வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

முழுமையான வாழ்க்கை வாழ வேண்டும்

நீரோடும், மழையோடும்,செடி கொடியோடும்,

குருவிகளோடும், அணிலோடும், இசையோடும், உறக்கத்தோடும், உடலோடும், உயிரோடும், நிறைவுடன், நன்றியுடன், சத்தியத்துடன், உண்மையுடன்,
ஒரு முழுமையான வாழ்கை முடிந்த பின்........முடித்துக் கொள்ளவேண்டும் இவ் உலக வாழ்க்கையை  .....
**எங்கேயோ பார்த்து ரசித்திட்ட கவிதை இது. என் உணர்வினைப் பிரதிபலிப்பதாக உணர்கிறேன்.(மீண்டும் மீண்டும் பிறக்காமல்
என்கிற வார்த்தையை  இதோடு
சேர்த்துக்கொள்வேன்).. ... 

சத்தியமானது தன்னை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு மனிதர்கள் மூலம் வித்தியாசமான காலகட்டங்களில் வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. ஆன்மீகத் தேடலிலுள்ள ஆன்மாவானது அதை இனங்காண இறைசக்தியின் துணை அவசியம் தேவை. குருவைத் தேடி இந்த உலகம் முழுவதும் தேடினாலும்  நம் கண்களுக்கு குருவானவர் புலப்படமாட்டார்...
மாறாக நாம் அனைத்து தகுதிகளையும் அடைந்து நாம் குருவுக்காக காத்திருப்பின் அவர் நம் முன், நம்மை தேடி வருவார். இதுவே நான்  உணர்ந்த உண்மை. இறை இன்பத்தை விளக்கத் தமிழும் இடம் தர முடியாது.
மனிதப்பிறவி என்பதே இறைவனின் ஆற்றலை உணர்ந்து, அவனது அருளில் கரைந்து அவனுக்குள் ஐக்கியமாகி, முக்தி அடைவது தான். முக்திக்கு முன்னால் பணம், பதவி, பகட்டு என்பவைகள் வெறும் தூசுக்கு சமம். ஆனால் இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் அதன் தேவைக‌ளும் தவிர்க்க முடியாதது.

பிறந்த கணத்தில் இருந்து துவங்கும் மனித வாழ்வின் பயணம் இறுதி மூச்சு வரையில் தொடர்கிறது. இந்த பயணத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதையே நமக்கான வினைகளையும் அதன் எதிர்வினைகளையும் தீர்மானிக்கிறது. 

இதுவரை சாதித்தது என்னவென்று பார்த்தால் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
வெற்றிகளின் மூலம் கிடைக்கும் பரிசுகளை விட தோல்விகளின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு விலைமதிப்பில்லாதது. வெற்றி என்பது ஒரு பயணம் மட்டுமே ஆனால் அதுவே முடிவல்ல....... சோதனைகளை சகித்துக்கொள்கிற மனுஷன் பாக்கியவான்....   என்னை  நானே தொலைத்து   விட்டுத்  தேடிய போது, என‌க்குக் கிடைத்த  அரிய பொக்கிஷம்  இந்த அனுபவம்.
பெற்றோர்களின் அரவணைப்பு  இல்லாத எல்லாக்  குழந்தைகளும்  அனாதைகள் என்றால், இதில் நானும் ஒன்று.
 சித்தர்கள்  விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. 
பாசம் என்பது எவ்வளவு கொடியது என்பது பாசத்தில் இருந்து விடுபடும் ஒருவனுக்கு தான் தெரியும் . எல்லாவற்றையும் கடந்து தான் வரவேண்டும் என்பது சித்தர்களின் கொள்கையாக கூட இருக்கத் தோன்றுமோ என்று மனம் கூறுகிறது. 
 
"உயிர்" என்ற தத்துவத்தை உணர்ந்தவனுக்கு இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் சமம் தான். இதில் அவனுக்கு எந்தவொரு பேதமும் இல்லை.

எனது சொல்லாலும் செயலாலும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக நான் எடுத்துக் கொண்ட வழி - "தீதும் நன்றும் பிறர் தர வாரா", "வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்" என்பது.

