வியாழன், 22 ஆகஸ்ட், 2013

வயித்திய தர்மம் - அகத்தியர்

அரசரென்றால் பொருள் கொடுத்து
 நோய்தீர்த்து கொள்வாரதனலே யுந்தனக்குத் தருமமில்லை
நீசனென்ற எளியோர்க்கு வயித்தியஞ் செய்ய
 நிலையாத தருமமது நிலைக்குமென்று
பிரியமுடனென்குரு வேதியர்தான் சொன்னார்
 பிள்ளையென்று புலத்தியனே யுனக்குச்சொன்னேன்
பரிசனமாய் மனதில்வைத்தால் முத்தி சேர்வாய்
 பாலகனே யிதைமறந்தால் பலித்திடாதே,

பலித்திடவேணுமென்றால் புலத்தியனே ஐயா
 பாரிலுள்ள வுயிரெல்லாந் தன்னுயிர் போலெண்ணி
சலித்திடாயொரு போதுந் தருமஞ் செய்ய
 சந்தையங்கள் செய்யாதே சதிசெய்யாதே
சலித்திடவே கருமத்தால் பிறவிகிட்டுந்
 தருமத்தால் சாயுச்ய பதவிகிட்டும்
சலித்திடாய் சற்குருவை யடுத்துக்காரு
 சதாகாலஞ் சதாசிவனைப் போற்றிப்பாரே.
                                                  -அகத்தியர் பரிபூரணம் 400

பொருள்:நாட்டை ஆளும் அரசன் என்றால் எவ்வளவு பொன்,பொருள்
கொடுத்தும்
தன் நோயை தீர்த்துக்கொள்வான்,
அப்படி நீ அவர்களிடம் நிறைய பொருள் வாங்கிக்கொண்டு

வயித்தியம்
செய்வதால் உனக்கு தருமம் உண்டாகாது.
வறுமையில் வாழும் ஏழை, எளியோர்க்காக சேவை

அடிப்படையில் பணம் வாங்காமலும் அல்லது குறைந்த
அளவில் பணத்தை பெற்றுக்கொண்டும் நீ செய்யும்
வயித்தியத்தில்தான்
உனக்கு தருமம் உண்டாகும்.
அத்தர்மம்தான் நிலைத்து நிற்கும் என வேதநாயகனான
என் குரு(சதாசிவன்)தான் இதை எனக்கு சொன்னார்.
என் பிள்ளைபோல் நினைத்து புலத்தியனே உனக்கு

இதை சொல்கிறேன், அக்கறையோடு இதை மனதில் வைத்து
செயல்பட்டால் முத்தி நிலையை அடைவாய்
இதை மறந்தால் நீ செய்யும் வயித்தியங்கள் பலிக்காமல்
போய்விடும்.



நீ செய்யும் வயித்தியங்கள் பலிக்க வேண்டுமென்றால் உலகிலுள்ள உயிர்களையெல்லாம்
தன்னுயிர் போல எண்ணி தர்மம் செய்வதற்கு
ஒரு போதும் சலித்துக்கொள்ளாமல் செயல்பட வேண்டும்.
பணத்திற்க்காக வயித்தியம் செய்யாதே, ஏழைகளிடம்

பேரம் பேசாதே, யாருக்கும் சதி(கெடுதல்) செய்யாதே,
அப்படி செய்தால் நீ செய்யும் கர்மவினையால் மிண்டும்,
மீண்டும்
 பிறவிகளை எடுத்துக்கொண்டே இருப்பாய்.

தர்ம சிந்தனையுடன் எப்போதும் தர்மம் செய்வாயானால்
பிறப்பு, இறப்பற்ற மோட்ச நிலை உண்டாகும், பரலோக பதவி
கிடைக்கும்.எனவே எப்பொழுதும் தர்ம சிந்தனையோடு
தன் குருவை மனதால் நினைத்து வணங்கி விட்டு மருந்தை
செய்யவும். மருந்தை செய்து முடித்ததும் இம்மருந்தை
உண்பவர் பூரண குணம் பெறவேண்டுமெனவும்,
தனது வயித்தியம் பலித்திட வேண்டுமெனவும்
சதாசிவனை நினைத்து பூசை செய்து பின்னர் மருந்தினை
உன்னை நாடி வருவோர்க்கு வழங்க வேண்டும்
என்கிறார் அகத்தியர்.