வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பனித்திரை!, மனத்திரை!


மனித மனம் என்பது எண்ணற்ற அனுபவங்களின் தொகுப்பு ஆகும். இவையே நமது ஞாபக இடுக்குகள் எங்கும் பரவி படிந்து நம்மை ஆளுகின்றன. இந்த அனுபவ தொகுப்பானது நன்மை, தீமை என்கின்ற இரண்டு எல்லைகளில் நின்று ஒன்றுக்கு ஒன்று முரணாகி குழம்புவதையே மனசாட்சி என உருவகித்துக் கொள்கிறோம்.இந்த மன சாட்சிதான் நமது எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகளை முன்னெடுத்து நடத்துகின்றன.

தெளிவான சிந்தனை உள்ளவன் சிறந்தவனாகவும், குழம்பிய சிந்தனை உடையவன் தோல்வியடைந்தவனாகவும் இருக்கின்றான். ஆக ஒருவனை உயர்த்துவதும், தாழ்வடைய செய்வதும் மனம் என்றாலும், அதன் மூலம் மேலே சொன்ன அனுபவங்களில்தான் அடங்கியிருக்கிறது.
இந்த தத்துவத்தை இன்னமும் எளிதாய் பாம்பாட்டி சித்தர் பின்வருமாறு விளக்குகிறார்.

"சூரியனைக் கண்ட பனி தூர ஓடல்போல்
சொந்த பந்தஞ் சிந்தபரி சத்த தலத்தில்
சூரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன்
அகலாமல் பற்றித் தொர்டந்து ஆடாய் பாம்பே!"
- பாம்பாட்டிச் சித்தர் -
பனி, புகைமூட்டம் போல் மிக அடர்த்தியானது. அதன் ஊடாக எதனையும் தெளிவாக பார்க்க முடியாது. இதனையே பனித்திரை என்பர். ஆனால் அப்படிப்பட்ட குழம்பிய பனித் திரையானது சூரியனின் ஒளி பட்ட மாத்திரத்தில் மாயமாய் மறைந்துவிடும்.
அந்த மாயத்திரை போலவே பாச பந்தங்களினால் சூழப் பட்டு, அதனில் திளைத்து குழம்பியிருக்கும் நமது மன நிலையானது, பரிசுத்த வஸ்துவான மேலான பரம் பொருளை மனதில் நிறுத்திய மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல், பொய்யான சிற்றின்பங்களை உணர்ந்து, அதன் மாயைகளில் இருந்து அகன்று தெளிவடையும் என்கிறார்.
இவ்வாறு பனித் திரையின் மாயையை நீக்கும் சூரியனைப் போல, நம் மனத்திரையின் மாயையை நீக்கும் பரம்பொருளின் பேரானந்த நிலை அகன்றுவிடாமல் தொடர்ந்து பற்றியிருப்போம் என்று ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

யாருக்கு ஞான வழி?

