சனி, 31 அக்டோபர், 2020

சித்தன் போக்கு சிவன் போக்கு.!!!

சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்

சித்தர்களின் பாடல்களில் நிறைய ரகசியங்கள் நிரம்பி இருக்கின்றன.
சுலபமான நிரந்தரமாக குணமாக்கும் மருத்துவ முறை.
பக்தி நெறி, அருவ வழிபாடு, தன்னையுணர்தல், இறைவனின் நிலை அறிதல், இறையோடு ஒன்றுதல் என பல நிலைகளை அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை விட மேலான சாகாக் கல்வி என்னும் இறவா நெறி பற்றிக் கூறியுள்ளார்கள். இதுவே சித்தர்கள் பற்றித் தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் கொள்ளக் காரணமாக அமைகிறது.
அவர்கள் பாடல்களில் அவர்கள் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளின் நேரடிப் பொருளை கொண்டு நாம் அந்த பாடலுக்கான பொருளை தெரிந்து கொள்ள முயன்றால் அது கேலிக்குரியதாக மட்டுமே இருக்கும். அவர்களது பாடல்களை நமது வெற்று அறிவை கொண்டு புரிந்து கொள்ளுதல் இயலாது.
காரணம் இந்த சித்தர் கல்வி என்பது எவர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளை இறை நிலையினை அடைவதற்காக செலவிடத் தயாராக இருக்கிறாரோ அவர்களுக்கானது.

உலகியல் செய்து கொண்டு சித்தர்களின் பாடல்களை படித்துப் பொருள் கொள்வது என்பது மிகுந்த சிரமமான காரியம்.
இருப்பினும் சித்தர்களின் அருள் மற்றும் விட்ட குறை இருப்பவர்கள்
பாடலுக்கான உண்மை பொருள் உணரப் பெறுவார்கள்.
சித்தர்களை கேலி செய்பவர்கள் கேலிக்குரியவர்களாக மாறுவார்கள் இது உண்மை, சத்தியம்.

நாம் நினைப்பது போல சித்தர்கள் எண்ணிக்கை வெறும் பதினெட்டு மட்டுமல்ல. சித்தர்கள் கோடிக் கணக்கானவர்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே பாடல்கள் எழுதி வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள்.
மற்றவர்கள் இறை நிலை அடைந்து ஜீவ சிவ ஐக்கியம் ஆனவர்கள்.
இந்த கல்வியை கற்பதற்கு நாம் கற்ற உலகியல் ஏட்டு கல்வி பயன்படாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

நாம் பிறந்தது முதல் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வாழுகிறோம் என்றால் அதில் அதிகபட்சமாக அறுபது வயது வரை ஒரு நல்ல வேலை செய்வதற்கு குறைந்தது இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் ஏட்டுக் கல்வி பயில்கின்றோம். அதன் பிறகு அந்த கல்வியை வைத்து அதிகபட்சமாக முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் பயன் அடைகிறோம். (வேலை செய்து ஊதியம் பெறுவதன் மூலம்) பிறகு முதுமைக்குள் ஆட்பட்டு தள்ளாட்டம் எய்தி, மரணத்தை அடைகிறோம்.
இதற்கு இடையில் அந்த படிப்பைப் படித்தால் நாள் வேலை கிடைக்கும்,
இந்தப் படிப்பை படித்தால் சிறந்த வேலை கிடைக்கும் என்று ஓடி ஓடிப் படிக்கிறோம்.
இப்படி அதிகபட்சமாக நாற்பது ஆண்டுகள் பயன்படக்கூடிய கல்விக்கே நாம் இருபது ஆண்டுகள் செலவிட தயாராக இருக்கும்போது. என்றைக்கும் அழியாத நிலையினை தெரிவிக்கும் ஒரு கல்வியினை கற்பதற்கு நாம் எவ்வளவு நேரம் செலவிட தயாராக இருக்கிறோம் என்றால் பதில் பூஜ்யமாகத் தான் இருக்கும்.
ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பது போல சித்தர்களின் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள நினைத்தால் அது முடியாத காரியமாகத்தான் இருக்கும்.
ஒருமையுள் தான் கற்ற கல்வி எழு பிறப்பும் தொடரும் என்று திருவள்ளுவர் சொன்னது இந்த கல்வியைத்தான்.
ஆகவே ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து நம்மை மேல் நிலைக்கு உயர்த்தும் ஒரு கல்வியை சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும்.
இந்தக் கல்வியைக் கற்பதற்குச் சீடனை தேர்ந்தெடுப்பதற்கு கூட சாதனா சாதுட்டயம் என்று சித்தர்கள் வைத்து இருந்தார்கள்.
பக்குவப் பட்டவர்களுக்கே அதை போதித்தார்கள்.
காரணம் இது தன்னை உணரும் கல்வி.
ஏம சித்தி எனப்படும் சாதாரண உலோகத்தை, மாற்று உயர்ந்த தங்கமாக மாற்றும் கலை.
சாகா கல்வி எனப்படும் கற்பப் பயிற்சி
தத்துவ நிக்கிரகம் எனப்படும் தத்துவங்கள் அனைத்தையும் விட்டு விலகும் நிலை.  கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்னும் ஜீவ சிவ ஐக்கியம்
என்னும் படிகள் உள்ளன.

