கயிலாய பரம்பரையைச் சார்ந்தவர். சிவகணங்களில் ஒருவரான நந்தீசர், கயிலாயத்தின் காவலர் எனப் புராணங்கள் கூறும். சித்தர்கள் மரபு தோன்றுவதற்கு இவர் காரணமானவர். இவர் திருமூலர், பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகி ஆகியோர்க்கு உபதேசம் செய்து சித்தர் மரபு தோன்றக் காரணமாக விளங்கியவர். அகத்தியர், போகர் போன்றோர் நந்தீசரைத் தம் பாடல்களில் குறிக்கின்றனர். வைத்திய, யோக, ஞானக் கலைகளில் சிறந்து விளங்கி, தாம் இயற்றிய நூல்களைத் தமது மாணாக்கர்கள் மூலம் உலகெங்கும் பரவும்படி செய்தார். சிவகணங்களில் ஒருவர் நந்தீசர் என்றும் அவர் மானிட வடிவம் பெற்று வாழ்ந்ததாக பல்வேறு கதைகள் சொல்கிறார்கள்.சிவகணங்களில் ஒருவரான நந்தீசர் பார்வதி தேவியின் அந்தப்புரத்தினை காவல் காத்து வந்தார். அப்போது அம்மையை தரிசிக்க அடிலகன் என்னும் அரசன் வந்தான். அம்மையின் அனுமதியின்றி யாரையும் உட்செல்ல விடமாட்டேன் என்று நந்தீசர் தடுத்தார். இதையறிந்த சிவன் கோபங்கொண்டு அவரை பன்னிரெண்டாண்டுகள் பூலோகத்தில் வாழ்ந்து வரும்படி சபித்துவிட்டாராம்.பூலோகத்தில் சிலாத முனிவர் யாக பூமி உழுத போது, கண்டெடுத்த பெட்டியில் அந்தக் குழந்தை இருந்தது.அதற்க்கு வீரகன் என்று பெயரிட்டு, சிலாதர் தம்பதிகள் வளர்த்து வந்தனர்.தங்கள் குழந்தை பன்னிரண்டு வயதில் இறந்துவிடும் என்பதறிந்து மனம் வருந்தினர்.அவர்கள் வருத்தத்தை அறிந்த வீரகன் (நந்தீசர்) அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி,.கடுந் தவம் செய்ய ஆரம்பித்தான். ஆதன் விளைவாக சிவனார் அவனுக்குக் காட்சி கொடுத்து, நீ சிவலோகத்தில் சிரஞ்சீவியாய் வாழ்ந்திருப்பாய், சிவகணங்களின் தலைவனாகவும் விளங்குவாய், உனக்கு அனைத்து ஞானத்துடன்,சிவஞானமும் அருளினோம் என்று கூறு மறைந்தார்.நந்தீசர் தேவர்சஞ்சை( பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தார்.நந்தீசரே திருமூலரின் குரு ஆவார்.வைத்திய காவியம், கலை ஞானம், கலைஞான சூத்திரம், நிகண்டு, கருக்கிடை, சம் வாதம், ஞான சூத்திரம் ஆகிய நூல்கள் நந்தீசர் எழுதியதாக அறிய முடிகிறது.இவரது சமாதி திருவாவடுதுறையில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. நந்தி.1969 இல் வெளியிடப்பட்ட 6 ஆவது ஆண்டின் 7 ஆவது இதழ் இது. சென்னை செனாய் நகரிலிருந்து சித்த மருத்துவத்திற்காக சித்தமருத்துவக் குழுவினரால் வெளியிடப்பட்ட இதழ். இந்த இதழ் பதிவு பெற்ற இதழாக வெளிவந்துள்ளது. சமயம், சமூகம், தமிழ் இலக்கியம், சித்த வைத்தியம், மக்கள் உடல்நலம் என்கிற கூறுகளை உள்ளடக்கியதாக இதழ் வெளிவந்துள்ளது. மருத்துவர் பு.மு.வேணுகோபால் எழுதியுள்ள அகத்தியர் பற்றிய குறிப்பு அகத்தியர் என்ற பெயருடைய பலர் இருந்தனர் அவர்களைப் பற்றிய குறிப்பு எனப் பட்டியலிட்டுள்ளது. மரணமில்லா வாழ்வும், சித்தர் காயகற்பமும், கருவின் லீலைகள், மருத்துவ வெண்பா, பத்துப்பாட்டில் ஒரு பாட்டு, மரபுப்பாடல் என இதழ் இலக்கியத் தரமான மருத்துவ இதழாக மலர்ந்துள்ளது.