ஒருத்தர் ஒரு வேலையை சரியா செய்ய வேண்டும் என்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும்... இல்லையா? ஞான வழியில் போக என்ன தேவை என்று  இதுவரை படிகளைப்  பார்த்தோம். இது நமக்கு எப்போது இருக்கிறதோ இல்லையோ என்று  சந்தேகம் வேண்டாம்.  படித்து முடித்த பின்னும் எல்லோருக்கும் வந்துவிடாது. ஆனால் இது எவ்வளவு வேகத்தில்-  எந்தக் கால கட்டத்தில் வரும் வராது என்று ஒரு நியதியும் கிடையாது. எப்ப வேண்டுமானாலும் வரலாம்.  ஆனால் நடைமுறை  என்னவென்று தெரிந்து கொண்டால்  பின்னாளில் சிலது சௌகரியமா இருக்கும். அதுக்காக இப்போ இதைப் படிப்போம்.
விட்டதைப்  பிடிக்க - ஞான வழிக்கு தேவை சித்த சுத்தி.   இந்த சித்த சுத்தி சுலபமாக கிடைக்கிறது கர்ம வழியைப்  பின்பற்றுவதன் . பக்தி ஒருத்தருக்கு முதலும் சரி கடைசியிலேயும் சரி கட்டாயமா வேண்டும் என்பதையும் பார்த்து இருக்கிறோம். ஈஸ்வரன் மேலே அன்பைத்  திடமாக வைத்துக் கொண்டு மனதை அடக்குவது என்று  ஒவ்வொன்றாக செய்து கொண்டு போக வேண்டும்.
¨ஞான வழி  ஆராய்ச்சி தான் நாங்கள்  எப்போதுமே செய்ய வேண்டியது.  
மற்றது தொழில். மிகுதி  எல்லாம் உலக விஷயங்கள்: இந்த சரீரத்தை காப்பாற்ற  ஜீவனத்துக்காக  செய்கிறது¨ என்கிற உறுதி நமக்குள் இருக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாக இதை செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு  உங்களுக்கு அருகில் முக்தி இருக்கிறது.  (அவரவரைப்  பொறுத்தது). இந்த விஷயங்கள் எல்லோர் புத்தியிலும் நுழையாது. 
யார் பல ஜென்மங்களாகப்  பலன் கருதாக் காரியங்களை செய்து சித்தம் சுத்தியாகி இருக்கிறார்களோ? அவர்களுக்கு சட்டென்று  பிடிபடும். மற்றவர்களுக்குத் தாமதமாகப் புரியக்  கூடும்.

இந்த சித்த சுத்தி இருக்கிறவன் மற்றும்படி பணக்காரனோ ஏழையோ; இந்த ஜாதியோ, அந்த ஜாதியோ; ப்ரம்மச்சாரியோ, குடும்பஸ்தனோ - இதெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. மனப்பக்குவம் ஒன்று தான் முக்கியமான விஷயம்.
இப்படி சித்த சுத்தி அடைந்த  ஒருத்தர்  மூன்று  துன்பங்களாலும் கஷ்டப்பட்டு ஓடி வந்து குருவை தேடி சரணாகதியடைந்து  உபதேசம் கேட்பதாக நூல் ஆரம்பிக்கிறது.
அதென்ன 3 துன்பம்?
1.பசி, தாகம், எங்கள் புலன்களுக்குக்  கேடு - கண் சரியாக தெரியவில்லை., காது சரியாக  கேட்கவில்லை, உடலில் உள்ள நோய்கள் இப்படி இருக்கிறது? சில துன்பங்கள். இதுக்கெல்லாம் பெயர் ஆதியாத்மிகம்.
2.மழை பெய்கிறது, சுனாமி, இடி விழுகிறது, வெள்ளம், விபத்துக்கள் இப்படி சிலது எல்லாம் இருக்கிறதே?. இதை ஆங்கிலத்தில்  act of god என்பார்கள். தெய்வச் செயல்கள். இதெல்லாம் நம்ம கையிலே இல்லை. (ஆனா பெய்கிற மழையை இன்னும் பிரச்சினை ஆக்கிக்கொள்ள நமக்கு தெரிவு  இருக்கு!) இப்படி நிகழ்கிறதால்  வருகிற துன்பங்கள் ஆதி தெய்விகம்.
3.திருடர்கள், கொலைகாரர்கள், மிருகங்கள், பாம்பு இது போல மற்றப்  பிராணிகள் மூலமாக  நமக்குத்  துன்பங்கள் ஏற்படும். இது ஆதி பௌதிகம்.
இந்த மூன்று வகை துன்பங்கள் எல்லாருக்கும் தான் இருக்கும். இல்லையா? இதில் இருந்து விடுபட நாம் எடுக்கின்ற முயற்சி தான்  வெவ்வேறு. பொதுவா நாம் செய்கிறதால்  கிடைப்பது தற்காலிகத்  தீர்வுகள்தான்.
11. சாதன மின்றி யொன்றைச் சாதிப்பா ருலகி லில்லை
ஆதலா லிந்த நான்கு மடைந்தவர்க் கறிவுண் டாகும்
நூதன விவேகி யுள்ளி னுழையாது நுழையுமாகில்
பூதசென் மங்கள் கோடி புனிதனாம் புருட னாமே

