வெள்ளி, 20 மே, 2016

யார் சித்தன் ?

"இறந்தவர் ஐவர் அவர் இஷ்டமானவர்
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லார்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவரென்றே மண்ணில் உள்ளோர்
வகையறிந்திடவே நின்று ஆடாய் பாம்பே!"
- பாம்பாட்டிச் சித்தர் -
ஐம்புலன்களின் ஆளுகைக்கு உட்பட்ட மனிதன் உயிர் நீத்தால் நீத்ததுதான். அவனால் மீண்டும் அந்த உடல் கொண்டு வாழ முடியாது. வேறு பிறவி எடுத்து வந்தாலும் உற்றார் உறவினரைப் பொறுத்தமட்டில் அவர் இறந்தவர்தான்.
ஆனால் இந்த புலன்களின் ஈர்ப்பு விசைகளைக் கடந்து தன்னையறிந்தவர்கள் ஜீவன் முக்தர்கள். அவர்கள் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவர்கள். அவர்களே நிலையானவர்கள் என்கிற உண்மை அறிந்தோமென்று ஆடுபாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
இத்தகைய ஜீவன் முக்தர்களைத்தான் சித்தர் பெருமக்களாக குறிப்பிடுகிறோம். அவர்கள் இறப்பிற்கு அப்பாற்பட்டவர்கள். ஜீவசமாதி அடைபவர்கள். ஒரே சமயத்தில் பல இடங்களில் ஜீவசமாதி கொள்பவர்கள். இதைச் சித்தர்கள் பலரும் ஒரு சித்து விளையாட்டாகவே கொண்டிருந்தனர்.