புதன், 29 ஜூன், 2016

பிறவி சூக்ஷமத்தை அறுத்தெரியும் சூக்ஷமம்!

மனம் என்னும் மாயையில்,
மும்மல மயக்கத்தில்,
கர்மவினையின் தேகத்தால்,
பிறவிகள் பல எடுத்து,
பிறவியின் சூக்ஷமத்தை அறியாது, சூழற்ச்சியில் சிக்கிடுமே,
சிக்கிய பிறவியை தான் உணர
பரப்ரம்த்தின் சாட்சியான குருவிடம் சரண்புகுந்து,
ஆத்ம விழிப்பு பெறும் வித்தை தான் உணர்ந்து,
விழிப்பு பயணத்தில்,
ஒளியும் ஒலியில் கரைந்து,
இறை இருப்பில் அமர்வதே,
பிறவி சூக்ஷமத்தை அறுத்தெரியும் சூக்ஷமமாகும்.

வியாழன், 23 ஜூன், 2016

முன்வினைப் பயனை தீர்த்திடும் உபாயம்!


ஒருவருடைய எண்ணம், செயல், சிந்தனைகளையொட்டியே அவர்களின் வினைகளும் அதற்கான எதிர் வினைகளும் அமைகின்றன. சந்தர்ப்பம் அப்படி!, சூழ்நிலை அப்படி!, நான் என்ன செய்வேன்; என்று நமது வினைகளின் பலன் அல்லது பழியை அவற்றின் மீது சுமத்தி, நமது செயல்களை நியாயப் படுத்திக் கொள்கிறோம். உண்மையில் சுற்றம், சூழல் என்பவை எப்போதும் சாட்சிகளாகவே இருக்கின்றன.

முந்தைய பிறவியில் செய்த வினைகளின் பலனாகத்தான் இந்த பிறவி எடுத்திருக்கிறோம் என்பது காலம் காலமாய் நமது மரபியலில் நம்மப் பட்டு வருகிறது. நல்லவைகளை செய்வதவனுக்கு நல் வினைகளும், தீமைகளை செய்தவனுக்கு தீய வினைகளும் இந்த பிறப்பின் பரிசாய் கிடைக்கின்றன. இதுவே நமது பிறப்பு, வாழ்க்கை, வசதி, வாய்ப்பு, தொழில், விசிப்பிடம், திருமணம், உணவுப் பழக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது என்கின்றனர்.
இதன் பொருட்டே ஒருவர் முன்னெடுக்கும் செயல்களில் தடங்கல், முட்டுக் கட்டை, தோல்விகள், வெற்றிகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் நிகழ்கிறது என்கின்றனர். ஆக, எவரும் தன் வினைப் பயனை அனுபவிக்காமல் தப்பிக்க இயலாது என்பது புலனாகிறது.

இத்தகைய வினைப் பயனை ஞானிகளும், முனிவர்களும் தங்களை அணுகாது எவ்வாறு நீக்குகின்றனர் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்

பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்

சென்னியின் வைத்த சிவனரு ளாலே"

- திருமூலர்-
தன்னை உணர்ந்து, தன்னிலை அறிந்த ஞானியர், தமது முன்வினை தொடர்பை சிவ சிந்தனையால் இல்லாதொழித்து விடுகிறார்கள். பின்னர் வர இருக்கும் வினைகளை அவர்கள் அவை தோற்றம் பெறுமுன்பே இவ்வாறு சிதைத்துவிடுவர். ஞானியர் இவை அனைத்தையும் தங்கள் சித்ததில் இருக்கும் சிவனருளால் செய்து முடிப்பார்கள்.

செவ்வாய், 14 ஜூன், 2016

பருவத்தே பயிர்செய்!

ஔவை பிராட்டியார் அருளிய நீதி நூலான ஆத்திச் சூடியில் இடம்பெற்ற வரிதான் "பருவத்தே பயிர் செய்". இந்த எளிய ஒற்றை வரியின் ஊடே பொதிந்திருக்கும் வாழ்வியல் தத்துவம் மகத்தானது. அதாவது செய்யக் கூடியவைகளை காலத்தே செய்யத் தவறிவிட்டு பின்னர் வருந்திப் பயனில்லை.  காலத்தே பயிர் செய்வதைப் போல நம் கடமைகளை உடலில் வலுவும் திறனும் இருக்கும் போதே செய்து விட வேண்டும். ஏனெனில் நம்முடைய இளமை நிலையில்லாதது.
இதே கருத்தினை திருமூலர்  பி
ன்வருமாறு விளக்குகிறார்.