சாதனமின்றி ஒன்றைச் (ஒரு தொழிலை) சாதிப்பார் உலகில் இல்லை. ஆதலால் இந்த [சாதனங்கள்] நான்கும் அடைந்தவர்க்கு அறிவு (சொரூப ஞானம்) உண்டாகும். நூதன விவேகி உள்ளின் (மனதில்) [ஞானம்] நுழையாது. நுழையுமாகில் பூத சென்மங்கள் கோடி [-இல் சித்த சுத்தி அடைந்த] புனிதனாம் புருடனாமே.

12. முன் கூறிய சாதனங்கள் நிறைந்த ஒருவர் அதிதீவிர பக்குவத்தை கூறல்
{இனி ஆசிரியர் ஒரு சீடனுக்கு உபதேசம் செய்வது போன்ற நடையில் நூல் செல்கிறது}

இவனதி காரி யானோனிந்திரியங்களாலும்
புவனதெய் வங்க ளாலும் பூத பௌதிகங்களாலும்
தவனமூன்றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்
பவமறு ஞானதீர்த்தம் படிந்திடப் பதறினானே!

இவன் [இந்த சாதனம் நான்கும் உடையவன்] அதிகாரியானோன். (இந்த நூலுக்கு அதிகாரியாவான்) இந்திரியங்களாலும், (உடல் சம்பந்தப்பட்ட வயிற்று வலி, சிரங்கு, கண்வலி போன்ற துன்பங்கள் -ஆதியாத்மிகம்) புவன தெய்வங்களாலும் (பனி, மழை, காற்று முதலியவை, சுவர் இடிந்து விழுதல், மரம் முறிந்து விழுதல் போன்ற தெய்வச் செயல்களாலும் -ஆதி தெய்வீகம்), பூத பௌதிகங்களாலும் (மற்ற மனிதர், விலங்குகள் போன்றவற்றாலும் -ஆதிபௌதிகம்) தவன (தாபம்) மூன்று அடைந்து, வெயில் சகித்திடா புழு போல் வெம்பி பவம் அறு (பிறவி நீக்கும்) ஞான தீர்த்தம் படிந்திட (மூழ்க) பதறினானே (விரைந்தானே).

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

பிரம்மம் என்ற சொல்.....

பிரம்மம் என்ற சொல்லிலிருந்து வடமொழியில் பயன்படுத்தப்படும்
சொற்றொடர்கள் சில தமிழிலும் அப்படியே நூல்களில் வழக்கில் உள்ளன.
அவைகளில் முக்கியமானவை:
‘பிரம்மஞ்ஞானி’: பிரம்மத்தை நேர்முகமாகவே அறிந்தவர்.
 இவர் பிரம்மமாகவே ஆகிறார் என்பது உபநிடத-வாக்கியம்.

‘பிரம்மஞ்ஞானம்’: பிரம்மத்தைப் பற்றிய நேர்முக அறிவு.

... ‘பிரம்ம-நிர்வாணம்’: பிரம்மமாகவே ஆகிவிடல்.

‘பிரம்மச்சாரி’: பிரம்மமாகிற வேதங்களை கற்பதொன்றே குறியாயிருப்பவன்.

‘பிரம்மார்ப்பண்ம்’: பிரம்மத்திற்கு அர்ப்பணம்.

‘பிரம்மானுபவம்’: பிரம்மத்தை நேர்முகமாகக்கண்ட அனுபவம்.

‘பிரம்மபாவம்’: பிரம்மமாகவே பார்க்கும் நிலை.

‘பிரம்மோபதேசம்’: பிரம்மமாகிற வேதத்தின் உயிர் மூச்சாகிய காயத்ரீ மந்திரத்தை முறையாக உபதேசித்தல்.

‘பிரம்ம சூத்திரம்’ : பிரம்மத்தைப்பற்றிய பொருளனைத்தும் 555 சூத்திரங்களில் உள்ளடக்கிய பிரமாண நூல்.