நந்திகேசுரர்.சிலாதர் என்ற தவ முனிவர் இருந்தார். அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தது. இந்திரன் அவர் முன் தோன்றி சிவபெருமானை நோக்கித் தவம் புரியக் கூறினான். ஆனால் "கருவில் உதிக்காத குழந்தை வேண்டி தவம்புரி. கருவில் உதிப்பவர்கள் இறந்து விடுவார்கள். எல்லாவற்றையும் படைக்கும் கடவுள் பிரம்மன். ஹிரண்ய கர்ப்பன். அவர் கூட ஊழிக் காலத்தில் மறைந்து மீண்டும் மீண்டும் பிறக்கிறார். திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிப் பிறகே படைப்புத் தொழிலைத் தொடர்கிறார். ஆதலின் கருவில் தோன்றுவோர் மறைவர்" என்று அறிவுரை வழங்கினான். சிலாதர் கருவில் உதிக்காத குழந்தை வேண்டிக் கடும் தவம் புரிந்தார். அவர் உடல் முழுதும் கரையான் புற்று மூடியது. பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் அவருடைய தசை இறையாகியது. வெறும் எலும்புக் கூடே எஞ்சியது. அவர் தவத்தை மெச்சி சிவபெருமான் வரம் அளித்தார். "சிலாத உன் வேண்டுகோளுக்கு இணங்கிக் கருவில் தோன்றாத குழந்தையை உணக்கு அளிக்கிறேன். அந்தக் குழந்தையாக நானே உனக்கு தோன்றுகிறேன்" என்று அருள் செய்து மறைந்தார். சிலாதர் யாக அங்கணத்துக்கு வந்தார். அங்கு சிவ பெருமானின் அருளால் திவ்ய தேஜஸுடன் ஒரு குழந்தை காணப்பட்டது. தலையில் சடாமுடியும் மூன்று கண்களும் நான்கு கரங்களில் சூலம், பரசு, கதை, வஜ்ரம் ஆகிய படைகள் தென்பட்டன. அந்தக் குழந்தையைக் கண்டதும் பிரும்மா முதலிய தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்ஸரப் பெண்கள் எல்லாம் ஆனந்தக் கூத்தாடினர். கால சூரியனுக்குச் சமமான தேஜுடைய அந்தக் குழந்தையை எடுத்து பிரும்மா, விஷ்ணு, ருத்ரர், ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி முதலிய அனைத்தது தேவதைகளும் மகிழ்ந்தனர். சிலாத மகரிஷி குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு எனக்கு மகவாக தோன்றியிருக்கும் பெருமானே உன்னை வணங்குகிறேன். ஆனந்தத்தை அளிப்பதால் இந்தக் குழந்தையை நந்தி என்று அழைக்கிறேன் எனப் பெயரிட்டு அக்குழந்தையைத் தம்குடிலுக்கு எடுத்துச் சென்றார். அவர் குடிலுக்குச் சென்றதும் அக்குழந்தையின் தெய்வீக உருவம் மறைந்தது. இரண்டு கைகளையுடைய சாதாரண மானிடக் குழந்தையாக மாறி விட்டது. ஆதலால் வருந்திய சிலாதர் அந்தக் குழந்தைக்குப் படிப்படியாக நான்கு வேதங்கள், ஆயுர்வேதம், தனுர் வேதம், கந்தர்வவேதம், அச்வ வேதம், கஜசாஸ்திரம், மனுஷ சாஸ்திரம் முதலிய பல சாஸ்திரங்களைப் போதித்தார். அந்தக் குழந்தைக்கு எழு வயது ஆகும் போது மித்ரன் வருணன் என்ற இரண்டு ரிஷிகுமாரர்கள் வந்தனர். அவன் தேஜஸைக் கண்டனர். அவன் தந்தையிடம் சென்று, இன்னும் ஒராண்டுக்குள் இவன் இறந்துவிடுவான் என்று கூறிச் சென்று விட்டனர். அதனால் சிலாதர் மனம் உடைந்து கதறி அழ ஆரம்பித்து விட்டார். இதைக் கண்டு நந்தி சிவனை நோக்கிக் கடும் தவம் புறிந்தான். அவன் தவத்தை கண்டு சிவன் தேவியுடன் நந்தியின் முன் தோன்றினார். நந்தியைத் தன் இருகரங்களாலும் இறுகத் தழுவிக் கொண்டு இன்று முதல் உனக்கு மூப்பு இறப்பு என்பது ஏதும் இல்லை. எனக்கு நிகரான ஒளியும், வலிமையும், யோகமும் பெற்று என் விருப்பத்துக்கு உகந்தவனாக என் கணங்களுக்கு எல்லாம் தலைவனாக நீ விளங்குவாய். என் அருகிலேயே விளங்குவாய் என்று அருள் புரிந்தார். அழகிய மாலையை எடுத்து நந்தியின் தலையில் சூட்டினார். உமையன்னை நந்திகேசுரரைக் கரத்தில் எடுத்து அணைத்து ஆனந்த பாஷ்பம் பெருகினார். சிவபெருமானின் ஜடையிலிருந்து விழுந்த நீரும், தேவியின் ஆனந்தக் கண்ணீரும், சிவபிரானின் வாகனமாம் காளையின் பெரும் கர்ஜனையில் தோன்றிய நீரும், மேகம் பொழிந்த நீரும், ஜாம்பூநாதமான மகுடத்திலிருந்து விழுந்த நீரும் அவர் மீது விழுந்து ஐந்து நதிகளாக ஒடின. ஆதிலின் அவை பஞ்சநதம், ஐயாறு என்று பெயர் பெற்றன. அன்றிலிருந்து நந்திகேசுரர் சர்வலோகத்துக்கும் அதிபதியாகவும் எல்லாக் கணங்களுக்கும் தலைவராகவும் முடிசூட்டப்பட்டார். ஈசுவரரின் அதிகாரியாக எப்பொழுதும் அவர் அருகிலேயே அழியாத் தன்மையுடன் விளங்குகிறார். என்று நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது இந்தச் செய்தி புராண மரபு. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் சாலங்காயன கோத்திரத்தில் சிலாதர் அல்லது சிலாசினி என்ற முனிவர்க்கு மகனாகப் பிறந்து தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம். அவருடைய ஆற்றலையும் தொண்டையும் கண்டு வியந்த மக்கள் அவரை ஈசுவரருடைய அவதாரமாகவே கொண்டனர் என்று கருதத் தோன்றுகிறது. நந்திகேசுரர் அளித்த நூல்களில் இப்போது மிகவும் கற்கப்பட்டு, போற்றப்படும் துறைகள் தத்துவமும் நாட்டியமும் ஆகும். நாட்டியக் கலையில் பெரும்பாலானவர்கள் இப்பொழுது நன்கு அறிந்திருப்பது நந்திகேசுவரர் இயற்றிய "அபிநயதர்ப்பணம்" என்ற நூலாகும். சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
