத்தைக் காண்பாய் . இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை அறிந்த பின், வாசியை உணர்ந்து கொள்.இதில் வகாரமான காற்றையும் , சிகாரமான நெருப்பையும் உணர்ந்து ( இதையே நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும் என்கிறார் திருமூலர். நாயை எப்படி ஓட்டுகிறோம் , சி என்றல்லவா?இந்த சிகாரமான நெருப்பு யமனை வெல்லும். ) வகாரமான காற்றையும் சிகாரமான நெருப்பையும் சரியாக வைத்துக் கொள்ளாமல் இறந்துவிட்டான் என்பதால்தான் , இறந்து போனவனின் எலும்பில் பாலூற்றும் போது காசி ,காசி என்று ஊற்றுகிறார்கள். அவன் இவற்றை சரியாக பராமரிக்காமல் இறந்து போனான் ,உயிரோடிக்கும் நீயாவது இறக்காமல் இருந்து கொள் என்றுணர்த்தவே சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன . இறந்தவனை கொண்டு போகும் போது உறுமி மேளம் அடிப்பார்கள் , அது உண்டுண்டு என்றடிக்கப்படும் . அதாவது இந்த மரணம் உனக்கும் உண்டு , உனக்கும் உண்டு என்று உணர்த்தவே ஆகும் .
உத்தமனே முந்தைய பிறவிகளில் இந்த வாலையைத் தியானித்திருந்து அரைகுறையாக விட்டிருந்தால் , அந்த விட்ட குறை , அந்தப் புண்ணியம் இந்தப் பிறவியில் தொடர்ந்து வந்து ஞானத்தைத் தந்தே தீரும் . இதை அந்த வாலைத் தாய் மரணமில்லாப் பெருவாழ்வை நிறைவேற்றித் தருவாள்.
பட்டினத்தார் ஞானம் -100
நெஞ்சமுடனே தாம்புலம்பி நீலநிறத் தாளீன்ற
குஞ்சரத்தை யாதரித்து கும்பிட்டால்- தஞ்சமுடன்
காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்
பூமிதனில் வாழ்வரெ ப்போதும் பாடல் (1)
ஆவுடையாளொடிருந்தேன் அருளானந்தம் பெறவே
கோவுடையாள் நின்றதினம் கூடிய – பூவுடையாள்
கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில்
இட்டமுடன் நெஞ்சே இரு (பாடல் 4)
நெஞ்சமுடன் தாம்புலம்பி , நீலநிறத்தாள் ஈன்ற குஞ்சான அகார , உகாரத்தைக் கும்பிட்டால் , நம்மைத் தஞ்சமடைந்திருக்கின்ற காமம் முதலான மும்மலத்தின் கட்டறுந்து ஞானத்துடன் பூமியில் வாழ்ந்திடுவார்கள் எப்போதும். பட்டினத்தார் ஆவுடையாளோடிருந்தேனென்றும் (வாலைத் தாயுடன் இருந்தேன் ) , அவளுடைய அருளானந்தம் பெற்று , பூவுடையாள் கட்டழகியைத்தான் கடந்து , வேதாந்தப் பெருவெளிக்குள் இட்டமுடன் நெஞ்சே இரு என நெஞ்சுக்கு கட்டளை இடுகிறார்.
இந்த வாமியான வாலையைக் கனவினில் கண்ட காட்சியையும் , அவளிடம் கேட்ட வரம் பற்றி பாரதியார் தனது பாடலில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்.வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை! பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும், புன்னகையின் புதுநிலவும் போற்ற வரும் தோற்றம்! மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்! துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து, துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து,தூங்காதே எழுந்தென்னை பாரென்று சொன்னாள்! அங்கதனில் கண்விழித்தேன் !அடடா ஓ அடடா!
அழகென்னும் தெய்வம் அதுவென்றேயறிந்தேன்! காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோவென்றேன்? காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்! ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ வென்றேன் ? நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்! மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்! – பாரதியார் –
முதலில் அந்த வாலாம்பிகையின் காட்சியை வருணித்த பாரதியார் , வாலாம்பிகையிடம் காலத்தின் விதி தமது மதியைக் கடந்திடுமோவென்று கேட்கிறார்.அதற்கு வாலாம்பிகை காலமே மதியினுக்கு ஓர் கருவி என்று கூறுகிறாள். இந்த உலகத்தில் விரும்பியது கிடைக்குமா என்று வினவுகிறார் பாரதி , அதற்கு வாலைப் பெண்ணாத்தாள் , நாலில் ஒன்றிரண்டு கிடைக்கலாம் என்றாள்.