அடிப்படைத் தேவைக்கு கூட வசதியும், வாய்ப்பும் இல்லாமல் அல்லாடும் அப்பாவி ஜீவன்கள், பசிக்கும் பட்டினிக்கும் உணவுக்கும், உடம்பை மறைக்க ஆடைக்கும், வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க ஒரு குடிசை வேண்டுமென்று நியாயமாக விரும்புகிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. உடல் முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு உருண்டாலும், ஓட்டுவது தான் ஒட்டுமென்று அறிவுக்கு தெரியும். ஆனால் ஆசை? அறிவை வேலை செய்ய விடுவது இல்லை. எந்த வகையிலாவது பணத்தை தேடு என்று சரீரம் என்ற குதிரையை சாட்டையால் சொடுக்கிய வண்ணமே இருக்கிறது. மனிதன் அறிவைத்தேடி ஓடுகிறானோ இல்லையோ, அன்பைத்தேடி அலைகிறானோ இல்லையோ, பணத்தைத் தேடி நித்தம் நித்தம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறான். ஓயாமல் உழைக்கிறான், உறங்காமல் பாடுபடுகிறான். உலகே மாயை, வாழ்வே மாயை என்று சந்நியாசம் சென்றவருக்குக் கூட ஏதோ ஒரு காரணத்துக்காக இந்தக் காலத்தில் பணம் தேவைப்படுகிறது.
இரண்டிற்கும் நடுவில் ஊசலாடும் நடுத்தர உயிர்களும், இந்த பூமியில் எண்ணில் அடங்காமல் இருக்கின்றன.
உப்புக்கும், சீனிக்கும், செப்புக் காசுக்கும் அலைந்து  கொண்டிருந்தால் ஆத்திகன் கூட நாத்திகன் ஆகிவிடுவான் என்பது மகாகவி பாரதியின் சத்திய வாக்கு. இந்தப் பெரிய பாதாளத்தைத் தாண்டி வெளியில் வந்தால் தான், அவர்கள் இறைவன் என்ற மகா சமுத்திரத்தை உணர முடியும். எனவே அவர்களை வறுமைக் கடலைத் தாண்ட வைக்க வேண்டிய கடமை நமக்குண்டு.  சுவாமி விவேகானந்தர் கூட, பசித்தவன் முன்னால் "வேதம் படிக்காதே! சாதம் படை" என்று சொன்னார். 

 மனிதப்பிறவி என்பதே இறைவனின் ஆற்றலை உணர்ந்து, அவனது அருளில் கரைந்து அவனுக்குள் ஐக்கியமாகி, முக்தி அடைவது தான். முக்திக்கு முன்னால் பணம், பதவி, பகட்டு என்பவைகள் வெறும் தூசுக்கு சமம். ஆனால் இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் அதன் தேவையும் தவிர்க்க முடியாதது..
இன்று என்பது உங்கள் கைகளில் உள்ளது. அதை அழகாக நிறைவுடன் செலவு செய்யுங்கள். அழகாகச்  செய்யுங்கள்.. கடனே என்று அல்ல. மறுபடியம் சில விசயங்களைச் செய்ய வாய்ப்புக்  கிடைக்காமலே போய் விடலாம். யார் அறிவார்? அதிலும் நல்லதை செய்யும் வாய்ப்பும்,  சக்தியும் இருக்கும் போதே செய்து விடுங்கள். பலன் தருகிறதோ இல்லையோ  செய்யுங்கள் (Just do it) ....செய்வதை ரசியுங்கள்.... ..(love and do it ).. ஒரு அரிசியானாலும் எறும்புக்கு உணவு என்று சிந்தியுங்கள். உணவை எப்போதுமே வீணாக்காதீர்கள்.. பசியோடு யார் இருந்தாலும் உணவளியுங்கள். அவர்களை உள்ளன்போடு நேசியுங்கள். யார் அறிவார் எங்கள் பிறப்புகளில் ஏதேனும் ஒன்றாய் அது அமைந்தால்?  நம்மில் யாராவது அதைப் பற்றி சிந்திப்பவர்களா? உணவோ, உடையோ, எது அத்தியாவசியப் பொருளோ? உங்களுக்கு தேவையற்ற குப்பையாக தோன்றும் ஒன்று, இன்னொருவருக்கு பொக்கிஷமாக இருக்கக் கூடும்.. அதனால் எப்போதும் அதை இன்னொருவர் உபயோகிக்க அனுமதியுங்கள்...  குடி நீரை விரயம் செய்யாதீர்கள். குப்பைகளை முறைப்படி கழியுங்கள்.  நாம் த‌வ‌றாக‌ க‌ழிக்கும் குப்பைக‌ளை த‌ர‌ம் பிரித்து வேலை செய்ப‌வ‌ர்க‌ளுக்கு இன்னமும் அதிக‌ வேலை ஆகிடும். இன்னொரு ஜீவ‌ன் அந்த‌ வேலையை செய்வ‌தை,வேறு யாரோ என்று நினைக்காதீர்க‌ள். எங்க‌ள் பிற‌ப்புக‌ளில் ஒன்றாக‌ அது அமைய‌ நேரிட்டால்? ந‌ம்மில் யாராவ‌து அதை சிந்தித்துப் பார்க்கிற‌வ‌ர்க‌ளாயின் 
அங்கே எங்களாலும் அந்த‌ உண‌ர்வை உண‌ர்ந்திட‌ முடியும்.