அம்முறைதன்னை நந்திகண்டே நாலாயிரம் கிரந்தமாக அருளிய அதனை பரதமுனிவன் அறிந்து அரன் நோக்கியே நடிக்க என்று உள்ள செய்யுள் இதைத் தெளிவாக்குகிறது. பரத நாட்டிய சாஸ்திரம் நந்திகேசுவரரைத் தண்டுரிஷி என்று குறிக்கிறது. சிவபெருமான் நாட்டியத்தில் பயன்படுத்தக்கூடிய அங்க பிரயோகங்களைத் தண்டுவின் மூலமாக பரதருக்கு கற்றுக் கொடுத்தார். "தத: தண்டும் சமாஹுய புரோக்தவான் புவனேஸ்வர: பிரயோகம் அங்கஹாரானாம் ஆசக்ஷவ பரதாய வை" என்பது அச்செய்யுள். தண்டு முனவரிடமிருந்து பிறந்தது தாண்டவம். அபிநவகுப்தர் என்று புகழ்வய்ந்த உரையாசிரியர் தண்டு என்ற சொல் நந்திகேசுவரரைக் குறிக்கும் என்கிறார். சார்ங்கதேவர் என்ற மற்றொரு நூலாசிரியர் தம் "சங்கீத ரத்னாகரம்" என்ற நூலில் பரதருக்கு நிருத்தபிரயோகங்களை தண்டு கற்றுக் கொடுத்தார் என்பதுடன் அவர் சிவகணங்களுக்கு எல்லாம் தலைவர் கணாக்ரனீ என்றும் கூறுகிறார். "நிருத்த ரத்னாவளி" என்ற நூலை 13 ஆம் நூற்றாண்டில் இயற்றய ஜயசேனாபதி என்பவர் இவரை "பட்டதண்டு" என்று அழைக்கிறார். இவற்றிலிருந்து நந்திகேசுவரர் தண்டுரிஷி என்று அழைக்கப்பட்டார் என்றும் அவர் உண்மையில் வாழ்ந்த வரலாற்றுப் பாத்திரம் என்றும் அறிகிறோம். அவரே பரத முனிவருக்கு நாட்டியக் கலையைப் போதித்தவர். இன்றைய நாட்டியக் கலையின் தந்தை என்று அவரை அழைக்கலாம். தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர். தமிழ்நாட்டில் நாட்டியாசாரியரைக் குறிக்கும் தொன்மையான உருவம் இதுவே. காஞ்சிபுரத்தில் இராஜசிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார். கால்களைச் சுவஸ்திகமாக்கி நந்திமுகத்துடனும், மனித உடலுடனும் சதுர தாண்டவம் புரியும் நந்திகேசுவரரின் நடனம் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள கருத்தையும் தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது என்பதையும் காட்டுகிறது. நந்திகேசுவரர் சிறந்த நாட்டியசார்யராக மட்டும் இல்லாமல் சிறந்த இசை ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார். அம்பலத்தரசர் ஆடுகின்ற போது நந்தி மத்தளம் வாசிக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் பல சிற்பங்களும் ஓவியங்களும் இக்காட்சியைச் சித்தரிக்கின்றன. "குடமுழா நந்தீசனை வாயில் காப்பாகக் கொண்டார்" என்பது தேவாரம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. இதை பாரசவர் என்ற குலத்தோர் வாசிக்கின்றனர். அண்மையில் கிடைத்த "பஞ்சமுக வாத்தியலக்ஷணம்" என்னும் சுவடியில் இது நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. ஆதலின் வாத்ய சாஸ்திரங்களிலும் நந்திகேசுவரர் சிறந்தவர் என்பது தெரியவருகிறது. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள நாட்டிய நாடகங்களில் தொடக்கத்தில் வரும் பாத்திரத்தை முறையே "கட்டியக்காரன்" என்றும் "சூத்திரதாரி" என்றும் அழைப்பர். கட்டியக்காரன் ஜனரஞ்சகமான நாட்டியத்தை ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவான். அவன் கையில் "வேத்ரம்" என்ற "கோல்" இருக்கும். கட்டியக்காரன் என்னும் பாத்திரம் நந்திகேசுவரரைக் குறிக்கும். கும்பேசர் குறவஞ்சி என்னும் நாட்டிய நூல் "நந்திவாகனாம் கட்டியக்காரன், திகைக்க வெண்ணீறு பூசிச் செயஞ்செயமென வந்தானே" என்று கூறுகிறது. நந்தியாக முதலில் வந்து மொழிவதால் "சூத்ரதார வசனத்தை" சம்ஸ்கிருதத்தில் "நாந்தி" என்று சொல்லுவார்கள். காமசாஸ்திரத்தை தோற்றிவைத்தவரும் நந்திகேசுவரரே என்றும் பல நூல்கள் கூறுகின்றன. வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரம் என்னும் நூல் மூன்று முனிவர்களைக் குறிக்கிறது. தர்மசாஸ்திரத்தைத் தோற்றுவித்தவர் "மநு" என்றும் அர்த்தசாஸ்திரத்தைத் தோற்றுவித்தவர் "பிருஹஸ்பதி" என்றும் காமசாஸ்திரத்தை இயற்றியவர் "நந்திகேசுவரர்" என்றும் கூறுகிறது. நந்தி இயற்றிய பல செய்யுட்களை "ரதிரகசியம்" என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார். சிவபெருமான் சீகண்ட பரமேசுவரராகப் பதினெட்டுப் புராணங்களை நந்திதேவருக்குக் கூறினார். நந்தி அவற்றைச் சனந்தகுமாரருக்கு கூற அவர் அதை வேதவியாஸருக்குக் கூறினார் என்றும், அவரிடம் சூதபௌளராணிகர் அறிந்தார் என்றும் கூறுவர். ஆதலின் புராணங்களை எடுத்துரைத்த மரபும் நந்திகேசுவரரையே சாரும் என்றும் அறிகிறோம்.
ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. நந்திகேசுவரரிடமிருந்து சிவதத்துவத்தை அறிந்து நந்தீசர் பிறருக்குப் போதித்தார் என்று ரௌளரவாகமம் கூறுகிறது. சைவமரபில் தலையாயது "சிவஞான போதம்" என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார் என்றும் அந்த மரபே இந்நூல் என்றும் பல நூல்கள் குறிக்கின்றன. சிவஞான போதச் சிறப்புப் பாயிரத்தில் மயர்வற நந்தி முனிகணத்தளித்த உயர் சிவஞான போத மளித்தோன் என்று குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் "அருள் நந்தி தனக்கியம்ப நந்தி கோதில் அருட் சனற்குமாரருக்குக் கூற" என்று சிவஞானசித்தியார் என்னும் நூல் குறிக்கிறது. திருமூலர் சிவபெருமானையே நந்தி என்று பல இடங்களில் குறிக்கிறார். நந்தி அருளாலே நாதனாம் பெயர் பெற்றோம் என்கிறார். சைவசித்தாந்த மரபு முழுவதும் நந்திகேசுவரர் மரபு என்பதில் ஐயமில்லை. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர். மற்றவர் மாகாளர் என்பவர். வழிபாட்டில் நந்திகேசுவரருக்கு முதலிடம் வழங்கப் படுகிறது. அவர் "சர்வலோகாதிபதி" ஆதலாலும், கணங்களின் தலைவர் ஆதலாலும் "அதிகாரி" என்றும் அதிகாரநந்தி என்றும் அழைக்கப்பட்டார். தாராசுரத்தில் முன்மண்டபத்திலிருந்து கர்ப்பக் கிருகத்துக்குள் நுழையும் போது அதிகாரநந்தியின் உருவத்தைப் பார்க்கலாம். இரு