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில ஹாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே!

காலையில் கீழ்த்திசையிலே இளமையாய் எழுந்து விரைந்து மேற்சென்ற கதிரவன் நண்பகலில் இளமைத் தன்மை நீங்கிப் பின்னர் முதுமை எய்தி மாலையில் மேற்திசையில் வீழ்ந்து மறைதலைக் கண்ணாரக் கண்டும், ‘இளமை யெழுச்சி என்றும் நிலையுடையது அல்ல’ என்பதனை மக்கள் உணர்வது இல்லை. மேலும் தன் வீட்டிலே பிறந்த பசுவின் இளங்கன்று சில ஆண்டுகளில் காளைப் பருவம் நீங்கி முதுமையடைந்து எருதாய்ச் செயலற்று இறப்பதைக் கண்ட பின்னரும், இந்த உலகில் வாழும் மனிதர்கள் தமது இளமையும் அவ்வாறு நிலையற்றது என்று உணராதவர்களாக இருக்கின்றனர் என்கிறார்.

சூரியனும், கன்றும் சீக்கிரத்தில் இளமையை இழந்துவிடும் பொழுது, மனிதன் மட்டும் எவ்வாறு தோன்றியபடியே இளமையோடு இருக்க முடியும்?

சூரிய உதயத்தையும் மறைவையும் தினம் தினம் கண் கூடாக பார்த்தும்கூட, தோன்றிய பொருளுக்கு அழிவுண்டு என்பதை அறியாது,  கிடைத்தற்கரிய இளமைப் பருவத்தில் தீமைகளைச் செய்து நாம் நிர்க்கதிக்கு ஆளாகாமல் பஞ்சேந்திரியங்களையும் இளமையிலேயே ஜெயித்து வாழவேண்டும் என்கிறார் திருமூலர்.

இளமை கழிந்து போகுமுன் அருமையான செயல்களைச் செய்துவிட வேண்டும். முதுமையில் செய்ய எண்ணினாலும் கூட அச்செயல்களைச் செய்வதற்குரிய ஆற்றல் நமக்கு இல்லாது போய்விட வாய்ப்புள்ளது.  இதனை திருவள்ளுவப் பெருந்தகை பின்வருமாறு கூறியிருக்கிறார்.

 “அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.”

புதன், 1 ஜூன், 2016

குண்டலினி யோகம்......

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி எனும் சக்தியை மூச்சு எனும் மூலக் கனலால் கிளப்பி உச்சி வரை ஏற்றி விடுவீர்களேயானால், அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் ப்ரம்ம கபாலத்தில் இருந்து அமிர்தமானது சுரக்கும். அதை உண்டு சுகித்து, லயித்திருக்கும் போது உடம்பெல்லாம் வியர்த்து குளித்து விட்டு வந்தது போல் இருக்கும். இதுவே இரகஸ்யம். அதாவது மூச்சு எனும் நெருப்பும், நெய் எனும் அமிர்தமும், வியர்வை எனும் நீரும் நம்மிடத்திலே இருப்பதை யோகத்தால் அறிந்து, சொல்ல வல்லமை உடையவர்க ளானால், எல்லை கடந்த ஜோதியாகிய ப்ரம்மத்தில் கலந்திருக்கலாம்.