சித்தர்களின் தத்துவங்களை நாம் சித்தாந்தம் என்றோ, வேதாந்தம் என்றோ, நாதாந்தம் என்றோ, போதாந்தம் என்றோ, கலாந்தம் என்றோ, யோகாந்தம் என்றோ தனி ஒரு அந்தத்திற்குள் அடக்கி விட முடியாது. காரணம் ஒவ்வொரு அந்தத்திலும் சொல்லப்பட்டவை ஒவ்வொரு அனுபவம் மட்டுமே. அதுவே முடிந்த முடிவாக இல்லை.
சித்தர்களின் வார்த்தைகளில் அனைத்து அந்தங்களும் இருக்கும் அதற்காக அவர்கள் ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளல்ல. அவர்களின் உள் அனுபவத்திற்கு பொருந்துபவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். அந்த அனுபவங்கள் ஒவ்வொரு அந்தத்திலும் சிறிது இருக்கலாம். ஆகவே அவர்கள் அனுபவமே வார்த்தைகளாக் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆகவே அவர்கள் வேதாந்திகளா ? அல்லது சித்தாந்திகளா ?
என்று நாம் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
இது மிகப் பெரிய ஆய்வு!

வெள்ளி, 30 அக்டோபர், 2020

சுத்தமான மந்திர உச்சாடனத்தை மனம் லயித்துக் கேட்டால்


சுத்தமான மந்திர உச்சாடனத்தை மனம் லயித்துக் கேட்டால், ஒரு அசுவமேத யாகம் பண்ணினால் பெறக் கூடிய பலனை இந்த கலியுகத்திலே பெற்று விடலாம். ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை மிகச் சுலபமாக பெற முடிவதால் 'கலி: சாது: ' என்கிறாா் வியாஸ மகாிஷி.
இவ்வளவு சுலபத்திலும் ஒரு நிபந்தன அழகாக ஒளிந்திருக்கிறது பாருங்கள்...என்ன நிபந்தனை அது? மனம் லயித்து என்பதுதான் அந்த நிபந்தனை.
ரொம்ப சுலபமாகச் சொல்லி விடலாம்'மனம் லயிக்க வேண்டும்' என்று...ஆனால் முடிகிறதா? அதற்கும் நமது சாஸ்திரமே வழி சொல்லித் தருகிறது. அந்த வழி தான் பிராணாயாமம்.
பிராணாயாமம் என்பது மூச்சை இழுத்து வெளிவிடும் பயிற்சி என்று எளிமையாய்ச் சொல்லலாம்.
ஆனால் இழுத்த மூச்சை உள்ளே தேக்கி வைக்கிற நேரம் இருக்கிறதே, அது முக்கியம். அந்த நேரம் அதிகமாகிக் கொண்டே வரவேண்டும். மனம் கட்டுப்படும்.
மல்லிக் கொடிபோல் ஆடிக் கொண்டிருக்கிற நமது மனம், பிராணாயாம தேக்கத்தினாலே ஆடாமல் நிற்கும். அப்படி மனதை நிறுத்திவிட்டால், 'கோல் தேடி ஓடும் கொழுந்து போல் மால் தேடி ஓடும் மனம்' என்கிறாா் பூதத்தாழ்வாா்.
ஆக, மல்லிக் கொடி மாதிாி ஆடுகிற மனத்தைப் பிராணாயாமத்திலே நிறுத்தி, எம்பெருமான் என்கிற அந்தக் கொம்பில், அவன் திருவடியிலே கொண்டு சுற்றிவிட்டு விட்டால் அது பற்றிக் கொண்டு படரும்.
எத்தனை நேரம் உட்காா்ந்து சுலோகத்தைச் சொன்னாலும் மனம் லயிக்கமாட்டேன் என்கிறதே; இரண்டு சுலோகம் சொல்வதற்குள் எங்கேயோ போய்விடுகிறதே....இப்படி எத்தனையோ குறைகள் நமக்கு உண்டு.
இதெல்லாம் நிவா்த்தியாக வேண்டுமானால் பிராணாயாம பலம் நமக்கு இருக்க வேண்டும். அந்த பலம் பெருகப் பெருக மந்திரத்தை உச்சாிப்பதற்கான பலமும் அதிகமாகும். மூச்சைத் தேக்குவது என்பது மந்திர உச்சாரணத்தில் ரொம்ப முக்கியம்.
நாம் மிகவும் அவசரமான ஒரு யுகத்திலே ஓடிக் கொண்டிருக்கிறோம். ' இதைப் பண்ணுவோமா? அதைச் செய்வோமா? ' என்று மனம் அலைந்து கொண்டேயிருக்கிறது. சந்தியா வந்தனம் என்பதாக ஒன்று செய்தாலும் அது ஐந்து நிமிடத்தில் முடிந்து போய்விடுகிறது!
உண்மையில் ஐந்து நிமிடங்களில் முடியக் கூடிய விஷயமா அது..? பிராணாயாமம் என்பது அந்தா்கதமாயிற்றே! அதெப்படி ஐந்து நிமிடங்களில் முடியும்?
நமது ஓட்டம்தான் அதை அப்படிக் குறிக்கி விட்டது. அதனால்தான் நமக்குப் பிராணாயாம பலம் இல்லாமல் இருக்கிறது.
பிராணாயாமத்தை ரொம்ப வலியுறுத்துகிறது சாஸ்திரம். ஸ்த்ரீகளும் பிராணாயாமம் செய்யலாம் என்கிறது. மந்திரம் கூறிச் செய்யாவிட்டாலும் நித்யமே பெண்கள் அதைப் பயிற்சியாகச் செய்யலாம். அதற்கு புராணத்தில் முன் உதாரணம் இருக்கிறது.
" யாா் -- எந்தப் பெண் -- பிராணாயாமம் செய்தாா் அந்தக் காலத்தில்? " என்று கேட்டால், கௌசல்யா தேவி -- சாக்ஷத் ராம மாதாவே பிராணாயாமம் செய்திருக்கிறாா். அந்த எம்பெருமானை நித்யம் தியானித்தாள்.
அவள் பெற்ற பலன் எப்போ்ப்பட்டது என்பதுதான் நமக்குத் தொியுமே!
(முக்கூா் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச் சாா்யாா் ஸ்வாமி)

மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி....

“தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்” என்பார் தாயுமானவர்.

எல்லா உயிர்களுக்கும் தத்தம் இனத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அடிப்படை உணர்வு அது.

மனிதப்பிறவிக்கு மட்டுமே அதை கடந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டிருப்பதால் மரணத்தை வெல்வது என்பது அவன் கடமையாகிறது. மரணத்தை வெல்வது என்பது பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதையே குறிக்கும்.

உடலுக்கு மரணம் உண்டு. ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் (நல்வழி -28)
மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு ஆழாக்கு அன்னம், சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே  என மேலும் சொல்கிறார் ஔவையார்.

புதன், 14 அக்டோபர், 2020

மரமும் மனிதனும்


 
மரத்தின் கீழ்அமர்ந்து தவம்செய்து சக்திகளை பெற்று வாழ்ந்தார்கள் நமது முன்னோர்கள்.

ஏன் அப்படி செய்தார்கள் என்றால், மரத்துக்கு, இயற்கைக்கு ஏற்றாற் போல மாறும் தன்மையுண்டு.  தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், மரம் காற்றின் மூலமாகவும் சூரியனின் மூலமாகவும் சக்திகளை பெற்று, தண்ணீர் கிடைக்கும் வரை உயிருடன் இருக்கின்றது

அது எப்படிக்  கிடைக்கின்றது? எப்படி மனிதன் அந்த சக்திகளைப்  பெறுவது என்று தெரிந்து கொள்வதற்காக மரத்தின் கீழ் அமர்ந்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த மரத்தின் அத்தனை இலைகளும் சுவாசிக்கின்றன என்பதைத்  தெரிந்து கொண்டார்கள்.  மரத்தின் எல்லா இலைகளும் சூரியனின் கதிரின் மூலமாகக் கிடைக்கும் சக்திகளைப் பெறுகிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள் 
இதை வைத்துத்தான் மரம் தண்ணீர் இல்லாத போதும் வாழ்கிறது என்று தீர்மானித்தார்கள் .

அப்படி என்றால் மரத்தைப் போலவே நாமும் உணவு இல்லாமல் வாழ முடியுமா என்று உடலை ஆராய்ச்சி செய்தார்கள். அப்பொழுது தான் நமது தலைமுடியாலும் சுவாசிக்க முடிகிறது என்பதைக் கண்டு உணர்ந்திருக்கிறார்கள். அதை அறிந்து கொண்ட சித்தர்கள், தலைமுடியை வளர்த்தார்கள்.  இதைத் தெரிந்து கொண்டபின்னர் இயற்கையோடு நாமும் ஒன்றி வாழ்ந்தால்,  நம்மால் இன்னும் பல சக்திகளை பெறமுடியும் என்று உறுதி செய்தார்கள். இதற்காகத்தான் தலைமுடியை வளர்த்தார்கள்.