கரங்களை கூப்பி நீண்டவாளை மார்பில் இடுக்கி ஜடாமகுடத்துடன் நெற்றிக் கண்ணுடன் இவர் நிற்பார். சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம். நான்கு கரங்களுடனும் சிவபெருமானுக்குரிய சின்னங்களுடன் இவர் காணப்படுகிறார். மேலிரு கரங்களில் மானும் மழுவும் உண்டு. கீழ்க்கரங்கள் கும்பிடும் நிலை சடை முடியும் நெற்றிக்கண்ணும் உண்டு. மருத்தினுடைய பெண்ணாகிய "சுயஸ்" என்பவளை நந்திகேசுவரர் மணந்தார். அவளும் அவருடன் நிற்பதைக் காணலாம். அதிகார நந்தி மனித உருவுடன் கோபுரத்தின் நுழைவாயில் உள்ளது குறப்பிடத்தக்கது. சிவபெருமானின் பிரதான அதிகாரி ஆதலின் இவரது பார்வையிலேயே உள்ளே செல்லவும் வெளியே வரவும் இயலும். அருள்பாலிப்பதும், அறிவுரை புகட்டுவதும், தண்டனை அளிப்பதும் இவரே. ஆதலின் கோயில் கோபுரவாயிலில் உள்ள இவரது அனுமதி பெற்றே சிவாலயத்துள் செல்ல வேண்டும். இது தத்துவம். பரமேசுவர தத்துவம் நந்திகேசுவரர் மூலமாக உலகில் வெளிப்படுகிறது. அந்தத் தத்துவத்தைத் தாங்கி உலா வருவது இவரே. அதுவே அதிகார நந்தி சேவை என்னும் தத்துவம். பரமேசுவரனைத் தம் முதுகில் தாங்கி வருவதாகப் பாவனை.
இராமாயணத்தில் மிகவும் உன்னத பாத்திரம் அனுமன். அறிவின் சிகரமாக, சொல்லின் செல்வனாக, வீரர்களின் தலைவனாக, தூதுவர்களில் ஈடு இணையற்றவனாக, ஆற்றலும் தூய்மையும் நிறைந்த அமைச்சனாக, அனைத்துக்கும் மேலாகப் பக்தியின் உருவகமாக திகழ்வது அனுமானே. அத் தன்னேரில்லாத தகைமையாளன் யார்? நந்திகேசுவரரின் மறு அவதாரமே அனுமான். ஒரு முறை இராவணன் கைலயங்கிரிக்குச் செல்ல நந்தி அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆதலால் கோபம் கொண்டு அவரைக் குரங்கு மூஞ்சி என்று இழித்துரைத்தான். குரங்காகவே வந்து உன்னை அழிக்கிறேன் போ! என்றார் நந்தி. ஆதலால் பலமுறை அனுமனைக் கண்டபோது நந்தியே அனுமனாக வந்திருக்கிறானோ என்று திகைத்தான் தசமுகன் என்று வால்மீகி கூறுகிறார். சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது. இராமர் பரபிரும்ம தத்துவம் அனுமன் அவர் காலடியில் அமர்ந்து வாசிக்க அத்தத்துவத்தை ராமர் போதித்ததாகக் கூறுவது நம்மரபு. அக்ரே வாசயதி பிரபஞ்சனசுதே தத்வம் முனிப்ய: பரம் வியாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் இராமம் பஜே சியாமளம் என்பது நாளும் படிக்கின்ற ஸ்லோகம். இது நந்திகேசுவர தத்துவத்தின் மறு வடிவம். இந்திய நாட்டு மக்களின் வாழ்வில் நந்திகேசுவரர் நாட்டியாச்சாரியாராக கலைகளின் பிறப்பிடமாக வைத்திய முறைகளைப் போதித்தவராக புராண ஆகம முறைகளைப் போதித்தவராக யோகியாக தத்துவத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார் என்பது நாம் அறிய வேண்டிய பண்பு.