இயற்கையை இயன்றவரை சுத்தமாக வைத்திருங்கள்.. யாதொரு பொருளையும் வீணாக்காமல், அதை அவசியம் தேவைப் படுபவருக்கு கொடுங்கள்.. குப்பையில் போடுவதை முயன்றவரை தவிருங்கள்.. இயற்கையும் நீங்கள் கொடுப்பதைத் தான் உங்களுக்கு திரும்பக் கொடுக்கும் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

கடவுள்... ப்ரபஞ்சம்... இயற்கை... பரிணாமம்...
இவைகளுக்கிடையில் நடக்கும் பரிணாம விந்தைகளை பார்த்து அதிசயித்ததை உங்களுக்காக சொல்ல நினைக்கிறேன்.! 

நாம் வாழும் இந்த "உலக நலனுக்காக" எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்!!! 
ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தைப் பூமிக்குக் கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தைப் பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவமும் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசமமாக,  சத்துப் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.  இதே தத்துவம் தான் ம‌னித‌ ச‌முதாய‌ம் மேம்ப‌ட‌வும் பெரிதும் உத‌வும்.  

உலகில் பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாக, ந‌ம் தேவைகளும் பெருகிவிட்டன.  இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியே தொடர்ந்தால், வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம்? எனும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், "ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது?, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை?, ஏன் மழை இல்லை?" என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும்  இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, இய‌ற்கையை அழிக்காம‌ல் இருப்ப‌துவும், குப்பைக‌ளை முறைப்ப‌டி க‌ழிப்ப‌துவும், மரங்களை வளர்ப்பதுவும் தான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

*தலைமுடியை தெருவில் போடாதீர்கள், பறவையின் காலில் சிக்கினால் அதனால் பறக்க முடியாது இரைதேட முடியாமல் இறந்து போகும். 
*Gum சாப்பிட்டால், வெளியில் போடாதீர்கள். 
குருவிகள்  ஏதோ உணவென்று சாப்பிட்டால் இறந்து விடும்". 

எமது செயற்பாடுகள் 
இன்னொருவருக்கு இடையூறாகாமல் பார்த்துக்கொள்ளுவோமாக.
"தனது சொந்த ஆத்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன"?
உலகத்தவர் பார்வையில் பெரும் தனம் தேடியவன், புகழ் அடைந்தவன், அதிகாரங்களை அடையப் பெற்றவன் வெற்றி பெற்றவன். ஆனால் ஞானிகள் இந்த கருத்தின் அடிப்படையையே தவறு என்று கருதுகின்றனர்.

வாழ்க்கையை வெற்றியடையச் செய்வதை விட, உண்மையை கற்பது என்கிற பயணத்தில் போக விரும்புங்கள் ... இந்தக் க‌ன‌வெனும் மாயையில் இருந்து தயவு செய்து உங்களை மீட்டு எடுத்திட வேண்டும் என்று விரும்புங்கள்...

அருளுலகிலும், பொருளுலகிலும் ஒளியேற்ற அருளாட்சி அமைப்போம்!
ஏக்கங்களையும், தேக்கங்களையும் போக்க சமுதாய மாற்றம் செய்வோம்!

மனித வாழ்வே, மிக‌ப் புனிதமான‌ வாழ்வு!

எங்கும், எதிலும்
அன்பை, அமைதியை
நிறைவை, நிம்மதியை
இனிமையை, மகிழ்வை
அற வழியில் காண்போம்!.!

நற்பவி!நற்பவி!நற்பவி!

வாழ்க வளமுடன்!