இந்த மூச்சு எனும் சூக்கும நிலையை உணர்த்தும் பொருட்டே காலைத்(காற்று) தூக்கி நடனம் ஆடுவது போல நடராஜர் சிலையை வடிவமைத்தனர் முன்னோர்கள். பரம் என்றால் ஆகாயம் அல்லது விண் அல்லது வெட்டவெளி பரமசிவம் என்றால் பரமாத்மா. பரமசிவமான பரமாத்மா நடனம் ஆடுவது போலக் காட்சி தரும் சித் + அம்பரம் சிதம்பரம் ஆகாயத் தத்துவத்தை உணர்த்தும் தலமாகும். அங்கே பக்தர்களுக்குக் காட்டப்படும் சிதம்பர இரகசியமும் வெட்டவெளியாகிய பரத்தைக் குறிப்பதே. அதாவது விண் என்கிற வெட்டவெளி. விண்ணே உயிராக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கியும், பிறகு வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியும் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வலது காலைக் காது வரை நீட்டி இடது கையை மேல் தூக்கி நடனம் ஆடும் போது போட்டியாக உடன் ஆடிய காளியானவள் காலைக் காது வரைத் தூக்க வெட்கம் அடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டதாக புராணக் கதை சொல்வார்கள். அந்தக் கதையின் உள் நோக்கத்தை சொல்வார் யாருமில்லை.
ப்ராணாயாமம் அல்லது சந்தியாவந்தனம் செய்பவர்கள் முதலில் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதற்காகவே நடராஜர் வலது காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டப்பட்டது. பிறகு வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதே நடராஜர் இடது காலைத் தூக்கி நடனம் ஆடுவது. உலைக்களத்தில் இரண்டு தோல் துருத்திகளை வைத்து இரண்டு கைகளால் மாற்றி மாற்றி அமுக்கி ஊதுவது போல வலதுகைப் பெருவிரல் மோதிர விரல்களை வலது இடது நாசிகளில் வைத்து, இரண்டு நாசிகள் வழியாகவும் ஒன்றை அடைத்து ஒன்றன் வழியாக மாற்றி மாற்றி காற்றை உள் இழுத்து நிறுத்த வேண்டும். இரண்டு மூச்சுகளையும் பின்னலாய் பின்னி உள்ளிருத்து நிறுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதே நடராஜர் ஒற்றைக் காலை காது வரை மேலே தூக்கி ஆடுவது போலக் காட்டப்படுவது.

குண்டலினி சக்தியே காளியாகச் சொல்லப்படுவதாகும். முறையாகப் பிராணாயாமம் செய்து வந்தால் அவள் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு உச்சி நோக்கி பயணிப்பாள் என்பதாகும். ஜீவாத்மா பரமாத்மாவை அடையத் தடையாக இருக்கும் மலங்கள் அனைத்துமே அரக்கனாக சித்தரிக்கப் படுகிறது. மூச்சுக் காற்றினால் குண்டலினியை மேலேற்ற முடியுமானால் நம் மேன்மைக்குத் தடையாக இருக்கும் மல மாயங்களாகிய அரக்கனை பரமாத்மாவானது அழித்துவிடும் என்றும் சித்தரிக்கப் பட்டுள்ளது. நாம் விடும் மூச்சுக்கு கால் எனறும் நூல் என்றும் பெயர் உண்டு. நூல் என்றோ ஒரு நாள் அறுபட்டு விடும் எனவே காலாகிய காற்றைப் பிடித்து மேலேறி வரவேண்டும் என்பதை விளக்குவதே நடராஜர் தத்துவம். அவர் காட்டுகிற அனைத்து நடனங்களும் யோகத் தத்துவங்களை உணர்த்துவதேயாகும்.
வலது, இடது மூக்குத் துவாரங்கள் சேருமிடம் புருவமத்தி. அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் சேருமிடம். இந்த இடத்தையே திரிவேணி சங்கமம் என்பார்கள். நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் பின்னலாய்ப் பின்னி எழுந்து நின்று விளையாடுவது போல இடகலையும், பிங்கலையும் கூடி புருவமத்தியில் சுழுமுனையோடு சேர்ந்து விளையாடும் இரகசியங்களை தெரிந்து கொள்ளாமலேயே மாண்டு போன மானிடர்கள் பல கோடி உண்டு. வலது நாசி, இடது நாசி இரண்டிலும் மூச்சை தனித்தனியாக இழுத்து நடத்தி, நிறுத்தி பிறகு இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து நடத்தி, நிறுத்த சக்தி உடையவர்களானால் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு ஸ்தனங்களை உடைய உமாதேவியரோடு கூடி இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வாழலாம். நாம் தினசரி சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். குருபாதம் கூறும் குறிப்பு என்றால் குரு சொல்லிக் கொடுக்கிற படி செய்தால் சூக்குமம் விளங்கும். இருபாத நாகை நாதர் என்றால் இடகலை, பிங்கலை வழியாக நடக்கும் நாகன் எனும் மூச்சைக் காட்ட கால்களைத் தூக்கி நடனஞ் செய்த நடராஜரது மலரடிகளைக் காண்பாய் நெஞ்சே. அதாவது அவர் காட்டும் வழியில் அல்லது அவர் கால்கள்(காற்று)போகும் வழியில் போய் பரத்தைக் காண்பாய் நெஞ்சே. உயர்வாய் இருந்து தான் தானாய் நடந்து கொண்டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அறிவாய் நெஞ்சே. ……..நன்றி,,,,,